நான் நேசிக்கும் இசை, உயிர், பைபிள்
நான் நேசிக்கும் இசை, உயிர், பைபிள்
பாரிஸ் என். குலாஷவ்ஸ்கி சொன்னபடி
இருமுறை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சுமார் 65 வயது மதிக்கத்தக்க கண் தெரியாத ஒருவரைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். தம்மைப்பற்றி தெரிந்துகொள்ளும் பாக்கியத்தை கடவுள் தனக்குக் கொடுத்ததற்காக கண்ணீருடன் அவருக்கு நன்றி சொல்கிறார். 11 வருடங்களுக்கு முன் இதுவே என்னுடைய நிலைமை.
சிர்காஸி மாவட்டத்தைச் சேர்ந்த ஸிபூலியெவ் என்ற உக்ரேனிய கிராமத்தில் 1930-ம் வருடம் நான் பிறந்தேன். 1937-ல், ஸ்டாலினின் அடக்குமுறை நடவடிக்கைகளின்போது ஒருமுறை அப்பா கைது செய்யப்பட்டு “தேச விரோதி” எனக் குற்றஞ்சாட்டப்பட்டார். எங்கள் வீடும் பறிமுதல் செய்யப்பட்டது; பழக்கமானவர்கள் பலரும் எங்களை ஒதுக்கிவிட்டார்கள். சீக்கிரத்தில் அவர்களில் அநேகரும் கைது செய்யப்பட்டார்கள். எங்கு பார்த்தாலும் நம்பிக்கையின்மையும், துரோகமும், பயமும் கவ்வியிருந்த காலம் அது.
அப்பா கைதாகி இரண்டே மாதங்களில் என் தங்கை லியேனா பிறந்தாள். அம்மாவும் லியேனாவும் என் அண்ணன் நியிக்கலையும் நானும் ஜன்னல்களோ, கணப்பூட்டுவதற்கு அடுப்போ இல்லாத சிறிய அறையில் குளிர்காலத்தைக் கழித்தோம். அதற்குப் பின், தாத்தாவின் வீட்டுக்குக் குடி மாறினோம். நியிக்கலையும் நானும் வீட்டைக் கவனித்துக்கொண்டோம், விறகு வெட்டினோம், பழுதுபார்க்கும் வேலைகளையும் செய்தோம். கைவேலைகளில் ஈடுபடுவதென்றால் எனக்குப் பிடிக்கும். ஷூக்களைச் செய்தேன், தச்சு வேலையிலும் ஈடுபட்டேன். இசையார்வமும் எனக்கு உண்டு; ஆகவே ஒட்டுப்பலகையை வைத்து பலாலைக்கா என்ற நரம்பிசை கருவியை நானே செய்து அதை இசைக்கவும் கற்றுக்கொண்டேன். பின்னர் கிட்டாரையும் மான்டலின்னையும் இசைக்க கற்றேன்.
நான் ஏற்கெனவே கத்தோலிக்க சர்ச்சில் ஞானஸ்நானம் பெற்றிருந்தேன். ஆனால், சர்ச்சின் போதனைகளும் பழக்கங்களும் புரிந்துகொள்ள முடியாதவையாய் இருந்தபடியால், நாத்திக கருத்துகள் எனக்கு நியாயமாகப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின், காம்ஸாமால் என்ற கம்யூனிஸ இளைஞர் அமைப்பில் சேர்ந்துகொண்டேன். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம், நானும் அதன் மற்ற அங்கத்தினர்களும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களிடம் வாதாடி கடவுள் இல்லை என நிரூபிக்க முயன்றோம்.
கண்பார்வையை இழந்தபோது
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் 1941-ல் சோவியத் யூனியனை ஜெர்மனி தாக்கியபின் போர் படையினர் பல முறை எங்கள் கிராமத்தின் வழியாக அணிவகுத்துச் சென்றனர். 1944, மார்ச் 16 அன்று, ஒரு குண்டு வெடிப்பில் நான் காயமுற்று என் கண் பார்வையை இழந்தேன். மனதளவிலும் உடல் ரீதியிலும் வேதனையில் தவித்து நம்பிக்கையிழந்த நிலைக்குள்ளானேன்.
