Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் காரணமா?

கடவுள் காரணமா?

கடவுள் காரணமா?

“தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) மேலும், அவர் நியாயமும் இரக்கமும் உள்ளவர். “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:4.

யெகோவா தேவன் படைப்பாளராக இருப்பதால் தீங்கு விளைவிக்கும் அனைத்தையும் அறிந்துகொள்ளும் திறமையும் அவற்றைத் தடுப்பதற்கான சக்தியும் அவருக்கு இருக்கிறது. இந்த உண்மைகளையும் பைபிளில் விளக்கப்பட்டுள்ள அவருடைய குணங்களையும் வைத்துப் பார்க்கையில் அநேகர் நியாயமாகவே இவ்வாறு கேட்கலாம், “இயற்கைப் பேரழிவுகள் நிகழ கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?” a இந்தக் கேள்வியைக் கேட்கும் நேர்மை மனமுள்ள லட்சக்கணக்கானோர், தம்முடைய வார்த்தையான பைபிளில் மிகவும் நியாயமான பதிலை கடவுள் கொடுத்திருக்கிறார் என்பதைக் கற்றிருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:16) தயவுசெய்து பின்வருபவற்றைக் கவனியுங்கள்.

கடவுளுடைய அன்பை அவர்கள் நிராகரித்தார்கள்

நம்முடைய முதல் பெற்றோருக்கு கடவுள் சந்தோஷமான, பாதுகாப்பான வாழ்க்கையைக் கொடுத்தாரென பைபிள் நமக்குச் சொல்கிறது. மேலுமாக, அவர்களும் அவர்களுடைய சந்ததியும், ‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்ப வேண்டும்’ என்ற கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால் பெருகிவரும் மனித குலத்தை கடவுள் தொடர்ந்து காப்பாற்றுவார் என்பதில் அவர்கள் நிச்சயமாயிருக்கலாம்.—ஆதியாகமம் 1:28.

என்றாலும், வருத்தகரமாக ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே தங்களுடைய படைப்பாளருக்குக் கீழ்ப்படியாததன் மூலமும் அவரைத் ஒதுக்கித் தள்ளிவிட்டு சுதந்திரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததன் மூலமும் அவரை அலட்சியப்படுத்தினார்கள். (ஆதியாகமம் 1:28; 3:1-6) அவர்களுடைய சந்ததியாரில் பெரும்பாலோர் அவர்களுடைய வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள். (ஆதியாகமம் 6:5, 6, 11, 12) சுருங்கக் கூறினால், கிட்டத்தட்ட மனிதகுலம் முழுவதும், தங்களையும் பூமியையும் கடவுளுடைய எந்தவொரு வழிநடத்துதலுமின்றி தாங்களாகவே ஆட்சி செய்துகொள்ள தீர்மானித்தார்கள். தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு மதிப்புக் கொடுக்கும் அன்பின் தேவனாக யெகோவா இருப்பதால், மனிதர்களுடைய வழி தீமைக்கு வழிநடத்தினாலும்கூட தம்முடைய பேரரசதிகாரத்தை அவர்கள்மீது திணிப்பதில்லை. b

என்றபோதிலும், மனித குலத்தை யெகோவா கைவிடவில்லை. இந்நாள் வரைக்குமாக, “அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:45) மேலுமாக, பூமியைப் பற்றியும் அதன் சுழற்சிகளைப் பற்றியும் அறிந்து கொள்ளும் திறமையைக் கடவுள் மனிதகுலத்திற்குக் கொடுத்தார்; இந்த அறிவால் தாறுமாறான வானிலை, எரிமலைக் குமுறல்கள் போன்ற வரவிருக்கும் ஆபத்துகளை முன்னறிவிக்க மனிதர்களால் ஓரளவுக்கு முடிந்திருக்கிறது.

