Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தன்னியல்பு ஞானம்—ஓர் அதிசயம்

தன்னியல்பு ஞானம்—ஓர் அதிசயம்

தன்னியல்பு ஞானம்​—⁠ஓர் அதிசயம்

“பறவைகள் இடப்பெயர்ச்சி செய்வதை பிரமிப்பில் ஆழ்த்தும் ஓர் இயற்கை நிகழ்வு எனலாம்.” ​—⁠காலென்ஸ் அட்லஸ் ஆஃப் பேர்ட் மைக்ரேஷன்.

டிசம்பர் 9, 1967 அன்று விண்ணில் அணிவகுத்துப் பறந்துசென்ற அன்னப்பறவைகளின் கூட்டத்தை ஒரு விமானி கண்டார். அதில் கிட்டத்தட்ட 30 ஊப்பர் அன்னப்பறவைகள் இருந்தன. அவை வியக்கவைக்குமளவுக்கு 8,200 மீட்டர் உயரத்தில் அயர்லாந்தை நோக்கிப் பறந்து சென்றன. காற்றின் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே சுமார் 40 டிகிரி செல்சியஸாக இருந்த இத்தனை உயரத்தில் அவை ஏன் பறந்தன? அங்கு வீசிய காற்று மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க அவற்றிற்கு கைகொடுத்தது; அதோடு குறைவான உயரங்களில் விடாமல் வீசிய பனிப்புயலையும் அவை தப்பித்துக் கொண்டன. அவை ஐஸ்லாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே உள்ள 1,300 கிலோமீட்டர் தூரத்தை ஏழே மணிநேரத்தில் கடந்ததாகக் கணக்கிடப்பட்டது.

இடப்பெயர்ச்சி செய்வதில் உலகிலேயே முதல் இடத்தைப் பிடித்திருப்பது ஆர்க்டிக் டெர்ன் எனப்படுகிற வடதுருவ ஆலா பறவையாகும்; இது, ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே இனவிருத்தி செய்கிறது; ஆனால், அப்பகுதியின் குளிர்காலத்தைத் தப்பிக்க அண்டார்டிகாவிற்குச் செல்கிறது. இந்தக் குட்டி கடற்பறவை ஒரு வருடத்தில் 40,000 முதல் 50,000 கிலோமீட்டர் தூரம்வரை பயணிக்கிறது. இது உலகையே வலம்வருவதற்குச் சமமாக இருக்கிறதாம்!

வெள்ளை நாரைகள் வடக்கு ஐரோப்பாவில் இனவிருத்தி செய்கின்றன. ஆனால் குளிர்காலத்தைக் கழிக்க தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துவிடுகின்றன. இவ்வாறு மொத்தமாக 24,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கின்றன. இலையுதிர் காலத்திலும் இளவேனில் காலத்திலும் ஆயிரக்கணக்கான வெள்ளை நாரைகள் இஸ்ரேல் நாட்டைக் கடந்து செல்கின்றன. இப்பயணத்திற்கு அவை பின்பற்றுகிற கால அட்டவணையை பைபிள் காலத்தில் வாழ்ந்தவர்களும் அறிந்திருந்தார்கள்.​—எரேமியா 8:⁠7.

பறவைகளுக்குத் தன்னியல்புத் திறமையை, அதாவது உள்ளுணர்வைக் கொடுத்தவர் யார்? சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் நீதிமானாகிய யோபுவிடம் கடவுள் பின்வரும் கேள்வியைக் கேட்டார். “உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ? உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?” அதற்கு யோபு பதிலளிக்கையில், பறவைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் இருக்கிற அற்புத திறமைகளுக்காக சரியாகவே கடவுளைப் புகழ்ந்தார்.​—யோபு 39:26, 27; 42:⁠2.

தன்னியல்பைவிட உன்னதமானது

கடவுளுடைய படைப்பில் மணிமகுடமாய்த் திகழ்கிற மனிதர்கள் பறவைகளைப்போல உள்ளுணர்வின்படி மட்டுமே செயல்படுவதில்லை. மாறாக, நாம் சுயமாகத் தெரிவு செய்யும் திறமையுடன் படைக்கப்பட்டிருக்கிறோம். அதோடு மனசாட்சியையும், அன்பு காட்டும் திறனையும் பெற்றிருக்கிறோம். (ஆதியாகமம் 1:27; 1 யோவான் 4:8) இந்த எல்லாத் திறனையும் நாம் பெற்றிருப்பதால் நீதியான, ஒழுக்கநெறி தவறாத தீர்மானங்களை நம்மால் செய்ய முடிகிறது. இப்படிச் செய்வதன்மூலம், சிலசமயங்களில் நம்மால் அளவுகடந்த அன்பைக் காட்டவும் சுயதியாகம் செய்யவும் முடிகிறது.

சொல்லப்போனால், ஒழுக்க நெறிகளும் ஆன்மீக நெறிகளும் சிலருக்கு சிசுப்பருவம் முதலே கற்றுக்கொடுக்கப்படுகின்றன. சிலருக்கோ கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. இவ்வாறு கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தாலும் சரி, கற்றுக் கொடுக்கப்படாதிருந்தாலும் சரி அவை ஒருவருடைய மனப்பான்மையையும் நடத்தையையும் பெரிதும் பாதிக்கின்றன. இதன் விளைவாக, எது சரி எது தவறு, எது ஏற்கத்தக்கது எது ஏற்கத்தகாதது என்ற விஷயத்தில் நபருக்கு நபர் அபிப்பிராய பேதங்கள் ஏற்படலாம். குறிப்பாக கலாச்சாரம், தேசப்பற்று, மதம் ஆகியவற்றின் செல்வாக்கு ஓங்கும்போது இத்தகைய பேதங்கள், கருத்துவேற்றுமைக்கும் சகிப்பின்மைக்கும் பகைக்கும்கூட உரமிடலாம்.

இப்பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்துகிற இயற்கைச் சட்டங்களுக்கு மனிதகுலம் ஒன்றுபோல் கீழ்ப்படிகிற விதமாக, நல்லொழுக்கத்துக்கும் பைபிள் கற்பிக்கிற சத்தியத்திற்கும் இசைவாக இருக்கிற நெறிமுறைகளை எல்லாரும் ஒன்றுபோல் கடைப்பிடித்தால் இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், எல்லாரும் பின்பற்ற வேண்டிய நெறிகளை வகுப்பதற்கான திறமையும் அறிவும் யாருக்காவது இருக்கிறதா? அப்படிப்பட்ட ஒருவர் இருக்கிறாரென்றால், அவர் அதைச் செய்வாரா அல்லது செய்திருக்கிறாரா? இக்கேள்விகளுக்கு பின்வரும் கட்டுரைகளில் பதிலைக் காணலாம்.