அன்பான குடும்பத்தை உருவாக்குங்கள்
வழி 2
அன்பான குடும்பத்தை உருவாக்குங்கள்
இது ஏன் முக்கியம்? பிள்ளைகளுக்கு அன்பு அவசியம், அதைக் காட்டாவிட்டால் அவர்கள் துவண்டுவிடுவார்கள். 1950-களில் மனிதவியல் நிபுணரான எம். எஃப். ஆஷ்லீ மான்டக்யூ என்பவர் இவ்வாறு எழுதினார்: “மனிதனின் படிப்படியான வளர்ச்சிக்கு முக்கியமாகத் தேவைப்படுவது அன்புதான்; சொல்லப்போனால் நல்லாரோக்கியத்தின் அடிப்படையே அன்பை உணருவதுதான், அதுவும் ஆறு வயதுக்குள்ளாக.” இன்றைய ஆய்வாளர்கள் மான்டக்யூவின் பின்வரும் முடிவை ஆமோதிக்கிறார்கள்: “அன்பெனும் ஊட்டச்சத்து போதுமானளவு கிடைக்காதபோது பிள்ளைகள் படுமோசமான பாதிப்புகளால் முடங்கிப்போய் அவதிப்படுகிறார்கள்.”
இது ஏன் சவால்மிக்கது? அன்பற்ற, தன்னலமிக்க இந்த உலகில் வாழ்வது குடும்பத்தார் மத்தியில் கடும் துன்பத்தை விளைவிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) பிள்ளைகளை வளர்ப்பதற்காகும் பணச் செலவும் உணர்ச்சிப் போராட்டங்களும் ஏற்கெனவே குடும்பத்திலுள்ள பிரச்சினைகளை இன்னும் அதிகப்படுத்துவதாக தம்பதியினர் உணரலாம். உதாரணத்திற்கு, ஆரம்பத்திலிருந்தே மனம்விட்டுப் பேசிக்கொள்ளாத தம்பதியரை எடுத்துக்கொள்வோம். இந்தச் சூழ்நிலையில், பிள்ளைகளைக் கண்டிக்கும் விஷயத்திலும் சரி, பிள்ளைகளைப் பாராட்டிப் பரிசளிக்கும் விஷயத்திலும் சரி இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்துவேறுபாடு, அவர்கள் மத்தியில் நிலவுகிற இறுக்கத்தை இன்னும் அதிகமாக்கலாம்.
உங்களுக்கு எது உதவும்? தவறாமல் குடும்பமாகச் சேர்ந்து நேரத்தைச் செலவிட திட்டமிடுங்கள். மணத்துணைகளும் தனிமையில் நேரத்தைச் செலவிட திட்டமிட வேண்டும். (ஆமோஸ் 3:3) பிள்ளைகள் தூங்கச் சென்ற பிறகு கிடைக்கிற நேரத்தை ஞானமாய் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அந்த அருமையான நேரத்தை டிவி திருடிக்கொள்ள இடங்கொடுக்காதீர்கள். ஒருவரையொருவர் நேசிப்பதை உணர்ச்சியிலும் செயலிலும் தவறாமல் வெளிக்காட்டுவதன்மூலம் மணவாழ்வை மணம்வீசச் செய்யுங்கள். (நீதிமொழிகள் 25:11; உன்னதப்பாட்டு 4:7-10) தொட்டதற்கெல்லாம் ‘குற்றங்காண்பதற்கு’ பதிலாக ஒவ்வொரு நாளும் உங்கள் மணத்துணையை வாயாறப் பாராட்டுவதற்கு வாய்ப்புகளைத் தேடுங்கள்.—சங்கீதம் 103:9, 10, ஈஸி டு ரீட் வர்ஷன்; நீதிமொழிகள் 31:28, 29.
பிள்ளைகளை எந்தளவு நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். தம்முடைய மகனான இயேசுவை யெகோவா நேசித்தார்; அதை வெளிப்படையாகத் தெரிவித்ததன் மூலம் பெற்றோருக்கு ஓர் அருமையான முன்மாதிரியை வைத்திருக்கிறார். (மத்தேயு 3:17; 17:5) ஆஸ்திரியாவில் வசிக்கிற ஃபிலெக் என்ற ஒரு தகப்பன் இவ்வாறு சொல்கிறார்: “என்னைப் பொறுத்தவரை பிள்ளைகள் ஒரு விதத்தில் மலர்களைப் போன்றவர்கள். ஒளியையும் கதகதப்பையும் பெற இந்தச் சிறிய மலர்கள் சூரியனின் முகம் நோக்குவதுபோல, குடும்பத்தில் தாங்களும் முக்கியமானவர்கள் என்ற நம்பிக்கையையும் அன்பையும் பெற பிள்ளைகளும் பெற்றோரை நோக்குகிறார்கள்.”
நீங்கள் மணத்துணையோடு இருக்கலாம் அல்லது ஒற்றைப் பெற்றோராக இருக்கலாம்; எப்படியிருந்தாலும், குடும்பத்திலுள்ளவர்கள் ஒருவரையொருவர் நேசிப்பதற்கும், கடவுளை நேசிப்பதற்கும் நீங்கள் உதவி செய்தால் உங்களுடைய குடும்பம் வளம் பெறும்.
அப்படியென்றால், பெற்றோராக நீங்கள் பிள்ளைகள்மீது அதிகாரம் செலுத்துவதைப்பற்றி கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
‘அன்பு . . . பூரணசற்குணத்தின் கட்டு.’—கொலோசெயர் 3:14