Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேரழிவுகளுக்கு முடிவு விரைவில்

பேரழிவுகளுக்கு முடிவு விரைவில்

பேரழிவுகளுக்கு முடிவு விரைவில்

பூமியதிர்ச்சிகள், யுத்தங்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் இவையாவும் நாம் இப்பொழுது வாழும் இந்த “உலகத்தின் முடிவுக்கு” இயேசு முன்னறிவித்த அடையாளங்களில் சில. (மத்தேயு 24:3, 7, 8; லூக்கா 21:7, 10, 11) உண்மையில், அந்தச் சம்பவங்கள் கடவுளுடைய செயல்கள் அல்ல. இவற்றுக்கு இயேசுவோ அவருடைய பிதாவாகிய யெகோவா தேவனோ பொறுப்பாளிகள் அல்ல.

ஆனால், முன்னறிவிக்கப்பட்ட இந்தச் சம்பவங்கள் அடையாளப்படுத்துகிற வரவிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்திற்கு கடவுள் காரணமாயிருப்பார்; இந்த ராஜ்யம் இயேசுவின் கரங்களில் இருக்கும் பரலோக அரசாங்கம். அதோடு, யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை நிராகரிக்கிற எல்லாரையும் அழிப்பதற்கும் கடவுள் காரணமாயிருப்பார். (தானியேல் 2:44; 7:13, 14) அதன் பிறகு, இந்தப் பூமி இயற்கைப் பேரழிவுகளின் பயமில்லாத, அமைதி கொஞ்சும் இடமாக மாறும். அப்போது, “என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்” என்ற கடவுளின் வாக்குறுதி முழுமையாய் நிறைவேறும்.—ஏசாயா 32:18.

கடவுளுக்குச் செவிகொடுங்கள், நித்தியமாய் வாழுங்கள்!

இந்தத் தொடர் கட்டுரைகளின் முந்தைய கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளபடி எச்சரிக்கைகளுக்குச் செவிகொடுப்பது உயிரைக் காப்பாற்றலாம். இந்த நியதி, பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தெய்வீக எச்சரிக்கைகளுக்கு மிகவும் பொருந்தும். “எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்” என்று கடவுள் வாக்குறுதி அளிக்கிறார்.—நீதிமொழிகள் 1:33.

யெகோவாவின் சாட்சிகள், கடவுளின் வழிநடத்துதலில் எழுதப்பட்ட வார்த்தையைத் தவறாமல் படித்து, அதன் போதனைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் கடவுளுக்குச் செவிகொடுக்க பெருமுயற்சி எடுக்கிறார்கள். அப்படிச் செய்யும்படியே உங்களையும் அழைக்கிறார்கள். ஆம், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து செவிகொடுக்கிறவர்கள் எதிர்காலத்தைக் குறித்தும் பொல்லாதவர்களுக்கு வரும் அழிவைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை. மாறாக, அவர்கள் பூங்காவன பூமியில் நித்திய ஜீவனைப் பெறுவதைப் பேராவலோடு எதிர்பார்க்கலாம்; அங்கே அவர்கள் “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.

[பக்கம் 8-ன் பெட்டி]

துயரப்படுவோருக்கு ஆறுதல்

இயற்கைப் பேரழிவிலோ மற்ற துயரச் சம்பவத்திலோ உங்கள் அன்பானவர்களைப் பறிகொடுத்திருக்கிறீர்களா? சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு இயேசுவின் நெருங்கிய நண்பரான லாசரு அகால மரணமடைந்தார். இதை அறிந்து, லாசருவின் கிராமத்திற்கு இயேசு சென்றார்; மரண ‘நித்திரையிலிருந்து’ அவரை உயிரோடு எழுப்பினார்.—யோவான் 11:1-44.

லாசருவையும் அவருடைய குடும்பத்தாரையும் நேசித்ததால் மட்டுமே இயேசு இந்த அற்புதத்தைச் செய்யவில்லை; மாறாக, ராஜாவாய் தாம் ஆட்சி செய்யும்போது “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்” உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற தம்முடைய வாக்குறுதியை இன்னுமதிகமாக உறுதிப்படுத்துவதற்காகவும் இதைச் செய்தார். (யோவான் 5:28, 29) ஆம், ஏதேனில் நடந்த கலகத்திலிருந்து ஆரம்பித்த எல்லா தீமைகளையும் வரவிருக்கிற பரதீஸ் பூமியில் இயேசு சரிப்படுத்துவார். a1 யோவான் 3:8.

