‘யெகோவாவே, உம்மை சேவிக்க எனக்கு வாய்ப்பு கொடும்’
‘யெகோவாவே, உம்மை சேவிக்க எனக்கு வாய்ப்பு கொடும்’
டான்யெல் ஹால் சொன்னபடி
நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது, பக்கத்து வீட்டிலிருந்த என் பாட்டியம்மாவைப் போய் பார்ப்பதென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவது அவர் பழக்கம். ஒருவேளை அந்தச் சமயத்தில் அவரை நான் பார்க்கப் போனால், நாங்கள் இருவரும் படுக்கையில் உட்கார்ந்து கொள்வோம். அவர் எனக்கு பைபிள் கதைகளைப் படித்துக் காட்டுவார். “யெகோவா உன்னை நேசிக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே. நீயும் அவரை நேசித்தால் அவர் எப்போதும் உன்னை கவனித்துக்கொள்வார்” என்று என்னிடம் அடிக்கடி சொல்வார். இந்த வார்த்தைகள் என் மனதிலும் இதயத்திலும் பசுமரத்தாணிபோல பதிந்துவிட்டன.
பாட்டியம்மா 1977-ல் இறந்துவிட்டார். அப்போது எனக்கு நான்கு வயது. பாட்டியம்மா ஒரு யெகோவாவின் சாட்சி. அவர் மட்டுமல்ல ஆஸ்திரேலியாவிலுள்ள மோயி என்ற எங்கள் ஊரிலிருந்த அப்பாவின் உறவினர்கள் அனைவருமே யெகோவாவின் சாட்சிகள். என்னுடைய பெற்றோர் சாட்சிகள் அல்ல, ஆனால் அப்பாவுக்கு சாட்சிகளைப் பிடிக்கும். பிறகு நாங்கள் குடும்பமாக நியூ சௌத் வேல்ஸின் கரையோரத்தின் அருகிலிருந்த டின்டன்பார் என்ற சிறிய பட்டணத்திற்குக் குடிமாறிச் சென்றோம். அங்கு என் அண்ணன் ஜேமியும் நானும் அப்பாவோடு சேர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு அவ்வப்போது சென்றுவந்தோம்.
எனக்கு எட்டு வயதானபோது, அப்பா அம்மா பிரிந்துவிட்டார்கள். அப்பா சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். ஜேமியும் நானும் அம்மாவுடன் இருந்துவிட்டோம். அம்மாவுக்கு பைபிளில் விருப்பமேயில்லை. எங்களையும் கூட்டங்களுக்குப் போக விடவில்லை. இது எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது. என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த பாட்டியம்மாவின்
வார்த்தைகளை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டேன். நான் யெகோவாவை நேசிக்கிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்! அதோடு அவரை சேவிக்கவும் விரும்பினேன். ஆகவே யெகோவாவிடம் ஜெபம் செய்து நானும் அவருக்கு ஒரு சாட்சியாக இருக்கிறேன் என்பதாகக் கூறினேன். ஜேமியும் அவ்வாறே உணர்ந்தான்.பள்ளியில் பிரச்சினைகள்
கொஞ்ச நாட்கள் கழித்து, பள்ளியில் ஓர் ஆசிரியர் எங்கள் வகுப்பிலுள்ள ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை சத்தமாகச் சொல்லும்படி கேட்டார். பெயர் பட்டியல் பதிவேட்டில் எழுதி வைப்பதற்காகவே அதைக் கேட்டார். ஜேமியிடம் கேட்டபோது, தான் ஒரு “யெகோவாவின் சாட்சி” என்பதாக அவன் அழுத்தம்திருத்தமாகச் சொன்னான். ஆசிரியர் திகைப்படைந்து அவனை மறுபடியும் சொல்லும்படி கேட்டார். திரும்பவும் அவன் அதையே சொன்னான். “நீ ஏதோ தவறாக சொல்வது போல் தெரிகிறது, சரி, பிறகு வந்து கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆசிரியர் சொன்னார். பின்னர் என்னிடம் கேட்டபோது, நானும் “யெகோவாவின் சாட்சி” என்று சத்தமாகச் சொன்னேன். ஆசிரியருக்கு ஒரே குழப்பம். பள்ளி முதல்வரை வரவழைத்துவிட்டார்.
