Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிசுகிசு—எப்படி நிறுத்துவது?

கிசுகிசு—எப்படி நிறுத்துவது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

கிசுகிசு—எப்படி நிறுத்துவது?

“நான் ஒரு தடவை பார்ட்டிக்கு சென்றிருந்தேன்; அவ்வளவுதான், அங்கு வந்த ஒரு பையனுடன் நான் செக்ஸ் வைத்துக் கொண்டதாக அடுத்த நாளே கதை பரப்பிவிட்டார்கள். அது சுத்தப் பொய்!”—லின்டா. a

“யாரோ ஒருத்தியுடன் டேட்டிங் செய்கிறேன் என்ற வதந்தி சிலசமயம் என் காதுக்கு எட்டும். அப்படியொரு பெண்ணைப் பற்றியே எனக்குத் தெரிந்திருக்காது. நிறைய பேர் உண்மை என்னவென்பதைப்பற்றி யோசிக்காமலேயே இஷ்டத்திற்குக் கதை அளப்பார்கள்.”—மைக்.

கிசுகிசு—ஒரு திரைப்படத்தைவிட உங்கள் வாழ்க்கையில் அதிக பரபரப்பை ஏற்படுத்தலாம். 19 வயது ஏம்பரிடம் கேட்டுப் பாருங்கள்: “என்னைப்பற்றி கிசுகிசு பேச்சு அடிபடாத நாளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் கர்ப்பமாக இருந்தேனாம், பல தடவை கருக்கலைப்பு செய்திருக்கிறேனாம், போதை மருந்துகளை விற்கிறேனாம், வாங்குகிறேனாம், பயன்படுத்துகிறேனாம்; இப்படியெல்லாம் என்னைப் பற்றி வம்பளக்கிறார்கள். ஏன்தான் இப்படி பேசுகிறார்களோ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை!”

நவீன பாணி கிசுகிசுப்புகள்

உங்கள் பெற்றோர் டீனேஜராக இருந்த காலத்தில், பெரும்பாலும் வாய் வார்த்தைகளில்தான் கிசுகிசுப்பார்கள். ஆனால் இன்றோ, கிசுகிசுப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். கெட்ட உள்நோக்கமுள்ள பையனோ பெண்ணோ ஈ-மெயில் அனுப்பி அல்லது இன்டர்நெட் மூலமாக ‘சாட்’ செய்து ஒரு வார்த்தையைக்கூட உதிர்க்காமல் உங்கள் நற்பெயரை கெடுத்துப்போடலாம். மோசமான வதந்தியை ஒருசில வரிகளில் டைப் செய்து அனுப்பினாலே போதும், அப்படிப்பட்ட விஷயங்களை அறிய ஆர்வமாய் காத்திருக்கிற பத்து பதினைந்து பேரிடம் அது எட்டிவிடும்.

கிசுகிசு பேசுவதற்கு இதுவரை தொலைபேசியைப் பயன்படுத்தியவர்களுக்கு இப்போது இன்டர்நெட் மிக வசதியாக அமைந்துவிட்டது என சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, யாரையாவது மட்டம்தட்டுவதற்கென்று ஒரு முழு வெப்சைட்டையே உருவாக்கிவிடுகிறார்கள். டைரிகள் அடங்கிய வெப்சைட்களான ஆன்லைன் ப்ளாக்ஸ் இப்போதெல்லாம் கிசுகிசுப்பு மயமாகி வருகின்றன; நேரில் சொல்ல வாய் கூசுகிற விஷயங்களே இவற்றில் அதிகம். சொல்லப்போனால், தங்களை நோகடிக்கும் எண்ணத்தோடு இன்டர்நெட்டில் கிசுகிசு எழுதப்பட்டிருந்ததாக ஒரு கணக்கெடுப்பில் 58 சதவீத இளைஞர்கள் தெரிவித்தார்கள்.

மற்றவர்களைப் பற்றிப் பேசுவது எப்போதுமே தவறா? அதோடு இப்படியொன்றும் இருக்கிறதா . . .

