Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நித்திய நகரில்’ ஓர் இசைக் குயில்

‘நித்திய நகரில்’ ஓர் இசைக் குயில்

‘நித்திய நகரில்’ ஓர் இசைக் குயில்

இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ரோமிலுள்ள எண்ணிலடங்கா நீர் ஊற்றுகளின் அழகிலும் ஓசையிலும் மயங்கிப்போன இத்தாலிய இசை அமைப்பாளரான, ஆட்டரீனா ரஸ்பிகி, “ரோமின் நீர் ஊற்றுகள்” என்ற தலைப்பில் ஓர் இசையமைத்தார். அவற்றில் ட்ரேவி நீர் ஊற்றே மிகவும் பிரமிக்கத்தக்கது. இந்த நீர் ஊற்றுக்குச் சுற்றுலா செல்லலாம் வாருங்கள்.

ட்ரேவி நீர் ஊற்றுக்குக் கொண்டுசெல்லும் குறுகலான தெரு வழியாக நடந்துசென்று ஒரு முனையில் திரும்பினோம். ஆஹா! அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மெய்மறந்து நின்றோம். 20 மீட்டர் அகலத்திலும் 26 மீட்டர் உயரத்திலும் உள்ள ஒரு பிரமாண்டமான நீர் ஊற்று ஒரு சிறிய சதுக்கத்தையே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அதுதான் ட்ரேவி நீருற்று. நெருக்கமான அந்த இடத்தில் என்னே ஒரு பிரமிப்பூட்டும் கட்டமைப்பு!

இந்த ட்ரேவி நீர் ஊற்று, போப் பன்னிரண்டாவது க்ளெமென்டின் கட்டளையின் பேரில் கட்டப்பட்டது. இத்தாலிய கட்டடக் கலைஞரான நிகோலா ஸால்வியால் வடிவமைக்கப்பட்டது. இதன் கட்டட வேலை 1732-ல் தொடங்கி 1762-ல் முடிவடைந்தது. பொ.ச.மு. முதல் நூற்றாண்டில் கட்டப்பட்ட அக்வா விர்கோ என்ற கால்வாய் இந்த நீர் ஊற்றுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறது. நகரத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கால்வாய் இருக்கிறது.

அரண்மனையின் முகப்புக்கு எதிராக கட்டப்பட்டிருக்கும் இந்த நீர் ஊற்று, கடல் போன்று காட்சியளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. புராணக்கதைகளில் வருகிற ஓசியானஸ் (அல்லது, சிலர் சொல்வது போல் நெப்ட்யூன்) சங்கு வடிவ ரதத்தில் கம்பீரமாக அமர்ந்து தன் காலடியில் அருவியாகக் கொட்டுகிற வெள்ளத்தை கட்டுப்படுத்துவதுபோல் ஒரு சிலை உள்ளது. மற்ற உருவ சிற்பங்களைச் சுற்றியும் தண்ணீர் பீறிட்டு பாய்ந்து, பிறகு கீழேயுள்ள பாறைகள்மீது துள்ளிக்குதிக்கையில் கரைமீது அலைகள் மோதுவதுபோல் ஒலிக்கிறது. திறந்த சதுக்கத்தின் பெரும்பாலான பாகத்தை ஆட்கொண்டிருக்கிற இந்த நீர்நிலை அந்த முழு சதுக்கமும் தனக்கே சொந்தம் என்பதுபோல் காட்சியளிக்கிறது.

தினந்தோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இந்தச் சின்னஞ்சிறிய சதுக்கத்தில் வந்து குவிகிறார்கள். அதிகமதிகமானச் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிற ரோமின் இந்த நீர் ஊற்றில் அவர்கள் காசை அள்ளி வீசுகிறார்கள். வாரத்திற்கு ஒரு முறை இந்த நீர் ஊற்று காலிசெய்யப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் வாரி இறைத்தவற்றில் வாரந்தோறும் கிடைக்கிற சுமார் 11,000 அமெரிக்க டாலர் பணம் பிறகு மதச் சார்பான ஒரு தர்ம ஸ்தாபனத்திற்கு தானமாகக் கொடுக்கப்படுகிறது.

ரஸ்பிகி நினைத்தபடி, ரோமின் எல்லா நீர் ஊற்றுகளும் எழுப்புகிற ஓசை இசைக்குழுவின் இன்னிசையாக ஒலிக்கிறதென்றால் ட்ரேவி நீர் ஊற்றின் ஓசையோ குயிலோசையாக தனித்துக் கேட்கிறது. ‘நித்திய நகர்’ எனப்படுகிற ரோமுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரசித்து மகிழ்கிற பல நீர் ஊற்றுகளில் இது விசேஷமானது.