போர் மேற்கு திசையில் தீவிரமடைந்தபோது, ஜெர்மானியர்கள் பின்வாங்க நேரிட்டது. அந்தக் காலகட்டத்தில், நான் தோட்டத்தில் உலாவச் சென்று, பறவைகளின் சங்கீதத்தைக் கேட்கத் தொடங்கினேன். என் நிலைமையைக் குறித்து வருத்தப்பட்ட என் அம்மா வோட்காவை குடிக்கக் கொடுத்தார்; உள்ளூர்வாசிகள் தங்களுடைய பார்ட்டிகளில் இசைக் கருவிகளை வாசிப்பதற்காக என்னை அழைத்தார்கள். நான் புகைபிடித்தேன், மதுபானத்தில் என் வேதனையை மறக்க முயன்றேன். இப்படிச் செய்வதால் எவ்வித தீர்வும் கிடைக்காது என்பதை விரைவில் புரிந்துகொண்டேன்.
பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் என் சித்தி, பார்வையற்றோருக்கான பள்ளியைப்பற்றி தகவலறிந்து ஒரு பள்ளியில் என்னைச் சேர்ப்பதற்கு அம்மாவை ஒத்துக்கொள்ளச் செய்தார். 1946-ல், காம்யானெட்ஸ்-பாடில்ஸ்கியி என்று தற்போது அழைக்கப்படும் இடத்தில் ஒரு பள்ளியில் சேர்ந்து ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். பிரெயிலில் வாசிக்கவும் டைப் செய்யவும் கற்றுக்கொண்டேன். இசைக் கல்வி பெறுவதையும் நான் விட்டுவிடவில்லை, கான்ஸார்டினா என்ற கருவியைப் பயில மணிக்கணக்கில் நேரம் செலவிட்டேன். என்னுடைய முயற்சிகளைக் கவனித்த துணை முதல்வர், தன்னுடைய அக்கார்டியனை வாசிப்பதற்கும் என்னை அனுமதித்தார். அதோடு, பியானோ இசைப்பதற்கும் கற்றுக்கொண்டேன்.
எனக்கென்று ஓர் இல்லம்
1948-ல், பள்ளியிலுள்ள ஓர் ஆசிரியையை மணம் முடித்தேன். இவர் எனக்கு படிப்பில் உதவியவர். இவரது கணவர், இளம் மகள்கள் இருவரை மனைவியுடன் விட்டுவிட்டு போர் காலத்தில் உயிரிழந்தார். பார்வையற்றோர் பள்ளியில் படிப்பை முடித்தபின் அவருடைய வீட்டுக்குக் குடிமாறினேன். நல்ல கணவனாகவும் தகப்பனாகவும் இருப்பதற்கு என்னாலான அனைத்தையும் செய்தேன். பிழைப்புக்காக இசை கைகொடுத்தது. பின்னர், 1952-ல் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
எங்கள் குடும்பத்திற்கென்று ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ஏற்பாடுகளைச் செய்தேன். அஸ்திவாரத்தையும் வெளிச் சுவர்களையும் கட்டுவதற்கு வேலையாட்களை பணியில் அமர்த்தினேன், ஆனால் அநேக காரியங்களை சொந்தமாகச் செய்தேன். தொடுதல் உணர்வும் கற்பனைத் திறனும், இழந்துபோன என் பார்வைக்கு ஈடுகொடுத்தன. ஒரு மரத்துண்டை கையில் எடுத்து அதைத் தொட்டுப் பார்த்து அது எப்படி இருக்கும் என்பதைக் கற்பனைச் செய்தேன். பின்னர், அதை வைத்து மரக் கருவிகள் உட்பட மரச் சாமான்களையும் உண்டாக்கினேன். ஸ்டீல் கருவிகளை தொழிற்சாலையிலிருந்து தருவித்தேன். செங்கல் அடுப்பையும், தட்டுமுட்டு சாமான்களையும் செய்தேன், மற்ற வேலைகளையும் செய்து முடித்தேன்.
