Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஏன் எப்போதும் ஒதுக்கப்படுகிறேன்?

நான் ஏன் எப்போதும் ஒதுக்கப்படுகிறேன்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் ஏன் எப்போதும் ஒதுக்கப்படுகிறேன்?

“சனி, ஞாயிறு வந்தாலே போதும், என்னைத் தவிர எல்லாருக்கும் கொண்டாட்டம்தான்.”​—⁠ ரனே.

“இளசுகள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து ஆட்டம் பாட்டம் என்று கும்மாளம் அடிப்பார்கள், ஆனால் என்னை மட்டும் தன்னந்தனியாக அம்போவென விட்டுவிடுவார்கள்!”​—⁠ ஜெரெமி.

வெளியே போய் பொழுதைக் கழிப்பதற்கு இது அருமையான நாள். உங்களைத் தவிர எல்லாருமே வெளியே போகத் திட்டமிட்டிருக்கிறார்கள், உங்களுடைய நண்பர்கள் எல்லாருமே சந்தோஷமாக பொழுதைக் கழிக்கிறார்கள். மறுபடியும் நீங்கள் தனியாக விடப்படுகிறீர்கள்!

நம்மை அழைக்காத பட்சத்தில் நம் மனம் வேதனைப்படுகிறது. அதைவிட, நம்மை ஏன் அழைக்கவில்லை என்பதை யோசிக்கும்போதுதான் இன்னும் அதிக வேதனையாக இருக்கிறது. ‘ஒருவேளை என்னிடம் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?’ ‘மற்றவர்கள் ஏன் என்னோடுகூட இருக்க விரும்புவதில்லை?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.

அது ஏன் உங்களை நோகடிக்கிறது?

மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென விரும்புவதும் அவர்களுக்கு உங்களை பிடித்திருக்க வேண்டுமென விரும்புவதும் சகஜம்தான். பார்க்கப்போனால், மற்றவர்களுடன் கூடிவாழ்வதுதான் மனிதர்களுடைய இயல்பு. “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல” என்று ஏவாளைப் படைப்பதற்கு முன்பு ஆதாமிடம் யெகோவா சொன்னார். (ஆதியாகமம் 2:18) நமக்கு மற்றவர்களுடைய சகவாசம் தேவையே; யெகோவா நம்மை அப்படித்தான் படைத்திருக்கிறார். அதனால்தான் யாராவது நம்மை ஒதுக்கிவிடும்போது நம்மால் அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

முக்கியமாக மற்றவர்கள் அடிக்கடி உங்களை ஒதுக்கிவிடுகையில் அல்லது நீங்கள் நண்பர்களாய் வைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் உங்களுக்கும் அவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பதுபோல் உங்களிடம் நடந்துகொள்கையில் நீங்கள் ரொம்பவே வேதனைப்படுவீர்கள். இளம் பெண்ணாக இருக்கும் மரி இவ்வாறு சொல்கிறாள்: “பெரியபெரிய காரியங்களைச் சாதிக்கும் இளசுகளுக்கென்றே தனி நண்பர்கள் வட்டம் இருக்கும், ஆனால் அவர்களோடுகூட இருப்பதற்கு நமக்கெல்லாம் தகுதியே கிடையாது என அவர்கள் நினைப்பது அவர்கள் நடந்துகொள்ளும் விதத்திலிருந்தே தெரிந்துவிடும்.” நண்பர்கள் வட்டத்திலிருந்து நீக்கப்படுகையில் நீங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் தனியாக இருப்பதாகவும் உணருவீர்கள்.

சில சமயங்களில், உங்களைச் சுற்றி நிறையபேர் இருந்தாலும் நீங்கள் தனியாக இருப்பதுபோல் உணரலாம். நிகோல் என்பவள் இவ்வாறு சொல்கிறாள்: “நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள், ஒரு நிகழ்ச்சிக்காக அநேகர் கூடிவந்திருந்த இடத்தில் நான் மட்டும் தனியாக இருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவேளை அங்கே நிறைய பேர் இருந்தபோதிலும் யாரிடமும் எனக்கு நெருங்கிய உறவு இல்லாததால் நான் அப்படி யோசித்திருக்கலாம்.” சிலர் கிறிஸ்தவ அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும்கூட தனிமையில் இருப்பதுபோல் உணருகிறார்கள். மேகன் என்பவன் இவ்வாறு சொல்கிறான்: “என்னைத் தவிர எல்லாருக்கும் எல்லாரையும் தெரிவதுபோல் இருக்கிறது!” இளம் பெண்ணான மரியாவும் அப்படியே உணருகிறாள். அவள் சொல்கிறாள்: “என்னைச் சுற்றிலும் நண்பர்கள் இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால் எனக்கு நண்பர்களே இல்லாததுபோலவும் இருக்கிறது.”

