Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்மஸ் தீவுக்கு ஏன் சென்றோம் தெரியுமா?

கிறிஸ்மஸ் தீவுக்கு ஏன் சென்றோம் தெரியுமா?

கிறிஸ்மஸ் தீவுக்கு ஏன் சென்றோம் தெரியுமா?

பிஜியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ப சிபிக் பெருங்கடலிலுள்ள 33 தீவுகள் சேர்ந்ததுதான் கிரிபடி தீவு தேசம். a இவற்றில் கிறிஸ்மஸ் தீவு என உச்சரிக்கப்படுகிற கிரிடிமாடி தீவுதான் மிகப் பெரியது. இத்தீவு சுமார் 388 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை உடையதாய் இருக்கிறது. இது மற்ற 32 தீவுகளின் மொத்த நிலப்பரப்புக்குச் சமமாக இருக்கிறது. கிரிபடியிலுள்ள எல்லா தீவுகளின் மொத்த ஜனத்தொகை ஏறக்குறைய 92,000-ஆக இருக்க, கிறிஸ்மஸ் தீவில் மட்டுமே கிட்டத்தட்ட 5,000 பேர் வசிக்கின்றனர்.

கிரிபடி தீவுகளில் ஒன்றைத் தவிர்த்து மற்றவை எல்லாமே பவளத் தீவுகள். கிரிபடி தீவு தேசத்தில் கிறிஸ்மஸ் தீவே மிகப்பெரிய பவளத் தீவு. அதோடு நிலப்பரப்பை பொறுத்தவரையில் உலகிலேயே இதுதான் மிகப்பெரிய பவளத் தீவும்கூட!

கிறிஸ்மஸ் தீவின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அது சர்வதேச தேதிக் கோடுக்கு அருகில் இருப்பதே. ஒவ்வொரு புதிய நாளையும், புது வருடத்தையும் முதலாவது பார்ப்பவர்களில் இந்தத் தீவினரும் அடங்குவர், அதோடு, இயேசு கிறிஸ்துவின் நினைவு நாள் ஆசரிப்பு போன்ற மற்ற ஆசரிப்புகளை முதலில் ஆசரிப்பவர்களில் இவர்களும் சேருவர். b

அதுமட்டுமல்ல ஒதுக்குப்புறத்தில் இருக்கும் இந்தப் பவளத் தீவு, வெப்ப மண்டல கடல் பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு மிக முக்கியமான இடங்களில் ஒன்று. சுமார் 2.5 கோடி கருநிற டெர்ன் பறவைகள் அடிக்கடி இத்தீவுக்கு வருகை தந்ததாக சில காலத்திற்கு முன்பு சொல்லப்பட்டது.

பறவைகளின் இரகசியம் உலகிற்கு தெரிந்துவிட்டது

ஆய்வுப் பயணியான கேப்டன் ஜேம்ஸ் குக், 1777-ல் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்தின நாள் இந்தத் தீவுக்கு வந்தபோது அங்கு மனிதர்களின் வாடையே இல்லை. பறவைகளுக்கோ பஞ்சமில்லை. குக், அத்தீவுக்கு கிறிஸ்மஸ் தீவு என்று பெயரிட்டார். c இப்படியொரு தீவு இருப்பதைப்பற்றி பல வருடங்களாக பறவைகள் மட்டுமே அறிந்திருந்தன.

ஒருமுறை இந்தத் தீவுக்கு நாங்கள் சென்றிருந்தபோது வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் ஒரு பாதுகாவலர் எங்களுக்கு இடங்களைச் சுற்றிக் காட்டினார். அது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. அந்தப் பாதுகாவலர் எங்களை ஒரு கடற்கரைக்கு அழைத்துச் சென்றபோது துருதுருவென இருந்த வெண்ணிற டெர்ன் பறவைகள் ஒயிலாகப் பறந்து வந்து எங்களை வரவேற்றன. எங்களுக்கு விளையாட்டு காட்டுவதுபோல் கைகளுக்கு எட்டும் தூரத்தில் எங்கள் தலைக்கு மேலே சுற்றிச் சுற்றி பறந்துவந்து எங்களுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்தன.

