Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நல்லவராக இருந்தால்’ மட்டும் போதுமா?

‘நல்லவராக இருந்தால்’ மட்டும் போதுமா?

பைபிளின் கருத்து

‘நல்லவராக இருந்தால்’ மட்டும் போதுமா?

“என்னைப் பொறுத்தவரை நான் மிகச் சிறந்த பாதையில் நடக்கிறேன், நல்லவளாக இருக்கவும் முயற்சி செய்கிறேன்” என்று அலசன் என்ற இளம்பெண் கூறுகிறார். இப்படி வாழ்வதைத்தான் கடவுள் எதிர்பார்க்கிறார் என இவரைப் போலவே பலரும் நம்புகிறார்கள்.

மற்றவர்களோ, பொதுவாக நல்ல விதமாய் வாழ்ந்தால் மோசமான பாவம் செய்தாலும்கூட கடவுள் அதைக் கண்டுகொள்ள மாட்டாரென நினைக்கிறார்கள். தண்டிப்பதைவிட மன்னிக்கத்தான் கடவுள் அதிக விருப்பமுள்ளவராக இருக்கிறாரென அவர்கள் நம்புகிறார்கள்.

‘நல்லவராக இருப்பது’ என்பதற்கான விளக்கங்கள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன என்பது உண்மைதான். ஆனால், பைபிள் என்ன சொல்கிறது? கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? அவருடைய பார்வையில் நல்லவராக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?

நமது படைப்பாளரின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளுதல்

யெகோவா தேவன் நமது படைப்பாளராக இருப்பதால் நமக்கு நல்ல வழிநடத்துதலைக் கொடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11) அவர் நம்முடைய நடத்தையையும் வழிபாட்டு முறையையும் நெறிப்படுத்துவதற்கு பைபிளில் சட்டதிட்டங்களையும் நியமங்களையும் கொடுத்திருக்கிறார். “என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்” என்று அவர் தம்முடைய மக்களுக்குச் சொன்னார்.​—எரேமியா 11:3.

எனவே, கடவுளுடைய கண்ணோட்டத்தில் ‘நல்லவராக இருப்பது’ என்பது அவருடைய நெறிகளைக் கற்றுக்கொள்வதையும் அவற்றுக்கு ஏற்றார்போல் நம் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்வதையும் அவசியமாக்குகிறது. இதைக் கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் ஒருவருக்கு நண்பராக வேண்டுமென விரும்புகிறீர்கள். தான் எவ்வாறு நடத்தப்பட வேண்டுமென அவர் விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள இயல்பாகவே நீங்கள் ஆசைப்படுவீர்கள்; பிறகு அவருக்குப் பிடித்தமான வழியில் நடந்துகொள்வீர்கள். கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்ற முற்பிதாவான ஆபிரகாமைப்போல நாமும் யெகோவாவின் நண்பராக முடியுமென பைபிள் குறிப்பிடுகிறது. (யாக்கோபு 2:23) மேலுமாக, கடவுளுடைய நெறிகள் மனிதர்களுடையதைவிட உயர்ந்தவையாய் இருப்பதால், நம்முடைய நெறிகளுக்குத் தக்கவாறு அவர் மாறவேண்டுமென நாம் எதிர்பார்க்க முடியாது.​—ஏசாயா 55:8, 9.

கீழ்ப்படிதலின் முக்கியத்துவம்

நாம் “சிறிய” கட்டளைகளைப் புறக்கணித்தாலே கடவுள் நம்மை கண்டிப்பாரா? “சிறிய” கட்டளைகள் சிலவற்றுக்குக் கீழ்ப்படிவது முக்கியமல்ல என்று சிலர் நினைக்கலாம். என்றாலும், கடவுள் கொடுத்த எந்தக் கட்டளையையும் முக்கியமல்ல என்று நாம் ஒதுக்கித்தள்ள முடியாது. 1 யோவான் 5:3-⁠ல் பைபிள் எந்தவித வேறுபாட்டையும் காட்டாமல் இப்படிச் சொல்வதைக் கவனியுங்கள்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” கடவுளுடைய கட்டளைகள் எல்லாவற்றையும் பின்பற்றுவதில் நம்மால் முடிந்த சிறந்ததைச் செய்யும்போது, அவர்மீதுள்ள தன்னலமற்ற அன்பை நாம் நிரூபிப்போம்.​—மத்தேயு 22:37.

