Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஸ்பானிய அர்மடா கப்பற்படையின் சோகப் பயணம்

ஸ்பானிய அர்மடா கப்பற்படையின் சோகப் பயணம்

ஸ்பானிய அர்மடா கப்பற்படையின் சோகப் பயணம்

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

சுமார் நானூறு வருடங்களுக்கு முன்பு, குறுகலான இங்கிலீஷ் கால்வாயில் இரண்டு கப்பற்படைகள் மோதிக்கொண்டன. அந்த யுத்தம், புராட்டஸ்டன்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே நடந்தது; அதோடு, புராட்டஸ்டன்டு மதத்தைச் சேர்ந்த இங்கிலாந்தின் ராணியான முதலாம் எலிசபெத்துக்கும் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டின் அரசரான இரண்டாம் பிலிப்புக்கும் இடையே 16-ஆம் நூற்றாண்டில் நடந்த போராட்டத்தின் பாகமாகவும் இது இருந்தது. “அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களைப் பொறுத்தவரை, ஆங்கிலேய கப்பற்படைக்கும் ஸ்பானிய கப்பற்படைக்கும் இந்தக் கால்வாயில் நடந்த யுத்தமானது ஒளியின் படைகளுக்கும் இருளின் படைகளுக்குமிடைய நடந்த, வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கும் இறுதிக்கட்ட யுத்தமாகவே இருந்தது” என்று ஸ்பானிய அர்மடாவின் தோல்வி என்ற ஆங்கில புத்தகம் விளக்குகிறது.

“கடல்களின் பரந்தவெளியில் நாங்கள் ஒருபோதும் பார்த்திராத மாபெரும் கப்பற்படை அது.” இப்படித்தான் அன்று வாழ்ந்த இங்கிலாந்து நாட்டவர்கள் மாபெரும் கப்பற்படையான ஸ்பானிய அர்மடாவை விவரித்தார்கள். ஆனால், இந்த அர்மடாவில் பயணித்த பல்லாயிரக்கணக்கானோருக்கோ இது சோகத்தில் முடிந்த பயணமாய் இருந்தது; ஏனெனில் அவர்கள் மரணத்தைத் தழுவினார்கள். எதற்காக அர்மடா அனுப்பப்பட்டது? அது ஏன் தோல்வியைத் தழுவியது?

போர் தொடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

ஆங்கிலேய கடற்கொள்ளையர்கள் ஸ்பானிய கப்பல்களை வருடக்கணக்கில் சூறையாடி வந்தார்கள். அதுமட்டுமல்ல, ஸ்பானிய ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்த டச்சுக்காரர்களை இங்கிலாந்தின் எலிசபெத் ராணி தீவிரமாய் ஆதரித்தும் வந்தார். அதோடு, கத்தோலிக்கரான இரண்டாம் பிலிப்பு, திருச்சபைக்கு “முரணாக” பலம் பெற்று வரும் புராட்டஸ்டன்டினரின் பிடியிலிருந்து இங்கிலாந்தின் கத்தோலிக்கர்களை விடுவிப்பது தன்னுடைய கடமை என்று நினைத்தார். அதனால், சுமார் 180 பாதிரிகளையும் மத ஆலோசகர்களையும் அர்மடாவில் அனுப்பி வைத்தார். அர்மடாவிலிருந்த மாலுமிகள் அனைவரும் ஒன்றாகக் கூடிவந்த சமயத்திலும்கூட, ஒவ்வொருவரும் ஒரு பாதிரியிடம் தன் பாவத்தை அறிக்கை செய்து, நன்மை வாங்க வேண்டியிருந்தது.

“எங்கள் கர்த்தராகிய ஆண்டவருடைய கொள்கைகளுக்காக போராடுகிறவர்களாகவும் மிகப் புனிதமான விசுவாசத்தை ஆதரிப்பவர்களாகவும் நாங்கள் இருப்பதால் அவர் எங்கள் முன்னே செல்வார்; இத்தகைய தலைவர் இருப்பதால் எங்களுக்குப் பயமேதும் இல்லை” என்று ஸ்பானிய கத்தோலிக்க சங்கத்தில் உயர் பதவி வகித்த பேத்ரோ டெ ரீபாதெனேரா கூறினார். அவர் இவ்வாறு கூறியது, ஸ்பெயின் நாட்டு மக்களிடமும், அரசரிடமும் நிலவிய மதப் பற்றைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியது. மாறாக ஆங்கிலேயர்களோ தங்களுடைய இறுதி வெற்றி, புராட்டஸ்டன்டு கருத்துகளை ஐரோப்பா முழுவதும் விரைவில் பரப்ப வழிசெய்யும் என்று நம்பினார்கள்.