கடற்கரையைத் தாண்டி உள்ள மைதானத்தில் கருநிற டெர்ன் பறவைகளின் ஒரு வட்டாரமே இருந்தது. இனப்பெருக்கம் செய்வதற்காக கிறிஸ்மஸ் தீவுக்கு வருகிற ஆயிரக்கணக்கான இந்தப் பறவைகள் இரவும் பகலும் கிசுகிசுத்துக்கொண்டே கூட்டம்கூட்டமாக பல வாரங்களுக்கு வானில் வலம்வருகின்றன. மற்ற எல்லாப் பறவைகளும் வந்து சேர்ந்தப் பிறகு அவை வெற்று நிலத்தில் இறங்கி அதையே கூடாக ஆக்கிக்கொள்கின்றன.

கருநிற டெர்ன் பறவைகளின் குஞ்சுகள், பிறந்து கிட்டத்தட்ட மூன்று மாதத்தில் சமுத்திரத்தில் சுற்றித் திரிய ஆரம்பிக்கின்றன. ஐந்து முதல் ஏழு வருடங்கள்வரை, அதாவது, இனப்பெருக்கம் செய்யத் தயாராகும்வரை தரையில் இறங்குவதில்லை. இடைப்பட்ட காலத்தை பெரும்பாலும் அவை ஆகாயத்திலேயே கழிக்கின்றன. அவற்றின் இறகுகளில் போதுமான எண்ணெய் இல்லாததால் அவற்றால் தண்ணீரில் மிதக்க முடிவதில்லை.

கருநிற நாடி பறவைகள் தங்கள் குஞ்சுகளுடனும் குஞ்சு பொரிக்காத முட்டைகளுடனும் கூட்டுக்குள் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தோம். இந்தக் கடல்பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்காக கூடு கட்டுகின்றன. வெண்ணிற டெர்ன் பறவைகளோ கூடு கட்டாமல் மரக் கிளைகளிலேயே நேரடியாக முட்டைகளை இடுகின்றன. அதற்கேற்றபடி அதன் குஞ்சுகளும் முழு வளர்ச்சியடைந்த பாதங்களுடனும், நகங்களுடனும் பிறப்பதால் அவை மரக்கிளைகளைப் பற்றிக்கொள்வதற்கு ஏற்றதுபோல் உறுதியாக இருக்கின்றன. புசுபுசுவென்று இருக்கிற இந்தச் சின்னஞ்சிறிய டெர்ன் குஞ்சுகள் மரக்கிளைகளைப் பற்றிக்கொண்டிருந்த காட்சியை பார்த்த மாத்திரத்தில் எங்கள் மனதைப் பறிகொடுத்தோம். வெண்பனிபோல் இருக்கிற அவற்றின் தாய் தந்தையும் எங்கள் நெஞ்சங்களைக் களவாடின. சின்னஞ்சிறிய வெண்ணிற உடலில் எடுப்பாகத் தெரிகிற அவற்றின் கருநிற அலகின் அழகே அழகு.

இப்படியே பார்த்துக்கொண்டிருந்தபோது கிறிஸ்மஸ் ஷியர்வாட்டர் பறவை அதன் முட்டைமீது உட்கார்ந்திருந்தது எங்கள் கண்களில் பட்டது. பாதுகாப்பான இடத்திலிருந்து எழுந்திருக்க மனமில்லாமல் அங்கிருந்தே அது எங்களை நோட்டமிட்டுக்கொண்டிருந்தது. உலகிலேயே கிறிஸ்மஸ் தீவில்தான் கூம்பு வடிவ வாலை உடைய ஷியர்வாட்டர் பறவைகள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிகிறது. அதோடு, பாலினேசிய ஸ்டார்ம் பெட்ரல் பறவைகளும் போனிக்ஸ் பெட்ரல் பறவைகளும் இனப்பெருக்கம் செய்வதாக இதுவரை அறியப்பட்டிருக்கிற இடங்களில் இந்தத் தீவும் ஒன்று. இங்கு இனப்பெருக்கம் செய்கிற மற்ற அநேகப் பறவைகளில் சில, சிவப்பு வால் டிராபிக் பறவை, மாஸ்க்ட் பூபி பறவை, பழுப்புநிற பூபி பறவை, செந்நிற கால்களுடைய பூபி பறவை, பழுப்புநிற நாடி பறவை, ஃபிரிகேட் பறவை ஆகும்.