“உங்களைப் பள்ளியில் சேர்த்தபோது பூர்த்தி செய்த படிவங்களைப் பாருங்கள், அப்போது நீங்கள் யெகோவாவின் சாட்சிகள் என உங்கள் பெற்றோர் எழுதவில்லையே” என்று முதல்வர் அடித்துச் சொன்னார். “ஆனால் நாங்கள் அந்த மதத்தைத்தான் பின்பற்றுகிறோம்” என்று மரியாதையோடு சொன்னோம். அதற்குப் பின்னர் அவரும் சரி அந்த ஆசிரியரும் சரி இந்த விஷயத்தைப்பற்றி பேச்சே எடுக்கவில்லை.
எனக்குத் தெரிந்திருந்த கொஞ்சநஞ்ச பைபிள் சத்தியங்களை வகுப்பிலுள்ள மற்ற தோழிகளுடன் பகிர்ந்துகொண்டேன். என்னுடைய பைபிள் கதை புத்தகத்தைப் பள்ளிக்கு எடுத்துச்சென்று, கடவுள் நம்பிக்கையுடைய ஒரு மாணவிக்கு அவ்வப்போது கதைகளை வாசித்துக் காட்ட முடிந்தது. a ஆனாலும், நான் கிறிஸ்தவ நியமங்களுக்கு ஏற்ப வாழ முயன்றதால், பள்ளியில் யாருக்கும் என்னை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எனவே, நான் சில வேளைகளில் மிகவும் தனிமையாக உணர்ந்தேன்.
யெகோவா என்னுடைய உயிர் நண்பராக ஆகுமளவுக்கு நான் அவரிடம் அடிக்கடி உருக்கமாக ஜெபம் செய்தேன். தினமும் பள்ளியிலிருந்து திரும்பியதும், படுக்கையில் உட்கார்ந்துகொண்டு, அன்று நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிவிடுவேன். அடிக்கடி அழுவேன். “யெகோவாவே, உம்முடைய மக்களோடு சேர்ந்து உம்மை சேவிக்க எனக்கும் வாய்ப்பு கொடும்” என்று கன்னங்களில் கண்ணீர் வடிய அவரிடம் கெஞ்சினேன். ஜெபம் செய்தப் பிறகு எப்போதுமே ரொம்ப நிம்மதியாக உணர்ந்தேன்.
என்னை பலப்படுத்துகிற கடிதம்
எனக்குப் பத்து வயதானபோது, ஜேமி அப்பாவோடு சேர்ந்து வாழ மோயிக்கு சென்றுவிட்டான். அப்போது நான் ஆன்மீக ரீதியில் இன்னும் தன்னந்தனியாக விடப்பட்டதுபோல் உணர்ந்தேன். பின்னர் ஒரு முறை பக்கத்து வீட்டிற்குச் சென்றபோது, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட சில பத்திரிகைகளைப் பார்த்தேன். எனக்கு ஒரே சந்தோஷம், அதிலிருந்த உள்ளூர் கிளை அலுவலக விலாசத்தை மனப்பாடம் செய்துகொண்டேன். சீக்கிரமாக வீடு திரும்பி அதை அப்படியே எழுதி வைத்தேன். என் நிலைமையை விவரித்து ஆன்மீக ரீதியில் எனக்கு உதவிசெய்யும்படி கேட்டு அந்தக் கிளை அலுவலகத்திற்கு இருதயப்பூர்வமான ஒரு கடிதத்தை எழுதினேன். எனக்கென்றே அவர்கள் எழுதிய இரண்டு பக்க உருக்கமான பதிலைக் கண்டு என் கண்களில் நீர் வழிந்தோடியது. யெகோவாவுக்கு நான் அருமையானவள் என்பதற்கு இது எப்பேர்ப்பட்ட அத்தாட்சி!
பைபிள் காலங்களில் சீரிய படைத்தலைவனாய் இருந்த நாகமானுக்கு வேலையாளாக பணிபுரிந்த இஸ்ரவேல சிறுமியின் விசுவாசத்தைப் பின்பற்றும்படி அந்தக் கடிதம் என்னை உற்சாகப்படுத்தியது. தாயகத்திலிருந்து தொலைதூரத்தில் சிறைப்பட்ட நிலையில் இருந்தபோதிலும் தன் கடவுளாகிய யெகோவாவிடம் நெருங்கிய உறவை அந்தச் சிறுமி காத்துக்கொண்டாள். தன் விசுவாசத்தைக் குறித்து தைரியமாகப் பேசுவதன்மூலம் கடவுளுக்கு உண்மையான சாட்சியாக தன்னை நிரூபித்தாள்.—2 இராஜாக்கள் 5:1-4.
