Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தன்னியல்பைவிட மேம்பட்ட வழிகாட்டி

தன்னியல்பைவிட மேம்பட்ட வழிகாட்டி

தன்னியல்பைவிட மேம்பட்ட வழிகாட்டி

“தனிநபர் ஒழுக்கம் என்பது அவரவர் இஷ்டப்படி தேர்ந்தெடுக்கப்படுகிற ஒன்றாக இருந்தால், அதோடு அப்படிப்பட்ட தெரிவுகள் ஒழுக்கநெறிப்படி சரியானதா என்பதைப் பகுத்தறிவதற்கான நியமங்களும் இல்லாதிருந்தால் அந்த குறைபாட்டைச் சரிசெய்ய நன்நடத்தையைச் சட்டப்படி அமல்படுத்தியே ஆகவேண்டும்.” ​— டாக்டர். டேனியல் காலஹன்.

காலஹன் எதைக் குறித்து அஞ்சினாரோ அது நிஜமாகியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயம். ஏனெனில், உலகின் பல பகுதிகளிலும் இன்று ஒழுக்கநெறி தறிகெட்டுப் போய்விட்டது; அதனால் குற்றச்செயலைத் தடுப்பதற்கு அரசாங்கங்கள் எண்ணற்ற சட்டங்களை அமல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளன. முதன்முறையாக நடைபெற்ற நைஜீரியத் தாய்மார்களுக்கான உச்ச மாநாட்டில், அந்நாட்டின் எதிர்காலத்தைக் குறித்து அதன் ஜனாதிபதி ஆழ்ந்த கவலை தெரிவித்தார். அவரை வாட்டியது அரசியலோ வறுமையோ அல்ல, ஆனால், “அதைவிட மிக மோசமான பிரச்சினை” அதாவது “குடும்பத்திலும், வேலை செய்யுமிடத்திலும், சமுதாயத்திலும், தேசிய அளவிலும் அடிப்படை ஒழுக்கநெறிகள் . . . படிப்படியாக சீரழிந்து வருவதுதான்.”

“ஒழுக்கநெறிகள் தரங்கெட்டு வருவதாலும் ஒற்றைப் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், கட்டுக்கோப்பான பாரம்பரியக் குடும்பங்கள் இன்று சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றன” என பிரிட்டனைச் சேர்ந்த 1,736 தாய்மார்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டியது. சீனாவிலும்கூட ஒழுக்கநெறிகள் கிடுகிடுவென்று வீழ்ச்சியடைந்து வருகின்றன. அங்குள்ள மக்கள் செக்ஸ் விஷயத்தில் பிஞ்சிலே பழுத்தவர்களாக இருப்பது மட்டுமின்றி பலருடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்; இந்தளவுக்கு மோசமான நிலை இதற்கு முன் இருந்ததில்லை என்று டைம் பத்திரிகை அறிக்கை செய்தது. 100-⁠க்கும் அதிகமான நபர்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக பெருமையடித்த ஒரு சீன யுவதி இவ்வாறு சொன்னாள்: “இது என் வாழ்க்கை, என் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் நடப்பேன்.”

இந்த ஒழுக்கச் சீரழிவு, பொறுப்பான பதவியில் உள்ளவர்களையும்கூட விட்டுவைக்கவில்லை. “தலைவர்களை உத்தமபுத்திரர்களாகக் கொண்டாடிய காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது” என கனடாவின் டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளில் ஜாவட் அக்பர் தெரிவித்தார். அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் மதத்தலைவர்களும்கூட “நன்னெறிகளைக் கடைப்பிடிக்கிற விஷயத்தில் ஆட்டங்காண்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.

நன்னெறிகள் வீழ்ச்சியடைவதற்கு காரணமென்ன?

நன்னெறிகளின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிற நன்னெறிகளை எதிர்த்து எங்குமுள்ள மக்கள் கறுப்புக்கொடி காட்டுவதாகும். உதாரணமாக, அமெரிக்காவின் தென் பகுதியில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்களில் பெரும்பாலோர் “சரி, தவறு என்பதெல்லாம் அவரவருடைய தனிப்பட்ட விஷயம்” என்று சொன்னதாக அது குறிப்பிட்டது.

