Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓய்வு வேண்டுமா? வனுவாட்டுவுக்கு வாருங்கள்

ஓய்வு வேண்டுமா? வனுவாட்டுவுக்கு வாருங்கள்

ஓய்வு வேண்டுமா? வனுவாட்டுவுக்கு வாருங்கள்

நியூ கலிடோனியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

சோர்வாக இருக்கிறீர்களா? ஓய்வு வேண்டுமா? அப்படியென்றால், கதகதப்பான ஒரு வெப்பமண்டல தீவில் நீங்கள் ஹாயாக இருப்பதுபோல் கற்பனை செய்துபாருங்கள். நீல-பச்சை வண்ணக் கடலில் நீங்கள் நீந்திக்கொண்டிருக்கிறீர்கள், வளமான மழை காடுகளில் காலார நடந்து செல்கிறீர்கள், அல்லது அரிய பழங்குடி இனத்தவரோடு பேசி பழகுகிறீர்கள். இயற்கை எழில் கொஞ்சும் இதுபோன்ற ஓர் பரதீஸ் இன்னமும் பூமியில் இருக்கிறதா? வனுவாட்டுவின் தொலைதூர தீவுகளை வந்து பாருங்கள், புரியும்!

தென்மேற்கு பசிபிக் பகுதியில், “Y” வடிவத்தில் சங்கிலி தொடர்போல் சுமார் 80 சிறுசிறு தீவுகளைக் கொண்டதுதான் வனுவாட்டு. இது ஆஸ்திரேலியாவுக்கும் பிஜிக்கும் இடையில் அமைந்துள்ளது. நிலவியல் வல்லுநர்களின்படி, புவியின் மேல் ஓட்டில் இருக்கும் மிகப் பெரியளவிலான நழுவுத் தகடுகள் இந்த இடத்தில் மோதினதால் உயரமான மலைகள், பெரும்பாலும் தண்ணீருக்கடியில் உருவாயின. இவற்றுள் மிக உயரமான மலையின் உச்சிகள் கடல் மட்டத்தையும் தாண்டி மேலெழுந்து வனுவாட்டுவின் கரடுமுரடான தீவுகள் உருவாக காரணமாய் அமைந்தன. இன்று, புவியின் மேல் ஓட்டு தகடுகள் ஒன்றின்மேல் ஒன்று உராய்ந்தும் தேய்ந்தும் அநேக நில அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன, செயல்படுகிற ஒன்பது எரிமலைகள் வெடிப்பதற்கும் காரணமாய் அமைகின்றன. திண்ணிய நெஞ்சமுடையவர்கள் அனல் கக்கும் லாவாவைகூட அருகாமையில் நின்றவாறே பார்க்க முடியும்.

இந்தத் தீவுகளில் வளம்கொழிக்கும் செழுமையான மழை காடுகள் ஏராளமாகக் காணப்படுகின்றன; மாபெரும் ஆலமரத்தின் ராஜ்யமாக இத்தீவுகள் இருக்கின்றன. இந்த ஆலமரங்களின் தலைப்பகுதியைப் போர்த்தியுள்ள இலைகள் அகண்ட நிலப்பரப்பை ஆக்கிரமிக்கின்றன. 150-க்கும் அதிகமான வகைகளைச் சேர்ந்த ஆர்க்கிட்டுகளும், 250 வகை பெரணிகளும் இந்தக் காட்டின் அழகை மெருகேற்றும் அணிகலன்களாகப் படர்ந்திருக்கின்றன. தெள்ளிய நீரில் வண்ண மீன்கள் விளையாடும் அழகும் பவழப்பாறைகள் மினுமினுக்கும் அழகும் போதாதென்று அழகுக்கே அழகு சேர்க்கிறது எழில்கொஞ்சும் கடற்கரைகளும் கரடுமுரடான மலை உச்சிகளும். துருதுருவென்று இருக்கிற சாதுவான டூகாங்குகளோடு நீந்தி மகிழ சூழியலில் ஆர்வமுள்ள பல சுற்றுலாப் பயணிகள் உலகெங்கிலுமிருந்து ஏபீ தீவுக்கு வருகை தருகின்றனர். a

