Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முன்மாதிரியால் கற்பியுங்கள்

முன்மாதிரியால் கற்பியுங்கள்

வழி 7

முன்மாதிரியால் கற்பியுங்கள்

இது ஏன் முக்கியம்? செயல்கள் மௌன மொழியில் கற்பிக்கின்றன. பொதுவாக வார்த்தைகள் தகவலை மட்டுமே தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு, மரியாதை காட்டும்படியும், உண்மையைப் பேசும்படியும் பிள்ளைகளிடம் அப்பா அம்மா சொல்லலாம். ஆனால், இவர்களே ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறவர்களாக இருந்தாலோ பிள்ளைகளைப் பார்த்து கூச்சலும் கூப்பாடும் போடுகிறவர்களாக இருந்தாலோ, தங்களுக்கு வசதிப்படாத பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதற்குப் பொய் சொல்கிறவர்களாக இருந்தாலோ பிள்ளைகளுக்கு என்ன கற்பிக்கிறார்கள் தெரியுமா? பெரியவர்கள் என்றால் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென கற்பிக்கிறார்கள். பெற்றோரைக் காப்பியடிப்பது “பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்குரிய மிக முக்கியமான வழிகளில் ஒன்று” என எழுத்தாளரும் டாக்டருமான சால் சவீர் சொல்கிறார்.

இது ஏன் சவால்மிக்கது? பெற்றோர் தவறுசெய்கிறவர்கள்தான். “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” இருக்கிறோமென அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோமர் 3:23) நம் பேச்சைக் கட்டுப்படுத்துவதைக் குறித்து சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது.” (யாக்கோபு 3:8) அதோடு, பெற்றோரின் பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு பிள்ளைகள் நடந்துகொள்வது ஒன்றும் புதிதல்ல. “என்னை எவ்வளவு சீக்கிரத்தில் என் பிள்ளைகள் கோபப்பட வைத்துவிட்டார்கள் என்பதைப் பார்த்து நானே அசந்துவிட்டேன்” என்கிறார் இரண்டு மகள்களை உடைய லாரீ; பொதுவாகவே இவர் சாந்தமானவர், சட்டென கோபப்படாதவர்.

எது உங்களுக்கு உதவும்? சிறந்த முன்மாதிரி வைக்க முயற்சி செய்யுங்கள், பரிபூரணமாய் அல்ல. நீங்கள் அவ்வப்போது செய்கிற தவறுகளிலிருந்து பிள்ளைகள் படிப்பினையைக் கற்றுக்கொள்ளச் செய்யுங்கள். “என் பிள்ளைகளிடம் நான் கோபப்பட்டாலோ அவர்களைப் பாதிக்கும் விதத்தில் மோசமான தீர்மானத்தை எடுத்துவிட்டாலோ என் தவறை ஒப்புக்கொண்டு, அவர்களிடம் மன்னிப்புக் கேட்பேன். இது, பெற்றோரும் தவறுகள் செய்கிறவர்கள் என்பதையும் நடத்தையில் நாம் எல்லாருமே முன்னேற்றம் செய்யப் பாடுபடுவது அவசியம் என்பதையும் என் பிள்ளைகள் கற்றுக்கொள்ள உதவியது” என்கிறார் இரண்டு மகள்களை உடைய கிறிஸ். முன்னொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்ட காஸ்டாஸ் இவ்வாறு சொல்கிறார்: “நான் கோபப்படும்போது என் மகள்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்; அதனால், தவறுகள் செய்யும்போது அவர்களும் மன்னிப்புக் கேட்கக் கற்றுக்கொண்டிருப்பது தெரிகிறது.”

யெகோவா தேவன் இவ்வாறு சொல்கிறார்: “உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) பொறுப்பான ஸ்தானத்திலிருக்கிற ஒருவர், சொல்வது ஒன்றாக செய்வது ஒன்றாக இருந்தால், பெரியவர்களைப் போலவே அது பிள்ளைகளையும் கோபப்பட வைக்கிறது; சில சமயங்களில் பெரியவர்களைவிட அதிகமாகவே அவர்களைக் கோபப்பட வைக்கிறது. எனவே, ஒவ்வொரு நாளும் படுக்கப் போவதற்கு முன், பின்வரும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாமே: நாள் முழுவதும் வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூட சொல்லாதிருந்தால் என்னுடைய செயல்களைப் பார்த்து என் பிள்ளைகள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டிருப்பார்கள்? ஒருவேளை வாயைத் திறந்து சொல்லியிருந்தால், இந்தப் பாடங்களைத்தான் நான் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்திருப்பேனா?

[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]

“மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா?”—ரோமர் 2:21

[பக்கம் 9-ன் படங்கள்]

பெற்றோர் மன்னிப்புக் கேட்கிறபோது பிள்ளையும் அதையே செய்ய கற்றுக்கொள்கிறான்