Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மறைந்த பழக்கத்தை மௌனமாய்ப் பறைசாற்றும் திருமுழுக்குத் தலங்கள்

மறைந்த பழக்கத்தை மௌனமாய்ப் பறைசாற்றும் திருமுழுக்குத் தலங்கள்

மறைந்த பழக்கத்தை மௌனமாய்ப் பறைசாற்றும் திருமுழுக்குத் தலங்கள்

பிரான்சிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“பேராலயத்தில் திருமுழுக்கு.” 2001-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் வெளிவந்த தலைப்புச் செய்தியே அது. அக்கட்டுரையில் ஒரு படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கத்தோலிக்கராக மாறிய ஒருவர் முழங்கால் அளவு தண்ணீருள்ள திருமுழுக்கு குளத்தில் நிற்க, கத்தோலிக்க பிஷப் அவரது தலையில் தண்ணீர் ஊற்றும் காட்சி அப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. மதம் மாறுகிறவர்களுக்கு தலையில் நீர் ஊற்றி திருமுழுக்கு கொடுக்கும் இச்சம்பவம் உலகெங்கும் பரவலாக உள்ளது; இரண்டாம் வாடிகன் பேரவை இதை ஏற்றுக்கொண்டதுமுதல் கத்தோலிக்க சர்ச் இதைப் பழக்கமாக செய்துவருகிறது. இப்போது எழுகிற கேள்விகள் இவையே: பெரும்பாலான கத்தோலிக்கர்கள் தண்ணீர் தெளிப்பதன்மூலம் குழந்தையிலேயே திருமுழுக்கு பெற்றிருக்க, திருமுழுக்கு யோவானும் இயேசுவின் அப்போஸ்தலர்களும் வைத்த முன்மாதிரிக்கு ஒத்திருக்கிற திருமுழுக்கு எது? இன்று கிறிஸ்தவர்கள் எவ்விதமாக திருமுழுக்கு பெற வேண்டும்? திருமுழுக்குத் தலங்களைப் பற்றிய வரலாறு இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும். a

திருமுழுக்கின் ஆரம்பமும் அர்த்தமும்

ஆரம்ப காலத்தில், நீருக்குள் முழுமையாக அமிழ்த்தியெடுப்பதன்மூலம் கிறிஸ்தவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கப்பட்டது. எத்தியோப்பிய அதிகாரிக்கு பிலிப்பு திருமுழுக்கு கொடுத்ததைப் பற்றிய பைபிள் பதிவு இதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. கிறிஸ்துவைக் குறித்து அவர் அறிந்து கொண்டபிறகு தண்ணீருள்ள ஓரிடத்தைக் கண்டு, “நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா?” என்று கேட்டார். (அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 8:26-39 பொது மொழிபெயர்ப்பு) இந்த வசனத்தில் “திருமுழுக்கு” என்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க மூலவார்த்தை பாப்டீஸோ ஆகும். இது முற்றிலுமாக அமிழ்த்தியெடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. திருமுழுக்கை சவ அடக்கத்திற்கு ஒப்பிட்டுப் பேசுவதால் இந்தக் குறிப்பு வலியுறுத்தப்படுகிறது. (ரோமர் 6:4; கொலோசெயர் 2:12) ஆர்வத்துக்குரிய விஷயம் என்னவென்றால், பிரெஞ்சு பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் (உதாரணமாக, ஷூராக்கீ மற்றும் பெர்னோ) யோவான் ஸ்நானன் என்ற பெயரை திருமுழுக்கு யோவான் என்பதாக அழைக்கிறார்கள்.

கிறிஸ்தவத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில், ஆறுகள், கடல்கள் அல்லது குளியல் தொட்டிகளில் முற்றிலுமாக அமிழ்த்தியெடுப்பதன்மூலம் திருமுழுக்கு கொடுக்கப்பட்டது. மதம் மாறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, ரோம பேரரசில் டால்மாட்டியாவிலிருந்து பாலஸ்தீனா வரையிலும், கிரீஸ் முதல் எகிப்து வரையிலும் பல இடங்களில் திருமுழுக்குத் தலங்கள் கட்டப்பட்டன. சிரியாவிலுள்ள ஐபிராத்து நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட திருமுழுக்குத் தலமே இதுவரை அகழாய்வு செய்யப்பட்டதில் மிகப் பழமையானது; இது சுமார் பொ.ச. 230-ஆம் ஆண்டைச் சேர்ந்ததெனத் தெரிகிறது.

