Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நல்ல அறிவுரையை நாடுங்கள்

நல்ல அறிவுரையை நாடுங்கள்

வழி 1

நல்ல அறிவுரையை நாடுங்கள்

இது ஏன் முக்கியம்? புத்தம் புது மலர்போல் பிறந்த தங்கள் முதல் குழந்தையை அந்தத் தம்பதியர் முதன்முதலாகக் கைகளில் அள்ளுகிறார்கள்; திடீரென இனம்புரியாத உணர்ச்சிகளின் சங்கமத்தில் திக்குமுக்காடிப் போகிறார்கள். பிரிட்டனில் வசிக்கிற பிரெட் என்ற தகப்பன் இவ்வாறு சொல்கிறார்: “எனக்குச் சந்தோஷத்தின் உச்சியைத் தொட்டதுபோல் இருந்தது; பார்க்க பார்க்க எனக்கு ஒரே ஆச்சரியம். அதே சமயத்தில் பொறுப்பெனும் பெரிய சுமை என்மீது விழுந்ததைப் போலவும் ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதைப் போலவும் உணர்ந்தேன்.” அர்ஜென்டினாவில் வசிக்கிற மோனீகா என்ற தாய் இவ்வாறு சொல்கிறார்: “என் செல்ல மகளுக்கு என்னென்ன வேண்டுமோ எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்ய என்னால் முடியுமா எனக் கவலைப்பட்டேன். ‘அவளைப் பொறுப்புள்ளவளாக என்னால் வளர்க்க முடியுமா?’ என யோசித்தேன்.”

இந்தத் தகப்பன், தாய் இருவருடைய மனதிலும் பொங்கிய சந்தோஷத்தையும் தலைதூக்கிய கவலையையும் உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? பிள்ளையை வளர்க்க யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம்; இது, கஷ்டமான வேலையாக இருந்தாலும் திருப்தி அளிக்கிறது, மலைக்க வைப்பதாக இருந்தாலும் மனநிறைவு அளிக்கிறது. ஒரு தகப்பன் இவ்வாறு சொன்னார்: “பிள்ளைப் பருவம் போனால் வராது; எனவே, பெற்றோர் அவர்களைக் கண்ணும் கருத்துமாய் வளர்க்க வேண்டும்.” பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் சந்தோஷத்திற்கும் பெற்றோராக நீங்கள் பெருமளவு பங்களிக்க முடியும்; எனவே, நல்ல பெற்றோராய் இருக்க உதவும் நம்பகமான ஆலோசனைகள் கண்டிப்பாகத் தேவையென நீங்கள் நினைக்கலாம்.

இது ஏன் சவால்மிக்கது? பிள்ளைகளை வளர்ப்பதைப்பற்றி தங்களுக்குத் தெரியுமென பொதுவாகவே எல்லாரும் நினைக்கிறார்கள். முன்பெல்லாம், தங்களுடைய முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர், தங்களுடைய அப்பா அம்மாவைப் பார்த்து பிள்ளையை வளர்த்தார்கள் அல்லது தங்களுடைய மத நம்பிக்கைகளுக்கு இசைய வளர்க்கத் தீர்மானித்தார்கள். ஆனால் பல நாடுகளில், குடும்பம் என்ற கூடு கலைந்து, சிதைந்துவிட்டிருக்கிறது, மதத்தின் பிடியும் தளர்ந்துவிட்டிருக்கிறது. இதனால், பிள்ளை வளர்ப்புப்பற்றி ஆலோசனை வழங்கும் நிபுணர்களிடம் பெற்றோர் செல்கிறார்கள். இவர்கள் தருகிற சில ஆலோசனைகள் நல்ல நியதிகளின் அடிப்படையில் உள்ளன; ஆனால், பெரும்பாலான ஆலோசனைகள், முன்னுக்குப் பின் முரணாக இருப்பதோடு சீக்கிரத்திலேயே நடைமுறைக்கு ஒத்துவராததாகவும் ஆகிவிடலாம்.

உங்களுக்கு எது உதவும்? பிள்ளை வளர்ப்புச் சம்பந்தமாக நீங்கள் யாருடைய அறிவுரையை நாட வேண்டும்? இதுபற்றி அத்துப்படியாக அறிந்திருக்கிறவரும் மனிதரைப் படைத்தவருமான யெகோவா தேவனின் ஆலோசனையை நீங்கள் நாட வேண்டும். (அப்போஸ்தலர் 17:26-28) அவருடைய வார்த்தையான பைபிளில் நேரடியான ஆலோசனைகளும் நடைமுறைக்கு உதவுகிற உதாரணங்களும் காணப்படுகின்றன; நல்ல பெற்றோராக இருப்பதற்கு அவை உங்களுக்கு உதவ முடியும். “உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்று அவர் வாக்குறுதி அளிக்கிறார்.—சங்கீதம் 32:8.

பிள்ளைகள் சந்தோஷமாய் வளருவதற்கு உதவும் என்ன ஆலோசனையைப் பெற்றோருக்கு கடவுள் கொடுக்கிறார்?

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் [அதாவது, யெகோவாவில்] நம்பிக்கையாயிரு.”—நீதிமொழிகள் 3:5