Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இறைவழிபாட்டில் இன்பம் காண முடியுமா?

இறைவழிபாட்டில் இன்பம் காண முடியுமா?

பைபிளின் கருத்து

இறைவழிபாட்டில் இன்பம் காண முடியுமா?

“க டவுள்மீது எனக்கு நம்பிக்கையும் அன்பும் இருக்கிறது, ஆனால் . . . சர்ச் என்றாலே செம போரடிக்கிறது” என கிறிஸ்தவரென்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் எழுதுகிறார். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? சொல்லப்போனால், சலிப்பு, அதிருப்தி, விரக்தி காரணமாக சிலர் தங்களுக்கு விருப்பமான விதத்தில் கடவுளை வழிபட வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

“உனக்கு பிடித்த மதத்தை நீயே உருவாக்கிக்கொள்” என்ற சொற்றொடரை ஒரு செய்தித்தாள் தெரிவித்தது. அவரவர் விருப்பப்படி கடவுளை வணங்குவதற்கு கண்டுபிடித்திருக்கும் முறையைத்தான் அது அவ்வாறு குறிப்பிட்டது. ஆனால், இத்தகைய வணக்கமுறை இறைவழிபாட்டில் இன்பம் காண விரும்புகிறவர்களுக்கு திருப்தியையோ சந்தோஷத்தையோ தராது. ஏன்? ஏனென்றால், சர்ச்சுகளிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த விரக்தி மறுபடியும் அவர்களைத் தொற்றிக் கொள்ளலாம்.

இப்போது எழும் கேள்வி இதுவே: பைபிள் போதனைகளுக்கு இசைவாக வாழ்வது சலிப்புத் தட்டுகிறதா? சந்தோஷத்தைப் பறித்துவிடுகிறதா? இல்லவே இல்லை! உதாரணமாக, ஒரு சங்கீதக்காரன் பைபிளில் குறிப்பிடுகிற வார்த்தைகளைக் கவனியுங்கள்: “கர்த்தரைக் கெம்பீரமாய்ப், [அதாவது, சந்தோஷமாய்] பாடி, . . . நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.”—சங்கீதம் 95:1, 6.

நன்றி பொங்கும் இருதயத்தோடு மற்றொரு சங்கீதக்காரன் யெகோவாவுக்கு இவ்வாறு துதி பாடினார்: “தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்.” யெகோவாவை ‘நித்தியானந்த தேவன்’ என பைபிள் அழைக்கிறது; அன்றும் சரி இன்றும் சரி, அவருடைய வணக்கத்தார் தங்களுடைய சந்தோஷத்தை அடிக்கடி வெளிக்காட்டியிருக்கிறார்கள்.—சங்கீதம் 83:17; 1 தீமோத்தேயு 1:11.

சந்தோஷத்திற்கு அடிப்படை

இறைவழிபாட்டில் நிஜ சந்தோஷத்திற்கு அடிப்படை, யெகோவா தம்முடைய அன்பை நம்மிடம் எப்படிக் காட்டியிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வதே. அவர் அதை எப்படிக் காட்டியிருக்கிறார்? ‘தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை [இயேசு கிறிஸ்துவை] விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் [மனிதகுலத்தில்] அன்புகூர்ந்திருப்பதன்’ மூலமே.யோவான் 3:16.

எனவே, பைபிள் சொல்கிறபடி, ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படுவதும், சத்தியத்தை அறிகிற அறிவை அடைவதுமே’ கடவுளின் சித்தம். (1 தீமோத்தேயு 2:3, 4) சத்தியத்தை அறிவதென்பது ஏதோ சில பைபிள் வசனங்களை அறிந்து வைத்திருப்பதை அர்த்தப்படுத்தாது. மாறாக, நாம் வாசிப்பவற்றின் கருத்தைப் ‘புரிந்துகொள்வது’ அவசியம். இதற்கு கவனத்துடன் ஊக்கமாய்ப் படிக்க வேண்டும். (மத்தேயு 15:10, பொது மொழிபெயர்ப்பு) இதனால் கிடைக்கும் பலன்? ‘தேவனை அறியும் அறிவைக் கண்டடைவோம்.’ அந்த ஆனந்தத்தைச் சொல்லவா வேண்டும்!—நீதிமொழிகள் 2:1-5.

முதல் நூற்றாண்டில், மக்கெதோனியாவைச் சேர்ந்த பெரோயா பட்டணத்து மக்கள் அத்தகைய ஆனந்தத்தை அனுபவித்தார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளுடைய வார்த்தையை அவர்களுக்குக் கற்பித்தபோது, அவர்கள் ‘மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்.’ வேதவசனங்களைப் படிப்பது சலிப்புத் தட்டுவதாகவோ சந்தோஷத்தைப் பறிப்பதாகவோ இருந்திருந்தால் அத்தகைய மனோவாஞ்சையை அவர்கள் காட்டியிருக்க மாட்டார்கள்.—அப்போஸ்தலர் 17:11.

இயேசு இவ்வாறு சொன்னார்: “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள்.” (மத்தேயு 5:6, NW) ஒரு சமயத்தில் பசியால் வாடி வதங்கியவர்கள் இப்போது மூன்று வேளையும் வயிறார உணவு உண்பதைப்போல, ஆன்மீக பசியால் தவித்த அநேகர் இப்போது திருப்திபெற்று பேரானந்தம் அடைகிறார்கள். எனவே, பெரோயா பட்டணத்து மக்களைப் போலவே, ‘அவர்களில் அநேகம்பேர் விசுவாசிகளாகி இருக்கிறார்கள்.’—அப்போஸ்தலர் 17:12.