கிளை அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் மேலும் இவ்வாறு குறிப்பிட்டது: “சிறு பிள்ளையாக இருப்பதால், நீ உன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, பள்ளியிலும் நல்ல மாணவியாகத் திகழ வேண்டும்; இவ்வாறு செய்வதன்மூலம் யெகோவாவை நீ சேவிக்க வேண்டும். அதோடு, தவறாமல் ஜெபம் செய்து, பைபிளைப் படிப்பதன் மூலமாகவும் யெகோவாவுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும்.” கடைசியாக, “டான்யெல், நாம் எங்கு வாழ்ந்தாலும்சரி, யெகோவா நம் பக்கத்திலேயே இருப்பார் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள். இதில் உனக்கும் சந்தேகமில்லை என்று நாங்கள் நம்புகிறோம்” என்று சொல்லி முடித்திருந்தார்கள். (ரோமர் 8:35-39) பழுப்படைந்து பழையதாகிப்போன அந்தக் கடிதம் இப்போதும் என் பைபிளின் முன்பக்கத்திலேயே இருக்கிறது. இன்று வரையாக அதை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் அதைப் படிக்கும்போதெல்லாம் என் கண்கள் கலங்கிவிடும்.
அதற்குப்பின் சீக்கிரத்திலேயே, வேறொரு கடிதம் வந்தது. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் எனக்கு தபால் மூலம் கிடைப்பதற்கு என் அப்பா ஏற்பாடு செய்திருந்ததாக அதிலிருந்து தெரிந்துகொண்டேன். நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன்! அதுமுதல் எனக்கு ஆன்மீக உணவு தவறாமல் கிடைத்தது. ஒவ்வொரு இதழைப் பெற்றபோதும் ஒரு பக்கத்தையும் விடாமல் முழுவதையும்
வாசித்தேன். முதன்முதலாக கிடைத்த அந்த அருமையான இதழ்களை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். இந்தச் சமயத்தில், உள்ளூர் சபையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மூப்பர் என்னைப் பார்ப்பதற்காக வரத்தொடங்கினார். அவர் கொஞ்ச நேரம்தான் இருப்பார், ஆனாலும் அவருடைய வருகை எனக்கு அதிக உற்சாகம் தந்தது.மாற்றங்கள் முன்னேற்றத்திற்கு வழிசெய்தன
ஆன்மீக ரீதியில் என் நிலைமை முன்னேறியிருந்தபோதிலும், யெகோவாவை இன்னும் சுதந்திரமாக வழிபடத் துடித்தேன். ஆகவே, எனக்கு 13 வயதானதும், நான் அப்பாவுடனே போய் இருக்கட்டுமா என அம்மாவிடம் கேட்டேன். எனக்கு அம்மாவிடம் கொள்ளை அன்பு, அம்மாவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். ஆனால் கடவுளைச் சேவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனவே அம்மா ஒத்துக்கொண்டதும், நானும் மோயிக்குச் சென்று அங்குள்ள சபையாருடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். அப்பாவின் சம்மதத்துடன் ஜேமியும் நானும் எல்லா கூட்டங்களுக்கும் தவறாமல் சென்றோம். எங்களுக்கு உதவி செய்ய அங்கிருந்த சாட்சிகள் அளவுக்கதிகமான முயற்சிகளை எடுத்தார்கள். ஜேமியும் நானும் ஆன்மீக ரீதியில் கிடுகிடுவென முன்னேறி சில மாத வித்தியாசத்தில் நாங்கள் இருவருமே முழுக்காட்டுதல் பெற்றோம். சின்ன வயதில் நான் செய்த ஜெபம் இப்போது பதிலளிக்கப்பட்டது. நானும் யெகோவாவின் மக்களுடன் சேர்ந்து அவரை சேவிக்கிறேன்!