நல்ல கிசுகிசுப்பு?

பின்வரும் வாக்கியம் சரியா தவறா என குறிப்பிடுங்கள்.

கிசுகிசுப்பது எப்போதுமே தவறு. ◻ சரி ◻ தவறு

இதற்கு சரியான பதில் என்னவாயிருக்கும்? “கிசுகிசு” என்ற வார்த்தையை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள் என்பதைப் பொறுத்தே இது இருக்கிறது. கிசுகிசு என்பதை சாதாரண பேச்சு என நீங்கள் விளக்கினால் அது தவறு என்று சொல்லமுடியாத சமயங்களும் இருக்கலாம். ஏனென்றால், ‘மற்றவர் வாழ்விலும் ஆர்வம் கொள்ள’ வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 2:4 ஈஸி டு ரீட் வர்ஷன்) அதே சமயத்தில், நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதை இது அர்த்தப்படுத்துவது கிடையாது. (1 பேதுரு 4:15) சாதாரணமாகப் பேசும்போது யார், யாருக்குத் திருமணம் நடக்கப்போகிறது, யாருக்கு குழந்தை பிறந்திருக்கிறது, யாருக்கு உதவி தேவைப்படுகிறது என்பதைப் போன்ற பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. உண்மை என்னவெனில், மற்றவர்களைப் பற்றி எதையுமே நாம் பேசவில்லையென்றால், அவர்கள்மீது நமக்கு அக்கறை இருக்கிறதென்று சொல்லமுடியாது.

இருந்தாலும், இந்த சாதாரண பேச்சே தீங்கிழைக்கும் வீண்பேச்சாக எளிதில் மாறிவிடலாம். ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். “ராஜாவும் ராதாவும் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள்” என சாதாரணமாகச் சொல்லப்பட்ட விஷயம் அப்படியே மருவி “ராஜாவும் ராதாவும் ஜோடிபோட்டுச் சுற்றுகிறார்கள்” என்று சொல்லப்படலாம். ராஜாவுக்கும் ராதாவுக்கும் காதல் என்பது அவர்களுக்கே தெரியாத விஷயமாக இருக்கலாம். உண்மையில், அந்த ராஜாவாகவோ ராதாவாகவோ நீங்கள் இல்லாதவரை, ‘இதை ஏன் பெரிதாக எடுத்துக்கொள்கிறீர்கள்’ என்று நீங்கள் சொல்லக்கூடும்!

பதினெட்டு வயது ஜூலி இப்படிப்பட்ட கிசுகிசு பேச்சுக்கு ஆளாகி மனமுடைந்து போனவள். “எனக்கு கோபம்கோபமாய் வந்தது, யாரை நம்புவது என்று எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது” என்று அவள் சொல்கிறாள். 19 வயது ஜேனின் கதையும் இதுதான். “நான் எந்தப் பையனோடு டேட்டிங் செய்வதாக கதைப் பரப்பினார்களோ அவனோடு பேசுவதை அறவே நிறுத்திவிட்டேன். நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்ததால், இப்படி பேசாமல் இருந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது, அநியாயமாகவும் பட்டது. நாங்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஏன் வதந்தி கிளப்பிவிட்டார்கள் என நான் நினைத்தேன்.”

தீங்கிழைக்கும் கிசுகிசுக்கள் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை இதிலிருந்து தெரிந்துகொண்டோம். இருந்தாலும், கிசுகிசு பேச்சால் அடிபட்டவர்கள், தாங்களும்கூட மற்றவர்களைப்பற்றி வீணான காரியங்களைப் பேசியிருக்கிறார்கள் என்பதை மறுபேச்சின்றி ஒப்புக்கொள்வார்கள். உண்மை என்னவென்றால், ஒருவரைப்பற்றி மற்றவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் பேசும்போது, நாமும் ஏதாவது சொல்ல வேண்டுமென்ற துடிப்பு நமக்குள் ஏற்படலாம். ஏன் அப்படி? “நம்மைப்பற்றி பேச்செடுக்காமல் தப்பித்துக்கொள்ள இது ஒரு வழி. அவரவர் பிரச்சினைகளைவிட அடுத்தவர் பிரச்சினைகளைப்பற்றிப் பேசவே மக்கள் விரும்புகிறார்கள்” என்று 18 வயது ஃபிலிப் கூறுகிறான். அப்படியானால், சாதாரண பேச்சு தீங்கிழைக்கும் வீண்பேச்சாக மாறும்போது நீங்கள் என்ன செய்யலாம்?

