Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்

அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்

வழி 3

அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்

இது ஏன் முக்கியம்? “பாசமுள்ள பெற்றோரால் கண்டிப்புடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் அதாவது, எல்லா விஷயத்திலும் பார்த்துப் பார்த்து செய்தாலும், கட்டுப்பாடுகளை மீறி நடக்காதபடி கவனித்துக்கொள்கிற பெற்றோரால் வளர்க்கப்படும் பிள்ளைகள், எதையும் கண்டுகொள்ளாத அல்லது சதா கண்டிப்பாகவும் கறாராகவும் இருக்கும் பெற்றோரால் வளர்க்கப்படும் பிள்ளைகளைவிட கெட்டிக்காரர்களாய் திகழ்கிறார்கள். எப்படியென்றால், படிப்பில் சூரப்புலிகளாக இருக்கிறார்கள், எல்லாருடனும் நன்கு பழகுகிறார்கள், தன்னம்பிக்கை மிக்கவர்களாய் விளங்குகிறார்கள்; அதோடு, அதிக சந்தோஷமாகவும் இருக்கிறார்கள்” என ஆய்வுகள் காட்டுவதாக பெற்றோர் என்ற ஆங்கில பத்திரிகை சொல்கிறது.

இது ஏன் சவால்மிக்கது? பிள்ளைகள்மீது உங்களுக்கு இருக்கிற அதிகாரத்தை அவர்கள் பிள்ளைப் பருவம்முதல் பருவவயதுவரை எதிர்ப்பார்கள். “தங்கள்மீது அதிகாரத்தைச் செலுத்த பெற்றோர் எப்போது பயப்படுவார்கள், பெரும்பாலும் விட்டுக்கொடுக்க எப்போது தயாராய் இருப்பார்கள் என்பதைப் பிள்ளைகள் சட்டென கண்டுபிடித்துவிடுகிறார்கள்” என எழுதினார் ஜான் ரோஸ்மான்ட்; இவர் பெற்றோரின் அதிகாரம்! என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியவர். “‘யாருக்கு அதிகாரம் இருக்கிறது?’ என்ற கேள்வி எழும்புகிறபோது அதிகாரத்தைப் பெற்றோர் கையிலெடுக்கத் தவறினால் பிள்ளைகள் எடுத்துக்கொள்வார்கள்” என அவர் சொல்கிறார்.

எது உங்களுக்கு உதவும்? பிள்ளைகள்மீது நீங்கள் அதிகாரம் செலுத்தினால் அவர்கள் உங்களைவிட்டு விலகிப்போய்விடுவார்கள் என்றோ உங்களைப் பார்த்துப் பயப்படுவார்கள் என்றோ கவலைப்படாதீர்கள். மணவாழ்வை ஆரம்பித்து வைத்த யெகோவா தேவன், குடும்ப விவகாரங்களில் தீர்மானம் எடுக்கிற உரிமையைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கவில்லை. மாறாக, பெற்றோருக்குத்தான் அதிகாரம் செலுத்தும் பொறுப்பைப் கொடுத்திருக்கிறார்; பிள்ளைகளிடமோ, “உங்கள் பெற்றாருக்குக் . . . கீழ்ப்படியுங்கள்” என்று கட்டளையிடுகிறார்.—எபேசியர் 3:14, 15; 6:1-4.

‘நான் வைத்ததுதான் சட்டம்’ என்பதுபோல் கறாராய் நடந்துகொள்ளாமல் உங்கள் அதிகாரத்தை சரிவரப் பயன்படுத்துங்கள். அதை எப்படிச் செய்யலாம்? யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன்மூலம். தம்முடைய சித்தத்தைச் செய்ய தம்முடைய மானிட பிள்ளைகளை வற்புறுத்த யெகோவாவுக்கு அதிகாரம் இருக்கிறபோதிலும், நம்மிடமுள்ள நல்ல குணங்களைச் சுட்டிக்காட்டி, தயவாகக் கேட்கிறார். “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போ[ல்] . . . இருக்கும்” என்று தம்முடைய வார்த்தையில் குறிப்பிடுகிறார். (ஏசாயா 48:18) நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென யெகோவா விரும்புகிறார்; நாம் அவருக்குப் பயப்படுவதால் அல்ல, அவரை நேசிப்பதால் அப்படி எதிர்பார்க்கிறார். (1 யோவான் 5:3) நம்மிடம் எதிர்பார்ப்பவற்றில் அவர் நியாயமானவராய் இருக்கிறார், அவருடைய ஒழுக்கநெறிகளுக்கு இசைய நடந்தால் நாம் பயன் அடைவோம் என்பதையும் அறிந்திருக்கிறார்.—சங்கீதம் 19:7-11.

பெற்றோரே, சமநிலை இழக்காமல் அதிகாரம் செலுத்துவதில் நீங்கள் எப்படித் தன்னம்பிக்கையைப் பெறலாம்? முதலாவதாக, அதிகாரம் செலுத்தும்படி கடவுள் உங்களிடம் எதிர்பார்க்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பது அவசியம். இரண்டாவதாக, கடவுள் கொடுத்த ஒழுக்கநெறிகளுக்கு இசைய வாழ்வது உங்களுக்கும் சரி, உங்களுடைய பிள்ளைகளுக்கும் சரி, மிக மிக நல்லது என்பதை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும்.—ரோமர் 12:2.

அதிகாரம் செலுத்துவதற்கு முக்கியமாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

“உன் பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்து . . . அவர்கள் உன் இருதயத்திற்கு அதிக சந்தோஷத்தைத் தருவார்கள்.”—நீதிமொழிகள் 29:17, நியு ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷன்