Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் பிள்ளையின் உணர்ச்சிகளைப் புரிந்திருப்பதைக் காட்டுங்கள்

உங்கள் பிள்ளையின் உணர்ச்சிகளைப் புரிந்திருப்பதைக் காட்டுங்கள்

வழி 6

உங்கள் பிள்ளையின் உணர்ச்சிகளைப் புரிந்திருப்பதைக் காட்டுங்கள்

இது ஏன் முக்கியம்? பிள்ளைகளின் வாழ்க்கையில் பெற்றோருக்குத் தனி இடம் இருக்கிறது; எனவே, அப்பா அம்மா தங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர்கள் ஆசைப்படுகிறார்கள், அது அவசியமென்றும் நினைக்கிறார்கள். அப்படி தாங்கள் நினைப்பதைப்பற்றி பிள்ளைகள் சொல்லும்போது முரண்படும் விதத்தில் பெற்றோர் சதா ஏதாவது சொல்கிறார்கள் என்றால் பிள்ளைகள் வாயே திறக்க மாட்டார்கள்; சொல்லப்போனால், தாங்கள் உணரும் விதமும் சிந்திக்கும் விதமும் சரிதானா என தங்கள் திறமையைக் குறித்தே சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

இது ஏன் சவால்மிக்கது? தங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் மிகைப்படுத்திச் சொல்வது பிள்ளைகளுடைய இயல்பு. பிள்ளைகள் சொல்லும் சில விஷயங்கள் பெற்றோரை இடிந்துபோய் உட்கார வைத்துவிடுவதென்னவோ உண்மைதான். உதாரணத்திற்கு, மனம் கசந்துபோன ஒரு பிள்ளை “எனக்கு உயிரோடிருக்கவே பிடிக்கவில்லை” எனச் சொல்லலாம். a அம்மாவோ அப்பாவோ உடனடியாக, “அப்படியெல்லாம் பேசக்கூடாது!” என பதில் அளிக்கலாம். பிள்ளைகளுடைய எதிர்மறையான உணர்ச்சிகளையோ எண்ணங்களையோ தாங்கள் புரிந்திருப்பதைக் காட்டுவது அவற்றை ஆதரிப்பதற்குச் சமமென நினைத்து பெற்றோர் கவலைப்படலாம்.

எது உங்களுக்கு உதவும்? ‘கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கும்படி’ பைபிளில் சொல்லப்பட்ட ஆலோசனையைப் பின்பற்றுங்கள். (யாக்கோபு 1:19) தம்முடைய உண்மை ஊழியர்கள் பலருடைய எதிர்மறையான உணர்ச்சிகளை பைபிளில் எழுதிவைக்க யெகோவா தேவன் அனுமதித்திருப்பதன்மூலம் அவற்றைத் தாம் புரிந்து வைத்திருப்பதைக் காட்டினார் என்பதைக் கவனியுங்கள். (ஆதியாகமம் 27:46; சங்கீதம் 73:12, 13) உதாரணத்திற்கு, கடும் சோதனைகளுடன் யோபு போராடியபோது தனக்கு உயிரோடிருக்க பிடிக்கவில்லையென அவர் சொன்னார்.—யோபு 14:13.

தன்னுடைய எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் யோபு ஓரளவு மாற்றம் செய்ய வேண்டியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. எனினும், அவருடைய உணர்ச்சிகளை மறுப்பதற்கு அல்லது அப்படிப் பேசுவதைத் தடைசெய்வதற்கு மாறாக அவருடைய உள்ளத்திலுள்ளவற்றை எல்லாம் கொட்டும்வரை யெகோவா பொறுமையோடு காத்திருந்தார்; இவ்வாறு யோபுக்கு மதிப்புக்கொடுத்தார். அதன் பிறகே யெகோவா கனிவோடு அவரைத் திருத்தினார். கிறிஸ்தவ தகப்பன் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “ஜெபத்தில் யெகோவாவிடம் என் மனதிலுள்ளவற்றை எல்லாம் கொட்டுவதற்கு அவர் இடங்கொடுப்பதால், என் பிள்ளைகளும் நல்லதோ கெட்டதோ தங்கள் மனதிலுள்ள எல்லாவற்றையும் என்னிடம் கொட்டுவதற்கு நான் இடங்கொடுப்பது நியாயமானதே என நினைக்கிறேன்.”

அடுத்த முறை உங்கள் பிள்ளையிடம் “அந்த மாதிரியெல்லாம் நினைத்துப் பார்க்கவே கூடாது” அல்லது “அந்த மாதிரியெல்லாம் யோசிக்கவே கூடாது” எனச் சொல்ல வாயெடுக்கும்போது இயேசு சொன்னதை நினைத்துக்கொள்ளுங்கள். யாவரும் அறிந்த அவருடைய சட்டம் சொல்வதாவது: “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (லூக்கா 6:31) உதாரணத்திற்கு இதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்: நீங்கள் ஏதோ தவறு செய்துவிட்டதால் வேலை செய்யும் இடத்தில் ஒருவர் உங்களிடம் கோபமாக நடந்துகொண்டிருக்கலாம் அல்லது நீங்கள் ஏதோ ஏமாற்றத்தை எதிர்ப்பட்டிருக்கலாம். மனம் நொந்துபோய் உங்கள் உயிருக்கு உயிரான நண்பரிடம் இனிமேல் அந்த வேலைக்குப் போக போவதில்லையென நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் நண்பர் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது என்றும், உங்கள் மீதுதான் தவறிருக்கிறது என்றும் சொல்ல வேண்டுமென எதிர்பார்ப்பீர்களா? அல்லது “அது உங்களை ரொம்பவே வேதனைப்படுத்தியிருக்க வேண்டும், இன்றைக்கு நீங்கள் அதிகமாகவே கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்” என்று சொல்ல வேண்டுமென எதிர்பார்ப்பீர்களா?

பிள்ளைகளாகட்டும் பெரியவர்களாகட்டும் யாராக இருந்தாலும், தங்களையும் தங்கள் கஷ்டங்களையும் நன்கு புரிந்து வைத்திருப்பவர் என தாங்கள் கருதும் நபர் தரும் ஆலோசனைகளைப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வார்கள். “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது.—நீதிமொழிகள் 16:23.

கொடுக்கப்படுகிற ஆலோசனைகள் கவனமாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை நீங்கள் எப்படி உறுதிசெய்துகொள்ளலாம்?

[அடிக்குறிப்பு]

a தற்கொலை செய்துகொள்வதைப்பற்றி பிள்ளைகள் பேசும்போது ஏனோதானோவென இருந்துவிடாதீர்கள்.

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

“காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.” —நீதிமொழிகள் 18:13