[அடிக்குறிப்பு]

a அன்பானவரை மரணத்தில் இழந்த துயரத்தைச் சமாளிப்பது எவ்வாறு என்பதில் வேதப்பூர்வமான அறிவுரைக்காகவும், உயிர்த்தெழுதல் வாக்குறுதியைப்பற்றி அதிகமாய் சிந்திப்பதற்கும் தயவுசெய்து, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பார்க்கவும். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

என் வாழ்க்கையை மாற்றிய பூமியதிர்ச்சி

அது 1971-ஆம் வருடம், நான் ஓர் இளம் தாயாக இருந்தேன், உச்ச ஸ்தாயில் பாடுகிற பாடகியாக வேண்டுமென்ற தணியாத ஆசையோடு இருந்தேன். நான் பிறந்த நகரமான வின்னிபெக், கனடா நாட்டின் மாகாணமான மனடோபாவில் இருந்தது. நான் நேசித்த இசையில் பெரிய ஆளாக வரலாமென்ற நம்பிக்கையில், ஹாலிவுட்டிற்கு அருகில் இருக்க வேண்டுமென்பதற்காக அங்கிருந்து அ.ஐ.மா.-விலுள்ள கலிபோர்னியாவுக்கு 1957-ல் குடிபோயிருந்தேன்.

யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராய் கனடாவிலிருந்த என் அம்மா ஒன்பது வருடங்களாக என்னைப் பார்க்க வந்தார். அந்தச் சந்தர்ப்பங்களில் பைபிளைப்பற்றி என்னோடு பேசுவார், குடும்ப வாழ்க்கைக்கும் சந்தோஷத்திற்கும் சிறந்த ஆலோசனை பைபிளில் இருக்கிறதைச் சொல்வார். அம்மாவை நேசித்ததால், அவர் சொன்னதை மரியாதையோடு கேட்டேன். என்றாலும், என்னுடைய வாழ்க்கை சரியான பாதையில்தான் செல்கிறது என்ற உறுதியால், அவர் திரும்பிச் சென்றபிறகு, அவர் கொடுத்த பத்திரிகைகளையெல்லாம் அந்தப் பக்கமாகப் போட்டுவிட்டேன்.

பிறகு, 1971-ல் பிப்ரவரி மாதம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரிக்டர் அளவில் 6.6-ஆகப் பதிவான பூமியதிர்ச்சி உலுக்கியெடுத்ததில் நான் விழித்துக்கொண்டேன். அதன் சத்தம் காதைப் பிளப்பதுபோல் இருந்தது, நிலம் பயங்கரமாக அதிர்ந்தது. என் மகன் படுத்திருந்த இடத்தை நோக்கி அரக்கப்பரக்க ஓடினேன்; அவன் பத்திரமாக இருந்தது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டேன். அதிர்வு நின்றபோது உடைந்துபோன கண்ணாடியும், அலமாரியிலிருந்த பொருள்கள் அனைத்தும் தரையில் நாலாபுறமும் சிதறிக் கிடந்தன; நீச்சல் குளத்திலிருந்த தண்ணீரெல்லாம் வெளியேறி கொல்லைப்புறத்தை நனைத்திருந்தது. என்னுடைய குடும்பம் பாதுகாப்பாக இருந்தபோதிலும் திரும்பவும் என்னால் தூங்க முடியவில்லை.

‘பூமியதிர்ச்சிகள்’ ‘கடைசிநாட்களின்’ ஓர் அடையாளமென்று அம்மா சொல்லியிருந்தார். (லூக்கா 21:7-11; 2 தீமோத்தேயு 3:1) வருடந்தோறும் என்னைப் பார்க்க வரும் என் அம்மா அந்தக் கோடைகாலத்திலும் வந்தார்; ஆனால், பைபிள் பிரசுரங்கள் இல்லாமல் வந்தார். ஒன்பது வருடங்களாக சாட்சிகொடுத்தும் ஒரு பலனும் இல்லாததால் எனக்கு ஆர்வமில்லை என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார் போலும். அது எவ்வளவு தவறு! அவர் வந்த வினாடியிலிருந்து அவரிடம் கேள்விமேல் கேள்விகளைக் கேட்டு திக்குமுக்காட வைத்துவிட்டேன். பாடகியாக வேண்டும், பெயரும் புகழும் பெற வேண்டும் என்ற ஆசை திடீரென மறைய ஆரம்பித்தது.

அந்த வாரமே ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கிறிஸ்தவக் கூட்டங்களில் அம்மாவோடு கலந்துகொண்டேன்; அதன் பிறகு நான் கூட்டத்தைத் தவறவிடவில்லை என்றே சொல்லலாம். வீட்டில் பைபிளைப் படிப்பதற்கு அம்மா ஏற்பாடு செய்தார். 1973-ல் முழுக்காட்டுதல் பெற்றேன்; தற்போது கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதில் மாதந்தோறும் சராசரியாக 70 மணி நேரம் செலவிடுகிறேன். (மத்தேயு 24:14) ஆம், கடவுள்மீது நான் வைத்திருக்கிற விசுவாசம் சிதைந்து போவதற்குப் பதிலாக ஒரு பூமியதிர்ச்சி என்னுடைய விசுவாசத்தை உறுதியாய்க் கட்ட உதவியது.—காலீன் எஸ்பார்ஸா சொன்னபடி.