குழல் இசைக்குழு
கூடுதலாக இசைப் பயிற்சி பெற்று, தேர்ந்த இசைக் கலைஞன் ஆனேன். பல இசைக் கருவிகளை வாசிப்பதில் வல்லவனான பின், குழலை இசைக்கவும் கற்றுக்கொண்டேன். மூங்கிலால் செய்யப்பட்ட சிறியதொரு குழலை ஒருமுறை பழுது பார்த்தேன். பின்னர், நானே சொந்தமாக குழல்களைச் செய்ய கற்றுக்கொண்டேன். தாழ்ந்த குரலுக்கேற்ற தொனிகளை குழல்கள் மூலம் வர வைக்க முடியுமென அந்தச் சமயத்தில் நிபுணர்கள் நினைக்கவில்லை. அதனால்தான் குழல் இசைக் குழுக்களே இருக்கவில்லை.
என்றபோதிலும், அதிர்வொலியைப் பெருக்குவதற்கான ஏற்பாட்டுடன் ஒரு குழலை நான் உருவாக்கினேன். இதனால், தாழ்ந்த குரலுக்கேற்ற தொனிகளை உடைய குழல்களைக்கூட ஓசை குறையாமல் பயன்படுத்த முடிந்தது.
காலப்போக்கில், வெவ்வேறு தொனிகளைக் கொடுக்கும் பல்வேறுபட்ட குழல்களை நான் செய்தேன். அவற்றைப் பலவிதமாகக் கலந்து ஒருங்கே வாசிக்கும்போது வித்தியாசமான இசையை உருவாக்க முடிந்தது.பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகளை உடைய இசைக் குழுக்களை நான் முன்பு ஒழுங்கமைத்திருக்கிறேன். என்னுடைய இசைக் குழுக்கள் ஒன்றில் பார்வையற்ற இசைக் கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். பின்னர், 1960-ல் குழல்களை வைத்து மாத்திரமே இசையமைத்த ஓர் இசைக் குழுவை ஒழுங்கமைத்தேன். சோவியத் யூனியனிலேயே இப்படி ஒரேவொரு குழுதான் இருக்கிறது; உலகளவில்கூட இப்படிப்பட்ட குழு இது மட்டுமாகவே இருக்கலாம்.
கண்டுபிடிப்புகளும் சந்தேகங்களும்
1960-ல் சில இசைக் கருவிகளைப் பழுது பார்ப்பதற்காக கைதேர்ந்த ஒருவரிடம் சென்றிருந்தேன். அவர் என்னிடம் மதத்தைப்பற்றி பேசத் தொடங்கினார். வழக்கம்போல், கடவுள் இல்லை என நான் அவரோடு வாதாடினேன். அவர் பைபிளிலிருந்து வாசிக்க வாசிக்க நான் அவற்றைக் கேட்கும்படி சொன்னார். நானும் பைபிளை ஒருபோதும் வாசித்ததில்லை என்பதால், அதை அவர் வாசிக்க கேட்கலாம் என்று தீர்மானித்தேன்.
தன் குடும்பத்தைப் பராமரிப்பதற்காக யாக்கோபு கடுமையாக உழைத்ததைப் பற்றிய பதிவு என்னை ஆழமாகத் தொட்டது. யோசேப்பின் சகோதரர்கள் அவரை அடிமைத்தனத்திற்கு விற்றதையும் அவர் பட்ட கஷ்டங்களையும், பின்னர் தன்னுடைய சகோதரர்களை அவர் மன்னித்ததையும் வாசிக்கக் கேட்டபோது அழுதுவிட்டேன். (ஆதியாகமம், 37, 39-45 அதிகாரங்கள்) நாம் எப்படி நடத்தப்பட வேண்டுமென விரும்புகிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்த வேண்டும் என்ற பொன் விதியும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. (மத்தேயு 7:12) இப்படியாக நான் பைபிளிடம் பரிச்சயமாகி அதை நேசிக்க ஆரம்பித்தேன்.
