Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கட்டுப்பாடுகளை விதியுங்கள், மீறினால் உடனே தண்டியுங்கள்

கட்டுப்பாடுகளை விதியுங்கள், மீறினால் உடனே தண்டியுங்கள்

வழி 4

கட்டுப்பாடுகளை விதியுங்கள், மீறினால் உடனே தண்டியுங்கள்

இது ஏன் முக்கியம்? ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் சமூகவியளாலராகப் பணியாற்றும் ரானல்ட் சைமன்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “பிள்ளைகளுக்கென திட்டவட்டமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, அவற்றை மீறும்போது அவர்களை உடனடியாகத் தண்டித்தால் அவர்கள் நல்ல விதத்தில் வளருவார்கள் என்பது உண்மை. அப்படித் திட்டவட்டமான கட்டுப்பாடுகளோ, தண்டனைகளோ இல்லாதபோது பிள்ளைகள் சதா தங்களைப்பற்றி சிந்திப்பவர்களாக, தன்னலமிக்கவர்களாக, சந்தோஷத்தைப் பறிகொடுத்தவர்களாக ஆகிறார்கள்; அதோடு, தங்களைச் சுற்றியிருப்பவர்களின் சந்தோஷத்தையும் பறித்துவிடுகிறார்கள்.” கடவுளுடைய வார்த்தை நேரடியாகவே இவ்வாறு சொல்கிறது: “ஒருவன் . . . தன் பிள்ளைகளை நேசித்தால் அவர்கள் தவறு செய்யும்போது . . . திருத்த வேண்டும்.”—நீதிமொழிகள் 13:24, ஈஸி டு ரீட் வர்ஷன்.

இது ஏன் சவால்மிக்கது? உங்களுடைய பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் நியாயமான வரையறைகளை வைத்து, அவற்றை அவர்கள் கடைப்பிடிக்கச் செய்வதற்குக் காலமெடுக்கிறது; அதோடு, ஊக்கமும், விடாமுயற்சியும் தேவைப்படுகிறது. அத்தகைய வரையறைகளை எந்தளவு மீற முடியுமென சோதித்துப் பார்ப்பது பொதுவாகவே பிள்ளைகளுடைய இயல்பாய் இருப்பது தெரிகிறது. இரண்டு பிள்ளைகளை உடைய மைக், சோன்யா தம்பதியர், பிள்ளை வளர்ப்பதில் உட்பட்டுள்ள சவால்களைச் சரியாகவே இவ்வாறு தொகுத்துரைக்கிறார்கள்: “பிள்ளைகள்தானே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டுவிடாதீர்கள்; அவர்களுக்கென மனம் இருக்கிறது, ஆசாபாசங்கள் இருக்கின்றன, இயல்பாகவே பாவம் செய்கிற தன்மையும் இருக்கிறது.” இந்தத் தம்பதியர் தங்கள் மகள்களை உயிருக்குயிராய் நேசிக்கிறார்கள். ஆனால், “சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதம்பிடிக்கலாம், தன்னலமாய் நடந்துகொள்ளலாம்” என்றும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

எது உங்களுக்கு உதவும்? இஸ்ரவேல் தேசத்தாரிடம் யெகோவா நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து பின்பற்றுங்கள். தம்முடைய ஜனங்கள்மீது தமக்கு அன்பிருப்பதை பல வழிகளில் அவர் வெளிக்காட்டினார்; அதன் காரணமாகத்தான், அவர்கள் பின்பற்றும்படி தாம் எதிர்பார்த்த விஷயங்களுக்குத் திட்டவட்டமான சட்டங்களைக் கொடுத்தார். (யாத்திராகமம் 20:2-17) அந்தச் சட்டங்களை மீறி நடந்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும் அவர் விவரமாய் தெரிவித்தார்.—யாத்திராகமம் 22:1-9.

எனவே, உங்கள் பிள்ளைகள் கீழ்ப்படிந்து நடக்கும்படி நீங்கள் எதிர்பார்க்கிற விஷயங்களில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி அவற்றை வரிசையாக எழுதி வைக்கலாம், அல்லவா? சில பெற்றோர் ஒருசில கட்டுப்பாடுகளை, சொல்லப்போனால் ஐந்தாறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வைக்கும்படி ஆலோசனை கொடுக்கிறார்கள். இப்படி அவசியமான கட்டுப்பாடுகளை மட்டுமே வைக்கும்போது அவற்றைப் பிள்ளைகள் கடைப்பிடிக்கும்படி செய்வது எளிதாக இருக்கும்; அதோடு, பெரும்பாலும் அவற்றை அவர்களால் நினைவில் வைக்கவும் முடியும். இப்படிக் கட்டுப்பாடுகளை வரிசையாக எழுதி வைத்தால் மட்டும் போதாது, அவற்றை மீறி நடந்தால் கிடைக்கும் தண்டனையையும் அவற்றின் பக்கத்திலேயே எழுதி வையுங்கள். அந்தத் தண்டனைகள் நியாயமானவையாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள், அவற்றை மீறி நடக்கும்போது தண்டிக்கத் தவறாதீர்கள். அந்தக் கட்டுப்பாட்டு விதிகளைத் தவறாமல் கலந்தாலோசியுங்கள்; அப்போதுதான், அப்பா, அம்மா உட்பட எல்லாரிடமும் என்னென்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது சரியாகத் தெரியும்.

கட்டுப்பாட்டு விதிகளை மீறி நடக்கும்போது உடனடியாகத் தண்டியுங்கள்; அந்தச் சமயத்தில், சாந்தமாயிருங்கள், உறுதி காட்டுங்கள், முரண்படாமல் இருங்கள். குறிப்பு: நீங்கள் கோபமாக இருந்தால் அந்தச் சமயத்தில் பிள்ளைகளைத் தண்டிக்காதீர்கள்; உங்கள் கோபம் தணியும்வரை காத்திருங்கள். (நீதிமொழிகள் 29:22) எனினும், தண்டனை கொடுப்பதில் காலம் தாழ்த்தாதீர்கள். தண்டனையைக் குறைக்கும் சமரசப் பேச்சு வார்த்தைகளில் இறங்காதீர்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், அந்தக் கட்டுப்பாடுகளை உங்கள் பிள்ளை லேசாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிடும். இது, பைபிள் பின்வருமாறு சொல்வதற்கு இசைவாக இருக்கிறது: “மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்.”—பிரசங்கி 8:11, பொது மொழிபெயர்ப்பு.

உங்கள் பிள்ளைகள் பயன் அடையும் விதத்தில் வேறு எப்படி நீங்கள் அதிகாரம் செலுத்த முடியும்?

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

“நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள்.” —மத்தேயு 5:37, பொ.மொ.