Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காட்டிலிருந்து இலவசமாய். . .

காட்டிலிருந்து இலவசமாய். . .

காட்டிலிருந்து இலவசமாய். . .

பின்லாந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஐரோப்பாவின் ஸ்காண்டினேவியப் பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் காட்டுக்குள் சென்று காட்டுப் பெர்ரி பழங்களை எடுத்து வருவதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். உதாரணத்திற்கு, பின்லாந்து நாட்டில் காட்டுக்குள் செல்ல வனப் பிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதனால், அந்நாட்டில் எல்லாருமே காட்டுக்குள் சுதந்தரமாக உலாவர முடிகிறது. ஒருவேளை காட்டின் சில பகுதிகள் தனி நபர்களுக்குச் சொந்தமாய் இருந்தாலும் அங்கேயும்கூட உலாவரலாம். ஆனால், அவர்களுடைய வீட்டைச் சேதப்படுத்தக்கூடாது, வீட்டுக்கு மிக அருகிலும் செல்லக்கூடாது. பொது மக்களுக்கு வழங்கப்படும் இந்த அனுமதி, எழுதப்பட்ட சட்டமல்ல, மாறாக இது ஸ்காண்டினேவிய மக்களிடம் காலங்காலமாய் இருந்துவரும் பழக்கமாக இருக்கிறது. காட்டுப்புஷ்பங்கள், காளான்கள், பெர்ரி பழங்கள் ஆகியவை எங்கு வளர்ந்தாலும் அவற்றை எடுக்க இந்தப் பழக்கமானது பொது மக்களுக்கு அனுமதி அளிக்கிறது.

பின்லாந்தில் கிட்டத்தட்ட 50 வகை காட்டுப் பெர்ரிகளைக் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை உண்ணத்தக்கவையாகும். அவற்றுள் மிக எளிதாக கிடைப்பவை பில்பெர்ரிகள், க்ளவுட்பெர்ரிகள், லிங்கன்பெர்ரிகள் ஆகும். a—இக்கட்டுரையிலுள்ள பெட்டிகளைக் காண்க.

பல வண்ணங்களிலும் சுவைகளிலும் உள்ள பெர்ரிகள், உணவுக்கு பல்சுவையூட்டுகின்றன. அவை சத்து நிறைந்தவையாகவும் இருக்கின்றன. “[கோடை காலத்தின்] நீண்ட பகல் பொழுதில் வளரும் ஸ்காண்டினேவிய பெர்ரிகள் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் உள்ளன; மூக்கைத் துளைக்கும் நறுமணங்களை வீசுகின்றன, தாதுக்களையும் உயிர்ச்சத்துக்களையும் வாரி வழங்குகின்றன” என்று லூயோனோன்மார்யாயோபாஸ் (கானக பெர்ரிகளுக்கு வழிகாட்டி) என்ற புத்தகம் சொல்கிறது. கூடுதலாக, இந்த பெர்ரிகளில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கவும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்ல, நல்ல ஆரோக்கியத்தை தருவதாகக் கருதப்படும் ஃப்ளேவனாய்டுகளும் ஃபீனாலிக் அமிலங்களும் இந்தப் பெர்ரிகளில் இருக்கின்றன.

காடுகளுக்குச் சென்று பெர்ரிகளைப் பறிப்பதில் ஏதேனும் பலனுண்டா? “கடைகளில் பெர்ரி பழங்களின் விலை அதிகமாக இருப்பதால், காடுகளுக்குச் சென்று அவற்றை எடுப்பது செலவுகளைக் குறைக்க உதவுகிறது. நீங்களாகவே சென்று அவற்றை பறிப்பதால் அவை புத்தம் புதிய பெர்ரிகள் என உங்களுக்குத் தெரிகிறது” என்று பெர்ரிகளை பறிப்பதில் கொள்ளை ஆர்வம்கொண்ட யுகா சொல்கிறார். கூடுதலான பலனைப்பற்றி அவருடைய மனைவி நீனா இவ்வாறு சொல்கிறார்: “பெர்ரிகளை பறிப்பதற்குப் போகும்போது, காடுகளில் குடும்பத்தோடு ஒரு சிற்றுலாவை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கிறது.”