அந்த நண்பருடன் சேர்ந்து பாப்டிஸ்ட் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன்; பிரெயிலில் ‘புதிய ஏற்பாட்டை’ அன்பளிப்பாகப் பெற்றேன், அதைக் கவனமாக வாசிக்கத் தொடங்கினேன். என்றாலும், அதில் சொல்லப்பட்டிருந்தவற்றிற்கும் பாப்டிஸ்ட் போதனைகளுக்கும் வித்தியாசங்கள் இருந்ததைக் கவனித்தேன். உதாரணமாக, கடவுளும் இயேசுவும் வெவ்வேறு இரு நபர்கள் என்றும் இயேசுவைவிட கடவுள் பெரியவர் என்றும் பைபிள் காண்பிக்கிறது. (மத்தேயு 3:16, 17; யோவான் 14:28; அப்போஸ்தலர் 2:32) இருந்தாலும், கடவுளும் இயேசுவும் சரிசமமானவர்கள், திரித்துவத்தின் பாகமாக இருக்கிறார்கள் என்பதாக பாப்டிஸ்ட்டுகள் வலியுறுத்துகிறார்கள். என்னுடைய ‘புதிய ஏற்பாட்டை’ நான் பல முறை வாசித்தேன்; அதுவும் ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லர்த்தமாகவே தொட்டு தொட்டு படித்தேன், எனவே அந்தப் போதனை, பைபிளில் இல்லை என்பதை நிச்சயமாகவே அறிந்திருந்தேன்.
நாங்கள் வைத்திருந்த பைபிள் மொழிபெயர்ப்பில் “நரகம்” என்ற வார்த்தை இருந்தது. பாப்டிஸ்ட்டுகள் கற்பித்தபடி நரகம் என்னவென்பதை கற்பனை செய்து பார்த்தேன். அது நித்திய வாதனைக்குரிய அக்கினி மயமான இடம் என கற்பிக்கப்பட்டது. இது எனக்கு பயங்கரமான ஒன்றாகத் தோன்றியது! கடவுள் அன்பாக இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. அப்படியிருக்க, அதுபோன்ற ஓர் இடத்தை அவர் உண்டாக்கி இருப்பார் என்று என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. (1 யோவான் 4:8) காலம் செல்லச் செல்ல, நரகத்தையும் இன்னும் அநேக பாப்டிஸ்ட் போதனைகளையும் பற்றிய என் சந்தேகங்கள் அதிகரித்து வந்தன.
பெரிய மாற்றங்கள்
1968-ற்குள் என் மனைவியின் மகள்களுக்குத் திருமணமாகி, பிள்ளைகளும் இருந்தார்கள். அந்தச் சமயத்தில் என் மனைவிக்கும் எனக்கும் பலமான கருத்து வேறுபாடுகள் எழத் தொடங்கின. கடந்துச் சென்ற அந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில், நாங்கள் ஒருவருக்கொருவர் போதுமான அன்பையும் பொறுமையையும் காண்பிக்காததற்காக வருந்துகிறேன். நாங்கள் விவாகரத்து செய்துகொண்டோம். அதற்குப் பின் இருமுறை மணம் முடித்தேன். அவையும் விவாகரத்தில் போய் முடிந்தன.