மேலும், பூமியில் எந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு அல்லது தாறுமாறான வானிலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்பதையும் மனிதர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சில நாடுகளில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு இந்த அறிவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்; கல்வி புகட்டுவது, சிறந்த கட்டட முறைகளை முன்னேற்றுவிப்பது, எச்சரிக்கும் முறைகள் ஆகியவற்றின் வாயிலாக உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆயினும், ஏராளமான இயற்கைப் பேரழிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வருடந்தோறும் அறிக்கைகள் செய்யப்படுகின்றன. இதற்கு ஏராளமான, சிக்கலான காரணங்கள் இருக்கின்றன.

மிக ஆபத்தான பகுதிகளில் வாழ்தல்

அழிவின் உக்கிரம் எப்பொழுதும் இயற்கை சக்திகளின் பலத்தைப் பொறுத்து அமைவதில்லை. பாதிக்கப்பட்ட இடங்களில் எக்கச்சக்கமான மக்கள் வாழ்வது அழிவின் உக்கிரம் அதிகமாக இருப்பதற்குப் பெரும்பாலும் காரணமாயிருக்கிறது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 160-க்கும் அதிகமான நாடுகளில் கால்பங்குக்கும் அதிகமானோர் இயற்கைப் பேரழிவுகள் அதிகமாய்த் தாக்கும் பகுதிகளில் வாழ்கிறார்கள். “மிகவும் ஆபத்தான பகுதிகளில் மக்களை அதிகமதிகமாக நீங்கள் குடியேற்றும்போது, இதற்கு முன் நடந்த ஓர் இயற்கையான நிகழ்வு பேரழிவாக மாறுகிறது” என்று ஐக்கிய மாகாணங்களில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளரான க்லாவுஸ் ஜேக்கப் கூறுகிறார்.

அதிவிரைவாக நடந்துவரும் திட்டமிடப்படாத நகரமயமாக்குதல், காடுகளை அழித்தல், மழை நீரை உறிஞ்ச முடியாதபடி கற்கலவைகளை ஏராளமாகப் பயன்படுத்தி தரையை மூடிவிடுதல் போன்றவை சூழ்நிலையை மிகவும் மோசமாக்கும் வேறு காரணிகளாகும். முக்கியமாக, பிற்பாடு சொல்லப்பட்ட இரண்டு காரணிகளும் அழிவை உண்டாக்கும் மண் சரிவுகளுக்கும் வெள்ளப் பெருக்குகளுக்கும் காரணமாகின்றன.

ஒரு பூமியதிர்ச்சி உண்டாகும்போது ஏற்படும் மிகப் பெரிய அழிவிற்கு மனித நடவடிக்கைகளும் காரணமாகின்றன; ஏராளமானோர் சாவதற்கும் காயமடைவதற்கும் காரணம் பூமிக்கு அடியில் ஏற்படும் அதிர்வலைகள் அல்ல; மாறாக, கட்டடங்கள் இடிந்து விழுவதுதான். “பூகம்பங்கள் அல்ல, கட்டடங்கள்தான் மக்களைக் கொல்லுகின்றன” என்ற வழக்கச் சொல்லைப் பூகம்ப ஆராய்ச்சியாளர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

கையாலாகாத அரசாங்கமும் சாவு எண்ணிக்கை அதிகமாவதற்குக் காரணமாயிருக்கிறது. கடந்த 400 ஆண்டுகளில் தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாட்டின் தலைநகரைப் பூகம்பங்கள் மூன்று முறை தகர்த்துத் தரைமட்டமாக்கின. 1967-ல் நடந்த கடைசி பூகம்பத்திற்குப் பிறகு அங்கே மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகமாகி ஐம்பது லட்சத்தை எட்டியிருக்கிறது. “ஆனால், மக்களைப் பாதுகாக்கும் கட்டட விதிகள் இல்லாமலிருக்கின்றன அல்லது பெயரளவிற்கே இருக்கின்றன” என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது.