நேரடியாக மோதுவதே ஸ்பானிய அரசருடைய படையெடுப்புத் திட்டமாய் இருந்ததாகத் தெரிந்தது. இங்கிலீஷ் கால்வாயில் நுழைந்து, ஃபிளான்டர்ஸில் a இருந்த பார்மா நகரின் மன்னரையும் அனுபவம் வாய்ந்த 30,000 வீரர்களையும் கூட்டிக்கொண்டு புறப்பட அவர் அர்மடாவுக்குக் கட்டளையிட்டார். பிறகு, இந்தக் கூட்டுப்படைகள் இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து, எஸெக்ஸ் கடற்கரையில் கால்பதிக்கும்; அங்கிருந்து, லண்டனை நோக்கி அணிவகுத்துச் செல்லும். இங்கிலாந்திலிருந்த பெரும்பாலான கத்தோலிக்கர்கள் தங்களுடைய புராட்டஸ்டன்டு ராணியை உதறித்தள்ளிவிட்டு தன் படையில் சேர்ந்துகொண்டு அதைப் பலப்படுத்துவார்கள் என பிலிப்பு மனக்கோட்டை கட்டியிருந்தார்.

என்றாலும், பிலிப்புவின் திட்டத்தில் முக்கியமான குறைபாடுகள் இருந்தன. கடவுளுடைய ஆதரவும் வழிநடத்துதலும் கிடைக்கும் என்று அவர் நம்பினாலும், இரண்டு முக்கிய தடைகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்; அதாவது, ஆங்கிலேய கப்பற்படையின் பலத்தையும், பார்மா மன்னரின் படைகள் வரும்வரை தன் படைகள் காத்திருப்பதற்கு ஆழமான துறைமுகம் இல்லாததையும் கவனிக்கத் தவறிவிட்டார்.

படையோ மிகப் பெரியது, சமாளிப்பதோ கடினம்

அர்மடாவை நடத்திச் செல்ல மேதீனா-சீடோன்யாவின் மன்னரை பிலிப்பு நியமித்தார். இந்த மன்னர் கப்பற்படையைப் பொறுத்ததில் போதிய அனுபவமில்லாதவராக இருந்தபோதிலும் திறமையான ஒருங்கிணைப்பாளராக இருந்ததால் அனுபவம் வாய்ந்த படைத் தளபதிகளின் ஒத்துழைப்பை விரைவிலேயே பெற்றுவிட்டார். அவர்கள் அனைவரும் சேர்ந்து, போர் படையை உருவாக்குவதற்கும் மிகப் பெரிய படைக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றைக் கொடுப்பதற்கும் தங்களாலான சிறந்த ஏற்பாட்டுகளைச் செய்தார்கள். பல நாட்டவர்களைக் கொண்ட படையை ஒருங்கிணைப்பதற்கு அடையாளக் குறியீடுகளையும், கப்பற்பயண விதிமுறைகளையும் வியூகங்களையும் அவர்கள் மிகக் கவனமாக வகுத்தார்கள்.

