Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்றாட வழக்கங்களை ஏற்படுத்துங்கள், பின்பற்றுங்கள்

அன்றாட வழக்கங்களை ஏற்படுத்துங்கள், பின்பற்றுங்கள்

வழி 5

அன்றாட வழக்கங்களை ஏற்படுத்துங்கள், பின்பற்றுங்கள்

இது ஏன் முக்கியம்? பெரியவர்களைப் பொறுத்தவரை அன்றாட வழக்கங்களைப் பின்பற்றுவது அவர்களுக்கு முக்கியம். வேலை, வழிபாடு, ஏன் பொழுதுபோக்கில்கூட அன்றாட வழக்கத்தையே அவர்கள் பொதுவாகப் பின்பற்றுகிறார்கள். நேரத்தைக் கவனமாகப் பிரித்து, அட்டவணை போட்டு அதை அச்சுப்பிசகாமல் பின்பற்ற பிள்ளைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், பிள்ளைகள் பின்னர் கஷ்டப்பட வேண்டிவரும். மறுபட்சத்தில், “கட்டுப்பாடுகளை விதிப்பதும் காரியங்களைக் கிரமமாகச் செய்யக் கற்றுக்கொடுப்பதும், பிள்ளையின் மனதிலுள்ள பயத்தையும் சந்தேகத்தையும் போக்கி, தன்னடக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அவர்களில் ஊட்டி வளர்ப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன” என்று மனோவியல் பேராசிரியரான டாக்டர் லாரன்ஸ் ஸ்டைன்பர்க் சொல்கிறார்.

இது ஏன் சவால்மிக்கது? வாழ்க்கை அவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. பல வீடுகளில் அப்பா அம்மா இருவரும் வேலைக்குப் போகிறார்கள், அங்கு நீண்ட நேரம் செலவழிக்கிறார்கள்; அதனால், அவர்கள் தினமும் பிள்ளைகளோடு கொஞ்ச நேரத்தையே செலவிட நேரிடலாம். அன்றாட வழக்கங்களை ஏற்படுத்தி, அவற்றைப் பின்பற்றுவதற்குத் தன்னடக்கமும் திடத்தீர்மானமும் தேவை; ஆரம்பத்தில் பிள்ளை அந்த வழக்கங்களைப் பின்பற்றாமல் முரண்டுபிடிக்கும்போது அதைச் சமாளிப்பதற்கு அவை தேவை.

எது உங்களுக்கு உதவும்? “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” என்ற பைபிள் ஆலோசனையில் காணப்படும் நியமத்தைப் பின்பற்றுங்கள். (1 கொரிந்தியர் 14:40) உதாரணமாக, இத்தனை மணிக்குத் தூங்கப் போக வேண்டுமென பிள்ளைகள் சின்னஞ்சிறுசுகளாக இருக்கும்போதே அநேகப் பெற்றோர் ஞானமாக நேரத்தைக் குறித்துவிடுகிறார்கள். எனினும், படுக்கைக்குச் செல்லும் நேரத்தை இனிய நேரமாக்க வேண்டும். இரண்டு மகள்களை உடைய டாட்யானா என்பவர் கிரீஸில் வசிக்கிறார்; அவர் இவ்வாறு சொல்கிறார்: “என் மகள்கள் படுக்கையில் படுத்திருக்கும்போது அன்போடு அவர்களுடைய தலையை வருடியவாரே, ‘நீங்கள் பள்ளிக்குப் போயிருந்தபோது அம்மா என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா?’ என்று நான் செய்ததைச் சொல்ல ஆரம்பிப்பேன். பிறகு, அவர்களிடம் ‘நீங்கள் பள்ளியில் என்னென்ன செய்தீர்கள், சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று கேட்பேன். அவர்கள் சாவகாசமாய் உணருவதால், பெரும்பாலும் மனதிலுள்ள எல்லாவற்றையும் அப்படியே கொட்டிவிடுகிறார்கள்.”

டாட்யானாவின் கணவர் காஸ்டாஸ் தன் மகள்களுக்குக் கதைகளை வாசித்துக்காட்டுகிறார். “அவர்கள் கதை கேட்கும்போது ஏதேனும் குறிப்பு சொல்லுவார்கள்; இது பெரும்பாலும் தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்குச் சந்தோஷத்தையோ கவலையையோ அளித்த விஷயங்களிடம் திரும்புகிறது. என் மகள்களின் மனதை வாட்டும் பிரச்சினைகளைப்பற்றி அவர்களிடம் நேரடியாக என்ன, ஏது எனக் கேட்டிருந்தால் அவர்கள் மனந்திறந்து இதுபோல் பேசியிருக்கவே மாட்டார்கள்” என்று அவர் சொல்கிறார். பிள்ளைகள் வளர வளர தூங்கப் போகும் நேரத்தை நீங்கள் மாற்றிக்கொள்வீர்கள் என்பது உண்மைதான். ஆனால், இந்த அன்றாட வழக்கத்தை நீங்கள் தவறாமல் பின்பற்றினால், உங்களிடம் மனந்திறந்து பேசுவதற்கு இந்த நேரத்தை ஒருவேளை அவர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதோடு, தினமும் ஒருவேளையாவது குடும்பத்தார் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதைப் பழக்கப்படுத்திக்கொள்வது ஞானமான செயலாகும். இதை வழக்கமாக்க அதற்குரிய நேரம் எல்லாருக்கும் ஒத்துவருவதாய் இருக்க வேண்டும். இரண்டு மகள்களை உடைய சார்லஸ் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “சிலசமயங்களில் வேலை முடிந்து வீட்டுக்குத் தாமதமாக வருவேன். அப்போது பிள்ளைகள் பசியில் துவண்டுவிடாதிருப்பதற்கு என் மனைவி அவர்களுக்கு ஏதாவது தின்பண்டத்தை முன்னதாகவே கொடுத்துவிடுவாள்; இப்படி, எல்லாரும் குடும்பமாக சேர்ந்து சாப்பிடுவதற்கு ஒவ்வொருவரும் அடுத்தவருக்காகக் காத்திருக்கும்படி எப்போதுமே பார்த்துக்கொள்கிறாள். நாங்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும்போது அந்த நாள் முழுவதும் செய்த வேலைகளைப்பற்றிப் பேசுவோம், ஒரு பைபிள் வசனத்தைச் சிந்திப்போம், பிரச்சினைகள் இருந்தால் அதைப்பற்றிப் பேசுவோம், எல்லாருமாக சேர்ந்து சிரித்து மகிழ்வோம். எங்கள் குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு இந்த அன்றாட வழக்கத்தை நாங்கள் பின்பற்றுவது எந்தளவு முக்கியமாய் இருக்கிறது என்பதை வலியுறுத்த எனக்கு வார்த்தைகளே இல்லை.”

இந்த வழியைப் பின்பற்றுவதில் நீங்கள் கைதேர்ந்தவராக ஆக விரும்புகிறீர்களா? அப்படியென்றால், பொருள் சேர்க்கும் ஆசைகள் அன்றாட வழக்கங்களுக்கு முட்டுக்கட்டையாய் அமைந்துவிட இடங்கொடுக்காதீர்கள். “அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்” என்பதாக பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.—பிலிப்பியர் 1:10, NW.

தங்கள் பிள்ளைகளுடன் உரையாடுவதை முன்னேற்றுவிக்க பெற்றோர் இன்னும் என்ன செய்யலாம்?

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

“சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.” —1 கொரிந்தியர் 14:40