பொ.ச. நான்காம் நூற்றாண்டின்போது ரோம பேரரசில் “கிறிஸ்தவ” மதம் அங்கீகரிக்கப்பட்ட மதமாக ஆனது; அச்சமயத்தில் “கிறிஸ்தவர்களாக” மாறிய லட்சக்கணக்கானோருக்கு திருமுழுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. இதற்காகவே, சர்ச்சுகளிலும் பொது இடங்களிலும் திருமுழுக்குத் தலங்கள் கட்டப்பட்டன. ஆறாம் நூற்றாண்டுக்குள்ளாக, ரோமில் மட்டுமே சுமார் 25 திருமுழுக்குத் தலங்கள் கட்டப்பட்டன; அவற்றில் ஒன்றுதான் செ. ஜான் லேட்டரன் பஸிலிக்காவில் உள்ள திருமுழுக்குத் தலம். கால் என்ற ரோம மாகாணத்தின் ஒவ்வொரு திருமண்டலத்திலும் திருமுழுக்குத் தலம் இருந்ததாகத் தெரிகிறது. இப்படி, கிட்டத்தட்ட 150 தலங்கள் இருந்ததாக ஒரு புத்தகம் தெரிவிக்கிறது. கிராமப்புறங்களில், சிறிய சர்ச்சுகள், கல்லறைகள், மடங்கள் ஆகியவற்றிற்கு அருகிலும்கூட நூற்றுக்கணக்கான திருமுழுக்குத் தலங்கள் இருந்திருக்கலாம்.

வடிவமைப்பும் தண்ணீர் சப்ளையும்

திருமுழுக்குத் தலங்கள் பெரும்பாலும் வட்ட வடிவிலோ பல கோணங்களைக் கொண்ட வடிவிலோ கட்டப்பட்ட மண்டபங்களாகும்; அவை திருமுழுக்கு கொடுப்பதற்கென்றே கட்டப்பட்டவையாக அல்லது சர்ச்சுடன் இணைந்த பகுதிகளாக இருந்தன. இந்த மண்டபங்கள் சிறியவையாக, (பொதுவாக 200 சதுர மீட்டருக்கும் குறைவாகவே) இருந்தன; அதே சமயத்தில் அவை தூண்களாலும், பளிங்குக் கற்களாலும், மொசைக்குகளாலும், சித்திரங்களாலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன; சில சமயங்களில் பைபிள் காட்சிகளின் சித்திரங்களும் அவற்றில் தீட்டப்பட்டிருந்தன. திருமுழுக்குத் தலங்கள் சிலவற்றில் குளத்திற்கு மேலே கண்ணைக் கவரும் விதானம் அமைக்கப்பட்டிருந்தது; கோர்ஸிகாவில் மாரியானா என்ற நகரத்திலுள்ள திருமுழுக்குத் தலம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. திருமுழுக்குத் தலம் என்ற பெயர் அத்தகைய குளத்திற்கும்கூட கொடுக்கப்பட்ட பெயராகும்; இவை சதுரம், வட்டம், அறுகோணம், நீள்சதுரம், எண்கோணம், சிலுவை போன்ற வடிவங்களில் இருந்திருக்கலாம். பண்டைய கால திருமுழுக்குத் தலங்கள் பெரியவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கும் விதத்தில்தான் கட்டப்பட்டிருந்தன என்பதை அவற்றின் அகலத்தையும் ஆழத்தையும் வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது. குறைந்தபட்சம் இரண்டு பேராவது நிற்குமளவுக்கு அவை பெரியவையாக இருந்தன. உதாரணமாக, மத்திய கிழக்கு பிரான்சில் லையன் நகரிலிருந்த சிறுகுளம் 3.25 மீட்டர் (பத்து அடி) அகலத்தில் இருந்தது. இத்தகைய குளங்கள் பலவற்றில் படிக்கட்டுகள் இருந்தன, பொதுவாக தண்ணீரில் இறங்குவதற்கு ஏழு படிக்கட்டுகள் இருந்தன.

