Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இருவேறு கலாச்சாரங்களுக்கிடையே நான் என்ன செய்வேன்?

இருவேறு கலாச்சாரங்களுக்கிடையே நான் என்ன செய்வேன்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

இருவேறு கலாச்சாரங்களுக்கிடையே நான் என்ன செய்வேன்?

“என் குடும்பத்தினர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள், கனிவையும் பாசத்தையும் வெளிப்படையாகக் காட்டுவார்கள். நாங்கள் இப்போது பிரிட்டனில் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள மக்கள் முறையாக நடந்துகொள்கிறவர்களாகவும் அமைதியானவர்களாகவும் தோன்றுகிறார்கள். இந்த இரு கலாச்சாரங்களிலுமே நான் ஒத்துப்போவதுபோல் எனக்குத் தெரியவில்லை. என்னால் ஓர் ஆங்கிலேயனாகவும் இருக்க முடியவில்லை இத்தாலியனாகவும் இருக்க முடியவில்லை.”—ஷோஸ்வி, இங்கிலாந்து.

“பள்ளியில், என் ஆசிரியர் என்னிடம் பேசும்போது அவரைப் பார்க்கும்படி சொல்வார். ஆனால், என் அப்பா பேசும்போது அவருடைய கண்களை நான் பார்த்தால் மரியாதை தெரியாதவனாக நடந்துகொள்கிறேன் என்பார். இரு வேறு கலாச்சாரங்களுக்கிடையே மாட்டிக்கொண்டதாக உணர்ந்தேன்.”—பாட்ரிக், பிரான்சில் குடியேறிய அல்ஜீரியா நாட்டவர்.

உங்களுடைய அப்பாவோ அம்மாவோ வேறு நாட்டில் குடிபுகுந்தவரா?

◻ ஆம் ◻ இல்லை

உங்கள் பள்ளியிலும் வீட்டிலும் பேசப்படும் மொழிகளோ பின்பற்றப்படும் கலாச்சாரங்களோ வேறுபடுகின்றனவா?

◻ ஆம் ◻ இல்லை

ஒ வ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து செல்கிறார்கள். அவர்களில் அநேகர் பெரும் சவால்களைச் சந்திக்கிறார்கள். திடீரென்று அவர்களைச் சுற்றியுள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், உடை ஆகிய அனைத்துமே வித்தியாசமாய் இருக்கின்றன. எனவே, வேறு இடங்களுக்கு மாறி வருகிறவர்கள் கேலிக்கிண்டலுக்கு ஆளாகிறார்கள். இதை நூர் என்ற பெண் தன் அனுபவத்தில் கண்டாள். இவள் தன் குடும்பத்தோடு ஜோர்டானிலிருந்து வட அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவள். “எங்கள் உடைகள் வித்தியாசமாக இருந்ததால் மற்றவர்கள் எங்களைக் கேலி செய்தார்கள். அமெரிக்கர்களின் விளையாட்டான பேச்சுகளை எங்களால் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியவில்லை” என்று அவள் சொல்கிறாள்.

நாட்யா என்ற ஓர் இளம் பெண்ணோ வேறு விதமான ஒரு சவாலை எதிர்ப்பட்டாள். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “நான் ஜெர்மனியில் பிறந்தேன். என்னுடைய பெற்றோரோ இத்தாலியைச் சேர்ந்தவர்கள். அதனால் நான் பேசிய ஜெர்மன் மொழி சற்று வித்தியாசமாக இருந்தது. எனவே, என்னுடன் பள்ளியில் படித்தவர்கள் என்னை ‘மதிகெட்ட வெளிநாட்டுக்காரி’ என்று அழைத்தார்கள். ஆனால், நான் இத்தாலிக்குச் சென்று இத்தாலிய மொழியில் பேசியபோது அதில் ஜெர்மன் வாடை வீசியது. எனவே, நான் இரண்டு நாட்டையும் சேராதவளாக உணருகிறேன். நான் எங்குச் சென்றாலும் வெளிநாட்டுக்காரியாகவே இருக்கிறேன்.”