“ஆனால், உங்களோடுகூட பிள்ளைகளையும் அழைத்துச் சென்றிருந்தால் அவர்கள்மேல் ஒரு கண் வைப்பது அவசியம். இல்லையென்றால், அவர்கள் தவறான பெர்ரி பழங்களைச் சாப்பிட்டுவிடவோ வழிதவறி போய்விடவோ வாய்ப்பிருக்கிறது” என்று நீனா மேலும் கூறுகிறார். சில பெர்ரி வகைகள் விஷமுடையவையாய் இருப்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஸ்காண்டினேவிய மக்களில் அநேகரைப் போலவே, யுகாவும் நீனாவும் காட்டுப்புறங்களில் நேரம் செலவிடுவதை விரும்புகிறார்கள். நீனா இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு காடு என்றால் கொள்ளைப் பிரியம். சுத்தமான காற்றும் அமைதியும் கை கோர்த்து விளையாடும் தூய்மையான இடம் அது. அது என் மனதை புத்துணர்ச்சியால் நிரப்புகிறது. பிள்ளைகளும் அங்கு சந்தோஷமாய் இருக்கிறார்கள்.” அந்தக் காடுகளில் குடிகொண்டிருக்கும் அமைதி, குடும்பமாய் சேர்ந்து கலந்து பேசுவதற்கும் தியானிப்பதற்கும் தோதான இனிய சூழலாய் அமைவதாக யுகாவும் நீனாவும் உணருகிறார்கள்.

பளபளவென்று இருக்கிற, புதிதாகப் பறித்த பெர்ரிகள் அதிக சுவையுள்ளவையாகவும் ஊட்டச்சத்து நிறைந்தவையாகவும் இருக்கின்றன. ஆனால், அவை பறிக்கப்படுகையில் இருப்பதுபோலவே ரொம்ப நாட்களுக்கு இருப்பதில்லை. குளிர்காலத்தில் பெர்ரிகளைச் சாப்பிட வேண்டுமென்றால் அவற்றைப் பதப்படுத்தி வைக்க வேண்டும். முன்பெல்லாம், குளிராயிருக்கும் நிலத்தடி அறைக்குள் பெர்ரிகளை மக்கள் பதப்படுத்தி வைத்தார்கள், ஆனால் இன்று, பொதுவாக அவற்றை குளிர்பதனப் பெட்டிக்குள் உறைநிலையில் வைக்கிறார்கள். அநேக பெர்ரிகளிலிருந்து ஜாம்களும் சாறுகளும் தயாரிக்கப்படுகின்றன.

பொருத்தமாகவே, சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஸ்வென்ஸ்கா பெர்போகன் (ஸ்வீடிஷ் பெர்ரி புத்தகம்) என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: “பனிக்காலத்திலேயே அதிக குளிராயிருக்கும் சமயத்தில், கோடை கால பெர்ரி ஜாடிகளை வெளியே எடுப்பது எவ்வளவு புத்துணர்ச்சியளிக்கிறது! கடந்துபோன கோடை காலத்தை அது நினைவுக்குக் கொண்டுவருகிறது. வரவிருக்கும் கோடை காலத்திற்காக வழிமீது விழி வைத்து காத்திருக்கச் செய்கிறது.” பெர்ரிகள் பல விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. காலை உணவின்போது தயிரோடும் ஓட்ஸ் கஞ்சியோடும் பெர்ரியைச் சேர்த்து சாப்பிடுவதில்தான் என்னே சுவை! சுவையான இனிப்பு வகைகளையும் பேஸ்ட்ரிகளையும் தயாரிப்பதில் புத்துணர்வளிக்கும் காட்டு பெர்ரிகள் பயன்படுகின்றன. பெர்ரிகளால் ஆன கூழை அல்லது ஜெல்லியை அநேக உணவு வகைகளோடு சேர்த்துச் சாப்பிடுவதில்தான் என்னே ருசி!

அநேகர் கடைகளிலிருந்து பெர்ரிகளை வாங்குகிறார்கள். ஆனால், சூரியன் மிளிரும் ஒரு நாள், சுத்தமான காற்றை சுவாசித்தவாறே, கவலைகளை மறந்து, காட்டின் அமைதியை ரசித்தபடி சுவையான பெர்ரிகளுக்காக நீங்கள் தேடி வருவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். சுவையான உணவை இலவசமாகப் பெற்றிட இதைவிட சிறந்த வழி வேறெதுவாக இருக்க முடியும்! இது சங்கீதக்காரனின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றன: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.”—சங்கீதம் 104:24.