35 வருடங்களாக காம்யானெட்ஸ்-பாடில்ஸ்கியில் இருந்த நான் 1981-ல் மாஸ்கோவிற்கு சுமார் 600 கிலோமீட்டர் கிழக்கே இருந்த யாஷ்கார் ஆலா நகருக்கு குடிமாறினேன். அங்கு என்னுடைய படைப்பாற்றல் மிக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தேன். என்னுடைய இசைக் குழு ஒன்றில் 45 பேர் இருந்தார்கள். அவர்கள் வெவ்வேறு குழல்களை இசைப்பதில் வல்லவர்கள். உச்ச தொனியை உடைய ஒரு சென்டிமீட்டர் விட்டமுள்ள 20 சென்டிமீட்டர் நீள குழலிலிருந்து, 20 சென்டிமீட்டர் விட்டமுள்ள மூன்று மீட்டருக்கும் அதிக நீளமுடைய மிகப் பெரியதும் தாழ்ந்த குரலில் ஒலிப்பதுமான குழல் வரையாக அனைத்து வகை குழல்களும் பயன்படுத்தப்பட்டன. எங்களுடைய இசையரங்கு நிகழ்ச்சிகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாகப் பரப்பப்பட்டன. நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
1986-ல், சோவியத் யூனியனெங்குமுள்ள பல இசைக் குழுக்கள் கலந்துகொண்ட போட்டியில் குழல் இசைக்கும் கலையை வளர்த்ததற்காக ஒரு சான்றிதழையும் பதக்கத்தையும் பெற்றேன். பல வருடங்கள் கழித்து, உண்மை நிகழ்ச்சிகளை வைத்து ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டது. ஸோலோ ஃபார் பைப், அல்லது த ஃபேரி டேல் ஆஃப் ஏ ம்யூஸிஷன் என்பதே அதன் தலைப்பு. “இந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பாரிஸ் நிக்கலாயிவிச் குலாஷவ்ஸ்கி, ரஷ்யாவிலேயே தனித்து விளங்கும் குழலிசைக் குழுவை தோற்றுவித்ததற்காக விசேஷ சான்றிதழைப் பெற்றவர்” என்பதாக மாரீஸ்காயா ப்ராவ்டா செய்தித்தாள் அறிக்கை செய்தது.
சத்தியத்தைத் தேடி
யாஷ்கார் ஆலா நகருக்கு மாறிச் சென்றபோது, அங்குள்ள நூலகத்தைப் பயன்படுத்துவதற்காக நான் பதிவு
செய்துகொண்டேன். கண் தெரியாதவர்களுக்காக அங்கு ஏகப்பட்ட தகவல்கள் இருந்தன. கத்தோலிக்கர், புராட்டஸ்டன்டினர், மெதடிஸ்ட்டுகள் ஆகியோரின் போதனைகளை நான் தெரிந்துகொண்டேன். ஆர்த்தடாக்ஸ் சர்ச் கூட்டங்களுக்கும் போய் வந்தேன். பாப்டிஸ்ட் சர்ச்சில் நான் கேட்ட அதே விஷயங்கள் இங்கும் போதிக்கப்படுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். அந்தப் போதனைகள் பைபிள் சார்ந்தவை அல்ல என்பதை நான் ஏற்கெனவே அறிந்திருந்தேன்.ஆலியிக்ஸான்டர் மேன் என்ற ஆர்த்தடாக்ஸ் குரு ஒருவர் கடவுளுக்கு யாவே என ஒரு தனிப்பட்ட பெயர் இருப்பதாக எழுதியிருந்தார். ஒரு காலத்தில் யூதர்கள் மெய் வணக்கத்தை கடைப்பிடித்ததாகவும் பின்னர் அது புறமத போதனைகளாலும் விக்கிரக வணக்கத்தாலும் கறைப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். அவர் எழுதியிருந்த விஷயங்கள் என்னை ஆழமாகத் தொட்டன, சத்தியத்தைத் தேட வேண்டும் என்ற என் ஆவலை வலுப்படுத்தின.