நரமாமிசத்தைத் தின்பவர்களும் கார்கோ வழிபாட்டினரும்

1606-ல் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலாக வனுவாட்டு தீவுகளில் கால் பதித்தார்கள். b அப்போது, இத்தீவுகளை மூர்க்கமான பழங்குடி இனத்தவர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள்; நரமாமிசத்தை உண்ணும் பழக்கம் இங்குப் பரவலாய் இருந்தது. அந்தச் சமயத்தில், சந்தன மரங்களின் காடுகள் கம்பளம் விரித்தாற்போல் எங்கும் பரவியிருந்தன. இந்தச் சந்தன மரக் கட்டைகள் ஆசியாவில் விலைமதிப்பற்றதாகக் கருதப்படுகின்றன. சந்தன மரங்களை வைத்து ஏராளமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்த ஐரோப்பிய வர்த்தகர்கள் திட்டமிட்டு அந்த மரங்களை வெட்டத் தொடங்கினார்கள். பிற்பாடு, அடிமை வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

சமோவா, பிஜி, ஆஸ்திரேலியா ஆகிய தேசங்களில் இருந்த கரும்பு தோட்டங்களிலும் பருத்தி தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக வனுவாட்டுவிலுள்ள பழங்குடியினரை வேலைக்கு அமர்த்துவது இந்த அடிமை வியாபாரத்தில் உட்பட்டிருந்தது. இந்த வேலையாட்கள் மூன்று வருடங்கள்வரை வேலை செய்வதாக மனமுவந்து ஒப்பந்தம் செய்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், அவர்களில் அநேகர் கடத்தப்பட்டதே உண்மை. 1800-களின் பிற்பகுதியில், அதாவது, தீவுவாசிகள் அடிமைகளாக விற்கப்படுவது உச்சத்தில் இருந்த காலப்பகுதியில், வனுவாட்டுவின் சில தீவுகளில் இருந்த ஆண்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பேர் வெளி நாடுகளில் வேலை செய்து வந்தார்கள். இவர்களில் அநேகர் அங்கிருந்து திரும்பி வரவேயில்லை. ஆஸ்திரேலியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 10,000 பசிபிக் தீவுவாசிகள் உயிரிழந்தார்கள், அவர்களில் பெரும்பாலோர் நோயின் கோரப்பிடியினால் மாண்டுபோனார்கள்.

ஐரோப்பிய நோய்கள் வனுவாட்டுவின் தீவுகளையும் விட்டுவைக்கவில்லை. தட்டம்மை, காலரா, பெரியம்மை ஆகியவற்றையும் வேறுசில நோய்களையும்கூட தாங்கிக்கொள்ளுமளவுக்கு அந்தத் தீவுவாசிகளிடம் எதிர்ப்பு சக்தி இருக்கவில்லை. “சாதாரண ஜலதோஷம்கூட அங்கிருந்த ஜனங்களை பூண்டோடு அழிக்கும் சக்தியுடையதாய் இருந்தது” என்று ஒரு புத்தகம் கூறுகிறது.

1839-ல் கிறிஸ்தவ மண்டல மிஷனரிகள் வனுவாட்டுவுக்கு வருகை தந்தனர். அத்தீவு மக்கள் அவர்களை விருந்துக்கு அழைக்க தவறவில்லை. விருந்துக்கு அழைக்கப்பட்ட அவர்கள் விருந்தாகிவிட்டார்களாம்! அவர்களுக்குப் பின் வந்த வேறு பல மிஷனரிகளுக்கும் அதே கதிதான். என்றாலும், காலப்போக்கில், புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளும் கத்தோலிக்க சர்ச்சுகளும் அனைத்து தீவுகளையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டன. இன்று, வனுவாட்டுவில் வாழ்பவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் சர்ச் அங்கத்தினர்களாய் இருப்பதாக உரிமை பாராட்டுகிறார்கள். இருந்தாலும், “அநேக தீவுவாசிகள் இன்னமும் கிராமத்து மந்திரவாதிகளை நாடுகிறார்கள். அந்த மந்திரவாதிகள் ஒரு காதலனையோ காதலியையோ கவருவதற்காகவோ, பன்றியை குண்டாக்குவதற்காகவோ, எதிரியை கொல்லுவதற்காகவோ சில மாயவித்தைச் சம்பந்தப்பட்ட சடங்குகளைச் செய்ய ஆவியாட்கொண்ட கற்களைப் பயன்படுத்துகிறார்கள்” என்று எழுத்தாளரான பால் ராஃபாயிலா குறிப்பிடுகிறார்.