[அடிக்குறிப்பு]

a இக்கட்டுரையில் “பெர்ரி” என்பது சாதாரணமாகப் புரிந்துகொள்ளப்படும் அர்த்தத்தில் சாறு நிறைந்த எந்தச் சிறிய பழத்தையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. தாவரவியலில் “பெர்ரி” என்பது பொதுவாக நிறைய விதைகளை உடைய சாறு நிறைந்த சாதாரண பழங்களைக் குறிக்கிறது. இந்த விளக்கத்தின்படி வாழைப்பழமும் தக்காளியும்கூட பெர்ரி வகைகளாகும்.

[பக்கம் 24, 25-ன் பெட்டி/படங்கள்]

பில்பெர்ரி (Vaccinium myrtillus)

பிரபலமான இந்த இனிப்பு பெர்ரி, வார்ட்ல்பெர்ரி என்றும் அழைக்கப்படுகிறது. சாஸ், களி, ஜாம், அல்லது சாறு தயாரிக்கவும் பில்பெர்ரி பயன்படுகிறது. பில்பெர்ரி-பை போன்ற அநேக பேஸ்ட்ரி வகைகளைத் தயாரிக்கவும் இந்தப் பெர்ரி பயன்படுகிறது. புதிதாய் பறிக்கப்பட்ட பில்பெர்ரிகளைப் பாலோடு சேர்த்து சாப்பிடுவது அதன் சுவையை கூட்டும். ஆனால், பில்பெர்ரியை திருட்டுத்தனமாக சாப்பிட முயற்சி செய்யாதீர்கள், ஏனென்றால், பில்பெர்ரி வாயிலும் உதடுகளிலும் நீலநிற சாயத்தை இட்டு காட்டிக்கொடுத்துவிடும். அது புரளி பெர்ரி என்றும் அழைக்கப்படுகிறது.

[பக்கம் 25-ன் பெட்டி/படங்கள்]

கிளவுட் பெர்ரி (Rubus chamaemorus)

இந்தப் பெர்ரி வகை, சதுப்புநிலங்கள் போன்ற ஒதுக்குப்புற இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. பின்லாந்தின் வடக்குப் பகுதியில் இது சாதாரணமாகக் கிடைக்கிறது. வைட்டமின் ‘ஏ,’ ‘சி’ அடங்கியிருக்கும் கிளவுட் பெர்ரி சாறு நிறைந்ததாகவும் ஊட்டமுள்ளதாகவும் இருக்கிறது. ஓர் ஆரஞ்சு பழத்தில் இருப்பதைவிட மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான வைட்டமின் ‘சி’ இதில் இருக்கிறது. கிளவுட் பெர்ரிகள் அதிக மதிப்புவாய்ந்தவையாக இருக்கின்றன. இவை சதுப்பு நிலத்தின் பொன் என்றும் சில நேரங்களில் அழைக்கப்படுகின்றன. இனிப்பான இந்த பெர்ரி வகைகள் பல விதமான இனிப்பு பதார்த்தங்களின் சுவையைக் கூட்டுகின்றன, சுவையான மதுபானத்தையும் தயாரிக்க உதவுகின்றன.

[படத்திற்கான நன்றி]

Reijo Juurinen/Kuvaliiteri

[பக்கம் 25-ன் பெட்டி/படங்கள்]

லிங்கன்பெர்ரி (Vaccinium vitis-idaea)

கிரான்பெர்ரி இனத்தைச் சேர்ந்த இந்த பெர்ரி வகை பின்லாந்திலும் சுவீடனிலும் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். லிங்கன்பெர்ரி கூழை அல்லது ஜெல்லியை உணவோடு சேர்த்து சாப்பிடுகையில் மிக ருசியாக இருக்கும். சாஸ், கூழ், சாறு, பேஸ்ட்ரி வகைகள் ஆகியவற்றைத் தயாரிக்க கடுஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பெர்ரி பயன்படுகிறது. லிங்கன்பெர்ரியில் இயற்கையாகவே இருக்கிற அமிலங்கள் அது சீக்கிரத்தில் கெட்டுப்போகாதபடி பதப்படுத்திவைக்கிறது. இந்தப் பெர்ரியின் அமிலத்தன்மை சற்று கூடுதலாக இருப்பதால் அது கொஞ்சம் புளிப்பாக இருக்கும். எனவே, அதை உண்டு பழக கொஞ்ச நாட்கள் எடுக்கும்.