அரசியல் எழுத்தாளரான ஸ்பிக்னயேவ் ப்ரேஸின்ஸ்கி மற்றொரு காரணத்தைக் குறிப்பிடுகிறார். இன்றைய சமுதாயம், “அவரவர் ஆசைகளை உடனுக்குடன் திருப்தி செய்வதில்தான் அதிக கவனம் செலுத்துகிறது. இந்நிலையில், வாழ்க்கையே இன்பம் அனுபவிக்கத்தான் என்ற கொள்கை ஒரு நபருடைய நடத்தையிலும் ஒரு தொகுதியின் நடத்தையிலும் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.” பேராசை, சுய திருப்தி, நடத்தை விஷயத்தில் சொந்த விருப்பப்படி தீர்மானங்கள் எடுப்பது ஆகியவை கவர்ச்சிகரமாகத் தோன்றலாம்; ஆனால் உண்மையான சந்தோஷத்துக்கும், மனநிறைவுக்கும், மற்றவர்களோடு சுமூகமான உறவுக்கும் அவை வழிவகுக்குமா?

“ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” என்றார் இயேசு. (மத்தேயு 11:19, பொது மொழிபெயர்ப்பு) ஒழுக்க நெறிகள் தரங்கெட்டு வருவதால் மக்கள் அதிக மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்களா? ஒழுக்கநெறி சீரழிந்திருப்பதன் விளைவுகளை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்: அதிகரித்துவரும் அவநம்பிக்கை, பாதுகாப்பற்ற உணர்வு, முறிந்த உறவுகள், அப்பாவோ அம்மாவோ இல்லாமல் வளரும் பிள்ளைகள், பெருகிவரும் பால்வினை நோய்கள், முறைதவறிய கர்ப்பங்கள், போதைப் பொருளுக்கு அடிமையாதல், வன்முறை ஆகியவையே உண்மையில் விளைவடைந்திருக்கின்றன. இவையாவும் எதைக் காட்டுகின்றன? ஒழுக்க நெறிகளின் வீழ்ச்சி மக்களுக்கு திருப்தியையும் சந்தோஷத்தையும் அல்ல, மாறாக துயரத்தையும் தோல்வியையுமே அளித்திருப்பதைக் காட்டுகின்றன.​—கலாத்தியர் 6:7, 8.

இதுபோன்ற சூழல் கடவுளுடைய தீர்க்கதரிசியான எரேமியா வாழ்ந்த காலத்திலும் நிலவியிருந்தது; எனவே கடவுளுடைய ஆவியின் தூண்டுதலால் அவர் பின்வரும் குறிப்பைத் தெரிவித்தார்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) ஆம், கடவுளைச் சார்ந்து வாழாமல் நல்லது கெட்டதைத் நாமாகவே தீர்மானித்துக்கொள்ளும் விதமாக அவர் நம்மைப் படைக்கவில்லை. நமக்கு சரியாகப் படுகிற விஷயங்கள் உண்மையில் அதிக தீமை விளைவிப்பவையாக இருக்கலாம். “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று நீதிமொழிகள் 14:12-⁠ல் பைபிள் தெரிவிக்கிறது.

நமக்குள்ளே ஓர் எதிரி

ஒழுக்க விஷயத்தில் நமக்கு வழிகாட்டி ஏன் தேவை என்பதற்கு ஒரு காரணம் என்ன தெரியுமா? நம் இருதயமே நம்மை வஞ்சித்துவிடலாம். “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் [அதாவது, வஞ்சகமுள்ளதும்] மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” என்று எரேமியா 17:9-⁠ல் பைபிள் சொல்கிறது. வஞ்சிப்பவர், மகா கேடுள்ளவர் என்றெல்லாம் பேர் வாங்கிய நபரை நீங்கள் நம்புவீர்களா? நிச்சயம் நம்பமாட்டீர்கள்! இருந்தாலும், இந்த மோசமான குணங்களை வெளிக்காட்டுகிற இருதயம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனவேதான், இந்த அன்பான எச்சரிப்பை கடவுள் நமக்கு நேரடியாக தருகிறார்: “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான் [அதாவது ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்வான்.]”​நீதிமொழிகள் 28:26.