இப்பத்திரிகை சொன்னது அமெரிக்காவில், லூயிஸியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகருக்குப் பொருத்தமாகவே இருக்கிறது; ஏனெனில், அந்நகரம் வெள்ளப் பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. வெள்ளத்தைத் தடுப்பதற்குப் போடப்பட்ட மண் தடுப்புகள், நீர் உறிஞ்சும் குழாய்கள் ஆகியவை இருந்தபோதிலும் அநேகர் பயப்பட்டுக்கொண்டிருந்த அழிவு 2005-ல் கட்ரீனா சூறாவளி உருவில் வந்து தாக்கியது. “நீண்டகாலமாய்க் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை” மக்கள் அலட்சியப்படுத்தினார்கள் அல்லது “அவற்றிற்கு ஏனோதானோவென்று பிரதிபலித்தார்கள்” என யுஎஸ்ஏ டுடே செய்தித்தாள் அறிக்கையிடுகிறது.

இத்தகைய மனப்பான்மைதான் புவிச்சூடு பற்றிய விஷயத்திலும் இருக்கிறது; புவிச்சூட்டின் காரணமாக தீவிரமான வானிலையால் ஏற்படும் அழிவுகளும் கடல் மட்டம் உயரும் அபாயமும் உண்டாகலாம் என அநேக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கடவுள் பொறுப்பாளியாக இல்லாத அரசியல், சமூக, பொருளாதார காரணங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், அல்லவா? மனிதர்கள் பொறுப்பாளிகளாக இருக்கும் இந்தக் காரணங்கள் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இந்த ஓர் உண்மையை நமக்கு நினைப்பூட்டுகின்றன, மனிதன் ‘தன் நடைகளை நடத்த’ இயலாதவனாய் இருக்கிறான். (எரேமியா 10:23) இயற்கை அறிகுறிகள் பற்றியும், அதிகாரிகள் விடுக்கும் எச்சரிக்கைகள் பற்றியும் மக்களுக்கு இருக்கும் மனப்பான்மை மனிதன் பொறுப்பாளியாக இருக்கும் இன்னொரு காரணமாகும்.

எச்சரிக்கை அடையாளங்களைக் கண்டறிய கற்றுக்கொள்ளுங்கள்

இயற்கைப் பேரழிவுகள் நம்மிடம் சொல்லிவிட்டு தாக்குவதில்லை என்பதை முதலாவது நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘சமயமும் எதிர்பாரா சம்பவமும் நாம் அனைவருக்குமே நேரிடுகிறது’ என புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளில் பிரசங்கி 9:11 சொல்கிறது. என்றாலும், வரப்போகிற ஆபத்தைக் குறிக்கும் இயற்கை அறிகுறிகள் அல்லது அதிகாரிகள் விடுக்கும் எச்சரிக்கை செய்திகள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, மக்கள் இத்தகைய அறிகுறிகளை அறிந்துகொள்ளும்போது அவர்கள் தப்பிப்பிழைப்பதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது.

சுனாமி, 2004-ல் இந்தோனிஷியாவிலுள்ள சிமியூலு தீவைத் தாக்கியபோது, அங்கிருந்த பல்லாயிரக்கணக்கானோரில் ஏழு பேர் மட்டுமே இறந்து போனார்கள். வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் உள்வாங்கியபோது சுனாமி வர வாய்ப்பிருந்ததை அறிந்து ஏராளமான மக்கள் தப்பி ஓடினார்கள். அதைப்போல, எச்சரிக்கைகளுக்குக் கவனம் செலுத்தியதால் பயங்கரமான புயல்களிலிருந்தும் எரிமலைக் குமுறல்களிலிருந்தும் மக்கள் தப்பிப்பிழைத்திருக்கிறார்கள். ஏனென்றால், சில சமயங்களில் இயற்கையின் எச்சரிப்புகள் அரசாங்க எச்சரிப்புகளைவிட முன்னதாகவே வந்துவிடுகின்றன; முக்கியமாக, அழிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் பகுதியில் நீங்கள் வாழ்ந்தால் இந்த இரண்டு எச்சரிக்கைகளைப்பற்றியும் அறிந்திருப்பது ஞானமானதாகும்.