இவற்றை வடிவமைத்தவர்கள் தண்ணீர் சப்ளையையும்கூட கவனத்தில் எடுத்துக் கொண்டு கட்டினார்கள் என்பதில் சந்தேகமில்லை. திருமுழுக்குத் தலங்கள் பலவும் இயற்கை நீரூற்றுகள் அல்லது பாழடைந்த வெப்ப நீரூற்றுகளின் அருகே கட்டப்பட்டன. தென் பிரான்சைச் சேர்ந்த நைஸ் நகரில் உள்ள திருமுழுக்குத் தலம் அதற்கு ஓர் உதாரணம். தண்ணீரை உள்ளே கொண்டுவருவதற்கும் வெளியேற்றுவதற்கும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. மற்ற இடங்களிலோ அருகிலிருந்த மழைநீர் தேக்கத்திலிருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டு இந்தக் குளங்களில் நிரப்பப்பட்டன.

நான்காம் நூற்றாண்டு “கிறிஸ்தவ” திருமுழுக்குத் தலங்கள் எப்படி காட்சியளித்தன என்பதற்கு மேற்கு பிரான்சைச் சேர்ந்த ப்வாட்டியே நகரிலுள்ள செ. ஜான் திருமுழுக்குத் தலம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்; இது பொ.ச. 350 வாக்கில் கட்டப்பட்டது. சுற்றிலும் பல அறைகளைக் கொண்ட செவ்வக அறையினுள்ளே, மூன்று படிக்கட்டுகளைக் கொண்ட பெரிய எண்கோண வடிவ குளம் இருந்தது. இக்குளம் 1.41 மீட்டர் (4.5 அடி) ஆழமாயும், அதன் மிக அகன்ற பகுதி 2.15 மீட்டர் (7 அடி) அகலமாயும் இருந்தது. நகரத்திற்கு தண்ணீரை வருவிப்பதற்காக அருகிலிருந்த நீரூற்றிலிருந்து வெட்டப்பட்ட கால்வாயுடன் இது இணைக்கப்பட்டது.

நீரைத் தலையில் ஊற்றுவதா? நீரில் முழுமையாக அமிழ்த்தி எடுப்பதா?

இத்தகைய தலங்களில் முழுமையாக அமிழ்த்தி திருமுழுக்கு கொடுக்கப்பட்டதா? இல்லை என்பதாக கத்தோலிக்க அறிஞர்கள் சிலர் சொல்கிறார்கள்; ஆரம்ப கால கத்தோலிக்க சர்ச்சில், நீரைத் தலையில் ஊற்றுவதன்மூலம் திருமுழுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கலாம் என அவர்கள் சொல்கிறார்கள். அநேக குளங்கள் ஒரு மீட்டர் (3 அடி) ஆழத்திற்கும் குறைவாகவே இருந்தன என்றும் ஒருவரை நீருக்குள் அமிழ்த்த முடியாதளவுக்கு ஆழம் குறைவாக இருந்தன என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ப்வாட்டியேவில் “திருமுழுக்கு கொடுக்கும் மதகுருவால் தன்னுடைய கால்களில் ஈரம் படாமலேயே மூன்றாம் படிக்கட்டில் நிற்க முடிந்தது” என ஒரு கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.

என்றாலும், முற்றிலுமாக அமிழ்த்தியெடுப்பதே வழக்கமாக இருந்ததென திருமுழுக்கைப் பற்றிய பிற்கால ஓவியங்கள்கூட காட்டுகின்றன; அத்தகைய ஓவியங்களில், திருமுழுக்கு பெறுபவர் மார்பளவு ஏன், கழுத்தளவு தண்ணீரில்கூட நிற்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருந்தன. (மேலேயுள்ள படங்களைக் காண்க.) தண்ணீரின் மட்டம் ஒரு சராசரி நபரின் இடுப்பளவுக்கு இருந்தாலும்கூட முழுமையாக அமிழ்த்தியெடுப்பது சாத்தியமா? சாத்தியமே. ஏனெனில், திருமுழுக்கு பெறுபவர் மண்டியிட்ட நிலையிலோ உட்கார்ந்த நிலையிலோ அமிழ்த்தப்படும் அளவுக்கு தண்ணீர் இருக்கும்படி, நீரை வெளியேற்றும் குழாய் தற்காலிகமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. b பாரிஸில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டு பேராசிரியரான பயெர் ஸூனெல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “திருமுழுக்கு பெறுபவர் இடுப்பளவு தண்ணீரில் நின்றார். மதகுரு அல்லது உதவி குரு அவருடைய தலையில் தனது கையை வைத்து முழுமையாக மூழ்கும்படி அவரைச் சாய்த்து தண்ணீரில் அமிழ்த்தினார்.”