இடம் மாறிச் சென்றிருக்கும் பெற்றோரின் பிள்ளைகள் வேறென்ன சவால்களை எதிர்ப்படுகிறார்கள்? தங்களுடைய சவால்களையும் சூழ்நிலைகளையும் அவர்கள் எவ்வாறு சாதகமாக்கிக்கொள்ளலாம்?

கலாச்சார பிளவுகளும் மொழி தடைகளும்

வேறு இடங்களுக்கு குடிமாறிச் சென்றிருக்கும் பெற்றோரின் இளம் பிள்ளைகள், தங்களுடைய வீட்டிலும்கூட கலாச்சார பிளவு உண்டாகி வருவதைக் காணக்கூடும். அது எப்படி? பெற்றோரைவிட பிள்ளைகளே புதிய கலாச்சாரத்திற்கு வேகமாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆனா தன்னுடைய குடும்பத்தோடு இங்கிலாந்துக்கு குடிமாறியபோது எட்டு வயதாயிருந்தாள். “நானும் என் தம்பியும் எங்களை அறியாமலேயே லண்டனின் கலாச்சாரத்திற்கு எங்களை மாற்றிக்கொண்டோம். ஆனால், பல ஆண்டுகளாக மெடீரா என்ற ஒரு சிறிய போர்ச்சுகீஸ் தீவில் வாழ்ந்த என் பெற்றோருக்கு அது கடினமாய் இருந்தது” என்று அவள் சொல்கிறாள். கம்போடியா நாட்டைச் சேர்ந்தவர்களான வூனின் பெற்றோர், அவளுக்கு மூன்று வயதாகி இருந்தபோது ஆஸ்திரேலியாவுக்குக் குடிமாறிச் சென்றார்கள். வூன் சொல்வதாவது: “என்னுடைய பெற்றோர் இந்தப் புதிய கலாச்சாரத்திற்கும் புதிய சூழலுக்கும் ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். சொல்லப்போனால், நான் அப்பாவின் மனதையும் உணர்ச்சியையும் புரிந்துகொள்ள தவறும்போதெல்லாம், என்மீது அவர் கோபப்பட்டு எரிந்து விழுவார்.”

இளம் பிள்ளைகளைத் தங்களுடைய பெற்றோரிடமிருந்து பிரிக்கும் ஓர் அகழிக்கு இந்தக் கலாச்சார பிளவை ஒப்பிடலாம். அதோடுகூட, அந்த அகழியின் நெடுக கட்டப்பட்டிருக்கும் ஓர் அரணைப்போல் மொழி தடைகளும் குடும்பங்களைப் பிரிக்கக்கூடும். பிள்ளைகள் பெற்றோரைவிட வேகமாக புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும்போதுதான் அந்தத் தடை வளரத் துவங்குகிறது. பிள்ளைகள் தங்களுடைய தாய்மொழியை மறந்து, பெற்றோருடன் மனம்விட்டு பேசுவது கடினமாகையில் அந்தத் தடை உச்சத்தை எட்டிவிடுகிறது.

இப்போது 14 வயதாயிருக்கும் இயன் இதுபோன்ற தடை தனக்கும் தன் பெற்றோருக்கும் இடையில் வளர்ந்திருப்பதை கவனித்தான். இவனுடைய குடும்பம் ஈக்வடாரிலிருந்து நியு யார்க்கிற்கு குடிபெயர்ந்த பிறகே இந்தத் தடை உருவானது. “இப்போது நான் ஸ்பானிஷ் மொழியில் பேசுவதைவிட ஆங்கிலத்தில்தான் அதிகமாகப் பேசுகிறேன். பள்ளியில் என் ஆசிரியர்கள் தொடங்கி என் நண்பர்கள்வரை எல்லாருமே ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள், ஏன், என் தம்பியிடமும் நான் ஆங்கிலத்தில்தான் பேசுகிறேன். என்னுடைய மூளையில் ஸ்பானிஷ் சொற்கள் இருந்த இடத்தை இப்போது ஆங்கில சொற்கள் ஆக்கிரமித்திருக்கின்றன” என்கிறான் அவன்.

