Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ “மிக உஷ்ணமான வருடங்களில்” 2006-ஆம் வருடம் “பெரும்பாலும் ஆறாம் இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.” மிக உஷ்ணமான பத்து ஆண்டுகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளைச் சேர்ந்தவை.—உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம்.

◼ பெய்ஜிங்கின் பொதுமக்கள் பாதுகாப்பு துறை, ரேபீஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வீட்டுக்கு “ஒரு நாய்” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. சீனாவில் 2004-ஆம் வருடத்தின்போது கிட்டத்தட்ட 2,660 பேர் ரேபீஸினால் இறந்திருக்கிறார்கள்.—ஷின்ஹ்வா ஆன்லைன், சீனா.

◼ ஹோட்டலில் தங்குபவர்கள் அதன் அறைகளின் கதவுப்பிடிகளையும், விளக்குகளையும், தொலைப்பேசிகளையும், டிவி ரிமோட்டுகளையும் தொடுவதால் “ஜலதோஷ கிருமிகள் தொற்றிக்கொள்ள 50% வாய்ப்பிருக்கிறது.”—மக்லீன்ஸ், கனடா.

அமேசானில் எத்தனை வித பூச்சிகள்

அமேசான் மழை காடுகளில் கிட்டத்தட்ட 60,000 பூச்சி இனங்கள் இருப்பதாக பூச்சியியல் வல்லுநர்கள் இதுவரை கணக்கிட்டுள்ளனர். ஆனால், இன்னமும் 1,80,000 பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட வேண்டியிருக்கிறது என ஃபோல்யா ஆன்லைன் என்ற பத்திரிகை சொல்கிறது. இந்த அமேசான் பகுதியில் தற்போது 20 பூச்சியியல் வல்லுநர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த வல்லுநர்கள் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 2.7 பூச்சி இனங்களை அடையாளங்கண்டு அவற்றைப் பற்றிய விவரங்களை அளித்து வருவதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதே வேகத்தில் சென்றால், அனைத்து இனங்களையும் அடையாளங்கண்டுபிடித்து முடிப்பதற்கு மொத்தத்தில் சுமார் 3,300 வருடங்கள் எடுக்கலாம்! அதுவும் அடுத்தடுத்த ஏறக்குறைய 90 தலைமுறைகளில் வரும் பூச்சியியல் வல்லுநர்களில் ஒவ்வொருவரும் 35 வருடங்கள் பணிபுரிந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

மின் பஞ்சம்

“பூமியில் வாழும் மனிதரில் கிட்டத்தட்ட 25 சதவீதத்தினருக்கு, அதாவது 160 கோடி மக்களுக்கு மின் வசதியில்லை, 240 கோடி பேர் உணவுக்கும் எரிபொருளுக்கும் கரியையோ, சாணத்தையோ, விறகுகளையோதான் சார்ந்திருக்கிறார்கள்” என்று ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் திட்டத்தால் வெளியிடப்பட்ட நமது கிரகம் என்ற ஆங்கில பத்திரிகை கூறுகிறது. “இந்தப் பாரம்பரிய எரிபொருள்களினால் எழும் புகை, ஒவ்வொரு வருடமும் 25 லட்சம் பெண்களையும் பிள்ளைகளையும் காவு கொள்கிறது” என்றும் அந்தப் பத்திரிகை கூறுகிறது.

ஆன்லைன் வேதனை

இன்டர்நெட் மூலமாக பல அந்நியர்களோடு புது உறவுகளை பதிப்பதில் ஆன்லைன் சமுதாய இணைய தளங்கள் மக்களுக்கு வழிகோலுகின்றன, அதனால் பிரபலமடையும் உணர்வை அவை ஈட்டித் தருகின்றன. இதுபோன்ற தளங்கள் “பொய்யர்களின் சொர்க்க பூமியாகவும்,” அதே சமயத்தில், இன வெறியர்கள், மற்றவர்களுடைய விஷயங்களில் மூக்கை நுழைப்பவர்கள், தப்பெண்ணமுடையவர்கள் ஆகியவர்களின் சொர்க்க பூமியாகவும் இருக்கிறது என ஃபோல்யா ஆன்லைன் சொல்கிறது. இந்த இணைய தளங்களை உபயோகிக்கும் சிலர், தங்களுடைய அடையாளத்தையே மாற்றிக்கொள்கின்றனர். மற்றவர்களோ குண்டாயிருப்பவர்களையும், குட்டையானவர்களையும், அடர்த்தியான சுருட்டை முடி உடையவர்களையும், இன்னும் வேறு சிலரையும் கேலி கிண்டல் செய்து, அவர்களுடைய மனதை ரணப்படுத்தி விடுகிறார்கள். இப்படிச் சம்பவிப்பதற்குக் காரணம் “கிண்டல் செய்யப்படுகிறவர்களுக்கு தினசரி வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைவிட இந்த [இணைய தளங்களில்] நடக்கும் விஷயங்களே அதிமுக்கியமாக இருக்கிறது” என்று பிரேசிலைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணரான ஈவ்லீசே ஃபார்டீம் சொல்கிறார்.

பழமையான வானவியல் கால்குலேட்டர்

அரிக்கப்பட்ட கலைப்பொருள் ஒன்றை கடற்பஞ்சு முக்குளிப்பவர்கள் 1901-ல் எடுத்து வந்தார்கள். அது ஆன்டிகீதீரா என்ற கிரேக்க தீவருகில் நடந்த ஒரு கப்பற்சேதத்திலிருந்து எஞ்சிய ஒன்று. அந்தப் பொருள் பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டின் வானவியல் சார்ந்த சிக்கலான கால்குலேட்டர் என இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது. தெள்ளத் தெளிவான எக்ஸ்-ரே டோமோகிராஃபி (ஊடுகதிர் உள்தளப் படம்) முறையைப் பயன்படுத்தி ‘ஆன்டிகீதீரா செயல்முறையை’ ஆராய்ந்த விஞ்ஞானிகள், அது குறைந்தபட்சம் 30 வெண்கல கியர்வீல்களால் உருவாக்கப்பட்டு ஒரு மரப்பெட்டிக்குள்ளே வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள். அந்தக் கருவி சூரியனும் சந்திரனும் இருக்கிற நிலையை துல்லியமாகக் காட்டியது, சந்திர கிரகணத்தையும் சூரிய கிரகணத்தையும்கூட சரியாகக் கணித்தது. அந்தக் கருவி “உருவாக்கப்பட்ட பிறகு 1,000 ஆண்டுகள் வரையில், இந்தளவு சிக்கலான தொழில்நுட்பத்தை உடைய வேறெந்த கருவியும் அறியப்படவில்லை” என இயற்கை என்ற ஆங்கில பத்திரிகை குறிப்பிடுகிறது.

[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]

AP Photo/Thanassis Stavrakis