உலகத்தில் இருக்கும் கார்கோ வழிபாட்டுக் குழுக்களில் செல்வத்திற்காக பொறுமையுடன் இன்றுவரை காத்திருக்கும் ஒரு குழு வனுவாட்டுவிலும் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது 5,00,000 அமெரிக்க படைவீரர்கள் வனுவாட்டுவை கடந்துதான் பசிபிக்கில் இருந்த போர் தளங்களுக்குச் சென்றார்கள். இந்தப் படைவீரர்கள் கொண்டுவந்த ஏராளமான செல்வத்தை அல்லது “கார்கோவை” கண்டு அத்தீவினர் வியந்தனர். போர் நிறைவடைந்தபோது, அமெரிக்கர்கள் அந்தத் தீவை விட்டுச்சென்றனர். லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மிச்சமீதியான பொருட்களும் ஆயுதங்களும் கடலில் தூக்கியெறியப்பட்டன. கார்கோ வழிபாட்டுக் குழு என்றழைக்கப்பட்ட மதப் பிரிவுகள், துறைமுகங்களையும் விமானத்தளங்களையும் கட்டினார்கள். தங்களை விட்டுச்சென்றவர்களை மறுபடியும் வரவழைக்கும் எண்ணத்தில் போலி ஆயுதங்களைப் பயன்படுத்தி இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். இன்றும்கூட, டானா தீவிலுள்ள நூற்றுக்கணக்கானோர் “பேய்த்தோற்றமான அமெரிக்க மேசியா” என்று கருதப்படும் ஜான் ஃப்ரம் என்பவரிடம் ஜெபிக்கிறார்கள். ஒரு நாள் மறுபடியும் ஏராளமான செல்வங்களோடு அவர் திரும்பி வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

பல்வகை கலாச்சாரம்

இத்தீவு தேசத்தில், வியக்கத்தக்க விதத்தில் பல்வேறு மொழிகளும் கலாச்சாரங்களும் உள்ளன. அதைப்பற்றி ஒரு வழிகாட்டி புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “உலகிலுள்ள எந்த ஒரு நாட்டையும்விட வனுவாட்டுவில்தான் ஒரு நபருக்கு இத்தனை மொழிகள் என்ற விகிதாச்சாரம் அதிகமாக இருக்கிறது.” இந்தத் தீவுக்கூட்டத்தில் குறைந்தபட்சம் 105 மொழிகளும் ஏராளமான கிளை மொழிகளும் பேசப்படுகின்றன. இங்கு பிஸ்லாமா முக்கிய மொழியாகவும் ஆங்கிலமும் பிரெஞ்சும் அதிகாரப்பூர்வ மொழிகளாகவும் இருக்கின்றன.