இயன் இருக்கிற அதேபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் நீங்களும் இருக்கிறீர்களா? நீங்கள் சிறு பிள்ளையாயிருக்கும்போதே உங்களுடைய குடும்பம் இடம் மாறிச் சென்றிருந்தால், பிற்காலத்தில் உங்களுடைய தாய்மொழி உங்களுக்கு உதவக்கூடும் என்று நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். எனவே, தாய்மொழியில் பேசாமல் அதை மறந்தே போயிருப்பீர்கள். நாம் ஆரம்பத்தில் பார்த்த நூர் இவ்வாறு சொல்கிறாள்: “என் அப்பா தன்னுடைய மொழியை வீட்டில் பேசும்படி ரொம்பவே வற்புறுத்தினார், ஆனால் எங்களுக்கோ அரபிக் பேச விருப்பமில்லை. அரபிக் கற்றுக்கொள்வதை தேவையற்ற சுமையாக உணர்ந்தோம். எங்களுடைய நண்பர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். நாங்கள் பார்த்த டிவி நிகழ்ச்சிகள் எல்லாமே ஆங்கிலத்தில்தான் இருந்தன. அப்படியிருக்கையில், நாங்கள் ஏன் அரபிக் கற்றுக்கொள்ள வேண்டும்?”

என்றாலும், நீங்கள் வளர்ந்து வருகையில், உங்களுடைய தாய்மொழியை நன்றாகப் பேசுவதன் பயன்களைப் புரிந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள். ஆனால், முன்பு சரளமாக வந்த வார்த்தைகள் இப்போது வர மறுக்கலாம். இதைக் குறித்து 13 வயது மைக்கேல் சொல்வதைக் கவனியுங்கள்: “இரண்டு மொழிகளையும் நான் குழப்பிவிடுவேன்.” இவனுடைய பெற்றோர் சீனாவிலிருந்து இங்கிலாந்திற்கு குடிமாறியவர்கள். காங்கோவிலிருந்து (கின்ஷாசா) லண்டனுக்கு தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்த ஆர்னலுக்கு இப்போது 15 வயது. அவள் சொல்வதாவது: “அம்மாவிடம் லிங்காலாவில் பேச முயற்சி செய்வேன், ஆனால் என்னால் முடியாது, ஏனென்றால், ஆங்கிலத்தில்தான் என்னால் சரளமாகப் பேச முடியும்.” கம்போடியா நாட்டைச் சேர்ந்த பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் பிறந்த லீ, தன்னுடைய பெற்றோரின் மொழியைச் சரளமாகப் பேச முடியாததற்கு மிகவும் வருந்துகிறாள். “சில விஷயங்களைப்பற்றி நான் எவ்வாறு உணருகிறேன் என்பதை என் பெற்றோரிடம் விளக்கமாய்ச் சொல்ல நினைக்கிறேன். ஆனால், அதைச் சொல்வதற்குள் திணறிவிடுகிறேன்” என்கிறாள்.

தடைகளைத் தகர்த்தெறிவதற்கான காரணங்கள்

உங்களுடைய தாய்மொழியை நீங்கள் கொஞ்சம் மறந்திருந்தாலும் கவலைப்படாதீர்கள். மொழியை கற்கும் உங்கள் திறனை மறுபடியும் வளர்க்கலாம். ஆனால், முதலாவதாக அவ்வாறு செய்வதனால் கிடைக்கும் பலன்களைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவற்றில் சில உதாரணங்கள் இதோ: நாம் ஆரம்பத்தில் கவனித்த ஷோஸ்வி இவ்வாறு சொல்கிறான்: “நான் என்னுடைய பெற்றோரிடம் உணர்ச்சி ரீதியிலும் அதைவிட முக்கியமாக, ஆன்மீக ரீதியிலும் நெருக்கமாக இருக்க விரும்பியதால் என்னுடைய பெற்றோரின் மொழியை கற்றுக்கொண்டேன். அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொண்டதால் அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களாலும் என்னைப் புரிந்துகொள்ள முடிந்தது.”

