Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பல் வலி காலங்காலமாய் வாட்டியெடுத்த வேதனை

பல் வலி காலங்காலமாய் வாட்டியெடுத்த வேதனை

பல் வலி காலங்காலமாய் வாட்டியெடுத்த வேதனை

ஓர் இடைக்காலப் பட்டண சதுக்கத்தின் ஒரு சந்தையில் பகட்டான உடையணிந்த போலி பல் மருத்துவன் ஒருவன் வலியே இல்லாமல் பல்லைப் பிடுங்குவதாகத் தம்பட்டமடிக்கிறான். அவனுடைய கூட்டாளி பயந்துபயந்து அவனருகே செல்வதுபோல் நடிக்கிறான். அந்தப் போலி மருத்துவனோ அவனுடைய பல்லைப் பிடுங்குவதுபோல் பாவனை செய்து இரத்தக் கறை படிந்த ஒரு பல்லை பிடுங்கிவிட்டதாக எல்லாருக்கும் காட்டுகிறான். அதை நிஜம் என்று நம்பி, பல் வலியில் தவிக்கிறவர்கள் இந்தப் போலி மருத்துவனிடம் வந்து தங்கள் பல்லை மட்டுமல்ல பணத்தையும் பறிகொடுக்கிறார்கள். இவர்களுடைய அலறல் சத்தத்தைக் கேட்டு மற்றவர்கள் பயந்து வராமல் போய்விடுவதைத் தவிர்க்கும் வண்ணம் மேளச் சத்தமும் ஊதுகொம்பு சத்தமும் தொனிக்கின்றன. ஆனால், கொஞ்ச நாட்களிலேயே சிலருக்கு பற்களில் சீழ் பிடித்து நிலைமை மோசமாகிவிடுகிறது. அந்தச் சமயத்திற்குள் அந்தப் போலி மருத்துவன் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய்விடுகிறான்.

இந்தக் காலத்தில் பல் வலியால் அவதிப்படுகிற பலரும் இப்படிப்பட்ட மோசக்காரர்களின் கைகளில் சிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நவீன பல் மருத்துவர்களால் பல் வலியை நீக்க முடிவதோடு பெரும்பாலும் பல் இழப்பையும் தடுக்க முடியும். அப்படியிருந்தும், பல் மருத்துவரிடம் செல்ல வேண்டுமென்றாலே அநேகர் நடுங்குகிறார்கள். பல் நோயாளிகளின் வலியை நீக்க பல் மருத்துவர்கள் எப்படிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்வது இன்றைய பல் மருத்துவத்தின் அருமையைப் புரிந்துகொள்ள நமக்கு உதவக்கூடும்.

மனிதர்களிடம் மிகப் பரவலாய் காணப்படுகிற நோய்களில் ஜலதோஷம் முதலாவது இடத்திலும் பல் சொத்தை இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. பல் சொத்தை வெறும் ஒரு நவீன நோயல்ல. பூர்வ இஸ்ரவேலர் காலத்திலும் சில பற்களுடனே காலம் தள்ள வேண்டிய பிரச்சினை முதியவர்களுக்கு இருந்ததைப்பற்றி சாலொமோன் ராஜாவின் ஒரு பாடல் குறிப்பிடுகிறது.—பிரசங்கி 12:3.

அரச குடும்பத்தினரும் இதற்கு விதிவிலக்கல்ல

முதலாம் எலிசபெத், இங்கிலாந்தின் ராணியாக இருந்தபோதிலும் பல் வலியிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. ராணியைச் சந்திக்க வந்த ஒரு ஜெர்மானியர், கருநிறம் படிந்த அவருடைய பற்களைப் பார்த்துவிட்டு, “ஆங்கிலேயர்கள் அளவுக்கதிகமாய் சர்க்கரையைப் பயன்படுத்துவதாலேயே அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது” என்று கூறினார். டிசம்பர் 1578-ல் பல் வலி, ராணியை இராப்பகலாய் வாட்டியெடுத்தது. பாதிக்கப்பட்ட பல்லைப் பிடுங்கிவிடும்படி அவருடைய மருத்துவர்கள் ஆலோசனை கூறியபோதிலும் ராணி மறுத்துவிட்டார், ஒருவேளை வலியை நினைத்து அவர் பயந்திருக்கலாம். அவருக்குத் தைரியமளிக்க லண்டனின் பிஷப்பான ஜான் ஏல்மர், தன் சொந்தப் பல்லைஒருவேளை சொத்தையான பல்லை—ராணியின் முன்னிலையில் பிடுங்கிக்கொண்டார். வயதுசென்ற இவருக்கு ஏற்கெனவே சில பற்கள்தான் எஞ்சியிருந்தன. அதிலும் இப்படிச் செய்திருக்கிறார் என்றால் துணிச்சல்தானே!