ஃபிரிகேட் பறவைகள் சர்வசாதாரணமாக வித்தைகள் காட்டியபடி எங்கள் தலைக்கு மேலே பறந்துகொண்டிருந்தன. ஆகாயத்தில் பறக்கிற பறவைகளின் வாயிலிருந்து மீனைத் திருடுவதிலும், மீனவர்கள் தூக்கியெறிகிற மீன்துண்டுகளைப் போட்டி போட்டுக்கொண்டு பிடிப்பதிலும் அவற்றின் திறமைகளைக் கண்டு அசந்துபோனோம். சாதாரணமாக இந்தப் பறவைகளால் தண்ணீரில் இறங்க முடியாது, எனவே அவற்றுக்கு இந்தத் திறமைகள் ரொம்பவே அவசியம். கருநிற டெர்ன் பறவைகளைப் போலவே இந்தப் பறவைகளின் இறகுகளிலும் போதுமான எண்ணெய் இல்லை. அதுமட்டுமா, இந்தப் பறவைகளின் இறகுகள் ஆறடி நீளம்வரை விரிவதால் தண்ணீரிலிருந்து மேலே எழும்புவதும் சிரமம்தான்.

சற்று முன்பு நாங்கள் பார்த்த பழுப்பு நிற சின்னஞ்சிறிய பறவை பசிபிக் கோல்டன் ப்ளோவர் என தெரிந்துகொண்டோம். கிறிஸ்மஸ் தீவுக்கு இடப் பெயர்ச்சி செய்யும் அநேகப் பறவைகளில் இதுவும் ஒன்று. இந்தப் பறவைகள், பயணத்தில் இழந்த சக்தியை மீண்டும் பெறவும், குளிர்காலத்தைக் கழிக்கவும் இங்கு வருகின்றன. ஆர்க்டிக் வட்டத்தையும் தாண்டி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற இவற்றின் இனப்பெருக்க பிராந்தியத்திலிருந்து நீண்டதூர பயணம் மேற்கொண்டு இத்தீவை வந்தடைகின்றன. இத்தீவு ஹவாயிலுள்ள ஹோனலுலூவிலிருந்து சுமார் 2,100 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே அமைந்துள்ளது. வெகு தூரம் பயணிக்கிற இந்தப் பறவைகள் ஒதுக்குப்புறத்தில் உள்ள இத்தீவுக்கு வந்துசேர அவற்றின் சிறந்த பிரயாணத் திறமைகளே கைகொடுக்கின்றன.

இத்தீவுக்கு நாங்கள் சென்ற முக்கிய காரணம்

அடிக்கடி நாங்கள் கிறிஸ்மஸ் தீவுக்குச் சென்றதன் முக்கிய காரணம் பறவைகளைப் பார்ப்பதற்காக அல்ல, ஆனால் அங்குள்ள சக யெகோவாவின் சாட்சிகளுடன் தங்கி அவர்களுடைய கூட்டங்களில் கலந்துகொண்டு, அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்வதற்காகவே. ஒதுக்குப்புறத்தில் இருப்பது இந்த அருமையான சாட்சிகளுக்கு பல விதங்களில் சவாலாக இருக்கிறது. உதாரணத்திற்கு, பல வருடங்களுக்கு முன்பு ஒரு சாட்சி எதிர்பாராத விதமாய் இறந்துவிட்டபோது துக்கத்தில் மூழ்கியிருந்த அவரது மனைவியே தைரியமாக சவ அடக்க பேச்சைக் கொடுத்தார். ஏனென்றால், பேச்சு கொடுப்பதற்கு வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. சவ அடக்கத்திற்காக அங்கு கூடிவந்திருந்த பலர் இறந்தவர்களைக் குறித்த பைபிளின் நம்பிக்கையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென அந்தச் சகோதரி விரும்பியதால் அவ்வாறு செய்தார்.—யோவான் 11:25; அப்போஸ்தலர் 24:15.

நன்றாக மொழிபெயர்க்கப்பட்ட மூன்று பைபிள்கள் போக அந்த ஊர் மக்களின் தாய் மொழிகளில் பைபிள் அடிப்படையிலான சில பிரசுரங்களே உள்ளன. என்றாலும், யெகோவாவின் சாட்சிகள், நான்கு வண்ண மாதாந்திர காவற்கோபுர இதழையும் மற்ற பைபிள் பிரசுரங்களையும் கில்பெர்ட்டீஸ் மொழியில் பிரசுரிக்கிறார்கள். இது அநேகரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது, ஏனென்றால், 1,00,000-க்கும் குறைவான மக்களே இந்த மொழியைப் பேசுகிறார்கள். ஒதுக்குப்புறத்தில் உள்ள இந்தச் சாட்சிகள், வணக்கத்திற்கான கூட்டங்களை நடத்தவும், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியாக இயேசு கொடுத்த கட்டளையை நிறைவேற்றவும் இந்தப் பிரசுரங்கள் உதவுகின்றன.—மத்தேயு 24:14; எபிரெயர் 10:24, 25.

