Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுறா விரிகுடா கடலுக்குள் ஓர் அற்புத உலகம்

சுறா விரிகுடா கடலுக்குள் ஓர் அற்புத உலகம்

சுறா விரிகுடா கடலுக்குள் ஓர் அற்புத உலகம்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஆஸ்திரேலியாவின் மேல்கோடிப் பகுதியில் அமைந்திருக்கிறது சுறா விரிகுடா. இந்தப் பெரிய அதே சமயத்தில் ஆழமற்ற விரிகுடா பெர்த் நகரத்தின் வடக்கே சுமார் 650 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 1629-⁠ல் டச்சு நாட்டு ஆய்வுப் பயணியான ஃபிரான்ஸ்வா பெல்சார்ட் என்பவர் இந்தப் பாலைவனப் பகுதிக்குத் “தரிசு நிலம், புல் பூண்டு இல்லாத சபிக்கப்பட்ட இடம்” என்று முத்திரை குத்தினார். போதாக்குறைக்கு, இந்த இடத்தைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களும் தண்ட நிலம், ஒன்றுக்கும் உதவாத விரிகுடா, ஏமாற்றும் வளைவு போன்ற பெயர்களைச் சூட்டிச் சென்றனர்.

ஆனால் இன்று அதே சுறா விரிகுடாவை கண்டுகளிக்க வருடந்தோறும் கிட்டத்தட்ட 1,20,000 பேர் அலைமோதுகிறார்கள். ஒதுங்கியிருக்கும் இந்த இடத்தில் அவ்வளவு அழகு கொட்டி கிடப்பதால், இந்த இடம் 1991-⁠ல் உலக ஆஸ்திகள் பட்டியலில் இடம்பிடித்தது. a

உயிரினங்களுக்கு தஞ்சமளிக்கும் பசும்புல் நிலங்கள்

பெல்சார்ட் மட்டும் தண்ணீருக்கடியில் கொஞ்சம் கவனித்திருந்தால் அவர் தேடிய புல்வெளிகளைக் கண்டுபிடித்திருக்கலாம். ஏனென்றால், உலகிலேயே மிகப்பெரியதும், விதவிதமான கடல் புல்வெளிகளை உடையதும் இந்தச் சுறா விரிகுடாதான். இதிலுள்ள எல்லா கடல் புல்வெளிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட 4,000 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்திருக்கின்றன. சுறா விரிகுடாவின் கிழக்கு ஓர பகுதியில் உள்ள உராமல் கடல்புல் கரை மட்டுமே 130 கிலோமீட்டர் நீளத்திற்கு உள்ளது.

கடல்புற்கள் என்று அழைக்கப்படும் இந்த மலர்ச் செடிகள், பல வகையான கடல்வாழ் உயிரினங்கள் வாழ காரணமாயிருக்கின்றன. இளம் இறால் மீன்கள், குட்டி மீன்கள், எண்ணிலடங்கா மற்ற கடல்வாழ் உயிரினங்கள் இந்தத் தாவர சரணாலயத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்டுள்ளன. இக்கடல் புல்வெளிகள், அங்கே தங்கிவரும் கிட்டத்தட்ட 10,000 டூகாங்குகளுக்கு (dugongs) அல்லது கடல் பசுக்களுக்கு ஏராளமான உணவை அள்ளித் தருகின்றன. இந்த டூகாங்குகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவையாகும். சாதுவான அதேசமயத்தில் துருதுருவென இருக்கும் அவற்றின் எடை 400 கிலோவை எட்டும். சில சமயங்களில் நூற்றுக்கும் அதிகமான கடல் பசுக்கள் சேர்ந்து கூட்டம் கூட்டமாக இந்தக் கடல் தாவரங்களை அமைதியாக மேய்ந்து கொண்டிருக்கும். மேற்கில் சுறா விரிகுடாவிலிருந்து கிழக்கில் மோர்டன் விரிகுடா வரையிலுமான வட ஆஸ்திரேலியாவே இப்பொழுது உலகத்தில் அதிகமான டூகாங்குகளைக் கொண்டிருக்கக்கூடும். b