அன்றெல்லாம் பொதுமக்கள், பல் பிடுங்க வேண்டும் என்றால் முடிதிருத்தம் செய்பவரிடம் ஏன், இரும்புக் கொல்லரிடம்கூட சென்றார்கள். ஆனால், அநேகர் சர்க்கரை வாங்குமளவுக்கு வசதிபடைத்தவர்களாக ஆனபோது பல் வலியும் அதிகமானது, அப்படியே, திறம்பட்ட பல் பிடுங்குபவர்களின் தேவையும் அதிகமானது. அதன் விளைவாக, சில மருத்துவர்களும் அறுவை சிகிச்சையாளர்களும் பாதிக்கப்பட்ட பற்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் ஆர்வம் காட்ட தொடங்கினார்கள். என்றாலும் சிகிச்சையளிக்க அவர்களாகவே கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், இந்தத் தொழிலில் திறமை வாய்ந்தவர்கள் தொழில் ரகசியங்களை வெளிவிடாதிருக்க ஜாக்கிரதையாக இருந்தார்கள். அதுமட்டுமல்ல, பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள்கூட குறைவாகவே இருந்தன.

முதலாம் எலிசபெத்தின் ஆட்சிக்குப் பிறகு நூறு வருடங்கள் கழித்து பதினான்காம் லூயி, பிரான்சு நாட்டின் அரசராக ஆட்சிபுரிந்தார். அவருடைய வாழ்க்கையின் பெரும்பாலான காலப்பகுதியில் பல் வலியுடன் கஷ்டப்பட்டார். 1685-ல் அவருடைய இடப்பக்க மேல் பற்கள் அனைத்துமே பிடுங்கப்பட்டன. அவ்வருடம் பிரான்சுக்குக் கிடைத்த மத சுதந்திரத்தை மறுத்து அவர் ஓர் ஆணை பிறப்பித்தார், அதன் விளைவாக சிறுபான்மை மதத்தினர் கடுமையான சித்திரவதையை எதிர்ப்பட்டார்கள். பல் பிடுங்கப்பட்டதில் அவருக்கு ஏற்பட்ட தொற்று காரணமாகவே அவர் அப்படியொரு பயங்கரமான தீர்மானத்தை எடுத்ததாக சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.

நவீன பல் மருத்துவத்தின் ஆரம்பம்

பதினான்காம் லூயியின் ஆடம்பர வாழ்க்கைமுறை பாரிஸ் நகரின் உயர்குடி மக்கள்மீது செலுத்திய செல்வாக்கு பல் மருத்துவத்தின் பிறப்புக்கு வித்திட்டது. அரசவையிலும் சமுதாயத்திலும் ஒருவரின் வெற்றி அவருடைய முகத் தோற்றத்தைச் சார்ந்தே இருந்தது. அந்தச் சமயத்தில் அநேகர் பொய் பற்களைப் பொருத்திக்கொண்டதற்குக் காரணம் சாப்பிடுவதற்காக அல்ல, முகத் தோற்றம் அழகாய் இருப்பதற்காகவே. வசதி படைத்த இவர்களுக்கென்றே தனி பல் மருத்துவர்கள் உருவானார்கள். பையர் ஃபாஷேர் என்பவரே பாரிஸ் நகரின் பிரபல பல் மருத்துவராக இருந்தார். இவர் பிரான்சு நாட்டு கப்பற்படையில் இருந்தபோது பல் அறுவை சிகிச்சை செய்யக் கற்றுக்கொண்டார். பல் பிடுங்கும் வேலையை முடி திருத்தம் செய்பவர்களிடமும் போலி பல் மருத்துவர்களிடமும் விட்டுவிட்ட அறுவை சிகிச்சையாளர்களை இவர் கண்டனம் செய்தார். தன்னை முதன்முதலாக பல் அறுவை சிகிச்சையாளர் என அழைத்துக்கொண்டவரும் இவரே.

