Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கருத்தடை—ஒழுக்க நியதிக்கு எதிரானதா?

கருத்தடை—ஒழுக்க நியதிக்கு எதிரானதா?

பைபிளின் கருத்து

கருத்தடை—ஒழுக்க நியதிக்கு எதிரானதா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மணமான தம்பதியர் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவது தவறா? உங்கள் பதில், பெரும்பாலும் உங்களுடைய மத நம்பிக்கைகளைப் பொறுத்து இருக்கலாம். கருவுறுவதைத் தடுப்பதற்கான எந்தவொரு செயலும் “முற்றிலும் தீயது” என கத்தோலிக்க சர்ச் போதிக்கிறது. பிள்ளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் தம்பதியர் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டுமென கத்தோலிக்கக் கோட்பாடு கற்பிக்கிறது. அப்படியானால், கத்தோலிக்க சர்ச்சைப் பொறுத்தவரை கருத்தடை செய்வது “ஒழுக்க நியதிக்கு எதிரானது.”

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வது அநேகருக்கு கடினமாய் இருக்கிறது. இவ்விஷயத்தின் அடிப்படையில் பிட்ஸ்பர்க் போஸ்ட்-கஸெட்-ல் வெளிவந்த ஒரு கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்த சர்ச் அனுமதியளிக்க வேண்டும் என அமெரிக்காவிலுள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் சொல்கிறார்கள். . . . அதோடு, ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் சர்ச்சின் கட்டுப்பாட்டை மீறுகிறார்கள்.” மூன்று பிள்ளைகளுக்குத் தாயான லின்டா அவர்களில் ஒருவர்; கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிற அவர் இவ்வாறு கூறுகிறார்: “என்னுடைய மனசாட்சிக்கு இது தவறாகப் படவில்லை.”

இந்த விஷயத்தின்பேரில் கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?

உயிர் மதிப்புமிக்கது

ஒரு குழந்தையின் உயிரை, ஏன் தாயின் வயிற்றில் வளர்ந்துவருகிற கருவையும்கூட கடவுள் மதிப்புமிக்கதாய்க் கருதுகிறார். பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீது கடவுளுடைய ஏவுதலால் இவ்வாறு எழுதினார்: ‘என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். . . . என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்கள் அனைத்தும், . . . உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.’ (சங்கீதம் 139:13, 16) கருவுறும் சமயத்தில் ஒரு புதிய உயிர் தோன்றுகிறது. தாயின் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு கேடு விளைவிக்கிற ஒருவர் அதற்குப் பொறுப்புள்ளவராய் இருப்பார் என நியாயப்பிரமாண சட்டமும்கூட குறிப்பிடுகிறது. சொல்லப்போனால், இரு ஆண்களுக்கு இடையே நடந்த சண்டையில் கர்ப்பிணியான ஒரு பெண்ணுக்கோ அவளுடைய வயிற்றிலுள்ள பிள்ளைக்கோ உயிர்ச்சேதம் ஏற்பட்டால் அதைக் குறித்து நியாயாதிபதிகளிடம் அறிவிக்க வேண்டுமென யாத்திராகமம் 21:22, 23 குறிப்பாகத் தெரிவிக்கிறது. அவர்கள், அந்தச் சூழ்நிலைகளையும் எந்தளவுக்கு வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் சீர்தூக்கிப்பார்க்க வேண்டியிருந்தது. ஆனால், அதற்குத் தண்டனையாக “ஜீவனுக்கு ஜீவன்” கொடுக்கப்படலாம்.

இந்த நியமங்கள், கருத்தடை விஷயத்திற்கும் பொருந்துகின்றன; ஏனெனில், சில கருத்தடை முறைகள் கருக்கலைப்பை ஏற்படுத்துவதாய்த் தெரிகின்றன. இத்தகைய கருத்தடை முறைகள், உயிருக்கு மதிப்பு கொடுப்பது சம்பந்தமான பைபிள் நியமத்திற்கு இசைவானவை அல்ல. என்றாலும், பெரும்பாலான கருத்தடைச் சாதனங்கள் கருக்கலைப்பை ஏற்படுத்துபவை அல்ல. அத்தகைய முறைகளைப் பயன்படுத்துவதுபற்றி என்ன சொல்லலாம்?