வாழ்க்கை முறை

முதல் நூற்றாண்டிலிருந்த உண்மை வணக்கத்தார், அப்போஸ்தலர் 9:2-ல் ‘இந்த மார்க்கம்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிற புதிய வாழ்க்கை முறையைப் பின்பற்றினார்கள். இன்றும்கூட இறைவழிபாட்டில் இன்பம் காண விரும்புவோர் அதே வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் பைபிள் சத்தியங்களுக்கு இசைவாக தினம்தினம் தங்கள் சிந்தனையையும் நடத்தையையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதனால்தான், எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: ‘முந்தின நடக்கைக்குரிய . . . பழைய மனுஷனை [அதாவது, சுபாவத்தை] நீங்கள் களைந்துபோடுங்கள்.’ ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ளக் கூடாது, ஏனென்றால், பவுல் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்: “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 4:22-24. a

இந்த அறிவுரைக்கு இசைவாக நடக்கும்போது, அதாவது கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நம் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யும்போது, பரம திருப்தியும் பேரானந்தமும் அடைவதற்கான அடிப்படை அதில் இருப்பதை நாம் அறிய வருகிறோம். அந்த அடிப்படை என்ன? கொலோசெ பட்டணத்துக் கிறிஸ்தவர்கள் ‘அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்துகொள்வதற்காக’ தங்கள் வாழ்க்கையில் சரிப்படுத்துதல்களைச் செய்ய வேண்டுமென பவுல் எழுதினார். (கொலோசெயர் 1:10, பொ.மொ.) ஆம், உண்மைக் கடவுளுக்கு உகந்தவர்களாய் நடக்கிறோம் என்பதை அறிவதே நமக்குப் பேரானந்தத்தைத் தருகிறது, அல்லவா! அதோடு “அனைத்திலும்” அவருக்கு உகந்தவர்களாய் நடக்க கடவுள் நமக்கு உதவுகிறார். எப்படி? நம்மை மன்னிப்பதன் மூலமே.

நாம் ஒவ்வொருவரும் பாவம் செய்கிறோம்; அதனால் நம் எல்லாருக்குமே கடவுளிடமிருந்து மன்னிப்பு தேவை. “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” என 1 தீமோத்தேயு 1:15-ல் பவுல் குறிப்பிட்டார். இயேசு நமக்காக தம் உயிரை பலியாகச் செலுத்தியபோது நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான வாய்ப்பைத் திறந்து வைத்தார். இதனால், கடவுளை உண்மையாய் வணங்குபவர் குற்றவுணர்வு என்ற மனப் பாரம் நீங்கி ஆசுவாசம் அடைகிறார். அதோடு சுத்தமான மனசாட்சியையும் அவர் பெற முடியும்; கடவுளுடைய சித்தத்தை ஊக்கமாய் செய்யும்வரை தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சந்தோஷத்தையும் பெற முடியும்.

மகிழ்ச்சிக்கான மற்றொரு காரணம்

ஒருவர் உண்மைக் கடவுளை வழிபடத் துவங்குகையில் அவ்வாறு வழிபடுவோரின் தோழமை அவருக்குக் கிடைக்கிறது. பைபிளில் சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.” (சங்கீதம் 122:1) கடவுளை உண்மையாய் வணங்குகிறவர்களோடு தவறாமல் ஒன்றுகூடி வருவது நம்மைச் சந்தோஷத்தில் திளைக்கச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை.

யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பிறகு ஒருவர் எழுதியதாவது: “அங்கிருந்தவர்கள் எங்களை அன்போடும் இன்முகத்தோடும் வரவேற்றார்கள்; அவை அங்கு நிலவிய ‘ஒற்றுமைக்கு’ கண்கூடான அத்தாட்சியாக இருந்தன. அங்கிருந்த இளைஞர்கள் அத்தனைபேரும் அடக்கமாகவும் அமைதியாகவும் இருந்தது அவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் பெருமை தேடித்தரும் விஷயம்தான். மனதைத் தொடுகிற, உற்சாகத்தில் ஆழ்த்துகிற அனுபவத்தைத் தந்த ஒரு கூட்டத்திற்கு என்னை அழைத்ததற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.”

பண்டைய காலத்தில் வாழ்ந்த தாவீதைப் போலவே, நீங்களும் யெகோவாவை வழிபடுவதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் மகிழ்ச்சி தருபவையாக, பேரானந்தமூட்டுபவையாக இருப்பதைக் காண்பீர்கள். அவர் இவ்வாறு எழுதினார்: “மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.” (சங்கீதம் 100:2) உண்மைக் கடவுளை சரியான மனநிலையோடு வணங்குவோர் அனைவரும் தங்கள் வழிபாட்டில் இன்பம் காண்பார்கள்.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ உண்மை வழிபாட்டின் அடிப்படை என்ன?—1 தீமோத்தேயு 2:3-6.

◼ நம் சந்தோஷத்திற்கும் கிறிஸ்துவின் மீட்பின் பலிக்கும் உள்ள தொடர்பு என்ன?—1 தீமோத்தேயு 1:15.

◼ இறைவழிபாட்டில் இன்பம் காண கிறிஸ்தவ கூட்டங்கள் எவ்வாறு உதவுகின்றன?—சங்கீதம் 100:1-5.

[அடிக்குறிப்பு]

a எபேசியர் 4-ஆம் அதிகாரத்தையும் கொலோசெயர் 3-ஆம் அதிகாரத்தையும் வாசித்தால், சுபாவத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெளிவாகப் புலப்படும்.

[பக்கம் 10-ன் படம்]

மற்றவர்களுடன் சேர்ந்து பைபிளைப் படிப்பது ஆனந்த அனுபவமே