தொழில் ரகசியத்தைப் பாதுகாக்கும் வழக்கத்தை ஃபாஷேர் மாற்றிவிட்டார். தான் அறிந்த எல்லாவற்றையும் 1728-ல் ஒரு புத்தகத்தில் எழுதினார். அதனாலேயே, “பல் மருத்துவத்தின் தந்தை” என அவர் அழைக்கப்படலானார். பல் நோயாளிகளைத் தரையில் உட்கார வைக்காமல் அவர்களுக்கென்றே விசேஷமாக தயாரிக்கப்பட்ட நாற்காலியில் உட்கார வைத்த முதல் நபர் இவரே. அதோடு, பற்களைப் பிடுங்குவதற்கு ஐந்து உபகரணங்களை இவர் உருவாக்கி இருக்கிறார். ஃபாஷேர் வெறுமனே பற்களைப் பிடுங்குபவர் மட்டுமல்ல, பல் மருத்துவர் பயன்படுத்தும் துளையிடும் கருவியையும் உருவாக்கி இருக்கிறார், சொத்தைகளை அடைப்பதற்கான முறைகளையும் கண்டுபிடித்தார். ரூட் கனால் எனப்படும் முளைத்தொளை சிகிச்சைக்குப் பிறகு குழியை அடைக்கவும் அந்த முளையில் செயற்கைப் பல்லைப் பொருத்தவும் கற்றுக்கொண்டார். தந்தத்தாலான அவருடைய செயற்கைப் பற்களில் விசை வில் பொருத்தப்பட்டிருந்ததால் மேலேயுள்ள செயற்கை பற்கள் இடமாறாமல் ஒரே இடத்தில் இருந்தன. ஃபாஷேர் பல் மருத்துவத்தை ஒரு தொழிலாக மாற்றினார். அவருடைய செல்வாக்கு அமெரிக்காவரை எட்டியது.

முதல் அமெரிக்க ஜனாதிபதியின் கடும் வேதனை

பதினான்காம் லூயிக்குப் பிறகு நூறு வருடங்கள் கழித்து ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவில் பல் வலியால் துடித்துக்கொண்டிருந்தார். 22 வயதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் அவருக்கு ஒரு பல் பிடுங்கப்பட்டது. அமெரிக்க புரட்சி காலத்தில் தன்னுடைய படையைத் தலைமை தாங்கி நடத்தியபோது அவர் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பார் என்பதைச் சற்று கற்பனை செய்துபாருங்கள்! 1789-ல் அவர் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஆவதற்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களையும் இழந்துவிட்டிருந்தார்.

பற்களை இழந்த வாஷிங்டன் தன் முகம் உருக்குலைந்துவிட்டதை நினைத்தும் தன் செயற்கைப் பற்கள் சரியாக பொருந்தாமல் இருந்ததை நினைத்தும் மனம் தளர்ந்துபோனார். ஒரு புதிய தேசத்தின் ஜனாதிபதியாக மக்கள் மனதில் இடம்பிடிக்க அவர் முயற்சி செய்துகொண்டிருந்ததால் தன்னுடைய தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அந்தக் காலத்திலெல்லாம், அச்சு எடுக்கப்பட்டு செயற்கைப் பற்கள் தயாரிக்கப்படவில்லை, மாறாக அவை தந்தத்திலிருந்து செதுக்கப்பட்டன. அதனால் அவற்றை சரியாகப் பொருத்துவது கடினமாக இருந்தது. வாஷிங்டன் எதிர்ப்பட்ட அதே அசெளகரியங்களை ஆங்கிலேயர்களும் எதிர்ப்பட்டார்கள். வாய்விட்டு சிரித்தால் இவர்களுடைய பொய் பற்கள் தெரிந்துவிடும் என்பதாலேயே நாசுக்கான விதத்தில் நகைச்சுவையை வெளிப்படுத்தும் உணர்வு இவர்களிடம் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வாஷிங்டன், மரத்தாலான பற்களை அணிந்ததாகச் சொல்லும் ஒரு பழங்கதை பொய்யெனத் தெரிகிறது. அவருடைய பற்கள் மனித பற்களால், தந்தத்தால், காரீயத்தால் செய்யப்பட்டன, மரத்தினால் அல்ல. அவருடைய பல் மருத்துவர்கள் ஒருவேளை கல்லறை திருடர்களிடமிருந்து பற்களைப் பெற்றிருக்கலாம். பல் வியாபாரம் செய்தவர்கள் இராணுவப் படைகளைப் பின்தொடர்ந்து சென்று போருக்குப் பிறகு ஏற்கெனவே இறந்து கிடந்தவர்களிடமிருந்தும் குற்றுயிராய் கிடந்தவர்களிடமிருந்தும் பற்களைப் பிடுங்கி எடுத்தார்கள். எனவே, பணக்காரர்களால் மட்டுமே செயற்கைப் பற்களைப் பெற முடிந்தது. 1850-களில் கண்டுபிடிக்கப்பட்ட நெகிழ்த்தன்மையுள்ள ரப்பர், செயற்கைப் பற்களின் அடிதளத்தைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டது. அப்போதுதான் செயற்கைப் பற்கள் சாதாரண மக்களுக்கும் கிடைக்க ஆரம்பித்தது. வாஷிங்டனின் பல் மருத்துவர்கள் தங்கள் தொழிலில் சிறந்து விளங்கினாலும் பல் வலி எதனால் வருகிறது என்பதை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.