பிள்ளைகளைப் பிறப்பிக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு பைபிளில் எங்குமே கட்டளை கொடுக்கப்படவில்லை. “பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” என்று முதல் மனித தம்பதியருக்கும் நோவாவின் குடும்பத்தினருக்குமே கடவுள் கட்டளை கொடுத்திருந்தார். ஆனால், இக்கட்டளை கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. (ஆதியாகமம் 1:28; 9:1) ஆகவே, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா, எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம், எப்போது பெற்றெடுக்கலாம் என்பதைப் பற்றியெல்லாம் தம்பதியர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். அதுபோலவே, கருத்தடைச் செய்வதையும் பைபிள் கண்டனம் செய்வதில்லை. அப்படியானால், பைபிளின் கருத்துபடி கருக்கலைப்பை ஏற்படுத்தாத ஏதேனும் கருத்தடை முறையைப் பயன்படுத்துவது தம்பதியருடைய தனிப்பட்ட தீர்மானம். என்றாலும், கத்தோலிக்க சர்ச் கருத்தடையை கண்டனம் செய்வதற்குக் காரணம் என்ன?

மனித ஞானம் Vs தெய்வீக ஞானம்

பொது சகாப்தம் இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொண்டவர்கள், பிள்ளையைப் பெற்றெடுக்கும் நோக்கத்தோடு மட்டுமே தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டுமென்ற ஸ்தோயிக் கோட்பாட்டை முதன்முதலில் ஏற்றுக்கொண்டதாக கத்தோலிக்க ஆய்வு நூல்கள் விளக்குகின்றன. இந்தக் கருத்துக்குக் காரணம் தத்துவஞானமே ஒழிய பைபிள் அல்ல. அது பைபிள் ஞானத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக மனித ஞானத்தின் அடிப்படையில் இருந்தது. பல நூற்றாண்டுகளாக நடப்பில் இருந்த இந்தக் கோட்பாடு, கத்தோலிக்க இறையியல் வல்லுநர்கள் பலரால் விரித்துரைக்கப்பட்டது. a பாலியல் இன்பத்திற்காக மட்டுமே தாம்பத்திய உறவு கொள்வது பாவம் என்பதும் அத்தகைய உறவில் கருவுறுவதற்கான வாய்ப்பை தவிர்ப்பது ஒழுக்கக்கேடானது என்பதும் அந்தத் தத்துவத்தினால் உருவான கருத்துகளே. ஆனால், பைபிள் இவ்வாறெல்லாம் போதிப்பதில்லை.

பைபிளிலுள்ள நீதிமொழிகள் புத்தகம், கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்வதால் விளையும் இன்பத்தைக் கவிதை நடையில் இவ்வாறு விவரிக்கிறது: “உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு. . . . உன் ஊற்றுகள் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.”நீதிமொழிகள் 5:15, 18, 19.

கணவன் மனைவிக்கு இடையிலான பாலுறவு கடவுள் தந்த பரிசு ஆகும். அதே சமயத்தில், அதன் நோக்கம் பிள்ளைகளைப் பெற்றெடுப்பது மட்டுமே அல்ல. தாம்பத்திய உறவின்மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் பரிவையும் பாசத்தையும்கூட வெளிக்காட்ட முடிகிறது. ஆகவே, கர்ப்பமாகாமல் இருப்பதற்காக ஏதேனும் கருத்தடை முறையை பயன்படுத்த தம்பதியர் தீர்மானித்தால், அது அவர்களுடைய விருப்பம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.—ரோமர் 14:4, 10-13.

[அடிக்குறிப்பு]

a “கருத்தடைக்கு எதிராக போப் விதித்த முதல் பொதுச் சட்டம்” என நியூ கத்தோலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிற சட்டத்தை, ஒன்பதாம் கிரகரி 13-ஆம் நூற்றாண்டில்தான் அமல்படுத்தினார்.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ கணவனும் மனைவியும் பாலுறவு கொள்வதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?—நீதிமொழிகள் 5:15, 18, 19.

◼ கிறிஸ்தவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தினால் எதை நினைவில் வைக்க வேண்டும்? —யாத்திராகமம் 21:22, 23.

◼ கருத்தடைகளைப் பயன்படுத்துகிற தம்பதியரை மற்றவர்கள் எப்படிக் கருத வேண்டும்?—ரோமர் 14:4, 10-13.

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

“பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” என்று முதல் மனித தம்பதியருக்கும் நோவாவின் குடும்பத்தினருக்குமே கடவுள் கட்டளை கொடுத்திருந்தார். ஆனால், இக்கட்டளை கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படவில்லை