அதிக உத்வேகம்
என்னுடைய இசைக் குழுக்கள் ஒன்றில் லீஸா என்றொரு இசைக் கலைஞர் இருந்தார். அவர் சட்டப்படி குருடராக கருதப்படும் அளவுக்கு அவருடைய பார்வை மிகவும் குன்றியிருந்தது. 1990-ல் நாங்கள் மணம் முடித்தோம். லீஸாவும் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். பெலாரூஸிலுள்ள பாரானாவிச்சி என்ற இடத்தில் தங்கை லியேனாவுடன் இருந்த என் அம்மாவைப் பார்ப்பதற்காக அந்த வருடத்திலேயே சென்றேன். அம்மாவின் விருப்பத்திற்கு இணங்கி, கத்தோலிக்க சர்ச்சுக்குச் சென்று நன்மை எடுத்தேன். சோவியத் யூனியனில் பெரஸ்ட்ராய்க்கா எனப்பட்ட சீர்திருத்த காலம் அது. அப்போதைய அரசியல் மாற்றங்களைப் பற்றியே அந்த மதகுரு பிரசங்கத்தில் பெரும்பாலும் பேசினார். நான் தேடியது இதுவல்ல என்பது மீண்டும் எனக்கு ஊர்ஜிதமானது.
1994-ல், மாரடைப்பால் இருமுறை பாதிக்கப்பட்டேன்; என் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதே வருடத்தில் அம்மா இறந்துபோனார். இவை அனைத்தின் மத்தியிலும், தொடர்ந்து பைபிள் வாசித்துக்கொண்டே இருந்தேன். ஏற்கெனவே ‘புதிய ஏற்பாட்டை’ 25 முறை வாசித்திருந்தேன். அதற்குப் பிறகும் எத்தனை முறை வாசித்தேன் என்பதற்கு கணக்கே இல்லை. ஆனால் நான் எந்தளவுக்கு வாசித்தேனோ அந்தளவுக்கு கேள்விகளும் எழுந்தன. சொந்தமாக பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடியாது என்பது எனக்குத் தெளிவாயிற்று.
புரிந்துகொள்ளுதலின் ஒளி
1996-ல் யாஷ்கார் ஆலாவில் இருந்தபோது யெகோவாவின் சாட்சிகள் எங்கள் கதவைத் தட்டினர். அவர்கள் ஆபத்தான மத உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் என செய்தித்தாள்கள் கூறியதால் நான் சந்தேகத்துடன்தான் அவர்களை எதிர்ப்பட்டேன். ஆனாலும் ‘அவர்கள் என்ன செய்துவிடப்போகிறார்கள்?’ என நினைத்து சமாளித்துக்கொண்டேன். திரித்துவத்தைப்பற்றி என்ன நினைத்தார்கள் என்று முதலாவது அவர்களிடம் கேட்டேன். அந்த வார்த்தையோ அந்தக் கருத்தோ பைபிளில் இல்லவே இல்லை என்று அவர்கள் பதிலளித்தார்கள். நானும் அதே முடிவுக்கு வந்திருந்ததால் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டேன்.
ரஷ்ய ஸினாடின் பைபிள் மொழிபெயர்ப்பிலிருந்து யாத்திராகமம் 6:3-ஐ வாசித்து அதில் யெகோவாவின் பெயரைப் பார்த்தபோது நான் திகைத்துப் போனேன். இந்தப் பெயரை மக்களிடமிருந்து மறைத்து ஏமாற்றி வரும் மதங்களின் போக்கு அதிர்ச்சியூட்டுவதாகவே இருந்தது. அதே சமயம், யெகோவாவின் சாட்சிகளோ படைப்பாளரின் பெயரைத் தாங்கியிருப்பதோடு மற்றவர்களுக்கும் அதைச் சொல்லி வருவது என்னில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது!—ஏசாயா 43:10.
