Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“மருத்துவத் துறைக்கு இன்றியமையாத ஓர் உதவி”

“மருத்துவத் துறைக்கு இன்றியமையாத ஓர் உதவி”

“மருத்துவத் துறைக்கு இன்றியமையாத ஓர் உதவி”

மெக்ஸிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

யெகோவாவின் சாட்சிகள் தங்கள் உடல்நிலை பிரச்சினைகளுக்காக இரத்தமில்லா சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பவர்கள் என உலகெங்கும் அறியப்பட்டிருக்கிறார்கள். பைபிள் அடிப்படையில் இவர்கள் எடுக்கும் தீர்மானத்தை சிலர் குறைகூறுகிறார்கள். என்றாலும், புற்றுக்கட்டிகளுக்கான தேசிய நிறுவனத்தின் தலைமை அறுவை சிகிச்சை மருத்துவரான டாக்டர் ஆங்கல் ஹரரா, மெக்ஸிகோ நகரில் பரவலாக வினியோகிக்கப்படுகிற ரிஃபார்மா செய்தித்தாளில் இவ்வாறு கூறியிருந்தார்: “சாட்சிகள் விவரம் தெரியாதவர்களும் அல்ல, மத வெறிப்பிடித்தவர்களும் அல்ல. . . . [அவர்கள்] மருத்துவத் துறைக்கு இன்றியமையாத ஓர் உதவியைச் செய்திருக்கிறார்கள். எப்படியெனில், இரத்த இழப்பைத் தடுப்பதன் அவசியத்தைக் குறித்து மருத்துவத் துறையினர் சிந்திப்பதற்கு அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள்.”

டாக்டர் ஹரரா 15 வருடங்களுக்கு முன்பு, இரத்தமில்லாமல் அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு மயக்க மருந்தியல் நிபுணர்களும் அறுவை சிகிச்சையாளர்களும் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தினார். அந்தக் குழுவில் இருந்த மயக்க மருந்தியல் நிபுணரான டாக்டர் ஈஸீட்ரோ மார்டீனேஸ் இவ்வாறு கூறினார்: “உரிய முறையில் மயக்க மருந்து அளிக்கப்படுகையில் இரத்த இழப்பைத் தடுப்பதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய முடியும். அதனால் யெகோவாவின் சாட்சிகளின் மத நிலைநிற்கையை மதித்து அவர்களுக்கு எங்களால் நிச்சயம் உதவ முடியும்.”

இரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக அளிக்கப்படும் மாற்று சிகிச்சைகள் 30-க்கும் அதிகமாகவே இருப்பதாக ரிஃபார்மா செய்தித்தாள் அக்டோபர் 2006-ல் அறிக்கையிட்டது. வெப்பத்தைப் பயன்படுத்தி இரத்தக் குழாய்கள் கசியாதபடிச் செய்வது, இரசாயனங்களை வெளியேற்றும் ஒரு விசேஷ மென்துணியால் உறுப்புகளை மூடி இரத்தக் கசிவைத் தடுப்பது, இரத்தத்தின் கன அளவைப் பெருக்கிடும் திரவங்களைப் பயன்படுத்துவது ஆகியன அவற்றில் அடங்கும். a

மெக்சிகோ நகரிலுள்ள லாராஸா பொது மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை பிரிவில் தலைமை அறுவை சிகிச்சையாளராக பணிபுரியும் டாக்டர் மாய்ஸெஸ் கால்டேரோன் எப்போதுமே இரத்தமில்லாமல்தான் அறுவை சிகிச்சை செய்கிறார். ரிஃபார்மா செய்தித்தாளில் அவர் கூறியிருப்பதாவது: “இரத்தமேற்றுதலில் ஆபத்தில்லாமல் இல்லை. வைரஸ்களையும், பாக்டீரியாவையும், பாரஸைட்டுகளையும் கடத்தும் ஆபத்து அதில் இருக்கிறது. சிறுநீரகத்தின் இயக்கத்தையும் நுரையீரலின் இயக்கத்தையும் பாதித்துவிடக்கூடிய ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.” இந்த ஆபத்துகளை மனதில் வைத்து டாக்டர் கால்டேரோன் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் எல்லா நோயாளிகளுக்குமே யெகோவாவின் சாட்சிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதைப் போலவே செய்கிறோம். இரத்தக்கசிவை முடிந்தளவு குறைக்கப் பார்க்கிறோம். இழந்த இரத்தத்தை ஈடுசெய்ய பார்க்கிறோம், நோயாளிகள் முடிந்தளவு இரத்தத்தை இழக்காதிருப்பதற்கு உதவுகிற மருந்துகளைப் பயன்படுத்துகிறோம்.”

அந்தச் செய்தித்தாள் அப்போஸ்தலர் 15:28, 29-ஐ மேற்கோள் காட்டியது. யெகோவாவின் சாட்சிகளின் நம்பிக்கைக்கு ஆதாரமாய் இருக்கும் ஒரு முக்கிய வசனம் இது. இந்த வசனத்தில் அப்போஸ்தலர்கள் பின்வரும் கட்டளையை கொடுத்திருக்கிறார்கள்: “எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது.”

மெக்சிகோவில் 75 மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களும், இரத்தத்திற்கான மாற்று மருந்துகள் பற்றி மருத்துவர்களுக்குத் தகவல் அளிப்பதற்காக 950 வாலண்டியர்களும் இருப்பதாக மெக்சிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தின் மருத்துவ தகவல் இலாக்கா அறிக்கையிடுகிறது. மெக்சிகோவில் சுமார் 2,000 மருத்துவர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு இரத்தமின்றி சிகிச்சையளிக்க மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த மருத்துவர்கள் சாட்சிகளல்லாத நோயாளிகளுக்கும் நல்லவிதத்தில் சிகிச்சையளிக்க இப்போது தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த மருத்துவர்களின் ஒத்துழைப்பை சாட்சிகள் பெரிதும் போற்றுகிறார்கள்.

[அடிக்குறிப்பு]

a குறிப்பிட்ட எந்த விதமான இரத்தமில்லா சிகிச்சையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. ஏனென்றால் இது ஒவ்வொருவரும் சுயமாய் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.

[பக்கம் 30-ன் படம்]

டாக்டர் ஆங்கல் ஹரரா

[பக்கம் 30-ன் படம்]

டாக்டர் ஈஸீட்ரோ மார்டீனேஸ்

[பக்கம் 30-ன் படம்]

டாக்டர் மாய்ஸெஸ் கால்டேரோன்