என்றாலும், “ஆபத்து வருமென்று தெளிவாகத் தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனப்பான்மை மக்களுக்கு” இருப்பது வருத்தமான விஷயமாகும் என்று எரிமலைகளை ஆராயும் நிபுணர் ஒருவர் சொல்கிறார். முக்கியமாக, விடுத்த எச்சரிக்கைகள் தவறிப்போகிற அல்லது நீண்ட காலத்திற்கு முன்பு அழிவு ஏற்பட்ட பகுதிகளில் இது உண்மையாக இருக்கிறது. சிலசமயங்களில், அழிவு ஆரம்பித்து விட்டதைக் கண்ணால் பார்த்தாலும்கூட மக்கள் தங்களுடைய உடைமைகளை விட்டுவர விரும்புகிறதில்லை.

அநேக பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாறிச்செல்ல முடியாத அளவுக்கு பரம ஏழைகளாக இருக்கிறார்கள். இந்த ஏழ்மை நிலைக்குக் காரணம் மனிதர்களுடைய கையாலாகாத்தனமே அன்றி நம்முடைய படைப்பாளர் அல்ல. உதாரணமாக, அரசாங்கங்கள் போர்க்கருவிகளை உற்பத்தி செய்வதற்குப் பணத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டிச் செலவழிக்கின்றன; ஆனால், தேவைப்படுவோருக்கு உதவ அற்ப சொற்ப பணத்தையே செலவழிக்கின்றன.

ஆயினும், அநேக மக்களுடைய சூழ்நிலை என்னவாக இருந்தாலும் அவர்களுக்கு ஓரளவு உதவி கிடைக்கிறது. அதை எப்படிச் சொல்ல முடியும்? தம்முடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் மூலமாக சிறந்த, ஏராளமான நியமங்களைக் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார்; அவற்றை நாம் கடைப்பிடிக்கும்போது நம்முடைய உயிர் காப்பாற்றப்பட முடியும்.

உயிர்களைக் காக்கும் நியமங்கள்

◼ கடவுளைப் பரிட்சித்துப் பார்க்காதீர்கள். “உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக” என்று உபாகமம் 6:16 கூறுகிறது. சரீர ரீதியான தீமைகளிலிருந்து கடவுள் தங்களை எப்போதும் காப்பாற்றுவார் என நினைத்துக்கொண்டு உண்மைக் கிறிஸ்தவர்கள் வாழ்க்கைபற்றிய மூடநம்பிக்கையோடு இல்லை. எனவே, ஆபத்து வருகையில் அவர்கள் கடவுளுடைய வழிநடத்துதலால் தூண்டப்பட்டு சொல்லப்பட்ட இந்த அறிவுரைக்குச் செவிகொடுக்கிறார்கள்: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.”—நீதிமொழிகள் 22:3.

◼ உடைமைகளைவிட உயிர் முக்கியம். “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) ஆம், பொருளாதாரத்தினால் ஓரளவு பயனுண்டு; ஆனால், மரணத்திலிருந்து அது நம்மைக் காப்பாற்றாது. எனவே, உயிரை நேசிக்கிறவர்களும் கடவுளுடைய சேவையை உயர்வாக மதிக்கிறவர்களும் சொத்தைக் காப்பாற்றுவதற்காக தேவையில்லாமல் ஆபத்தில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.—சங்கீதம் 115:17.

டாடாஸீ என்பவர் ஜப்பானில் வாழ்கிறார், 2004-ல் ஒரு பூகம்பம் தாக்கிய உடனேயும் அரசாங்கம் வழிமுறை கொடுக்கும் முன்னும் அவர் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறினார். வீட்டையும் உடைமைகளையும்விட அவருக்கு உயிர்தான் அதிக மதிப்பு வாய்ந்ததாக இருந்தது. அதே பகுதியில் வாழ்கிற ஆகிரா என்பவர் இவ்வாறு எழுதினார்: “சேதத்தின் உண்மையான அளவு பொருள் இழப்பைப் பொருத்ததல்ல ஒருவருடைய கண்ணோட்டத்தைப் பொருத்தது. இந்த அழிவு என்னுடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்வதற்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு என கருதினேன்.”