சாட்சிகளிடம் கேள்விமேல் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். உதாரணமாக: “பைபிள் ஏன் நரகத்தைப்பற்றிச் சொல்லுகிறது? ரஷ்ய ஸினாடின் பைபிள் மொழிபெயர்ப்பில் பூமி எரிக்கப்படுவதாக ஏன் சொல்லப்பட்டிருக்கிறது?” எத்தனையோ கேள்விகளைக் கேட்டேன். ஆனால் பைபிளிலிருந்து அவற்றிற்குப் பதில் கிடைத்ததும், நான் வருடக்கணக்கில் தேடிக்கொண்டிருந்த மதத்தைக் கண்டுகொண்டதாக உணர்ந்தேன். முழங்கால்படியிட்டு, ஆனந்தக் கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
சீக்கிரத்தில் சாட்சிகள் என்னை அவர்களுடைய கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். பேச்சாளர் பேசுகையில், கூடி வந்திருந்தோர் கவனமாகச் செவிசாய்த்ததும் பக்கங்களைப் புரட்டியதும் என்னை அதிசயிக்க வைத்தன. பேச்சாளர் ஒரு வசனத்தைச் சொன்னதும் அனைவரும் அவரவர் பைபிளில் எடுத்துப் பார்த்தார்கள். இதுபோன்ற அனுபவம் எனக்கு இருந்ததே இல்லை. அன்றைய கூட்டத்தில் ஏசாயா 35:5-ன் அடிப்படையிலுள்ள பாட்டு பாடப்பட்டது. “குருடர் பார்வை அடைவர்” என்பதாக அது தொடங்கியது.
வாரத்திற்கு நான்குமுறைகூட சாட்சிகளுடன் சேர்ந்து பைபிள் படித்தது சந்தோஷமாக இருந்தது. கடவுள் ஏன் கஷ்டங்களையும் போர்களையும் அனுமதிக்கிறார், அப்படிப்பட்ட துன்பங்களின் விளைவுகளை அவர் எப்படி கையாளப் போகிறார் போன்ற காரியங்களை விரைவில் கற்றுக்கொண்டேன். தம்முடைய ராஜ்யத்தைப்பற்றி அவர் கொடுத்திருக்கும் அன்பான வாக்குறுதி என்னை மிகவும் ஆதியாகமம் 1:28; ஏசாயா 65:17-25; வெளிப்படுத்துதல் 21:1-5) பைபிள் சத்தியங்கள் மேன்மேலும் தெளிவாயின; கடவுளுக்கு என்னை ஒப்புக்கொடுத்திருப்பதன் அடையாளமாக நவம்பர் 16, 1997-ல் முழுக்காட்டுதல் பெற்றேன்.
கவர்ந்தது; கீழ்ப்படிகிற மனிதருக்கு பரதீஸான பூமியில் நித்திய ஜீவனைத் தரப்போகும் அவருடைய சித்தம் அந்த ராஜ்யத்தின்மூலம் நிறைவேறும் (கடவுளுடைய சேவையில் ஒன்றுபட்டிருத்தல்
என்னுடைய முழுக்காட்டுதலுக்குப் பிறகு, லீஸாவும் பைபிள் படிக்க ஆரம்பித்தாள். பக்கவாதத்தால் அவதியுற்ற போதிலும், ஆன்மீக ரீதியில் விரைவாக முன்னேறி 1998-ல் முழுக்காட்டுதல் பெற்றாள். முழுக்காட்டுதல் பெறுவதற்கு அவளைத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் முழு ஆத்துமாவுடன் கடவுளைச் சேவிக்க அவள் தீர்மானமாக இருந்தாள். அவளுக்கு மஸாஜ் சிகிச்சை செய்ய ஒருவரை ஏற்பாடு செய்திருந்தோம். அவளும் உடற்பயிற்சிகளைச் செய்து வந்தாள். காலப்போக்கில் பக்கவாதம் குணமானது. இப்போது அவள் எல்லா கூட்டங்களுக்கும் செல்வதோடு வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் ஈடுபடுகிறாள்; தூரமான பிராந்தியங்களுக்கும் சென்று பிரசங்கிக்கிறாள்.