யெகோவா எல்லாவற்றிலும் பரிபூரணத்தை எதிர்பார்க்கிறவரல்ல. நம்முடைய தவறுகளுக்காக உண்மையிலேயே மனம் வருந்தி அவற்றைத் திரும்பச் செய்யாமலிருக்கக் கடினமாக முயற்சி செய்வோமானால், அவர் நம்மை மனப்பூர்வமாக மன்னிக்கிறார். (சங்கீதம் 103:12-14; அப்போஸ்தலர் 3:20) மற்ற விஷயங்களுக்குக் கீழ்ப்படிவதால் இதற்கும் அதற்கும் சரியாய் போய்விடும் என நினைத்துக்கொண்டு வேண்டுமென்றே சில சட்டங்களை மீறிநடப்பதை கடவுள் ஏற்றுக்கொள்வாரா? ஏற்றுக்கொள்ள மாட்டாரென பைபிள் உதாரணம் ஒன்று காட்டுகிறது.

இஸ்ரவேலை ஆண்ட சவுல் ராஜா கடவுளுடைய கட்டளைகள் சிலவற்றுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தார். அமலேக்கியரோடு போர் செய்யும்போது அவர்களுடைய கால்நடைகள் எதையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் “கொன்றுபோட” வேண்டுமென அறிவுரை கொடுக்கப்பட்டது. சவுல் மற்ற கட்டளைகளைப் பின்பற்றினாலும், கீழ்ப்படியாமல் “ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும்” தப்பவைத்தார். ஏன்? அவரும் ஜனங்களும் அவற்றைத் தங்களுக்காக வைத்துக்கொள்ள விரும்பினார்கள்.​—1 சாமுவேல் 15:2-9.

சவுல் கீழ்ப்படியாததற்கான காரணத்தை சாமுவேல் தீர்க்கதரிசி கேட்டபோது, அதை மறுத்து தான் கீழ்ப்படிந்ததாகவே சொன்னார். கடவுளுக்குச் செலுத்திய பலிகள் உட்பட தானும் மக்களும் செய்த நல்ல காரியங்களையும் பட்டியலிட்டார். “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்” என்று சாமுவேல் சொன்னார். (1 சாமுவேல் 15:17-22) எனவே, பலிகளைச் செலுத்துவதன் மூலமோ மற்ற நல்ல காரியங்களைச் செய்வதன் மூலமோ சில விஷயங்களில் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போவதை ஈடுகட்ட முடியாது.

கடவுளுடைய நெறிகள்​—⁠அவருடைய அன்பின் அத்தாட்சிகள்

யெகோவாவை எப்படிப் பிரியப்படுத்தலாம் என்பதை நாமே கற்பனை செய்துகொள்ளும்படி அவர் விட்டுவிடாதிருப்பது அன்பான செயலே. “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்பதைப் போன்ற தெளிவான தார்மீக வழிநடத்துதலை பைபிளில் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 30:21) அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றும்போது மனிதர்களுடைய முரண்பாடான, தார்மீகக் கருத்துகளை அலசி ஆராய்வதால் உண்டாகும் விரக்தியையும் சந்தேகத்தையும் தவிர்க்க முடியும். மாறாக, கடவுளுடைய வழிநடத்துதல் எப்பொழுதும் நம்முடைய நன்மைக்காகவும் ‘பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதிப்பதற்காகவுமே’ என்பதிலும் நாம் உறுதியாய் இருக்கலாம்.​—ஏசாயா 48:17, 18.