இதற்கிடையில், ஃபிலிப் டேலர், லாரேன் டேலர் ஆகிய என் மாமா அத்தையுடன் நெருங்கிப் பழகினேன். அவர்களும் மோயி சபையிலேயே இருந்தார்கள். என்னை அவர்களுடைய மகளைப் போல் பாவித்தார்கள். ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதற்கு அதிகம் பேர் தேவைப்பட்ட பாப்புவா நியூ கினியிலுள்ள பௌகெய்ன்வில்லெ தீவுக்கு அவர்கள் குடிமாறிச் சென்றபோது என்னையும் அழைத்தார்கள். அவர்கள் கேட்டார்களோ இல்லையோ, உடனடியாக அவர்களைத் தொற்றிக்கொண்டேன். எனக்கு அப்போது 15 வயதுதான். ஆனாலும் அப்பாவும் அம்மாவும் என்னைப் போக விட்டார்கள்.
பௌகெய்ன்வில்லெவிலிருந்து தபால் மூலம் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தேன். படிப்பு நேரம் போக மீதமிருந்த நேரத்தைப் பெரும்பாலும் ஊழியத்தில் செலவிட்டேன். மிஷனரிகளுடனும் பயனியர்களுடனும் ஊழியம் செய்வதில் என்னே ஓர் சந்தோஷம்! அங்கிருந்த மக்களைப்போல் மனத்தாழ்மையானவர்களை நான் பார்த்ததே இல்லை. அதோடு அவர்களில் பலர் பைபிளைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
பின்னர் அந்த வருடத்தில் அரசியல் சச்சரவுகள் ஏற்பட்டதால் நான் அங்கு வாழ்வது மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. அந்தக் குட்டித் தீவையும் அங்குள்ள தங்கமான மக்களையும் விட்டுப்பிரிகையில் என் மனம் உடைந்துபோனது. என் சிறிய விமானம் அங்கிருந்து புறப்பட்டபோது, ஃபிலிப் மாமா ஓடுதளத்திலிருந்து கை அசைத்து பிரியாவிடை தந்தார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிய மனதுக்குள்ளேயே யெகோவாவிடம் ஜெபித்து, என்றாவது ஒருநாள் என்னையும் ஓர் அயல் நாட்டில் மிஷனரியாக அனுப்புமாறு கெஞ்சினேன்.
இன்னும் பல ஜெபங்களுக்கு பதில் கிடைத்தது
ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய பிறகு உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தேன். பிறகு சட்ட நிறுவனம் ஒன்றில் அலுவலக வேலைக்குப் பயிற்சி பெற்றேன். இதற்கிடையில், அப்பா மறுமணம் செய்துகொண்டார். ஒரு பெரிய குடும்பத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஜேமி அம்மாவிடம் இருந்தான். கொஞ்ச நாட்களுக்கு, நான் பெற்றோர் இருவரிடமும் மாறிமாறி போய்வந்தேன். வாழ்க்கை மிகவும் சிக்கல் நிறைந்ததாகத் தோன்றியது. வாழ்க்கையை எளிமையாக்கி ஆன்மீகக் குறிக்கோள்களில் கவனம் செலுத்த வேண்டுமென்று நினைத்தேன். ஆகவே 1994-ல் மோயியில் முழுநேர பயனியர் ஊழியத்தில் கால் பதித்தேன்.
என் வாழ்வில் மீண்டும் சந்தோஷம் திரும்பியது. சபையில் ஆன்மீகச் சிந்தையுள்ள இளைஞர்கள் என் நண்பர்களானார்கள். அவர்கள் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள். சொல்லப்போனால், அவர்களில் ஒருவரான வில் என்பவரை நான் 1996-ல் மணந்து கொண்டேன். அவர் மென்மையாக பேசுபவர், இரக்க குணம் படைத்தவர், மனத்தாழ்மையுள்ளவர். உண்மையிலேயே அவர் எனக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த பரிசுதான்.
நாங்கள் மணவாழ்வை ஆரம்பித்தபோது சந்தோஷத்தின் எல்லையையே எட்டியதுபோல் உணர்ந்தோம். ஒருநாள் எங்கள் பகுதியிலுள்ள சபைகளைச் சந்திக்க வந்த பயணக் கண்காணியுடன் ஊழியம் செய்துவிட்டு என் கணவர் வில் வீடு திரும்பினார். என்னை கூப்பிட்டு உட்கார வைத்து, “வேறொரு சபைக்கு போய் உதவி செய்வதற்கு உனக்குச் சம்மதமா?” என்று கேட்டார். நான் அதற்கு உடனடியாகவே என் மனதில் சம்மதம் தெரிவித்த போதிலும், அவரிடம் விளையாட்டாக “எங்கே போகிறோம்? வனுவாட்டுக்கா அல்லது பிஜிக்கா?” என்று கேட்டேன். “மார்வெலுக்கு” என்று வில் சொன்னதும், “அது நம்ம பக்கத்து சபைதானே!” என்று பட்டென சொல்லிவிட்டேன். நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே, பயனியர்களாக பக்கத்து சபைக்குச் செல்லலாம் என உடனடியாக மகிழ்ச்சியோடு ஒத்துக்கொண்டோம்.