நாம் என்ன செய்யவேண்டுமென்று இந்த வசனம் காட்டுகிறது: நம்முடைய சொந்த ஞானத்தை நம்புவதற்குப் பதிலாக, கடவுளுடைய ஞானத்தில் நடக்க வேண்டும்; அப்படிச் செய்யும்போது அநேக ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்வோம். அதோடு, அந்த மதிப்புமிக்க ஞானத்தை உள்ளப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ள விரும்புகிற அனைவருக்கும் அது எளிதில் கிடைக்கிறது. “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்.”​—யாக்கோபு 1:⁠5.

‘முழு இருதயத்தோடு’ கடவுளை நம்புங்கள்

நம் படைப்பாளரைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவரே பாறை! அவர் செயல் நிறைவானது! அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை! வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன்! அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்!” (உபாகமம் 32:4, பொ.மொ.) ஆம், யெகோவா ஒரு பிரமாண்டமான பாறையைப்போல இருக்கிறார். நம்மைச் சுற்றி எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தாலும்சரி, ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் சிறந்த வழிநடத்துதலுக்காக நாம் அவரை முழுமையாக நம்பமுடியும். நீதிமொழிகள் 3:5, 6 இவ்வாறு சொல்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”

சொல்லப்போனால், நம்முடைய ‘தலையிலுள்ள மயிரையெல்லாம்’ எண்ணுகிற நம் படைப்பாளரைக் காட்டிலும் சிறந்த வழிநடத்துதலை வேறு யாரால் தர முடியும்? (மத்தேயு 10:30) மேலுமாக, அவர் தம்மை உண்மையான நண்பராக நிரூபித்துக் காட்டியிருக்கிறார். நம்மீதுள்ள அன்பின் காரணமாக எல்லாச் சமயங்களிலும் நம்மிடம் நேர்மையாகவும் நடந்துகொள்கிறார்; அவர் சொல்கிற உண்மையை ஏற்றுக்கொள்வது நமக்கு கஷ்டமாக இருந்தாலும்கூட அவர் உண்மையையே சொல்கிறார்.​—சங்கீதம் 141:5; நீதிமொழிகள் 27:⁠6.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தம்முடைய வழிநடத்துதலுக்கு அடிபணியும்படி யெகோவா நம்மை வற்புறுத்துவதில்லை. மாறாக, அன்போடு இவ்வாறு அறிவுறுத்துகிறார். “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.” (ஏசாயா 48:17, 18) இப்படிப்பட்ட ஒரு கடவுளிடம் நீங்கள் ஈர்க்கப்படவில்லையா? அதோடு, பரிசுத்த பைபிளின் மூலம் அவருடைய ஞானம் நமக்கு எளிதாக கிடைக்கவும் அவர் வழிசெய்திருக்கிறாரே! இந்த பைபிள் அவருடைய ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டு, உலகிலேயே அதிகமாக விநியோகிக்கப்பட்டு வருகிற ஒரு புத்தகமாகும்.​—2 தீமோத்தேயு 3:⁠16.

கடவுளுடைய வார்த்தை நம் பாதையை பிரகாசமாக்குவதாக

பரிசுத்த வேதத்தைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105) நம் கால்களுக்கு ஒளி தரும் தீபம் அருகிலுள்ள ஆபத்துக்களைக் காட்டிக் கொடுக்கிறது; நம் பாதையை வெளிச்சமாக்கும் ஒளியோ நமக்கு முன்னாலிருக்கும் வழியைப் பிரகாசமாக்குகிறது. சுருங்கச் சொன்னால், இன்று நம்மைப் பாதிக்கிற காரியங்களிலும் எதிர்காலத்தில் நம்மைப் பாதிக்கக்கூடிய காரியங்களிலும் ஞானமுள்ள, நல்லொழுக்கமுள்ள தீர்மானங்களைச் செய்வதற்கு உதவுவதன்மூலம் கடவுளுடைய வார்த்தையானது வாழ்க்கைப் பாதையில் நம்மைப் பத்திரமாக வழிநடத்திச் செல்கிறது.