குடிபெயர்ந்து வருகிற மற்றவர்களுக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைச் சொல்ல விரும்புவதால், அநேக இளம் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் மொழியை நன்றாகக் கற்று வருகிறார்கள். (மத்தேயு 24:14; 28:19, 20) ஐந்து வயதாயிருந்தபோது லண்டனுக்கு குடிமாறிய சாலோமவ் இவ்வாறு சொல்கிறான்: “என்னால் பைபிளை இரண்டு மொழிகளில் விளக்க முடிகிறது, இது ரொம்பவே பயனுள்ளதாக இருக்கிறது! நான் என்னுடைய தாய்மொழியை கிட்டத்தட்ட மறந்தேபோய்விட்டிருந்தேன். ஆனால், இப்போது நான் போர்ச்சுகீஸ் சபையில் இருப்பதால், என்னால் ஆங்கிலம், போர்ச்சுகீஸ் இரண்டையுமே சரளமாகப் பேச முடிகிறது.” இப்போது பிரான்சில் வாழும் 15 வயதான ஆலெக் இவ்வாறு சொல்கிறான்: “மற்றவர்களுக்கு என்னால் உதவ முடிவதை நினைக்கையில் சந்தோஷமாய் இருக்கிறது. ரஷ்யன், பிரெஞ்சு அல்லது மால்டோவன் மொழியைப் பேசுகிற ஜனங்களிடம்கூட என்னால் பைபிள் சத்தியத்தை விளக்க முடிகிறது.” அரபிக் பேசுகிற ராஜ்ய அறிவிப்பாளர்களுக்கான தேவை இருப்பதை நூர் உணர்ந்தாள். “நான் மறந்துபோனதை மறுபடியும் கற்றுக்கொள்வதற்கு மொழி பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கிறேன். என்னுடைய மனநிலை மாறியிருக்கிறது. நான் தவறாகப் பேசுகையில் யாராவது என்னைத் திருத்த வேண்டுமென விரும்புகிறேன். நான் அரபிக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.”

உங்கள் பெற்றோருடைய மொழியை மறுபடியும் சரளமாகப் பேசுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? வீட்டில் இருக்கும்போது தாய்மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்று வற்புறுத்துவதால், பிள்ளைகள் இரண்டு மொழிகளையும் நன்றாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைச் சில குடும்பங்களில் கண்டிருக்கிறார்கள். a தாய்மொழியில் எழுத கற்றுக்கொடுக்கவும் உங்கள் பெற்றோரை நீங்கள் கேட்கலாம். இந்த விஷயத்தில் ஸ்டீலிஸின் உதாரணத்தைக் கவனியுங்கள். இவன் ஜெர்மனியில் வளர்க்கப்பட்டாலும் இவனுடைய தாய்மொழியோ கிரேக்கு. “தினமும் என் பெற்றோர் பைபிளிலிருந்து ஒரு வசனத்தை என்னுடன் கலந்துபேசுவார்கள். அவர்கள் அதைச் சத்தமாக வாசிக்க நான் அதை எழுதுவேன். இப்போது என்னால் கிரேக்கையும் ஜெர்மனையும் வாசிக்கவும் எழுதவும் முடிகிறது.”

