Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்பிக்கையான மனநிலை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

நம்பிக்கையான மனநிலை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

நம்பிக்கையான மனநிலை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

“மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்” என இஸ்ரவேலை ஆண்ட ஞானமுள்ள ராஜா சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். (நீதிமொழிகள் 17:22) பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட இந்த வார்த்தைகளில், ஞானம் பொதிந்திருப்பதை டாக்டர்கள் இன்று ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால், நம்மில் அநேகர் ‘மனமகிழ்ச்சியை’ இயல்பாகவே பெறுவதில்லை.

தினசரி வாழ்க்கையின் பிக்கல்பிடுங்கல்கள் மன உளைச்சலுக்கும் நம்பிக்கையற்ற மனநிலைக்கும் வழிநடத்துகின்றன; இவற்றிலிருந்து நம் யாராலும் தப்பிக்க முடியாது. எனினும், பிரச்சினைகளின் மத்தியிலும் நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்வது மிகச் சிறந்தது என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

நம்பிக்கையான மனநிலை என்பது “நம்பிக்கை கண்களோடு அல்லது மனநிலையோடு காரியங்களை நோக்குவது; எதிலும் சாதகமான முடிவையே எதிர்பார்ப்பது” ஆகும். தனக்கு நேரிடும் தோல்வியை ஒரு நம்பிக்கைவாதி எப்படி ஏற்றுக்கொள்வார்? அந்தத் தோல்வி நிரந்தரமானதென்று அவர் ஒரேடியாக முடிவுகட்டிவிட மாட்டார். இது, அவர் தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவர் என்று அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அதை ஏற்றுக்கொள்வதோடு அதற்கான காரணத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார். பிறகு, சூழ்நிலை அனுமதிப்பதற்கு ஏற்ப அந்த நிலைமையை மாற்றியமைக்க அல்லது மேம்படுத்த முயற்சி செய்கிறார்.

மறுபட்சத்தில், நம்பிக்கையற்ற மனநிலை உடையவரோ, தன்னுடைய துன்பத்திற்கெல்லாம் தான்தான் காரணம் என்று சதா தன்னையே நொந்துகொள்வார். தனக்கு எங்கும் தோல்வி எதிலும் தோல்வி என்று நினைத்துக்கொள்வார். அதோடு, தன் முட்டாள்தனமும் தனக்குத் திறமை இல்லாதிருப்பதும் எடுப்பான தோற்றம் அமையாததும்தான் தன் தோல்விக்குக் காரணம் என்று நினைத்துக்கொள்வார். இதன் விளைவாக, தான் வெற்றி பெறவே முடியாதவரென தனக்குத்தானே முத்திரைக் குத்திக்கொள்வார்.

நம்பிக்கையான மனநிலை நல்லாரோக்கியத்திற்கும் சுகவாழ்வுக்கும் கைகொடுக்குமா? நிச்சயம் கைகொடுக்கும். அமெரிக்காவில், மினிசோடா மாகாணத்தில், ரோசெஸ்டர் நகரிலுள்ள மேயோ க்ளினிக், 30 வருடங்களாக 800-க்கும் அதிகமான நோயாளிகளை வைத்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், நம்பிக்கைவாதிகள் நல்லாரோக்கியத்தையும் மற்றவர்களைவிட குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு நீண்ட ஆயுசோடு வாழ்ந்ததையும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தார்கள். நம்பிக்கைவாதிகள் மன அழுத்தத்தை நன்கு சமாளித்தார்கள் என்றும் சோர்வின் பிடியில் லேசில் சிக்கிக்கொள்வதில்லை என்றும்கூட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள்.

நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே போகும் இந்த உலகில் நம்பிக்கைவாதியாக இருப்பதென்பது அவ்வளவு சுலபமல்ல. நம்பிக்கையான மனநிலையோடு காரியங்களைச் சிந்திப்பது மிகக் கடினம் என்று அநேகர் உணருவதில் ஆச்சரியமில்லை. இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க என்ன செய்யலாம்? பக்கத்திலுள்ள பெட்டியில் உங்களுக்கு உதவும் சில டிப்ஸுகள் உள்ளன.

எனினும், மனமகிழ்ச்சிதான் எல்லாவற்றிற்கும் ஒரே மருந்து என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ஆரோக்கியமான, திருப்தியான வாழ்க்கைக்கு அது பாலமாய் அமைகிறது. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “சில ஏழைகள் எப்போதும் துக்கமாக இருக்கிறார்கள். ஆனால் மனதில் மகிழ்ச்சி கொண்ட ஜனங்களுக்கு வாழ்க்கை ஒரு விருந்தாகும்.”—நீதிமொழிகள் 15:15, ஈஸி டு ரீட் வர்ஷன்.

[பக்கம் 26-ன் பெட்டி/படம்]

நம்பிக்கையான மனநிலைக்கு சில டிப்ஸ் a

◼ நீங்கள் எதைச் செய்தாலும் அதை உங்களால் சந்தோஷமாக ரசித்து செய்ய முடியாது அல்லது எதிலும் தோல்விதான் மிஞ்சும் என்ற எண்ணம் தலைதூக்கினால் அதை வேறோடு பிடுங்கியெறியுங்கள். நல்லதையே எதிர்பாருங்கள்.

◼ உங்கள் வேலையில் சந்தோஷம் காண முயற்சி செய்யுங்கள். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் சரி அதில் உங்களுக்குத் திருப்தியளிக்கும் அம்சங்களைத் தேடிப் பாருங்கள்.

◼ நம்பிக்கைவாதிகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.

◼ உங்களால் முடிந்த காரியங்களை மட்டுமே செய்யுங்கள்; உங்களால் செய்ய முடியாதவற்றை ஒத்துக்கொள்ளுங்கள்.

◼ ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நடந்த மூன்று நல்ல விஷயங்களை எழுதி வையுங்கள்.

[அடிக்குறிப்பு]

a மேலே உள்ள சில குறிப்புகள் மேயோ க்ளினிக் வெளியிட்ட பிரசுரத்திலிருந்து எடுக்கப்பட்டவை.