பல மொழிகள் இருந்தாலும் அனைத்து தீவுகளிலுமே ஒன்று மட்டும் பொதுவாக இருக்கிறது: இத்தீவு மக்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பாரம்பரிய சடங்குகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. பென்டிகாஸ்ட் தீவில் ஆசரிக்கப்பட்டு வரும் சடங்குகளில் ஒன்றான கருவள சடங்கு இன்று உலகளவில் அதிக மோகத்தை ஏற்படுத்தியிருக்கும் விளையாட்டான பன்ஜீ ஜம்பிங்குக்கு வழிவகுத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சேனைக்கிழங்கு அறுவடையின்போது, ஆண்களில் பெரியவர்களும் சிறியவர்களும் 20 முதல் 30 மீட்டர்வரை உயரமுள்ள மர கோபுரங்களிலிருந்து குதிப்பார்கள். அப்படிக் குதிக்கையில் தங்கள் கணுக்காலில் நீளமான லியானா கொடிகளைக் கட்டிக்கொள்வார்கள். அதுதான் அவர்களுடைய உயிரைக் காப்பாற்றுகிறது. நிலத்தில் குதிப்பவர்கள் தங்கள் தலைகளால் நிலத்தை உரசுவதன்மூலம் அடுத்த வருட விளைச்சலுக்காக நிலத்தை “வளப்படுத்த” முடியுமென நம்புகிறார்கள்.

மலகூலா தீவில் உள்ள சில கிராமவாசிகள், சமீப காலமாகத்தான் வெளி உலகத்தோடு தொடர்புகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். பெரிய நாம்பாஸ், சிறிய நாம்பாஸ் என்று அழைக்கப்படும் பழங்குடியினர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் இவர்கள் மனித மாமிசத்தை உண்ணும் கொடூரர்களாக இருந்தார்கள். இவர்கள் கடைசியாக 1974-ல் மனித மாமிசத்தை உண்டார்கள் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஆண் குழந்தைகளின் தலைகளை “அழகாக”வும் நீளமாகவும் ஆக்குவதற்கு அவற்றை இறுக்கமாகக் கட்டும் பழக்கமும் இவர்களிடம் இருந்து வந்தது. அதுவும் பல வருடங்களுக்கு முன்னரே நிறுத்தப்பட்டது. இன்று நாம்பாஸ் பழங்குடி மக்கள் வியக்கத்தக்க விதத்தில் சிநேகப்பான்மையுடன் நடந்துகொள்கிறார்கள்; தங்களுடைய கிராமத்துக்கு வருகை தருகிறவர்களுக்குத் தங்கள் கலாச்சார பொக்கிஷங்களைக் காட்டுவதிலும் விவரிப்பதிலும் அகமகிழ்கிறார்கள்.

பரதீஸ் பூமியில் ஜனங்கள்

அநேக சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறை நாட்களைக் கழிக்க வனுவாட்டுவுக்குச் செல்கிறார்கள். ஆனால், அங்குள்ள ஜனங்களுக்கு ஆன்மீக ரீதியில் உதவி அளிக்க யெகோவாவின் சாட்சிகள் கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்னரே அங்குச் சென்றார்கள். ‘உலகின் கடையெல்லையில்’ இருக்கும் இந்த இடத்தில் சாட்சிகளின் முயற்சிகள் நல்ல பலன்களைத் தந்திருக்கின்றன. (அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 1:8, பொது மொழிபெயர்ப்பு) (“காவாவுக்கு அடிமையாயிருந்தவர் கிறிஸ்தவரானார்” என்ற பெட்டியைப் பாருங்கள்) பூமியில் வரவிருக்கும் பூங்காவனம் போன்ற பரதீஸைப் பற்றிய பைபிளின் செய்தியை அறிவிப்பதில் இந்தத் தீவுதேசத்தில் இருக்கும் ஐந்து சபைகளிலுள்ள சாட்சிகள் 80,000-ற்கும் அதிகமான மணிநேரங்களை 2006-ம் வருடத்தில் செலவிட்டிருக்கிறார்கள். (ஏசாயா 65:17-25) வரவிருக்கும் அந்த பரதீஸ், இன்றைய வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்தும் கவலைகளிலிருந்தும் நிரந்தரமான விடுதலையைக் கொடுக்கும் என்பதை அறிவதில் நாம் எவ்வளவு சந்தோஷமடைகிறோம்!—வெளிப்படுத்துதல் 21:4.