ஒருவழியாக, 130 கப்பல்களையும் கிட்டத்தட்ட 20,000 வீரர்களையும் 8,000 மாலுமிகளையும் உள்ளடக்கிய அர்மடா கப்பற்படை, 1588, மே மாதம் 29-ஆம் தேதி லிஸ்பன் துறைமுகத்திலிருந்து தன் பயணத்தைத் துவங்கியது. ஆனால், வீசிய எதிர் காற்றாலும் கடும் புயலாலும் வடமேற்கு ஸ்பெயினில் உள்ள லா கொருனாவில் அவர்களுடைய பயணத்தை நிறுத்த வேண்டியிருந்தது; அங்கே, அவர்கள் சேதமடைந்த கப்பல்களைப் பழுதுபார்த்தார்கள், உணவுப் பொருள்களையும் தண்ணீரையும் கூடுதலாக நிரப்பிக்கொண்டார்கள். போதுமானளவு உணவும் தண்ணீரும் இல்லாததையும், தன்னுடைய வீரர்களில் அநேகர் வியாதிப்பட்டதையும் கவனித்த மேதீனா-சீடோன்யாவின் மன்னர், அந்த முழு திட்டத்தைப் பற்றிய தன்னுடைய கவலையை வெளிப்படையாகவே தெரிவித்து அரசருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால், திட்டமிட்ட விதமாக எல்லாவற்றையும் செய்யும்படி தனது தளபதியை பிலிப்பு வற்புறுத்தினார். அதனால், சமாளிக்க முடியாத அந்தப் பெரும்படை தன் பயணத்தைத் தொடர்ந்தது; கடைசியாக, லிஸ்பனை விட்டுப் புறப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இங்கிலீஷ் கால்வாயை அடைந்தது.

இங்கிலீஷ் கால்வாயில் யுத்தங்கள்

ஸ்பானிய துருப்புகள் இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள பிளைமெளத் கடற்கரையை அடைந்தபோது ஆங்கிலேய படை அங்கே காத்திருந்தது. இரு படைகளின் தரப்பிலும் சம எண்ணிக்கையில் கப்பல்கள் இருந்தன; ஆனால், அவை கட்டமைப்பில் வித்தியாசப்பட்டன. ஸ்பானிய கப்பல்கள் தண்ணீருக்குமேல் உயரமாக நின்றன; அதோடு, அருகே உள்ளவற்றைத் தவிடுபொடியாக்கும் அநேக பீரங்கிகள் அவற்றின் தளங்களில் இருந்தன. இந்தப் பீரங்கிகளை வைப்பதற்கு, கப்பல்களின் முன் புறமும் பின் புறமும் பெரிய சுழல் மேடைகள் இருந்ததால் பார்ப்பதற்கு அவை மிதக்கும் கோட்டைகள் போல் தென்பட்டன. ஸ்பானிய கப்பற்படையின் போர் வியூகத்தின்படி, வீரர்கள் எதிரி கப்பல்களுக்கு அருகில் சென்று அவற்றுள் குதித்து எதிரிகளைத் தாக்குவார்கள். ஆங்கிலேய கப்பல்களோ உயரம் குறைந்ததாகவும் வேகமாய் செல்வதாகவும் இருந்தன; அதோடு, அவற்றில் தொலைதூர பீரங்கிகள் இருந்தன. அவற்றின் தளபதிகள், எதிரிகளின் அருகே செல்லாமல் தூரத்திலிருந்தே ஸ்பானிய கப்பல்களைத் துவேசம் செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.

ஆங்கிலேய படையின் வேகத்தையும் அதனுடைய தொலைதூர பீரங்கித் தாக்குதலையும் சமாளிப்பதற்காக ஸ்பானிய தளபதி அரைவட்ட வடிவில், அதாவது பிறைவடிவில் தற்காப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கினார். தொலைதூர பீரங்கிகள் பொறுத்தப்பட்ட, உறுதியான கப்பல்கள் அந்த அமைப்பின் ஒவ்வொரு முனையையும் பாதுகாக்கும். எதிரிகள் எந்தத் திசையிலிருந்து தாக்கினாலும் அர்மடா தன்னுடைய திசையை மாற்றிக்கொண்டு எதிரிகளைத் தாக்குவதற்குத் தயாராய் இருந்தது; இது, ஓர் ஆப்பிரிக்க எருமை, சிங்கத்தை எதிர்ப்படும்போது தன்னுடைய கொம்புகளால் தாக்குவதுபோல இருந்தது.