தனிமை உணர்வினால் பாதிக்கப்படாதவர்கள் யாருமே இல்லை. சொல்லப்போனால், பிரபலமானவர்களாக, சந்தோஷமுள்ளவர்களாக தோன்றுபவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு” என்று பைபிளின் ஒரு நீதிமொழி சொல்கிறது. (நீதிமொழிகள் 14:13) தனிமை உங்களைத் தொடர்ந்து, தீவிரமாக வாட்டுகையில் அது உங்கள் பலத்தை உறிஞ்சிவிடும். “மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்” என்று பைபிள் சொல்கிறது. இதே வசனத்தை இன்னொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கிறது: “மனத்துயரால் உள்ளம் உடையும்.” (நீதிமொழிகள் 15:13, பொது மொழிபெயர்ப்பு) ஒதுக்கப்பட்டதன் காரணமாக நீங்கள் மனம் உடைந்துபோயிருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

தனிமை உணர்வைத் தகர்த்தெறிதல்

தனிமை உணர்வைத் தகர்த்தெறிய பின்வரும் உத்திகளை முயலுங்கள்:

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளுக்கு கவனம் செலுத்துங்கள். (2 கொரிந்தியர் 11:6) ‘எனக்குள் என்ன திறமைகள் புதைந்திருக்கின்றன?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களிடமுள்ள சில திறமைகளையும் நல்ல குணங்களையும் கீழே பட்டியலிடுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

தனிமையில் விடப்பட்டதாக நீங்கள் உணரும் சமயங்களில் மேலே நீங்கள் பட்டியலிட்டிருப்பவற்றைப் போன்று உங்களிடமிருக்கும் திறமைகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பலத்தோடு உங்களிடம் பலவீனமும் இருக்கத்தான் செய்யும். அதை வெல்ல நீங்கள் முயல வேண்டும். அதேசமயம், நீங்கள் செய்யும் தவறுகளைக் குறித்து அளவுக்கதிகமாகக் கவலைப்படாதீர்கள். அதற்குப் பதிலாகத் தவறுகளை மேற்கொள்ள பொறுமையாக முயற்சி செய்துகொண்டே இருக்கும் ஒருவராக உங்களைக் கருதுங்கள். எல்லாமே நாம் எதிர்பார்க்கிறபடி நடக்காது. சில விஷயங்கள் மட்டுமே அப்படி நடக்கும். அப்படிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்!

உங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்குங்கள். (2 கொரிந்தியர் 6:11-13) முதலில் நீங்களே போய் மற்றவர்களிடம் பேசுங்கள். இதைச் செய்வது கடினமாக இருக்கலாம். “கும்பலாக கூடியிருப்பவர்களைப் பார்க்கும்போதே பயமாக இருக்கலாம், ஆனால் அவர்களில் யாராவது ஒருவரிடம் சென்று ‘ஹலோ’ சொன்னாலே போதும் உடனே அந்த கும்பலோடு நாமும் சேர்ந்துவிடுவோம்” என்று லிஸ் சொல்கிறாள். (“உரையாடலை ஆரம்பிப்பதற்கு சில ஆலோசனைகள்” என்ற பெட்டியைக் காண்க.) நீங்கள் தனிமையில் விடப்படுவதைக் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அதேசமயம் நீங்களும் யாரையும் தனிமையில் விடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள், முக்கியமாக முதியவர்களை. அதைக் குறித்து கோரி என்ற டீனேஜ் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “நான் 10 அல்லது 11 வயதாக இருந்தபோது என்னைவிட வயதில் ரொம்ப மூத்தவர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் ரொம்ப அதிகமாய் இருந்தாலும் நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.”

உங்கள் சபையில் நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிற பெரியவர்கள் இரண்டு பேருடைய பெயர்களைக் கீழே எழுதுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

அடுத்து வரப்போகிற சபைக் கூட்டத்தில் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு நபர்களில் ஒருவரிடம் போய் பேசலாமே. அந்த நபர் பைபிளில் எப்படி ஆர்வம் காட்டத் தொடங்கினார் என்று கேட்டு பேச்சை ஆரம்பியுங்கள். “சகோதர” சகோதரிகளிடத்தில் பேசி அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் எந்தளவுக்கு முயற்சி எடுக்கிறீர்களோ அந்தளவுக்கு நீங்கள் தனிமையில் விடப்பட்டதாக உணரமாட்டீர்கள்.​—1 பேதுரு 2:17.