இந்தச் சுறா விரிகுடா, அதனுடைய பெயருக்குப் பொருத்தமாகவே, ஏராளமான சுறா மீன்களுக்குத் தஞ்சமளிக்கிறது. பன்னிரண்டு வகைகளுக்கும் அதிகமான வகை சுறா மீன்களை இங்கே காணலாம். அவற்றில், நடுநடுங்க வைக்கும் புலிச்சுறாவும், உலகிலேயே மிகப் பெரிய மீனாக கருதப்படும் ராட்சத உருவத்தையுடைய ஆனால் ஆபத்து விளைவிக்காத பெருஞ்சுறாவும் அடங்கும். டால்ஃபின்கள் இருக்கும் இடத்தில் சுறா மீன்கள் இருப்பதில்லை என்ற கட்டுக்கதையைப் பொய்யென நிரூபிக்கும் வகையில், இந்த நீர்ப்பகுதிகளில் சுறாக்கள் மட்டுமல்ல டால்ஃபின்களும் காணப்படுகின்றன. அதுவும், சுறாக்களின் தாக்குதலால் கிட்டத்தட்ட 70 சதவீத டால்ஃபின்கள் காயமடைந்திருக்கிறதை ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த விரிகுடாவில் காணப்படும் ஏராளமான உயிரினங்களில், ஆண்டுதோறும் தெற்கே நோக்கி இடம்பெயர்ந்து செல்லும்போது ஓய்விற்காக இங்கே தங்கிச்செல்லும் ஆயிரக்கணக்கான கூன் முதுகுத் திமிங்கலங்களும் அடங்கும். கடற்கரைகளில் முட்டையிடுவதற்காக ஒவ்வொரு வருடமும் ஏராளமான ஆமைகளும் இங்கே வருகின்றன.

அவை பாறைகள்தானா?

சுறா விரிகுடாவின் மற்றப் பகுதிகளைப் போலல்லாமல், அந்த விரிகுடாவின் தென்கோடியில் அமைந்திருக்கும் ஹாமலின் பூல் வெறுமையானதாக, உயிரற்றதாக காணப்படுகிறது. வெதுவெதுப்பான ஆழமற்ற இந்தத் தண்ணீரில் நீராவி விகிதம் அதிகமாக இருப்பதால் அது சாதாரண கடல்நீரைவிட இரண்டு மடங்கு அதிக உப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. தண்ணீரின் ஓரங்களில் மங்கிய சாம்பல் நிற பாறைகள் இருப்பதுபோல் காட்சியளிக்கின்றன. அருகில் சென்று பார்த்தால்தான் அவைப் “பாறைகள்” அல்ல என்றே புரிகிறது. அவை ஸ்ட்ரோமட்டலைட் என்றழைக்கப்படுகின்றன. ஸ்ட்ரோமட்டலைட்கள், சையனோபாக்டீரியா அல்லது நீலப்பச்சை பாசி எனப்படும் ஒற்றை செல் நுண்ணுயிர்க் கூட்டங்களால் ஆனவை. ஒவ்வொரு சதுர மீட்டரிலும் ஏறத்தாழ முந்நூறு கோடி ஸ்ட்ரோமட்டலைட்கள் காணப்படுகின்றன.

இந்தத் திடமான நுண்ணுயிரிகள் கடல்நீரிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களோடு தங்கள் செல்கள் சுரக்கும் பிசினைக் கலந்து சிமெண்ட் போன்ற கலவையை உருவாக்குகின்றன. இந்தக் கலவையை அடுக்கு மேல் அடுக்குகளாக சேர்த்துப் பாறை போன்ற வீடாக உருவாக்குகின்றன. இந்தச் செயல்முறை மிகவும் நிதானமாக நடக்கும். நிதானம் என்றால் அவ்வளவு நிதானம். ஒரு ஸ்ட்ரோமட்டலைட் ஒரு அடி உயரமாக வளருவதற்கே 1,000 வருடங்கள் ஆகும் என்றால் பாருங்களேன்!