இரண்டு படைகளும் இங்கிலீஷ் கால்வாயில் இருந்த காலம் முழுவதும் சிறுசிறு சண்டைகளும் இரண்டு சிறு யுத்தங்களும் நடந்தன. ஸ்பானிய தற்காப்பு அமைப்பு பலன் தந்தது. ஆங்கிலேயரின் தொலைதூர பீரங்கிகள் ஸ்பானிய கப்பல்களை மூழ்கடிக்க முடியாமல் தோல்வி கண்டன. அந்தத் தற்காப்பு அமைப்பின் வியூகத்தை எப்படியாவது உடைத்து தங்களுடைய பீரங்கித் தாக்குதலின் எல்லைக்குள் அந்தப் படையைக் கொண்டுவர ஆங்கிலேய தளபதிகள் முடிவு செய்தார்கள். அதற்கான வாய்ப்பு ஆகஸ்ட் 7-ல் கிடைத்தது.

மேதீனா-சீடோன்யாவின் மன்னர் தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்கு முழுமையாய்க் கீழ்ப்படிந்தார்; பார்மாவின் மன்னரையும் அவருடைய துருப்புகளையும் சந்திப்பதற்கு அர்மடாவுடன் போனார். பார்மாவின் மன்னரிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கையில், பிரான்சின் கடலோரத்தில் அமைந்துள்ள காலிஸ் துறைமுகத்திற்கு முன்பாக நங்கூரம் பாய்ச்சும்படி மேதீனா-சீடோன்யாவின் மன்னர் படைகளுக்குக் கட்டளையிட்டார். எளிதில் தாக்கப்படுவதற்கே ஸ்பானிய கப்பல்கள் அங்கு நங்கூரமிட்டன போலும்! அப்போது, எதிரி கப்பல்களைத் தீக்கிரையாக்கும் விதத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் நிரம்பிய, எரிகிற எட்டுக் கப்பல்களை ஆங்கிலேய படை அனுப்பியது. வரும் ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக, ஸ்பானிய தளபதிகளில் அநேகர் கப்பல்களோடு தலைதெறிக்க ஓடிப் போனார்கள். அடுத்தது, சீற்றத்துடன் வீசிய காற்றும் நீரோட்டமும் ஸ்பானிய கப்பல்களை வடக்குப் புறமாகத் தள்ளின.

மறுநாள் அதிகாலையில், கடைசி யுத்தம் நடந்தது. ஆங்கிலேய படைகள் ஸ்பானிய கப்பல்களை அருகே சென்று தாக்கி, கிட்டத்தட்ட மூன்று கப்பல்களை அழித்தன, பல கப்பல்களைச் சேதப்படுத்தின. ஸ்பானியர்களிடம் போதுமான வெடிமருந்துகள் இல்லாததால் மூர்க்கத்தனமான அந்தத் தாக்குதலை உதவியின்றி சமாளிக்க வேண்டியிருந்தது.

கடும் புயல் காரணமாக, ஆங்கிலேய படைகள் மறுநாள் தாக்குதலை நடத்த தீர்மானித்தன. அடுத்த நாள் காலையில், அந்த அரைவட்ட தற்காப்பு அமைப்பு திரும்பவும் ஏற்படுத்தப்பட்டது, மீதமிருந்த கொஞ்ச வெடிமருந்துகளுடன் அர்மடா எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கத் தயாரானது. ஆங்கிலேய படைகள் தாக்குதலைத் துவங்குவதற்கு முன்பே ஸ்பானிய கப்பல்கள் கரை ஒதுங்க ஆரம்பித்தன; இடைவிடாமல் வீசிய கடும் காற்றும் நீரோட்டமும் அந்தக் கப்பல்களை டச்சு கடலோரத்திலிருந்த ஸீலாந்து கடற்கரை மணலுக்கு அடித்துச் சென்று சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடுமோ என்று தோன்றியது.

கிட்டத்தட்ட அனைவரும் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தபோது திடீரென காற்று தன்னுடைய திசையை மாற்றிக்கொண்டது; அர்மடாவைக் காப்பாற்றுவதுபோல வடக்குப் பக்கமாகத் தள்ளி நடுக்கடலை அடையச் செய்தது. ஆனால், காலிஸுக்குத் திரும்புகிற வழியை ஆங்கிலேய படைகள் அடைத்துக்கொண்டன, காற்று இன்னமும் ஸ்பானிய கப்பல்களை வடக்கு முகமாகத் தள்ளிக்கொண்டிருந்தது. இங்கிலாந்தின் மீது போர் தொடுப்பதை விட்டுவிடுவதற்கும் கப்பல்களையும் மனிதர்களையும் எந்தளவு காப்பாற்ற முடியுமோ அந்தளவு காப்பாற்றுவதற்கும் மேதீனா-சீடோன்யாவின் மன்னர் முடிவு செய்தார். ஸ்காட்லாந்தையும் அயர்லாந்தையும் சுற்றிக்கொண்டு ஸ்பெயினுக்குத் திரும்பிவிட அவர் தீர்மானித்தார்.