பல் வலி பற்றிய உண்மை

புழுக்களால்தான் பல் வலி வருவதாக மக்கள் காலங்காலமாக நம்பி வந்தார்கள். இந்தக் கருத்து 1700-கள் வரை நீடித்தது. ஜெர்மனியிலுள்ள பெர்லின் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஓர் அமெரிக்க பல் மருத்துவரான வில்லபி மில்லர் 1890-ல் பல் சொத்தையாவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார். இந்தச் சொத்தையே பல் வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணம். குறிப்பாய் சர்க்கரையில் செழித்தோங்குகிற ஒரு வகை பாக்டீரியா பற்களைச் சேதப்படுத்தும் அமிலத்தை சுரக்கின்றன. ஆனால், பல் சொத்தையை எப்படித் தடுப்பது? எதேச்சையாக அதற்குத் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் அநேக மக்களுடைய பற்கள் கறைபடிந்ததாய் இருந்ததற்கு என்ன காரணமென்று அங்கிருந்த பல் மருத்துவர்கள் யோசித்தார்கள். தண்ணீரில் அதிகளவு ஃபுளுரைடு கலந்திருப்பதே அதற்கு காரணமென இறுதியில் கண்டுபிடித்தார்கள். ஆனால், அந்தப் பிரச்சினையைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கையில் பல் வலியைத் தடுப்பதுபற்றி உலகமறிய வேண்டிய ஓர் உண்மையை எதேச்சையாக கண்டுபிடித்தார்கள்: அதாவது, குடிநீரில் போதுமான ஃபுளுரைடு இல்லாத இடங்களில் வளர்ந்து வந்தவர்களிடத்திலேயே பல் சொத்தை அதிகமாய்க் காணப்படுகிறது. பெரும்பாலும் பொதுமக்களுக்கு கிடைக்கும் குடிநீரில் கலந்திருக்கும் ஃபுளுரைடு பல் எனாமலின் ஒரு கூறு. குடிநீரில் போதுமானளவு ஃபுளுரைடு இல்லாத பட்சத்தில் அதை ஈடுசெய்துகொண்டால் மக்களிடையே பல் சொத்தை கிட்டத்தட்ட 65 சதவீதம் குறைகிறது.

இப்படியாக இந்தப் பிரச்சினை தீர்ந்தது. பல் சொத்தையாவதாலேயே பெரும்பாலும் பல் வலி ஏற்படுகிறது. சர்க்கரை பல் சொத்தையை விளைவிக்கிறது. இதைத் தடுக்க ஃபுளுரைடு உதவுகிறது. அதற்கென்று பல் தேய்க்காமல் அல்லது ஃப்ளாஸ் செய்யாமல் ஃபுளுரைடை மட்டும் பயன்படுத்தினால் போதாது என்பதைச் சொல்லவே தேவையில்லை.

வலியில்லா பல் மருத்துவத்தைத் தேடி

மயக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு பல் சிகிச்சைகள் நோயாளிகளுக்கு கடுமையான வலியை ஏற்படுத்தின. பல் மருத்துவர்கள் கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட, சொத்தையான பல்லை குடைந்தெடுத்த பிறகு சூடான உலோகத்தை வைத்து அந்தக் குழியை அடைத்துவிடுவார்கள். அந்தச் சமயத்தில் பல் மருத்துவர்களிடம் நுண்ணுயிர்க் கொல்லிகள் ஏதும் இருக்கவில்லை, அதனால் பாதிக்கப்பட்ட பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பதற்காக பழுக்கக் காய்ச்சிய சூடான இரும்பு கம்பியை ரூட் கனாலின் உள்ளே நுழைப்பார்கள். பல் பிடுங்குவதற்கென்றே விசேஷமாய்த் தயாரிக்கப்பட்ட கருவிகளும் மயக்க மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு பல் பிடுங்குவதும் திகிலூட்டும் ஓர் அனுபவமாக இருந்தது. மக்கள் அப்படிப்பட்ட வலியைத் தாங்கிக்கொண்டார்கள், ஏனெனில், பல் வலி அதைவிட பயங்கரமாக இருந்தது. மூலிகை மருந்துகளான, அபினி, சணல், மேன்ட்ரேக்ஸ் ஆகியவை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இவையும் வலியை கொஞ்சம் குறைத்தனவே தவிர வலியை முற்றிலும் நீக்கின பாடில்லை. என்றாவது பல் மருத்துவர்களால் வலியில்லாமல் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா?