பெரியவர் ஒருவரிடம் மனம்திறந்து பேசுங்கள். (நீதிமொழிகள் 17:17) உங்களுக்கு இருக்கும் கவலைகளை உங்கள் பெற்றோரிடமோ யாராவது ஒரு பெரியவரிடமோ பேசினால் நீங்கள் அந்தளவு தனிமையாக உணரமாட்டீர்கள். இதுவே ஒரு 16 வயது பெண்ணின் அனுபவமாகவும் இருக்கிறது. முதலில், தனிமையில் விடப்படுவதைக் குறித்து அவள் அளவுக்கதிகமாகக் கவலைப்பட்டாள். “எதனால் நான் அப்படித் தனிமையாக உணர்ந்தேன் என்பதை நான் திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டே இருப்பேன். ஆனால் அப்படியே இருந்துவிட மாட்டேன். என் அம்மாவிடம் அதைப் பற்றிச் சொல்வேன். அம்மா, என் பிரச்சினையைச் சமாளிக்க எனக்கு ஆலோசனைத் தருவார். நம் பிரச்சினையைக் குறித்து மற்றவர்களிடம் சொல்வது உண்மையிலேயே பாரத்தை இறக்கி வைக்க உதவுகிறது!” என்று அவள் சொல்கிறாள்.

அடிக்கடி உங்கள் நினைவுக்கு வந்து உங்களை பாடாய்ப் படுத்துகிற தனிமை உணர்வுகளை யாரிடமாவது சொல்ல வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா, அப்படியானால் யாரிடம் சொல்லலாம்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

மற்றவர்களுக்கு உதவுங்கள். (1 கொரிந்தியர் 10:24) “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 2:4) நீங்கள் தனிமையில் விடப்படுகையில் பொதுவாக மனதளவில் சோர்வாக உணர்வதும் சோகமாக இருப்பதும் இயல்பே. இருந்தாலும், நீங்கள் சோகக் கடலில் அமிழ்ந்துவிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, யாருக்காவது உங்கள் உதவி தேவைப்பட்டால் அவருக்கு நீங்கள் உதவலாமே. இந்த விதத்தில் நீங்கள் புதிய நண்பர்களையும் உருவாக்கிக்கொள்ளலாம்!

ஒருவேளை உங்கள் குடும்பத்திலோ சபையிலோ யாருக்கு உங்களுடைய தோழமை அல்லது உதவி தேவைப்படும் என்று யோசியுங்கள். அவருடைய பெயரை கீழே எழுதுங்கள். அவருக்கு எந்த விதத்தில் நீங்கள் உதவலாம் என்பதையும் எழுதுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

உங்களைப் பற்றியல்லாமல் மற்றவர்களைக் குறித்து யோசித்துக்கொண்டும் அவர்களுக்கு உதவி செய்துகொண்டும் இருந்தால் நீங்கள் தனிமையாக உணரமாட்டீர்கள். அப்படிச் செய்கையில் எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். மற்றவர்களிடம் பண்புள்ளவராக நடந்துகொள்வீர்கள், மற்றவர்களின் இதயத்தில் நீங்கா இடத்தைப் பெற்று அவர்களுடைய நட்பையும் சம்பாதிப்பீர்கள். “எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” என்று நீதிமொழிகள் 11:25 சொல்கிறது.

தேர்ந்தெடுங்கள். (நீதிமொழிகள் 13:20) உங்களைப் பிரச்சினைக்குள் தள்ளக்கூடிய நிறைய நண்பர்கள் இருப்பதைவிட உங்களை உண்மையாய் நேசிக்கிற சில நண்பர்கள் இருந்தாலே போதும். (1 கொரிந்தியர் 15:33) பைபிளில் குறிப்பிடப்படும் இளம் சாமுவேலைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் ஒருவேளை ஆசரிப்புக் கூடாரத்தில் தனிமையாக உணர்ந்திருக்கலாம். அவருடன் வேலை செய்தவர்களில் ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள். அவர்கள் பிரதான ஆசாரியருடைய மகன்களாக இருந்தாலும் அவர்களுடைய நடவடிக்கை சரியாக இருக்கவில்லை. அதனால் அவர்களுடன் நட்பு வளர்த்துக்கொள்வது சாமுவேலுக்கு சரியானதாக இருந்திருக்காது. அவர்களோடு சேர்ந்து அவர்கள் செய்த கெட்ட காரியங்களில் ஈடுபட்டிருந்தால் ஆன்மீக ரீதியில் அவர் தற்கொலை செய்ததுபோல இருந்திருக்கும். ஆனால் நிச்சயமாக சாமுவேல் அதை விரும்பவில்லை! “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்” என்று பைபிள் சொல்கிறது. (1 சாமுவேல் 2:26) மனுஷருக்கும் என்று சொல்கையில் நிச்சயமாக ஓப்னியும் பினெகாசும் உட்பட்டிருக்கமாட்டார்கள். ஏனென்றால், சாமுவேலின் நல்ல குணங்களைக் கண்டு அவர்கள் அவரிடமிருந்து ஒதுங்கித்தான் போயிருப்பார்கள். மறுபட்சத்தில், கடவுளுடைய தராதரங்களைக் கடைப்பிடித்தவர்களே சாமுவேலின் அருமையான குணங்களைக் கண்டு அவரிடம் கவர்ந்திழுக்கப்பட்டிருப்பார்கள். யெகோவாவை நேசிப்பவர்களே உங்கள் நண்பர்களாய் இருக்க வேண்டும்!