◼ அரசாங்க எச்சரிக்கைகளுக்குச் செவிகொடுங்கள். ‘மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.’ (ரோமர் 13:1) இருக்கும் இடத்தைவிட்டு வெளியேற அரசாங்கம் கட்டளையிடும்போது அல்லது மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றச் சொல்லும்போது நாம் அதற்குச் செவிகொடுப்பது ஞானமான செயலாகும். வெளியேறுமாறு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு டாடாஸீ கீழ்ப்படிந்து, ஆபத்தான பகுதியைவிட்டுத் தூரமான பகுதிக்குச் சென்றார்; அதனால், பூமியதிர்ச்சிக்குப்பின் வந்த அதிர்விலிருந்து அவர் காயமோ மரணமோ அடையவில்லை.

அழிவின் ஆபத்தைக் குறித்து அரசாங்க எச்சரிக்கைகள் எதுவும் வரவில்லையென்றால், கிடைத்த எல்லா உண்மைகளையும் கருத்தில்கொண்டு எப்பொழுது என்ன செய்ய வேண்டுமென தனிப்பட்ட விதமாக மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அழிவிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கு பல பகுதிகளில் உள்ளூர் அரசாங்கங்கள் உதவியான வழிநடத்துதல்களைக் கொடுக்கலாம். அப்படி உங்களுடைய பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தால் அதை நன்கு அறிந்திருக்கிறீர்களா? அதை உங்களுடைய குடும்பத்துடன் கலந்து பேசியிருக்கிறீர்களா? (அருகிலுள்ள பெட்டியைக் காண்க.) யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள், உள்ளூர் கிளை அலுவலகத்தின் வழிநடத்துதலின் கீழ் உலகின் பல பகுதிகளில் பேரழிவு ஏற்படும் ஆபத்து இருக்கும் அல்லது நடக்கும் சமயத்தில் பின்பற்ற வேண்டிய அவசர விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த விதிமுறைகள் மிகவும் உதவியாய் இருந்திருக்கின்றன.

◼ கிறிஸ்தவ அன்பைக் காட்டுங்கள். “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று இயேசு கூறினார். (யோவான் 13:34) சுய தியாகம் செய்து, கிறிஸ்து காட்டியது போன்ற அன்பையும் காட்டுபவர்கள், இயற்கைப் பேரழிவிலிருந்து தப்பிக்கத் தயாராவதற்கு அல்லது அதிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கு ஒருவருக்கொருவர் உதவ அனைத்தையும் செய்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய மத்தியில் இருக்கும் சபை மூப்பர்கள் சபையின் எல்லா உறுப்பினர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்களா அல்லது அவர்களுக்குப் பாதுகாப்பான இடம் வேண்டுமா என உறுதிசெய்து கொள்வதற்குச் சோர்வின்றி எல்லாருடனும் தொடர்புகொள்கிறார்கள். மேலும், உயிர் வாழ்வதற்குத் தேவையான சுத்தமான தண்ணீர், உணவு, உடைகள், அத்தியாவசியமான மருந்துகள் போன்றவை இருக்கிறதா என்பதையும் அவர்கள் சரிபார்த்து நிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள். அதே சமயத்தில், பாதுகாப்பான இடங்களில் குடியிருக்கும் சாட்சிகளுடைய குடும்பத்தினர் வெளியேறி வரும் சக சாட்சிகளை வரவேற்று ஏற்றுக்கொள்கிறார்கள். இதுபோன்ற அன்பு உண்மையில் ‘பூரணசற்குணத்தின் கட்டாக’ இருக்கிறது.—கொலோசெயர் 3:14.

சிலர் முன்கணிப்பதுபோல இயற்கைப் பேரழிவுகள் படுபயங்கரமாய் உருவெடுக்குமா? இருக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு அல்ல. ஏன்? கடவுளை விட்டுப் பிரிந்து வந்த மனிதகுலத்தின் துயர சகாப்தம் கல்லறைக்குப் போகும் காலம் நெருங்கிவிட்டது. அதன் பிறகு, இந்த முழு பூமியும் அதன் குடிமக்களும் முழுவதுமாக யெகோவாவின் அன்பான அரசாட்சியின்கீழ் வருவார்கள். அவ்வாட்சியின் அதிசயமான ஆசீர்வாதங்களை நாம் இப்பொழுது காணலாம்.