புயல்களும் கப்பற்சேதங்களும்

அர்மடாவின் உருக்குலைந்த கப்பல்களுக்குத் தாயகம் திரும்புவது கடினமாயிருந்தது. போதுமான உணவு இல்லாதிருந்தது, கொள்கலன்கள் ஒழுகியதால் தண்ணீரைச் சேமித்து வைக்க முடியாதிருந்தது. ஆங்கிலேய படைத் தாக்குதலால் அநேக கப்பல்கள் படுமோசமாய் சேதமடைந்திருந்தன, சொற்ப கப்பல்களே கடற்பயணத்திற்கு ஏற்றவையாய் இருந்தன. அடுத்து, அயர்லாந்தின் வடமேற்கு கடலோரத்திற்கு அருகே, இரண்டு வாரங்களுக்கு நீடித்த கடும் புயல்களை அர்மடா எதிர்கொண்டது. சில கப்பல்கள் தடயமே இல்லாமல் காணாமல் போனது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! மற்றவை அயர்லாந்து கடலோரத்தில் சிக்கிச் சிதைந்து போயின.

இறுதியாக, செப்டம்பர் 23-ல் அர்மடாவின் முதல் கப்பல் தட்டுத்தடுமாறி வடக்கு ஸ்பெயினில் உள்ள சன்டான்டர் துறைமுகத்தை வந்தடைந்தது. லிஸ்பனிலிருந்து புறப்பட்டவர்களில் பாதிப்பேரும் சுமார் 60 கப்பல்களுமே வீடு திரும்பின. ஆயிரக்கணக்கானோர் ஜல சமாதியானார்கள். மற்ற அநேகர் காயங்களினாலோ தாயகம் திரும்பும்போது ஏற்பட்ட நோயினாலோ மாண்டுபோனார்கள். தப்பிப்பிழைத்து ஸ்பானிய கடலோரத்தை அடைந்தவர்களுக்கும்கூட அக்கினிப் பிரவேசம் போன்ற துன்பங்கள் தொடர்ந்தன.

அவர்கள், ஸ்பானிய துறைமுகத்தில் இருந்தபோதிலும், “ஏராளமானோருக்கு [கப்பல் அதிகாரிகளுக்கும், மாலுமிகளுக்கும்] உணவே கிடைக்காததால், பசியால் மரணமடைந்தார்கள்” என்று ஸ்பானிய அர்மடாவின் தோல்வி என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. “கப்பலின் பாய்மரத்தை இறக்குவதற்கும் நங்கூரம் பாய்ச்சுவதற்கும்கூட போதுமான ஆட்கள் இல்லாததால்” ஸ்பானிய துறைமுகமான லரேடோவில் ஒரு கப்பல் தரைதட்டி நொறுங்கிப்போனது என்று அந்தப் புத்தகம் கூறுகிறது.

தோல்வியின் முக்கியத்துவம்

மதப் போர்கள் சதா நடந்து கொண்டிருந்தாலும்கூட அர்மடாவின் தோல்வி வட ஐரோப்பாவிலுள்ள புராட்டஸ்டன்டுகளின் மனதில் மெல்ல மெல்ல நம்பிக்கை துளிர்க்கும்படி செய்தது. தங்களுக்குக் கடவுளுடைய ஆதரவு இருப்பதற்கு இந்த வெற்றியே நிரூபணம் என அந்த புராட்டஸ்டன்டுகள் நம்பினார்கள்; இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆங்கிலேயர்கள் வெளியிட்ட ஒரு பதக்கம் இதற்கு அத்தாட்சி அளிக்கிறது. அதில் பின்வரும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது: ஃப்லேவீட் יהוה எட் டிஸீபாடீ சன்ட் 1588, அதாவது, “யெகோவா ஊதினார், அவர்கள் சிதறிப்போனார்கள், 1588.”