நீங்கள் இரு கலாச்சாரங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தால், இரண்டோ அதற்கு மேற்பட்ட மொழிகளையோ பேச முடிந்தால், உங்களால் அதிகத்தைச் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை. இரு கலாச்சாரங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருப்பது, ஜனங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் கடவுளைப் பற்றிய அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் உங்களுக்கு இருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள உதவும். “மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:23) இங்கிலாந்தில் இந்திய பெற்றோருக்குப் பிறந்த ப்ரீத்தீ இவ்வாறு சொல்கிறாள்: “எனக்கு இரண்டு கலாச்சாரங்களைப் பற்றியும் தெரியும், அதனால், வெளி ஊழியத்தில் ஈடுபடுவது சுலபமாக இருக்கிறது. இரண்டு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களையும், அவர்களுடைய எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.”

“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல”

நீங்கள் இரு வேறு கலாச்சாரங்களுக்கிடையே மாட்டிக்கொண்டிருப்பதாக உணர்ந்தால் மனம் தளராதீர்கள். பைபிள் கதாப்பாத்திரங்களில் அநேகர் இருந்ததைப்போன்ற சூழ்நிலையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு யோசேப்பை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் எபிரெய கலாச்சாரத்தைச் சேர்ந்தவர். ஆனால், இளம் வயதிலேயே எகிப்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட இவர் வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழித்தார். என்றாலும், தனது தாய்மொழியை அவர் மறக்கவேயில்லை. (ஆதியாகமம் 45:1-4) அதன் விளைவாக, அவரால் தன் குடும்பத்திற்கு உதவ முடிந்தது.ஆதியாகமம் 39:1; 45:5.

அப்போஸ்தலனாகிய பவுலுடன் அநேக இடங்களுக்குச் சென்ற தீமோத்தேயுவின் அப்பா கிரேக்கர், அம்மாவோ யூத பெண்மணி. (அப்போஸ்தலர் 16:1-3) தன்னுடைய கலப்பு கலாச்சாரம் தனக்கு ஒரு முட்டுக்கட்டையாக ஆகும்படி அவர் அனுமதிக்கவில்லை. மாறாக, இரண்டு கலாச்சாரங்களைப் பற்றியும் அவர் நன்கு அறிந்திருந்ததால் தன் மிஷனரி வேலையில் மற்றவர்களுக்கு உதவ அதைப் பயன்படுத்திக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை.—பிலிப்பியர் 2:19-22.

நீங்களும்கூட உங்களுடைய சூழ்நிலையை முட்டுக்கட்டையாய் கருதாமல் பயனுள்ளதாய் கருத முடியுமா? “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல . . , எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். (அப்போஸ்தலர் 10:34, 35) உங்களுடைய குணங்களை வைத்தே யெகோவா உங்களை நேசிக்கிறார், நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதை வைத்து அல்ல. இங்கு நாம் பார்த்த இளைஞர்களைப் போலவே, உங்களுடைய கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு உங்களால் உதவ முடியுமா? அதாவது, உங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி பட்சபாதமற்ற, நம்முடைய அன்பான கடவுளாகிய யெகோவாவைப்பற்றி அவர்களுக்கு நீங்கள் கற்றுத்தர முடியுமா? அவ்வாறு செய்தால், உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைவீர்கள்!—அப்போஸ்தலர் 20:35.

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க

சிந்திப்பதற்கு

◼ நீங்கள் எந்தவிதமான கலாச்சார பிளவுகளை அல்லது மொழி தடைகளை எதிர்ப்படுகிறீர்கள்?

◼ இந்தச் சவால்களில் சிலவற்றை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம்?

[அடிக்குறிப்பு]

a கூடுதலான நடைமுறை ஆலோசனைகளுக்காக, அக்டோபர் 15, 2002-ல் வெளியான காவற்கோபுர இதழில் “அயல் நாட்டில் பிள்ளைகளை வளர்த்தல்—சுமைகளும் சுகங்களும்” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 20-ன் படம்]

உங்களுடைய பெற்றோரின் மொழியைப் பேசுவது உங்கள் குடும்ப பந்தங்களைப் பலப்படுத்தலாம்