[அடிக்குறிப்புகள்]

a பூமியதிர்ச்சிகள், தாறுமாறான வானிலை, எரிமலை குமுறல்கள் ஆகியவையும் இன்னும் மற்றவையும் பேரழிவுகளாக இல்லை. அவை மனிதர்களின் உயிரையும் சொத்துக்களையும் பாதிக்கும்போது மட்டுமே இயற்கைப் பேரழிவுகளாக ஆகின்றன.

b கடவுள் ஏன் துன்பத்தையும் தீமையையும் தற்காலிகமாக அனுமதித்திருக்கிறார் என்பதற்கான விரிவான விளக்கத்திற்கு, “‘ஏன்?’—கடினமான கேள்விக்குப் பதில்” என்ற தலைப்பில் நவம்பர் 2006 விழித்தெழு!-வில் வெளிவந்த தொடர் கட்டுரைகளையும், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் 11-ஆம் அதிகாரத்தையும் காண்க. இவை யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

தப்பியோட நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா?

நியு யார்க் நகரத்தின் நெருக்கடிநிலை நிர்வாக அலுவலகம், அவசரத்திற்குத் தேவைப்படும் முக்கியமான பொருள்கள் அடங்கிய உறுதியான, தூக்கிச் செல்வதற்குச் சுலபமான ஒரு “பையை” எடுத்துக்கொண்டு வெளியேறும் திட்டத்தை வீட்டுக்காரர்களுக்கு சிபாரிசு செய்கிறது. பின்வரும் பொருள்கள் அதில் இருக்கலாம்: c

◼ நீர் உட்புகாத ஓர் உறையில் முக்கியமான ஆவணங்களின் நகல்கள்

◼ வாகனத்தினுடைய, வீட்டினுடைய கூடுதலான சாவிகள்

◼ கிரெடிட் கார்டுகள் அல்லது டெபிட் கார்டுகள், பணம்

◼ புட்டியில் தண்ணீர், கெட்டுப்போகாத உணவு

◼ டார்ச் லைட்டு(கள்), AM/FM ரேடியோ, செல்ஃபோன் (வைத்திருந்தால்), கூடுதலான பேட்டரிகள்

◼ குறைந்தது ஒரு வாரத்திற்கான மருந்துகள், கொடுக்கப்படும் அளவும் காலமும் அடங்கிய பட்டியல், மருந்துச் சீட்டுகள், மருத்துவர்களுடைய பெயரும் தொலைபேசி எண்களும். (தேதி காலாவதியாவதற்கு முன் மருந்துகளை மாற்றுவதற்கு மறந்துவிடாதீர்கள்)

◼ முதல் உதவிப் பெட்டி

◼ உறுதியான, செளகரியமான காலணிகளும் மழை நீர் புகாத ஆடைகளும்

◼ உங்கள் குடும்பத்தார் தொடர்புகொள்வதற்கான தகவல், எங்கு சந்திப்பது என்பது பற்றிய தகவல், உள்ளூர் வரைபடம்

◼ குழந்தை காப்பு பொருள்கள்

[அடிக்குறிப்பு]

c மேலே சொல்லப்பட்டவை அதிகாரப்பூர்வ பட்டியலைச் சார்ந்திருந்தாலும் சிறிய மாறுதல்களைச் செய்திருக்கிறோம். பட்டியலிடப்பட்ட அனைத்துமே உங்களுக்கு அல்லது நீங்கள் வாழும் பகுதிக்குப் பொருந்தாததாக இருக்கலாம், சில பொருள்களை நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். உதாரணமாக, வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் விசேஷத் தேவைகள் இருக்கின்றன.

[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]

USGS, David A. Johnston, Cascades Volcano Observatory