நம்பிக்கையாய் இருங்கள். (நீதிமொழிகள் 15:15) நாம் எல்லாருமே அவ்வப்போது ஓரளவு தனிமையில் விடப்பட்டதாக உணருகிறோம். அப்படிப்பட்டச் சூழலைச் சமாளிக்க எது உதவும்? எதிர்மறையான சிந்தனைகளைத் தவிர்த்து வாழ்க்கையில் நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருங்கள். உங்கள் வாழ்க்கையில் சம்பவிக்கும் ஒவ்வொரு காரியத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் அதற்கு நீங்கள் பிரதிபலிக்கும் விதத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியும் என்பதை நினைவில் வையுங்கள்.

நீங்கள் தனிமையாக உணர்ந்தால் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்து உங்கள் சூழ்நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். அல்லது அந்தச் சூழ்நிலையைக் குறித்த உங்கள் கண்ணோட்டத்தையாவது மாற்றிக்கொள்ளுங்கள். இதை எப்போதும் நினைவில் வையுங்கள்: யெகோவா உங்களைப் படைத்திருப்பதால் நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களுடைய தேவைகள் என்னென்ன, அவற்றை எப்படிச் சிறந்த விதத்தில் நிறைவேற்ற முடியும் போன்றவை அவருக்கு நன்றாகவே தெரியும். தனிமை எனும் உணர்வு அடிக்கடி உங்கள் நினைவுக்கு வந்து உங்களைப் பாடாய்ப் படுத்துகிறதென்றால் அதைக் குறித்து யெகோவாவிடம் ஜெபத்தில் சொல்லுங்கள். ‘அவர் உங்களை ஆதரிப்பார்’ என்பதில் உறுதியாயிருங்கள்.​—சங்கீதம் 55:22.

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க

சிந்திப்பதற்கு

◼ நான் தனிமையில் விடப்படுகையில் அந்த உணர்விலிருந்து வெளிவர என்ன செய்யலாம்?

◼ அலைக்கழிக்கும் எண்ணங்கள் என்னை ஆட்டிப்படைப்பதற்குப் பதிலாக என்னை குறித்து சமநிலையான கருத்தை நான் கொண்டிருக்க எந்தெந்த வசனங்கள் எனக்கு உதவும்?

[பக்கம் 12-ன் பெட்டி/படம்]

உரையாடலை ஆரம்பிப்பதற்கு சில ஆலோசனைகள்

புன்னகை சிந்துங்கள்.உங்களுடைய அன்பான பார்வை மற்றவர்கள் உங்களிடம் வந்து பேச கவர்ந்திழுக்கும்.

உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர், நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதையெல்லாம் சொல்லுங்கள்.

கேள்விகள் கேளுங்கள்.நீங்கள் யாரிடம் பேசுகிறீர்களோ அவருடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் அவருடைய பின்னணியைப்பற்றி கேளுங்கள்.

செவிகொடுத்து கேளுங்கள்.நீங்கள் அடுத்ததாக என்ன சொல்ல வேண்டுமென்பதைக் குறித்து யோசித்துக் கொண்டிருக்காதீர்கள். முதலில் அவர் சொல்வதைச் செவிகொடுத்துக் கேளுங்கள். நீங்கள் அடுத்ததாக என்ன கேட்க வேண்டுமோ, என்ன சொல்ல வேண்டுமோ அது தானாகவே வரும்.

கவலையை விடுங்கள்!மற்றவர்களிடம் பேசுவதன்மூலம் புதிய நண்பர்களைச் சம்பாதிக்கலாம், எனவே அவர்களுடைய தோழமையை அனுபவித்து மகிழுங்கள்!