உதாரணமாக, மலைப்பிரசங்கத்தைக் கவனியுங்கள். அது மத்தேயு 5 முதல் 7 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது; அந்தச் சுருக்கமான சொற்பொழிவில், சந்தோஷம், அன்பு, பகை, இரக்கம், ஒழுக்கம், ஜெபம், செல்வத்தின் மீது நாட்டம் ஆகியவற்றைக் குறித்து இயேசு பேசினார்; அதோடு இக்காலத்துக்கும் பொருந்துகிற இன்னும் அநேக விஷயங்களைக் குறித்தும் இயேசு பேசினார். அவருடைய பேச்சு அந்தளவு கருத்தாழமிக்கதாக இருந்ததால், “ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத்தேயு 7:29) தயவுசெய்து அந்தச் சொற்பொழிவை வாசிப்பதற்கு கொஞ்ச நேரத்தை ஒதுக்குங்கள். ஒருவேளை நீங்களும்கூட அசந்துபோவீர்கள்.

கடவுளின் உதவிக்காக ‘தொடர்ந்து கேளுங்கள்’

கடவுளுடைய பார்வையில் சரியாக இருக்கும் காரியங்களைச் செய்வது எப்போதுமே எளிதல்ல என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். சொல்லப்போனால், பாவத்திற்கு எதிரான நம் மனப்போராட்டத்தை பைபிள் ஒரு போருக்கு ஒப்பிடுகிறது. (ரோமர் 7:21-24) என்றாலும், கடவுளுடைய உதவியுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும். இயேசு இவ்வாறு சொன்னார்: “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; . . . ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்.” (லூக்கா 11:9, 10) ஆம், நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிற குறுகிய பாதையில் நடக்க உள்ளப்பூர்வமாக முயற்சி செய்கிற எவரையும் யெகோவா நட்டாற்றில் விட்டுவிட மாட்டார்.​—மத்தேயு 7:13, 14.

ஃபிராங்க் என்பவரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்த சமயத்தில் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். 2 கொரிந்தியர் 7:1-ஐ (பொ.மொ.) பைபிளில் வாசித்தபோது, புகைப்பழக்கத்தை ‘உடலை . . . மாசுப்படுத்துகிற’ பழக்கமாக கடவுள் கருதுகிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டார். அதனால் அப்பழக்கத்தை அடியோடு விட்டுவிட மனதுக்குள் உறுதிபூண்டார். இருந்தாலும், தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதற்குப் படாதபாடு பட்டார். ஒரு சமயம், முட்டியில் தவழ்ந்தவாறு பழைய சிகரெட் துண்டுகள் மூலைமுடுக்கில் எங்காவது தட்டுப்படாதா என்று தேடுமளவுக்குச் சென்றுவிட்டார்!

இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டபோது, புகையிலை தன்னை எந்தளவுக்கு ஆட்டிப் படைக்கிறது என்பதை ஃபிராங்க் உணர்ந்துகொண்டார். (ரோமர் 6:16) எனவே, கடவுளிடம் உதவிகேட்டு மன்றாடினார்; அதோடு அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபையினரோடு நல்ல தோழமை கொண்டார். இவ்வாறு இந்த மோசமான பழக்கத்தை வெற்றி கொண்டார்.​—எபிரெயர் 10:24, 25.

உங்கள் ஆன்மீக உணர்வைத் திருப்தி செய்யுங்கள்

ஃபிராங்க்கைப்போல் இன்னும் அநேகருடைய வாழ்க்கை உதாரணங்களில் இந்த உண்மை பளிச்சிடுகிறது. அதாவது, ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பைபிள் தரும் வழிகாட்டுதல் மேம்பட்டதாக இருப்பதோடு அதன்படி நடப்பதற்கான ஊக்குவிப்பையும் அது தருகிறது. ஆகவே, இயேசு இவ்வாறு சொன்னதில் வியப்பேதுமில்லை: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”​—மத்தேயு 4:⁠4.

கடவுளைப் பற்றிய அருமையான சத்தியங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் மனம், உணர்ச்சி, ஆன்மீகம், சரீரம் என எல்லாவிதங்களிலும் நாம் நன்மையடைவோம். சங்கீதம் 19:​7, 8 இவ்வாறு சொல்கிறது: ‘கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; . . . கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் [கடவுளின் நோக்கத்தைப் பற்றிய நம்பிக்கையாலும் தெளிவான காட்சியாலும்] தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.‘

ஒழுக்கநெறிகளுக்கு வழிகாட்டும் உணர்வுகளை சரியாக வைத்துக்கொள்ளவும் இப்போதே மிகச் சிறந்த வாழ்க்கை வாழவும் யெகோவா தம்முடைய வார்த்தை மூலமாக நமக்கு உதவுகிறார். அதோடு, எதிர்காலத்தைக் குறித்தும் நமக்கு தெரியப்படுத்துகிறார். (ஏசாயா 42:9) கடவுளுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொள்கிற அனைவருக்கும் அந்த ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதைப் பின்வரும் கட்டுரை தெரிவிக்கும்.