நாளடைவில், கிரேட் பிரிட்டன் உலக வல்லரசானது, 1870 முதல் நவீன ஐரோப்பா வரை என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்லுகிறது: “வர்த்தகத்திலும் குடியேற்ற ஆதிக்கத்திலும் உலகின் முக்கிய வல்லரசாக 1763-ல் கிரேட் பிரிட்டன் உருவானது.” சொல்லப்போனால், “புதுப்பிக்கப்பட்ட, விரிவுபடுத்தப்பட்ட ரோமப் பேரரசைப் போல பிரிட்டிஷ் பேரரசு 1763-ல் இந்த உலகத்தின்மீது ஆதிக்கம் செலுத்தியது” என கப்பற்படையும் பேரரசும் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. பிற்பாடு, தன்னுடைய முன்னாள் குடியேற்ற நாடான அமெரிக்க ஐக்கிய மாகாணங்களோடு கிரேட் பிரிட்டன் இணைந்து ஆங்கிலோ-அமெரிக்கா என்ற உலக வல்லரசாக உருவெடுத்தது.

பைபிளைப் படிப்பவர்களுக்கு உலக வல்லரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் கருத்தைக் கவருவதாய் உள்ளது. ஏனென்றால், உலகச் சாலையில் வெற்றி உலா வந்த உலக அரசாங்கங்களைப்பற்றி பரிசுத்த வேதாகமம் விரிவான தகவல்களைத் தருகிறது. அந்த உலக வல்லரசுகளின் பெயர்கள் பின்வருமாறு: எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம், கடைசியாக ஆங்கிலோ-அமெரிக்கா. இன்னும் சொல்லப்போனால், இவற்றுள் பல வல்லரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும்பற்றி வெகு காலத்திற்கு முன்பே பைபிள் முன்னுரைத்தது.—தானியேல் 8:3-8, 20-22; வெளிப்படுத்துதல் 17:1-6, 9-11.

கடந்த காலத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கையில், 1588-ன் கோடை காலத்தில், கைப்பற்றுவதற்காக ஸ்பானிய அர்மடா எடுத்த முயற்சிகள் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்க விதத்தில் தெளிவாகத் தெரிகிறது. அர்மடாவின் தோல்விக்கு சுமார் 200 வருடங்களுக்குப்பின் கிரேட் பிரிட்டன் உலகின் முதன்மையான நாடு என்ற நிலைக்கு உயர்ந்தது, கடைசியில் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் முக்கியப் பங்கை வகித்தது.

[அடிக்குறிப்பு]

a 16-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட ஸ்பானிஷ் நெதர்லாந்தின் ஒரு பகுதியாக இது இருந்தது. வடக்கு பிரான்சு, பெல்ஜியம், ஹாலந்து ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளை இது உள்ளடக்குகிறது.

[பக்கம் 26, 27-ன் படம்/தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஸ்பானிய அர்மடாவின் கடற்பயணம்

​——​ யுத்தத்திற்குச் சென்ற வழி

–– திரும்பிய வழி

X யுத்தங்கள்

ஸ்பெயின்

லிஸ்பன்

லா கொருனா

சன்டான்டர்

ஃபிளான்டர்ஸ்

காலிஸ்

ஸ்பானிஷ் நெதர்லாந்து

ஐக்கிய நெதர்லாந்து

இங்கிலாந்து

பிளைமெளத்

லண்டன்

அயர்லாந்து

[பக்கம் 24-ன் படம்]

இரண்டாம் பிலிப்பு அரசர்

[படத்திற்கான நன்றி]

Biblioteca Nacional, Madrid

[பக்கம் 24-ன் படம்]

முதலாம் எலிசபெத் ராணி

[பக்கம் 24, 25-ன் படம்]

மேதீனா-சீடோன்யாவின் மன்னர் ஸ்பானிய அர்மடாவின் படைத்தலைவராக இருந்தார்

[படத்திற்கான நன்றி]

Cortesía de Fundación Casa de Medina Sidonia

[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]

Museo Naval, Madrid