கவனத்துடன் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள்!

நெரிசல்மிக்க நெடுஞ்சாலையில் வாகனத்தை ஓட்டுவதற்கு எந்தளவு திறமை தேவை என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எதிர்பாராத விதமாக இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எழலாம்: வாகனத்தை ஒரு தடத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்ற வேண்டியிருக்கலாம்; பின்னே வரும் வாகனம் கடந்துசெல்வதற்காக வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டியிருக்கலாம்; அல்லது வாகனத்தை ஒரேயடியாக நிறுத்த வேண்டியிருக்கலாம். நீங்கள் ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருந்தீர்களென்றால் எதிரே பார்த்து அதற்கு இசைவாகச் செயல்படுவீர்கள்.

உரையாடல்களைப் பொறுத்ததிலும் அதுவே உண்மை. சாதாரண பேச்சு எப்போது தீங்கிழைக்கும் கிசுகிசுவாக மாறுகிறதென்பதை பொதுவாக உங்களால் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு மாறும்போது, அந்தப் பேச்சை வேறு ‘தடத்திற்கு’ உங்களால் மாற்ற முடியுமா? அப்படி எச்சரிக்கையுடன் செயல்படவில்லையென்றால், கிசுகிசுவால் பெரும் தீங்கு விளையலாம். மைக் இவ்வாறு சொல்கிறான்: “பையன்களோடே சுற்றுபவள் என்று ஒரு பெண்ணைக் குறித்து நான் மட்டமாகச் சொன்னேன். அதை யாரோ அவளிடம் சொல்லிவிட்டார்கள். நாங்கள் நேருக்கு நேர் சந்தித்தபோது அவள் என்னிடம் பேசிய விதத்தை என்னால் மறக்கவே முடியாது. முன்பின் யோசிக்காமல் நான் பேசிய வார்த்தைகள் அவளை எந்தளவுக்குப் புண்படுத்திவிட்டன என்பதை நான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு நாங்கள் இருவரும் சமரசமாகிவிட்டோம், ஆனாலும் இப்படி ஒருவரைப் புண்படுத்திவிட்டேனே என்று நினைக்கும்போதெல்லாம் என் மனது நெருடத்தான் செய்கிறது!”

கிசுகிசு பேச்சாக மாறுகிற உரையாடலை ‘பிரேக்’ போட்டு நிறுத்துவதற்கு தைரியம் தேவைப்படலாம் என்பது உண்மையே. இருந்தாலும், 17 வயது கேரலன் குறிப்பிடுகிறபடி, “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதில் கவனமாயிருக்க வேண்டும். ஒரு விஷயத்தை நம்பகமான நபரிடமிருந்து நீங்கள் கேள்விப்படவில்லையென்றால், பொய்யைத்தான் பரப்பிக் கொண்டிருப்பீர்கள்.”

தீங்கிழைக்கும் கிசுகிசுவைத் தவிர்ப்பதற்கு, பைபிளில் காணப்படுகிற பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்:

“சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” (நீதிமொழிகள் 10:19) நீங்கள் வளவளவென்று பேசும்போது, ஏன் தான் இப்படி பேசினோமோ என்று பின்னால் நினைத்து வேதனைப்படுகிற எதையாவது பேசிவிடுவதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. நாம் சிந்தித்த எல்லா விஷயங்களையும் வைத்துப் பார்க்கும்போது, வாயாடி என்ற பெயரெடுப்பதைவிட மௌனமாகக் கேட்பவர் என்று பெயரெடுப்பதே மேல்!

“நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.” (நீதிமொழிகள் 15:28) வார்த்தைகளைக் கொட்டுவதற்குமுன் யோசியுங்கள்!

“அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.” (எபேசியர் 4:25) ஒரு விஷயத்தைப்பற்றி சொல்வதற்கு முன்பு அது உண்மைதானா என்பதை உறுதிசெய்யுங்கள்.

“மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (லூக்கா 6:31) ஒருவரைப் பற்றிய விஷயம் உண்மையானதாக இருந்தாலும்கூட, அதைச் சொல்வதற்கு முன்பு உங்களையே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள்: ‘நான் அந்த நபராக இருந்து, என்னைப்பற்றி யாராவது இப்படிப் பேசினால் நான் அதை எப்படி எடுத்துக் கொள்வேன்?’

“சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.” (ரோமர் 14:19) உண்மையான தகவலாயிருந்தாலும்கூட, அது பக்திவிருத்தி அளிப்பதாய் இல்லாவிட்டால் தீங்கிழைக்கலாம்.

“உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து, அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 4:12, பொது மொழிபெயர்ப்பு) மற்றவர்கள் கதையையே பேசிப்பேசி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் நேரத்தை பிரயோஜனமான வழிகளில் பயன்படுத்துங்கள்.

உங்களைப்பற்றி யாரேனும் கிசுகிசுத்தால்

மற்றவர்களைப்பற்றி கிசுகிசுக்காமல் வாய்க்குப் பூட்டுப்போட வேண்டும் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள். அதே சமயத்தில் உங்களைப்பற்றி யாரேனும் கிசுகிசுத்தால் அதை நீங்கள் இன்னும் அதிக சீரியஸாக எடுத்துக் கொள்வீர்கள். பொய்யும் புரளியுமான பேச்சால் பாதிக்கப்பட்ட 16 வயது ஜோயன் இவ்வாறு சொல்கிறாள்: “இனிமேல் எனக்கு எந்த ஃபிரெண்டும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். பல நாட்கள் நான் அழுதுகொண்டே தூங்கியிருக்கிறேன். என்னுடைய பெயரையே கெடுத்துவிட்டார்கள் என்று நான் நினைத்தேன்!”

உங்களைப்பற்றி யாராவது பொய்யான வதந்தியைப் பரப்பினால் நீங்கள் என்ன செய்யலாம்?

கிசுகிசுப்பதற்கான காரணத்தைச் சிந்தியுங்கள். மக்கள் ஏன் கிசுகிசுக்கிறார்கள், எதற்குக் கிசுகிசுக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். உதாரணமாக, பிரபலமடைவதற்காக சிலர் அவ்வாறு செய்கிறார்கள்; தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதைக் காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். 14 வயதான கேரன் சொல்வதைக் கவனியுங்கள், “மற்றவர்களைப்பற்றி பேசுவதன்மூலம் உலகத்தில் நடக்கிற அத்தனையும் தங்களுக்குத்தான் தெரியும் எனக் காட்டிக்கொள்ள சிலர் விரும்புகிறார்கள்.” தங்கள்மீதே நம்பிக்கை இல்லாத சில இளைஞர்கள் மற்றவர்களை மட்டம்தட்டிப் பேசுவதன்மூலம் தங்களைப்பற்றி உயர்வாக நினைக்க விரும்புகிறார்கள். கிசுகிசுப்பதற்கான மற்றொரு காரணத்தை 17 வயது ரனே இவ்வாறு சொல்கிறாள்: “நிறைய பேருக்கு வாழ்க்கை சலிப்பு தட்டிவிட்டது. அதனால் ஏதாவதொரு புரளியைக் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்த விரும்புகிறார்கள்; அப்போதுதான் வாழ்க்கை களைகட்டுமென அவர்கள் நினைக்கிறார்கள்.”