உலகிலேயே பல விதமான கடல் ஸ்ட்ரோமட்டலைட்கள் ஹாமலின் பூலில் காணப்படுகின்றன. அவை அதிக அளவில் காணப்படுவதும் இங்குதான். அதுமட்டுமா, ஸ்ட்ரோமட்டலைட்களின் கோட்டை கொத்தளமாக எஞ்சியிருக்கும் இடங்களில் ஹாமலின் பூலும் ஒன்று.

சுறா விரிகுடாவின் வசீகரங்கள்

டெனம் தீபகற்பத்தின் ஓரத்தில் மங்கி மையா (Monkey Mia) என்ற கடற்கரைப் பகுதி இருக்கிறது. இங்கேதான் சுறா விரிகுடாவின் சிறந்த வசீகரங்களில் ஒன்றான நீள்மூக்கு டால்ஃபின்கள் காணப்படுகின்றன. உலகிலேயே சில இடங்களில் மட்டுமே கடலிலுள்ள டால்ஃபின்கள் மனிதர்களோடு விளையாடுவதற்காக கரையோரங்களுக்கு வருகின்றன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் மங்கி மையா கடற்கரை. மனிதர்களுக்கும் டால்ஃபின்களுக்கும் இடையே இந்தத் தொடர்பு எப்போது ஆரம்பமானது என்று யாருக்கும் தெரியவில்லை.

1950-களில் டால்ஃபின்கள் கூட்டமாக சேர்ந்து மீன்களை ஆழமற்றப் பகுதிகளுக்கு விரட்டிச் சென்று பிடித்து வந்ததைப்பற்றி சிலர் சொல்கிறார்கள். டால்ஃபின்களிடம் இந்தப் பழக்கத்தை இன்றும்கூட காணலாம். அப்படிக் கரையோரங்களுக்கு வந்த டால்ஃபின்களுக்கு உணவளிப்பதன்மூலம் மக்கள் அவற்றோடு நண்பர்களாகியிருக்கலாம். 1964-⁠ல் மங்கி மையாவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு பெண் தன் படகைச் சுற்றிச்சுற்றி வலம் வந்துகொண்டிருந்த ஒரு டால்ஃபினுக்கு ஒரு மீனை போட்டாள். அடுத்த நாள் இரவிலும் அந்த டால்ஃபின் வந்து அவளுடைய கையிலிருந்து நேரடியாகவே ஒரு மீனை வாங்கிச் சென்றது. அந்த டால்ஃபினை மக்கள் சார்லி என்று அழைத்தார்கள். அதைத் தொடர்ந்து சார்லியின் நண்பர்களும் அதோடு சேர்ந்து வரத் தொடங்கின.

அன்றிலிருந்து இன்றுவரையாக மூன்று தலைமுறைகளாக டால்ஃபின்கள் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை மகிழ்வித்து வருகின்றன. உயிரியல் நிபுணர்களையும் மகிழ்வித்திருக்கின்றன. பல நாடுகளிலிருந்து வந்த நிபுணர்களில் 100-⁠க்கும் அதிகமான பேர் இவ்விலங்குகளை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். உலகிலேயே இங்கு காணப்படும் டால்ஃபின்களைப் பற்றிய ஆராய்ச்சிதான் அதிகம்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் காலை நேரங்களில் டால்ஃபின்கள் தங்களுடைய குட்டிகளோடு மங்கி மையா கடற்கரைக்கு வருகின்றன. அவர்களுடைய வருகைக்காக சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆவல் பொங்க காத்து கிடப்பார்கள், ஆனால் சிலருக்கு மட்டுமே டால்ஃபின்களுக்கு உணவளிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஏன்? ஏனென்றால், அவை மனிதர்கள் கொடுக்கும் உணவை மட்டுமே சார்ந்து இருந்துவிடக்கூடாது என்பதில் அந்தக் காப்பிடங்களின் அதிகாரிகள் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனாலும், கூடியிருக்கும் அனைவருமே அங்கு நடப்பதைப் பார்த்து அகமகிழ்ந்து போகிறார்கள். ஒரு பெண் சொன்னாள்: “பூமியிலுள்ள எல்லா உயிரினங்களோடும் இதே மாதிரியாக பழக முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!”