முதன்முதலில் 1772-ல் ஜோசெஃப் ப்ரீஸ்ட்லி என்ற ஆங்கிலேய வேதியியல் வல்லுநர் சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடை தயாரித்தார். அதன் பிறகு சீக்கிரத்திலேயே அதற்கு மயக்கமூட்டும் சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், 1844 வரை யாருமே அதை ஒரு மயக்க மருந்தாகப் பயன்படுத்தவில்லை. அந்த வருடத்தில் டிசம்பர் 10-ம் தேதி அமெரிக்காவில் கனெடிகட் மாகாணத்தில் ஹார்ட்ஃபோர்ட் நகரில் நடந்த ஒரு சொற்பொழிவுக்கு ஹாரஸ் வெல்ஸ் என்ற பல் மருத்துவர் சென்றிருந்தார். அங்கு சிரிப்பூட்டும் வாயுவை வைத்து மக்களுக்கு பொழுதுபோக்கு அளிக்கப்பட்டது. அந்த கியாஸின் மயக்கத்தில் இருந்த ஒருவர் தன்னுடைய முழங்கால் தண்டு பகுதியிலுள்ள எலும்பு கனமான மேசைகளில் உரசியபோதும் கொஞ்சம்கூட வலி உணராமல் இருந்ததை அந்தப் பல் மருத்துவர் கவனித்தார். வெல்ஸ் மிகவும் கனிவுள்ள மனிதர், பல் சிகிச்சை அளிக்கையில் தன் நோயாளிகளுக்கு வலி ஏற்படுவதைப் பார்த்து அவர் துடிதுடித்துப் போவார். அவர் உடனடியாக அந்த கியாஸை மயக்க மருந்தாகப் பயன்படுத்த நினைத்தார். ஆனால் அதை மற்றவர்களிடம் பரிசோதித்துப் பார்ப்பதற்கு முன் முதலில் தன்னிடமே அதை பரிசோதித்துப் பார்க்க தீர்மானித்தார். அடுத்த நாளே, பல் சிகிச்சையளிக்கப்படும் அவருடைய நாற்காலியில் அமர்ந்து மயக்கம் வரும்வரைக்கும் அந்த கியாஸை முகர்ந்தார். பிறகு, அவருடைய சக பணியாள் அவருக்கு வலி ஏற்படுத்திக்கொண்டிருந்த ஞானப்பல்லை பிடுங்கினார். இது சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஒரு சம்பவம். இப்படியாக, கடைசியில் பல் மருத்துவத்தில் வலியில்லா சிகிச்சையளிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது! a

அது முதல் பல் மருத்துவத்தில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, இந்தக் காலத்தில் உங்கள் பல் மருத்துவரிடம் நீங்கள் சென்றால் அது அக்காலத்தில் இருந்ததைவிடவும் ஒரு நல்ல அனுபவமாகவே இருக்கும்.

[அடிக்குறிப்பு]

a இன்று நைட்ரஸ் ஆக்ஸைடைவிட சாதாரண மயக்க மருந்துகளே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

[பக்கம் 28-ன் படம்]

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனின் தந்தத்தாலான செயற்கை பற்கள்

[படத்திற்கான நன்றி]

Courtesy of The National Museum of Dentistry, Baltimore, MD

[பக்கம் 29-ன் படம்]

1844-ல் நைட்ரஸ் ஆக்ஸைடை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி ஒரு பல் மருத்துவர் அறுவை சிகிச்சையளிப்பதுபோல் ஓர் ஓவியர் தீட்டிய சித்திரம்

[படத்திற்கான நன்றி]

Courtesy of the National Library of Medicine

[பக்கம் 27-ன் படத்திற்கான நன்றி]

Courtesy of the National Library of Medicine