இத்தீவுக்கு வருகை தருகிற சுற்றுலா பயணிகளுக்குப் போக்குவரத்து ஒரு சவாலாக இருக்கிறது. என்றாலும், கிறிஸ்மஸ் தீவில், டென்னெஸீ வழியாக மூன்றே மணி நேரத்திற்குள் லண்டனிலிருந்து போலந்துக்குத் தரை மார்க்கமாகச் செல்ல முடியும்! லண்டனிலிருந்து போலந்துக்கா? ஆம், பானானா, லண்டன், பாரிஸ், போலந்து, டென்னெஸீ, டாபாகேயா ஆகியவை இங்குள்ள கிராமங்களின் விசித்திரமான பெயர்கள், இந்தத் தீவுக்கு ஆரம்பத்தில் வந்தவர்கள் சிலருடைய ஊர்களின் பெயர்களையே அவை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றன.

ஒருமுறை இத்தீவுக்கு நாங்கள் சென்றிருந்தபோது அன்பான ஒரு மருத்துவர், எங்களை அவருடன் போலந்துக்கு அழைத்துச் சென்றார். அதனால், அங்குள்ள மக்களிடம் முதல் முறையாக நற்செய்தியைப் பிரசங்கிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இரண்டு மணிநேரம் மட்டுமே எங்களுக்கு இருந்ததால், எல்லா வீடுகளுக்கும் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நிஜமாகவே ஓடி ஓடி நற்செய்தியைச் சொன்னோம். நாங்கள் சந்தித்த அனைவருமே பைபிள் செய்தியை சந்தோஷமாய் கேட்டார்கள், பிரசுரங்கள் சிலவற்றையும் பெற்றுக்கொண்டார்கள், அவை தங்களுடைய தாய் மொழியில் இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார்கள்.

தொலைதூரத்தில் இருக்கும் இந்த கிறிஸ்மஸ் தீவில் உள்ள அன்பானவர்களை நாங்கள் நெஞ்சார நேசிக்கிறோம். அதுமட்டுமல்ல, அந்தத் தீவின் பிரமிப்பூட்டும் பறவைகளும் எங்கள் இருதயத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன. வெகு காலத்திற்கு முன்பு கேப்டன் குக், இதை ‘பறவைகளுக்கே உரிய’ ஒரு வெற்று நிலமாக நினைத்திருக்கலாம். ஆனால், இன்றோ அத்தீவு வாசிகள் அதை மறுக்கிறார்கள். அந்தப் பறவைகளைப் போலவே அவர்களும் அத்தீவைத் தங்கள் வீடென கருதுகிறார்கள்.

[அடிக்குறிப்புகள்]

a முன்பு கில்பர்ட் தீவுகள் என அழைக்கப்பட்ட கிரிபடி தீவு தேசம், இப்போது கில்பர்ட் தீவுகளின் 16 தீவுகள் போக போனிக்ஸ், லைன் ஆகிய தீவுக்கூட்டங்களையும் பானாபா தீவையும் உள்ளடக்குகிறது.

b இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து யெகோவாவின் சாட்சிகள், அவருடைய நினைவு நாளை வருடத்திற்கு ஒருமுறை அவர் இறந்த தேதிக்கு இணையான தேதியில் ஆசரிப்பார்கள்.—லூக்கா 22:19.

c கிறிஸ்மஸ் என்ற பெயரை உடைய தீவு இந்தியப் பெருங்கடலிலும் உள்ளது.

[பக்கம் 16-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கிறிஸ்மஸ் தீவு

பானானா

டாபாகேயா

லண்டன்

பாரிஸ்

போலந்து

சர்வதேச தேதிக் கோடு

[பக்கம் 16-ன் படம்]

ஃபிரிகேட் பறவைகள்

[படத்திற்கான நன்றி]

GaryKramer.net

[பக்கம் 17-ன் படம்]

வெண்ணிற டெர்ன்

[படத்திற்கான நன்றி]

©Doug Perrine/ SeaPics.com

[பக்கம் 17-ன் படம்]

பழுப்புநிற பூபி பறவைகள்

[படத்திற்கான நன்றி]

Valerie & Ron Taylor/ ardea.com

[பக்கம் 18-ன் படம்]

உள்ளூர் சாட்சிகளுடன் ஊழியம் செய்தபோது

[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]

GaryKramer.net