நான் பிரசங்கிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் தைரியத்திற்காக ஜெபம் செய்வேன். ஜெபித்தப் பிறகு, கைத்தடியின் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறி டிராலிபஸ் நிறுத்துமிடத்தை நோக்கி எனக்குப் பழக்கமான வழியில் நடந்துச் செல்வேன். யாராவது நடந்து வரும் சத்தம் கேட்டால் பைபிளைப்பற்றிப் பேசத் தொடங்குவேன். டிராலிபஸ்ஸில் ஏறியதும், நடுவில் எங்காவது உட்கார்ந்துகொண்டு, மக்களிடம் பைபிளைப்பற்றி பேசி, பிரசுரங்களையும் கொடுப்பேன். யாராவது ஆர்வம் காண்பித்தால், ஃபோன் நம்பர்களைப் பரிமாறிக்கொள்வோம்.
சில காலத்திற்கு முன், உடல்நல பராமரிப்பு மையம் ஒன்றில் இசை ஆசிரியர் ஒருவரிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. பைபிளில் அடங்கியிருக்கும் ஞானத்தைப்பற்றிக் கேள்விப்பட்டதும் அவர் வியப்படைந்தார். அவர் வீடு திரும்பியபோது, யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்கத் தொடங்கினார். அதே மையத்தில், உள்ளூர் தொழிற்சாலை ஒன்றின் இயக்குநரைச் சந்தித்தேன். அவருடைய மகன் கண் தெரியாதவர். என்னுடைய நம்பிக்கையைப்பற்றி சொன்னதும் அவரும் ஆர்வமடைந்து, கேட்ட பைபிள் சத்தியங்களுக்காக நன்றியுள்ளவராய் இருந்தார்.
நான் முழுக்காட்டுதல் பெற்றதிலிருந்து இதுவரை, ராஜ்ய அறிவிப்பாளர்களாவதற்கு எட்டு பேருக்கு உதவி செய்திருக்கிறேன்; இன்னும் பலருடன் பைபிளைப் படித்திருக்கிறேன். நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மூலமாக என் மனைவிக்கும் எனக்கும் யெகோவா தொடர்ந்து அதிக ஆதரவை அளித்து வருகிறார். அவர்கள் எங்களுக்கு வாசித்துக் காண்பிக்கிறார்கள், நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களையும் கலந்தாலோசிக்கிறோம். மாநாட்டிலும் சபையிலும் கொடுக்கப்படும் பேச்சுகளை எங்களுக்காக பதிவு செய்தும் தருகிறார்கள். இவை அனைத்துமே பைபிள் சத்தியங்களை எங்கள் இருதயத்தில் ஆழ பதிய வைத்து மற்றவர்களுக்கு அவற்றைச் சொல்லவும் உதவியாக இருந்திருக்கின்றன. இவ்வாறு சபையானது எங்களுக்குப் “பக்கபலமாக” ஆகிவிட்டது.—கொலோசெயர் 4:11, NW.
அநேக வருடங்களை இசைக்காக அர்ப்பணித்தேன், இப்போதோ நான் மகிழ்ச்சி பொங்க ராஜ்ய பாடல்களைப் பாடுகிறேன். யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற பாட்டுப் புத்தகத்தின் ரஷ்ய பிரதியிலுள்ள எல்லா பாடல்களையும் மனப்பாடம் செய்துவிட்டேன். யெகோவா என்னை இந்தப் பொல்லாத உலகிலிருந்து கண்டெடுத்து ஆன்மீக இருளிலிருந்து வெளியே வர உதவி செய்திருக்கிறார் என நம்புகிறேன். அதன் காரணமாக, இந்தச் சொல்லர்த்தமான இருளிலிருந்தும் என்னை ஒருநாள் விடுவிப்பார் என்று நிச்சயமாகவே நம்புகிறேன்.
[பக்கம் 19-ன் படம்]
C-மேஜர் பாஸ் குழலை இசைத்தல்
[பக்கம் 20-ன் படம்]
அக்கார்டியன் வாசித்தல், 1960
[பக்கம் 20, 21-ன் படம்]
குழல் இசைக் குழு
[பக்கம் 23-ன் படம்]
லீஸாவுடன் இன்று