‘நல்லவராக இருப்பது’ எதை உட்படுத்துகிறதென நமக்கு நாமே தீர்மானித்துக்கொள்வதில் என்ன ஆபத்து இருக்கிறது? நாமனைவருமே சுயநலமாகச் செயல்படும் மனச்சாய்வைப் பெற்றிருக்கிறோம். நம் இருதயமே நம்மை ஏமாற்றிவிடலாம். (எரேமியா 17:9) கடவுள் கொடுத்திருக்கும் கட்டளைகளை அப்படியே அச்சுப்பிசகாமல் கடைப்பிடிப்பது கடினம் அல்லது அவை கெடுபிடியானவை என்று அவற்றின் முக்கியத்துவத்தை நாம் சுலபமாகக் குறைத்து மதிப்பிட்டுவிடலாம்.

உதாரணமாக, திருமணமாகாத இருவர் பாலுறவுகொள்ள தீர்மானிக்கலாம்; ஏனென்றால், அதில் வேறு யாருக்கும் எந்தப் பாதிப்புமில்லை, முழுக்க முழுக்க இது தங்களுடைய சொந்த விஷயம் என்று அவர்கள் நினைக்கலாம். தங்களுடைய செயல் பைபிள் நெறிகளுக்கு முரணானதாகத் தெரிந்தாலும் இதில் “யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை” என்பதால் கடவுள் இதையெல்லாம் கண்டிக்க மாட்டாரென்ற முடிவுக்கு அவர்கள் வரலாம். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையும் அதன் விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்க்கவிடாமல் அந்த ஆசை அவர்களுடைய கண்களை மறைத்துவிடலாம். “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று பைபிள் எச்சரிக்கிறது.​—நீதிமொழிகள் 14:12.

யெகோவாவின் சட்டங்கள் அனைத்தும், மனிதர் மீதுள்ள அவருடைய அன்பையும், நாம் துன்பப்படக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் அக்கறையையும் பிரதிபலிக்கின்றன. பாலுறவு சம்பந்தமான அல்லது மற்ற நடத்தை சம்பந்தமான கடவுளுடைய நெறிகளை விட்டுவிலகுவது வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தையும் பெரும் வெற்றியையும் தந்ததில்லை. அது அநேகருடைய வாழ்க்கையை மிகவும் சிக்கல் நிறைந்ததாக ஆக்கியிருக்கிறது. ஆனால், கடவுளுடைய சட்டங்களைப் பின்பற்ற முயற்சி செய்வது நல்ல வாழ்க்கை வாழ உதவுகிறது. ஏனென்றால், அப்படி முயற்சி செய்யும்போது நமக்கும் மற்றவர்களுக்கும் உண்டாகும் அநாவசியமான பாதிப்பை நாம் தவிர்க்கிறோம்.​—சங்கீதம் 19:7-11.

கடவுளுடைய பார்வையில் நல்லவராய் இருக்க உண்மையிலேயே நீங்கள் ஆசைப்படுவீர்களானால் அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுங்கள். ‘[யெகோவாவுடைய] கற்பனைகள் பாரமானவைகளல்ல’ என்பதை நீங்களே காண்பீர்கள்.​—1 யோவான் 5:3.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ நம்முடைய படைப்பாளரின் வழிநடத்துதலை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?​—⁠வெளிப்படுத்துதல் 4:11.

◼ கடவுளுடைய எல்லாக் கட்டளைகளுக்கும் நாம் கட்டாயம் கீழ்ப்படிய வேண்டுமா?​—⁠1 யோவான் 5:3.

◼ நமக்கென சொந்த ஒழுக்க நெறிகளை நாமே தீர்மானித்துக்கொள்வது ஏன் ஞானமற்றது?​—⁠நீதிமொழிகள் 14:12; எரேமியா 17:9.

[பக்கம் 21-ன் படம்]

ஒழுக்க நெறிகளைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா?