Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ “அமெரிக்காவில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தில், அதன் அங்கத்தினர்களின் எண்ணிக்கையைவிட அவர்களுடைய டிவி செட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.” அதாவது 2.55 நபர்களுக்கு 2.73 டிவி செட்டுகள் என்ற விகிதத்தில் இருக்கிறது. “அங்குள்ள 50 சதவீத வீடுகளில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட டிவி செட்டுகள் உள்ளன.”—அசோசியேட்டட் பிரஸ், அ.ஐ.மா.

◼ தென் ஆப்பிரிக்கா முழுவதிலுமுள்ள நீதிமன்றங்களில் தினமும் 82 பிள்ளைகள்மீது, “கற்பழிப்பில் ஈடுபட்டதாகவோ மற்ற பிள்ளைகளை கேவலமாகத் தாக்கியதாகவோ” குற்றம் சுமத்தப்படுகிறது. தாங்கள் மோசமாக நடந்துகொண்டதற்கு, “டிவி-யில் பார்த்த காட்சிகளே காரணம்” என குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் சொல்வதாக ஒரு செய்தித்தாள் குறிப்பிடுகிறது.—த ஸ்டார், தென் ஆப்பிரிக்கா.

தூக்கமின்மை செயல்திறனைக் குறைக்கிறது

ஸ்பெயின் நாட்டு மக்களுடைய தூங்கும் பழக்கம் அவர்களுடைய செயல்திறனையே கெடுக்குமளவுக்கு மோசமாகி வருகிறது. பிற ஐரோப்பிய மக்களோடு ஒப்பிட ஸ்பெயின் நாட்டு மக்கள் காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடுகிறார்கள், அதிக நேரம் வேலைசெய்கிறார்கள், இரவுநேர உணவை அதிக தாமதமாக சாப்பிடுகிறார்கள், சராசரியாக 40 நிமிடங்கள் குறைவாக உறங்குகிறார்கள் என்று பார்சிலோனாவில் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான கிளினிக் நடத்துகிற டாக்டர் ஏத்வார் ஏஸ்டிவில் குறிப்பிடுகிறார். என்றாலும், போதிய தூக்கம் இல்லாமையால் எரிச்சல், ஞாபகமறதி, கவலை, மன உளைச்சல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம். ஆகவே, “மூளையை கசக்கிப் பிழிந்து வேலை செய்பவரானாலும்சரி மிகுந்த கவனம் தேவைப்படுகிற பிற வேலையைச் செய்பவரானாலும்சரி தினமும் ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்க வேண்டும்” என டாக்டர் ஏஸ்டிவில் எச்சரிக்கிறார்.

எரிபொருளுக்கு கோதுமை

கோதுமையை எரிபொருளாகப் பயன்படுத்துவது சரியா? கோதுமையின் விலை சரிந்துகொண்டே வர எரிபொருள் எண்ணெயின் விலை எகிறிக்கொண்டே போவதால், கோதுமையை விற்று எரிபொருள் எண்ணெய் வாங்குவதைவிட அதையே எரிபொருளாகப் பயன்படுத்துவதுதான் ஒரு விவசாயிக்கு லாபம் என்று ஜெர்மன் செய்தித்தாள் ஃப்ராங்க்ஃபூர்டர் ஆல்ஜிமைனா ஸான்டாக்ஸ்ட்ஸைடுங் கூறுகிறது. இரண்டரை கிலோ கோதுமையை விளைவிக்க ஒரு விவசாயிக்கு 20 சென்ட் பணம் செலவாகிறது; ஆனால் ஒரு லிட்டர் எரிபொருள் எண்ணெயை வாங்கவோ 60 சென்ட் பணம் செலவாகிறது. ஒரு லிட்டர் எரிபொருள் எண்ணெயால் கிடைக்கும் அதே எரிசக்தி, இரண்டரை கிலோ கோதுமையை எரிக்கும்போது கிடைக்கிறது. ஆகவே, இந்த இக்கட்டான நிலையைக் குறித்து செய்தித்தாள் இவ்வாறு கேள்வி எழுப்பியது: “மற்றவர்கள் பட்டினி கிடக்கும்போது தானியத்தை எரிப்பீர்களா”?

போப்பின் வருகையால் சூடுபிடித்த வியாபாரம்

போப், 2006-ல் ஜெர்மனிக்கு விஜயம் செய்தபோது, உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் சுற்றுலா துறையும் அவருடைய வருகையைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிக்க முன்கூட்டியே தயாரானது. போப்பின் வருகையை முன்னிட்டு சர்ச் தயாரித்த பொருட்களையெல்லாம் விற்பதற்கென்றே ஒரு வியாபார நிறுவனத்துடன் அது கைகோர்த்துக் கொண்டது. ஜெபமாலைகள், மெழுகுவர்த்திகள், புனிதநீர் பாட்டில்கள், காபி கப்புகள், தொப்பிகள், டி-ஷர்ட்டுகள், கீ-செயின்கள், வத்திகன் கொடிகள் போன்ற நினைவுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. டேர் ஸ்ஃபீகல் என்ற செய்திப் பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “இயேசு கிறிஸ்து ஆலயத்திலிருந்த வியாபாரிகளை துரத்தியடிக்கவே இல்லை என்பதுபோல் இந்த கத்தோலிக்க சர்ச் லாபம் ஈட்டுவதில் மும்முரமாய் இறங்கியிருக்கிறது.”

உணர்ச்சியை மழுங்கச்செய்யும் வன்முறை வீடியோ கேம்ஸ்

“வன்முறை நிறைந்த வீடியோ கேம்ஸை ஓயாமல் விளையாடுபவர்களுக்கு வன்முறை சம்பவங்களை நிஜத்தில் பார்க்கும்போது எவ்வித அதிர்ச்சியோ கலக்கமோ ஏற்படாமல் போகலாம்” என்று அமெரிக்காவின் அயோவா ஸ்டேட் யுனிவர்சிட்டியிலுள்ள மனநல மருத்துவத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அத்தகைய கேம்ஸை ஓயாமல் விளையாடும்போது, “மூர்க்கத்தனமான எண்ணங்களும், கோபாவேசமும், படபடப்பான மனநிலையும், சீறிப்பாயும் குணமும் தீவிரமாகின்றன” என முன்னர் செய்யப்பட்ட ஆய்வுகள் காட்டின. ஆனால், இப்போது செய்யப்பட்ட இந்த ஆய்வில், வன்முறைகள் நிறைந்த அல்லது வன்முறைகள் இல்லாத வீடியோ கேம்ஸை விளையாடிய நபர்களுக்கு நிஜ வன்முறை சம்பவங்களின் காட்சிகள் உடனேயே திரையிட்டுக் காட்டப்பட்டன; அந்தச் சமயத்தில் அவர்களுடைய இதயத்துடிப்பும் உணர்ச்சிகளும் கண்டறியப்பட்டன. விளைவு? “வன்முறை வீடியோ கேம்ஸை ஓயாமல் விளையாடுகிறவர்களுக்கு வன்முறைகளெல்லாம் சர்வ சாதாரணமாகிவிடுகின்றன, நாளடைவில் உணர்ச்சி ரீதியாக அவர்கள் மரத்துப்போயும் விடுகிறார்கள்” என்பது தெரியவந்துள்ளது.