[பக்கம் 25-ன் பெட்டி]

அது எப்போதுமே மகிழ்ச்சியான அனுபவமல்ல!

காட்டு பெர்ரிகளைப் பறிப்பது அநேக விதங்களில் பலன்தருகிற மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பது உண்மைதான். b ஆனால், அதில் சவால்களும் இருக்கின்றன. லாப்லாந்தைச் சேர்ந்த தம்பதிகளான பாசியும் டுயிரியும் வீட்டுக்காகவும் விற்பனைக்காகவும் பெர்ரிகளை பறிப்பவர்கள். பெர்ரிகளை எடுக்கும்போது சில சமயம் கொசுக்கள், பெரிய ஈக்கள் போன்ற தொல்லை தரும் அநேகப் பூச்சிகள் தங்களைச் சூழ்ந்துவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். “அவை வாய்க்குள்ளும் கண்களுக்குள்ளும்கூட நுழைந்துவிடும், அவற்றின் தொல்லை தாங்க முடியாது” என்று நடுங்கியபடி கூறுகிறார் டுயிரி. ஆனாலும், சரியான உடை அணிவதாலும் பூச்சி விரட்டிகளை உபயோகிப்பதாலும் அவற்றிலிருந்து ஓரளவு உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

காட்டுக்குள் நடந்து செல்வதும் சிரமமானதாக இருக்கலாம் முக்கியமாக, சதுப்பு நிலங்களில் நடந்து செல்வதென்றால் சொல்லவே தேவையில்லை. திடமான நிலம் என்று தோன்றுவதும்கூட புதைகுழியாக இருக்கக்கூடும். அதுமட்டுமல்ல, பாசியும் டுயிரியும் சொல்கிறபடி, பெர்ரிகளைப் பறிப்பது உடலை வருத்தும் வேலையாக இருக்கிறது. பல மணி நேரங்களுக்கு குனிந்தே இருப்பதாலும் கால்களை மடக்கியவாறே இருப்பதாலும் உங்கள் முதுகும் கால்களும் வலிக்க ஆரம்பித்துவிடலாம்.

பெர்ரிகளைக் கண்டுபிடிப்பதும் அவ்வளவு சுலபமான காரியமல்ல. பாசி இவ்வாறு சொல்கிறார்: “அநேக பெர்ரிகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு பல மணி நேரம் தொடர்ந்து நடக்க வேண்டியிருக்கும்.” டுயிரி இவ்வாறு சொல்கிறார்: “அநேக சந்தர்ப்பங்களில், பெர்ரிகளை எடுப்பதைவிட அவற்றைத் தேடுவதே நம்மை களைப்படையச் செய்துவிடும்.” பெர்ரிகளை பறித்த பிறகு அவற்றைச் சுத்தம் செய்வது அதைவிட கடினமான வேலை.

பெர்ரிகளை பறிப்பதில் இத்தனை சவால்கள் அடங்கியிருப்பதால் காட்டிலுள்ள மிருகங்களே அவற்றை அனுபவித்துவிட்டு போகட்டும் என்று சிலர் விட்டுவிடுகின்றனர். என்றாலும், பாசி, டுயிரி போன்ற அநேகர் பெர்ரிகளை பறிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் வருடந்தோறும் பெர்ரிகளைத் தேடி காடுகளுக்கும் சதுப்பு நிலங்களுக்கும் செல்கிறார்கள். பெர்ரிகளைப் பறிப்பதில் கிடைக்கிற சந்தோஷம், அதற்காக அவர்கள் செய்யும் தியாகத்தை மறக்கச் செய்கிறது.

[அடிக்குறிப்பு]

b எல்லா வகை பெர்ரிகளையும் நம்மால் சாப்பிட முடியாது. சில வகை பெர்ரிகள் விஷமானவை. காட்டுப் பெர்ரிகளை பறிப்பதற்கு முன், அவை உண்ணத்தக்கவையா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.