◼ உங்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். தீங்கிழைக்கும் வீண்பேச்சால் புண்பட்ட ஒருவர் அவமானம் தாங்க முடியாமல் கோபம் கொப்பளிக்க எதையாவது செய்து விடுவாரென்றால், அதை நினைத்து பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும். “முற்கோபி மதிகேட்டைச் செய்வான்” என்று நீதிமொழிகள் 14:17 கூறுகிறது. உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவது கடினமானதாகவே இருந்தாலும், முக்கியமாக கிசுகிசு பேச்சுக்கு இலக்காகும்போதுதான் உங்களை அதிகமாக கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது, உங்களைப்பற்றி கிசுகிசு பேசியவர் நடந்தவிதமாக, முட்டாள்தனமாக நடப்பதை நீங்கள் தவிர்க்க முடியும்.

◼ காரியங்களை எதார்த்தமாக எடைபோடுங்கள். பின்வரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்: ‘அந்தக் கிசுகிசு என்னைப் பற்றித்தான் சொல்லப்பட்டது என்று எனக்கு உறுதியாகத் தெரியுமா? அது ஒரு வதந்தியா அல்லது புரிந்துகொள்வதில் ஏற்பட்ட பெரும் குளறுபடியா? நான் எளிதில் புண்பட்டுவிடுகிறேனா?’ எப்படியானாலும், தீங்கிழைக்கும் வீண்பேச்சை சரி என்று சொல்லிவிட முடியாதுதான். இருந்தாலும், அந்தக் கிசுகிசு பேச்சைவிட அதற்குப் பிறகு நீங்கள் மோசமாக நடந்துகொள்ளும் முறையே உங்களுக்கு அதிக கெட்டப் பெயரை ஏற்படுத்தி விடலாம். ரனேக்கு உதவிய குறிப்பை நீங்களும் பின்பற்றலாமே. அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என்னைப்பற்றி யாராவது மோசமாக பேசும்போது எனக்கு வேதனையாகத்தான் இருக்கும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படவோ அதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவோ மாட்டேன். இன்றைக்கு என்னைப்பற்றி பேசுபவர்கள் நாளைக்கு வேறு யாரையாவதுபற்றி, எதையாவதுபற்றி பேசுவார்கள் அவ்வளவுதானே.” b

நல்நடத்தையே சிறந்த தற்காப்பு

“நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” என்று பைபிள் சொல்கிறது; “ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீர முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்என்றும் அது சொல்கிறது. (யாக்கோபு 3:2) எனவே, நம்மைப்பற்றி சொல்லப்படுகிற ஒவ்வொரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்வது ஞானமற்ற செயல். பிரசங்கி 7:22-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: “அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே.”

உங்களைப்பற்றி யாராவது அவதூறாகப் பேசியிருந்தால், உங்களுடைய நல்நடத்தையே சிறந்த தற்காப்பாக இருக்கும். இயேசு இவ்வாறு சொன்னார்: “ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.” (மத்தேயு 11:19, பொ.மொ.) எனவே, உண்மையான நட்பையும் அன்பையும் தொடர்ந்து காட்ட முயலுங்கள். உங்களைப்பற்றி கிசுகிசு பேசுவது வெகு சீக்கிரம் நின்றுவிட்டதை நினைத்து நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்; அல்லது அதனால் வரும் கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு வாழ நீங்கள் பழகிவிடுவீர்கள்.

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க

சிந்திப்பதற்கு

◼ மற்றவர்களைப்பற்றி புரளி கிளப்புவதை நீங்கள் எப்படித் தவிர்க்கலாம்?

◼ யாராவது உங்களைப்பற்றி கிசுகிசு பேசினால் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்?

[அடிக்குறிப்புகள்]

a இக்கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b சில சந்தர்ப்பங்களில், கிசுகிசுப்பவரிடம் நேருக்குநேர் பேசி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சாதுரியமான வழியைக் கண்டுபிடிப்பது நல்லது. இருந்தாலும், பல சமயங்களில் இவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், அன்பு திரளான பாவங்களை மூடும்.”—1 பேதுரு 4:8.