இந்த ஏக்கம், மனிதர்கள் எல்லா மிருகங்களையும் சமாதானத்தோடு கீழ்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கடவுளுடைய ஆதி நோக்கத்தையே எதிரொலிப்பதை பைபிள் வெளிப்படுத்துகிறது. (ஆதியாகமம் 1:28) கடவுளுடைய இந்த நோக்கம் பாவத்தின் நிமித்தம் தற்காலிகமாக நிறைவேறாமல் இருக்கிறது. ஆனாலும், இயேசு கிறிஸ்துவின்கீழ் கடவுளுடைய ராஜ்யம் இந்தப் பூமியை ஆளுகையில் இந்த நோக்கம் நிறைவேறும். நீங்கள் மிருகங்களை நேசிக்கிறவர் என்றால், இதை அறிவதில் நிச்சயம் மகிழ்ச்சியடைவீர்கள்.​—மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 11:15.

கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ், இந்த முழு பூமியும் ஆரோக்கியமும் உயிர்த்துடிப்பும் நிறைந்ததாய் இயற்கை அழகு கொஞ்சும் சரணாலயமாக பூத்துக்குலுங்கும். இன்று, சுறா விரிகுடா போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருவதில் ஆச்சரியமேதுமில்லை. வெகு விரைவில், இதுபோன்ற இடங்கள் நம்மை இன்னும் அதிகமாக மகிழ்விக்கும் காலம் வரவிருக்கிறது.​—சங்கீதம் 145:16; ஏசாயா 11:6-9.

[அடிக்குறிப்புகள்]

a கலாச்சார மற்றும் இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (UNESCO) அதன் உலக ஆஸ்திகள் பட்டியலில் சேர்க்கிறது.

b டூகாங்குகள், மானட்டீஸோடு தொடர்புடையவையாக இருந்தாலும், அவை தனி இனத்தைச் சேர்ந்தவையாகும். மானட்டீஸ்களின் வால் வட்ட வடிவில் இருக்கும்; ஆனால், டூகாங்குகளின் வால் டால்ஃபினுக்கு இருப்பது போல கூர்மையானதாக இருக்கும்.

[பக்கம் 15-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஆஸ்திரேலியா

சுறா விரிகுடா

[பக்கம் 16, 17-ன் படம்]

வானிலிருந்து எடுக்கப்பட்ட மங்கி மையா கடற்கரை காட்சி

[பக்கம் 16, 17-ன் படம்]

சாதுவான டூகாங்குகள் அல்லது கடல் பசுக்கள்

[படத்திற்கான நன்றி]

© GBRMPA

[பக்கம் 16, 17-ன் படம்]

கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் ஸ்ட்ரோமட்டலைட்களை உருவாக்குகின்றன

[பக்கம் 17-ன் படம்]

மங்கி மையா கடற்கரைக்கு டால்ஃபின்கள் அடிக்கடி வலம் வருகின்றன

[பக்கம் 15-ன் படங்களுக்கான நன்றி]

© GBRMPA; செயற்கைகோள் வரைபடம்: Jeff Schmaltz, MODIS Rapid Response Team, NASA/GSFC

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

All images, except dugong, supplied courtesy Tourism Western Australia