[அடிக்குறிப்புகள்]

a டூகாங்குகள் புல் பூண்டுகளை உண்டு வாழ்கிற கடல்வாழ் பாலூட்டிகளாகும். இவை 3.4 மீட்டர் நீளம்வரை வளரும், இவற்றின் எடை 400 கிலோவுக்கு அதிகமாகவும் இருக்கும்.

b 1980-ல் வனுவாட்டுவுக்கு தேசிய சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் அது நியூ ஹெப்ரிட்ஸ் என்று அழைக்கப்பட்டது.

[பக்கம் 17-ன் பெட்டி/படம்]

சந்தோஷமான தீவு

குளோபல் ஹேப்பி பிளேனட் இண்டெக்ஸின் 2006-ஆம் வருட தொகுப்பில் வனுவாட்டு முதல் இடத்தைப் பிடித்தது. பிரிட்டிஷ் மேதைகள் அடங்கிய புதிய பொருளாதார நிறுவனம் தயாரித்த அந்தத் தொகுப்பு, சந்தோஷமான வாழ்வையும் தீர்க்காயுசையும் அருமையான சுற்றுச்சூழலையும் அளிப்பதில் நாடுகள் எந்தளவு சிறந்து விளங்குகின்றன என்பதைக் கண்டறிய 178 நாடுகளை மதிப்பிட்டது. அதைப்பற்றி வனுவாட்டு டெய்லி போஸ்ட் செய்தித்தாள் இவ்வாறு சொல்லிற்று: “[வனுவாட்டு] முதல் இடத்தை பிடித்திருப்பதற்கான காரணம், அங்கு வாழும் மக்கள் சந்தோஷமாய் இருக்கிறார்கள், 70 வருடங்கள்வரை வாழ்கிறார்கள், சுற்றுச்சூழலைக் கெடுப்பதில்லை.”

[படம்]

பாரம்பரிய உடை

[படத்திற்கான நன்றி]

© Kirklandphotos.com

[பக்கம் 17-ன் பெட்டி/படம்]

காவாவுக்கு அடிமையாயிருந்தவர் கிறிஸ்தவரானார்

பென்டிகாஸ்ட் தீவில் வாழ்ந்து வரும் வில்லீ, சிறு வயதிலிருந்தே காவா என்ற போதை தரும் பானத்தை அளவுக்கு மீறி குடித்து வந்தார். போதையூட்டும் அந்தச் சக்திவாய்ந்த பானம், மிளகுச் செடியின் வேர்களிலிருந்து எடுக்கப்படுகிறது. தினமும் காவா ‘பாரிலிருந்து’ வீட்டிற்குத் திரும்புகையில் போதையில் தள்ளாடியபடியே நடந்து வருவார். அவருடைய கடன்கள் தலைக்குமேல் ஏறின. கோபத்தில் அடிக்கடி தன் மனைவி ஐடாவை பயங்கரமாக அடிப்பார். ஒரு நாள், வில்லீயோடு வேலை செய்யும் யெகோவாவின் சாட்சி ஒருவர், பைபிளைப் படிக்கும்படி அவரை உற்சாகப்படுத்தினார். வில்லீயும் ஒத்துக்கொண்டார். ஆரம்பத்தில் ஐடா அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால், தன்னுடைய கணவனின் நடத்தையில் மாற்றத்தைப் பார்த்தபோது, அவரும் தன் மனதை மாற்றிக்கொண்டு பைபிள் படிப்பைத் துவங்கினார். இருவரும் ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்தார்கள். காலப்போக்கில், வில்லீ அவருடைய கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட்டார். அவரும் அவருடைய மனைவியும் 1999-ல் முழுக்காட்டுதல் பெற்று யெகோவாவின் சாட்சிகளானார்கள்.

[பக்கம் 15-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

நியுஜிலாந்து

ஆஸ்திரேலியா

பசிபிக் பெருங்கடல்

பிஜி

[பக்கம் 16-ன் படம்]

கருவளச் சடங்கின் பாகமாக நிலத்தில் குதிப்பவர்கள் மிகவும் ஆபத்தான இந்தப் பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள்

[படத்திற்கான நன்றி]

© Kirklandphotos.com

[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]

© Kirklandphotos.com

[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]

© Kirklandphotos.com

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

© Kirklandphotos.com