[பக்கம் 4, 5-ன் பெட்டி/படம்]

உங்களுடைய ஒழுக்கநெறி “வழிகாட்டி”

மனிதருக்கு ஓர் ஒப்பற்ற பரிசு வழங்கப்பட்டிருக்கிறது​—⁠அதுதான் மனசாட்சி. அதன் விளைவாக, ஒவ்வொரு தேசத்தையும், இனத்தையும், சகாப்தத்தையும் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் ஒரே விதமான நடத்தை விதிகளைப் பின்பற்றியிருக்கிறார்கள். (ரோமர் 2:14, 15) என்றாலும் மனசாட்சியை முற்றிலும் நம்பகமான ஒரு வழிகாட்டி என்று சொல்லிவிட முடியாது; பொய்யான மதபோதனைகள், மனித தத்துவங்கள், தப்பெண்ணங்​கள், தவறான ஆசைகள் ஆகியவற்றால் அது பாதிக்கப்​படலாம். (எரேமியா 17:9; கொலோசெயர் 2:8) விமானத்திலுள்ள திசைகாட்டும் கருவிகள் துல்லியமாக இருப்பதை ஒரு விமானி சரிபார்க்க வேண்டும். அவ்வாறே நாமும்கூட தேவை ஏற்படும் போதெல்லாம், நம்முடைய ஒழுக்கநெறி வழிகாட்டியும் ஆன்மீக வழிகாட்டியுமான மனசாட்சியை ‘நம்முடைய நியாயப்​பிரமாணிகரான’ யெகோவா தேவனுடைய நீதியான நெறிகளுக்கு இசைவாக சரிசெய்துக்கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் வேண்டும். (ஏசாயா 33:22) தலைமுறைக்கு தலைமுறை மாறுகிற மனித நடத்தைக்குரிய நெறிமுறைகளைப் போலில்லாமல் கடவுளுடைய உன்னத நெறிகள் என்றென்றும் நிலைத்திருக்கும். “நான் கர்த்தர் [“யெகோவா,” NW], நான் மாறாதவர்.”​—⁠மல்கியா 3:6

[பக்கம் 7-ன் பெட்டி]

வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் வழிகாட்டி

மகிழ்ச்சியைக் கண்டடைதல்

“ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்.” ​—மத்தேயு 5:3, NW.

“வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது.”​—அப்போஸ்தலர் 20:35, NW.

“கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கைக்கொள்வோரே மகிழ்ச்சியுள்ளோர்!”​—லூக்கா 11:28, NW.

நம்பிக்கையைச் சம்பாதித்தல்

“ஒருவரோடொருவர் உண்மை பேசுங்கள்.”​—எபேசியர் 4:25, பொ.மொ.

“திருடர் இனித் திருடாமல் இருக்கட்டும்.”​—எபேசியர் 4:28, பொ.மொ.

“திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும்.”​—எபிரெயர் 13:⁠4, பொ.மொ.

சுமுகமான உறவுகளை வளர்க்க முயலுதல்

“மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”​—மத்தேயு 7:⁠12.

“அவனவன் [ஒரு கணவன்] தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள் [“ஆழ்ந்த மரியாதை காட்டக்கடவள்,” NW].”​—எபேசியர் 5:⁠33.

“ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் [“மன்னித்துக் கொண்டே இருங்கள்,” NW].”​—கொலோசெயர் 3:13.

சச்சரவுகளை தவிர்ப்பதும் தீர்ப்பதும்

“ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்.”​—ரோமர் 12:⁠17.

“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; . . . தீங்கை கணக்கில் வைக்காது.”​—1 கொரிந்தியர் 13:4, 5, NW.

“சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.”​—எபேசியர் 4:⁠26.