மார்வெலில் கழித்த அடுத்த மூன்று வருடங்கள் சந்தோஷமயமாகவும் பலன்தருபவையாகவும் இருந்தன. எதிர்பாராத வேறொரு அழைப்பு எங்களுக்காகக் காத்திருந்தது. விசேஷ பயனியர்களாக சேவை செய்யும்படி யெகோவாவின் சாட்சிகளுடைய ஆஸ்திரேலிய கிளை அலுவலகத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. எங்குச் செல்வதற்குத் தெரியுமா? இந்தோனேஷிய தீவுக்கூட்டத்தின் கிழக்கு முனையிலுள்ள கிழக்கு டிமோர் என்ற சிறிய நாட்டிற்குச் செல்ல நாங்கள் நியமிக்கப்பட்டோம். b என் கண்களில் நீர் ததும்பியது. என்னுடைய எல்லா ஜெபங்களுக்கும் பதிலளித்ததற்காக யெகோவாவுக்கு நன்றி தெரிவித்தேன். அவருடைய ஊழியராக என்னை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் இப்போது நானும் என் கணவரும் அயல் நாடு சென்று ஊழியம் செய்யும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறோம்.
அயல் நாட்டில் சேவை
ஜூலை 2003-ல், தலை நகராகிய டிலியை வந்தடைந்தோம். டிலி சபைதான் அந்நாட்டில் இருந்த ஒரே சபை. அந்நாட்டைச் சேர்ந்த சில சாட்சிகளும் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த 13 விசேஷ பயனியர்களும் மட்டுமே அந்தச் சபையில் இருந்தார்கள். டிமோர் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையானவர்கள். 24 வருடங்களாக நீடித்து 1999-ல் முடிவடைந்த உள்நாட்டு போர் காரணமாக அநேகர் தங்கள் உடைமைகளையும் குடும்ப அங்கத்தினர்களையும் இழந்திருந்தார்கள். புதிதாக ஏற்றிருந்த நம்பிக்கை காரணமாக அநேகர் தங்கள் குடும்பங்களிலிருந்து கடும் எதிர்ப்பையும் சகித்திருந்தார்கள். உபத்திரவத்தில் சிக்கித்தவித்து ஏழ்மையில் உழன்றபோதிலும் ஆன்மீக ரீதியில் ஐசுவரியமுள்ளவர்களாயும் சந்தோஷமுள்ளவர்களாயும் இருந்தார்கள்.—வெளிப்படுத்துதல் 2:8, 9.
டிமோரில் பெரும்பாலான மக்கள் கடவுள் பயமுள்ளவர்களாக இருந்ததையும் அவர்கள் பைபிளை மதிப்பவர்களாக இருந்ததையும் நாங்கள் கண்டோம். சொல்லப்போனால், எங்களால் கையாள முடியாதளவுக்கு அதிகமான பைபிள் படிப்புகள் சீக்கிரமாகவே எங்களுக்குக் கிடைத்தன! ஆரம்பத்தில் எங்களிடம் பைபிள் படித்தவர்கள், கொஞ்ச காலத்திற்குள் முழுக்காட்டப்பட்ட சகோதர சகோதரிகளாக எங்களுடன் சேர்ந்து சேவை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆன்மீக முன்னேற்றம் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது.
பின்னர், 2006-ல் டிலியில் மீண்டும் குழப்பமான நிலைமை உருவாக ஆரம்பித்தது. வெவ்வேறு இனத் தொகுதியினரிடையே ஏற்பட்ட சச்சரவுகள் பெரிய கலவரமாக வெடித்தது. பல வீடுகள் சூறையாடப்பட்டன, அல்லது எரித்து தரைமட்டமாக்கப்பட்டன. உள்ளூரிலிருந்த சாட்சிகள் விசேஷ பயனியர்களின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். எங்கள் வீடும், அதைச் சுற்றியுள்ள இடமும் தற்காலிக அகதிகள் முகாமாக உரு மாறின; ஒருமுறை கிட்டத்தட்ட நூறு பேர் எங்களுடன் தங்கியிருந்தார்கள் என்றால் பாருங்களேன்! கார் நிறுத்துவதற்கென்றிருந்த பெரிய இடம் சமயலறையாகவும், சாப்பாட்டறையாகவும், தற்காலிக ராஜ்ய மன்றமாகவும் ஆனது.
துப்பாக்கிச்சூடும் குண்டுவெடிப்பும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, அருகிலிருந்த எங்கள் பயனியர் இல்லத்திலோ அமைதி குடிகொண்டிருந்தது. யெகோவாவின் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். ஒவ்வொரு நாளையும் தின வசனத்தை கலந்தாலோசிப்பதுடன் ஆரம்பித்தோம். கூட்டங்கள் வழக்கம்போல் நடைபெற்றன. ஆர்வம் காட்டியவர்களுக்கு பைபிள் படிப்புகளையும் நடத்தினோம்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் பிறந்த சகோதரர்கள் இனிமேலும் டிலியில் குடியிருந்தால் ஆபத்து என்பது சில வாரங்களில் எங்களுக்குத் தெளிவாயிற்று. ஆகவே, டிலிக்கு கிழக்கே மூன்று மணிநேர பயண தூரத்தில் அமைந்திருந்த அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான பௌகௌ என்ற இடத்தில் புதிய ஒரு தொகுதியை ஏற்படுத்தலாமென பொறுப்பிலிருந்த சகோதரர்கள் தீர்மானித்தனர். இதன் காரணமாகவே நானும் வில்லும் புதிய நியமனத்தைப் பெற்றோம்.
கிழக்கு டிமோருக்கு வந்து சரியாக மூன்று வருடங்கள் கழித்து, அதாவது ஜூலை 2006-ல் பெளகெளவிற்கு வந்து சேர்ந்தோம். இந்தப் புதிய தொகுதியில் நான்கு விசேஷ பயனியர்களும் டிமோர் நாட்டைச் சேர்ந்த ஆறு சாட்சிகளும் இருந்தோம். உள்ளூர் சகோதர சகோதரிகள் தங்களுக்கிருந்த எல்லாவற்றையும் டிலியில் விட்டுவர வேண்டியிருந்தாலும், அவர்களுடைய முகம் மலர்ந்த புன்னகையை மட்டும் விட்டுவிடவே இல்லை. அவர்களுடைய உண்மைத்தன்மையையும் சுயதியாக மனப்பான்மையையும் நாங்கள் உண்மையிலேயே மெச்சினோம்!
வில்லும் நானும் இன்னும் பௌகௌவில் சேவை செய்து வருகிறோம். எங்கள் நியமனத்தை நாங்கள் பொன்னாகப் போற்றுகிறோம்; யெகோவாவிடமிருந்து வந்த இன்னொரு ஆசீர்வாதமாகவே கருதுகிறோம். என் வாழ்க்கையை நான் பின்னோக்கிப் பார்க்கும்போது, என் பாட்டியம்மா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை என்னால் உணர முடிகிறது. உருண்டு சென்ற காலம் முழுவதும், யெகோவா என்னை கைவிடவே இல்லை. அவருடைய மக்களுடன் சேர்ந்து அவருக்குச் சேவை செய்ய அவர் எனக்கு கொடுத்த பாக்கியத்தை நினைத்து நினைத்து நான் அவருக்கு எப்போதும் நன்றி சொல்கிறேன். உயிர்த்தெழுதலில் பாட்டியம்மாவைப் பார்ப்பதற்கு நான் துடியாகத் துடித்துக்கொண்டிருக்கிறேன். சந்தோஷமான, பலன்தரும் வாழ்க்கைக்கு வழிகாட்டியதற்காக அப்போது நான் அவருக்கு நன்றி சொல்வேன்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b கிழக்கு டிமோர், டிமோர்-லெஸ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
[பக்கம் 26-ன் படம்]
பாட்டியம்மாவுடன்
[பக்கம் 28, 29-ன் படம்]
என் கணவர் வில்லுடன்