குறுகிப்போன திருமுழுக்குத் தலங்கள்

அப்போஸ்தலரின் காலங்களில் எளிய முறையில் நடத்தப்பட்ட திருமுழுக்கு, காலப்போக்கில் சிக்கலான சடங்கு சம்பிரதாயங்களுடன் வழங்கப்பட்டது; விசேஷ உடைகள் சைகைகள், கெட்ட ஆவிகளை விரட்டுவதற்கான ஜெபங்கள், நீரை ஆசீர்வதித்து ஏறெடுக்கும் ஜெபங்கள், விசுவாசப்பிரமாணத்தை ஒப்பித்தல், தலையில் எண்ணெய் பூசுதல் போன்ற பல சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டன. தலையில் தண்ணீரை ஊற்றி திருமுழுக்கு கொடுக்கும் பழக்கமும் பல இடங்களில் பரவியது. திருமுழுக்கு கொடுக்கப்பட்ட குளங்களின் அளவு குறைக்கப்பட்டது; அவற்றில் சில குளங்கள் சரிபாதியாக அல்லது அவற்றின் அகலத்தையும் ஆழத்தையும்விட சிறியதாக மாற்றியமைக்கப்பட்டன. உதாரணமாக, தென் பிரான்சில் காசெர் நகரிலிருந்த 1.13 மீட்டர் (3.5 அடி) ஆழமான குளம் ஆறாம் நூற்றாண்டிற்குள் சுமார் 0.48 மீட்டர் (1.5 அடி) அளவுக்கு குறைக்கப்பட்டது. பிற்பாடு, தலையில் நீரை ஊற்றுவதன்மூலம் திருமுழுக்கு கொடுப்பதும்கூட 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சிலிருந்து மறைந்துபோய் நீரை தெளிக்கும் முறை உருவானது. “மோசமான சீதோஷ்ணம் நிலவிய நாடுகளிலும், குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கும் பழக்கம் பரவிவிட்டதால் குளிர்ந்த நீரில் பச்சிளம் குழந்தையை முக்கியெடுப்பது சாத்தியமில்லாமல் போனதே” இதற்குக் காரணம் என பிரெஞ்சு கல்வியாளர் பயெர் ஷோனு தெரிவிக்கிறார்.

இத்தகைய மாற்றங்களின் காரணமாக, திருமுழுக்கு கொடுப்பதற்கென கட்டப்பட்ட தலங்கள் போகப்போக மிகவும் சிறியவையாகிவிட்டன. திருமுழுக்கின் சரித்திரத்தைப் பற்றிய தனது ஆய்வில், சரித்திராசிரியர் ஃபிரடேரிக் பியூலே இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் பெரியவர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த முழுமையான திருமுழுக்கு மறைந்துபோய், பச்சிளங்குழந்தைகளுக்குத் தண்ணீர் தெளித்து கொடுக்கப்பட்ட திருமுழுக்கு தோன்றியதென அகழாய்வு, ஆவணங்கள், ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் எல்லாம் காட்டுகின்றன. இந்த மாற்றத்திற்கு இடைப்பட்ட காலத்தில் பெரியவர்களுக்கு தலையில் தண்ணீர் ஊற்றுவது, பிள்ளைகளுக்கு முழுமையான திருமுழுக்கு கொடுப்பது ஆகியவையும் நடைபெற்றன.”

இன்றோ, பெரியவர்களுக்கு தலையில் தண்ணீர் ஊற்றி திருமுழுக்கு கொடுக்கும் பழக்கம் மீண்டும் பிரபலமடைந்து வருவதால், நவீன திருமுழுக்குத் தலங்களின் அளவு முன்பைவிட பெரிதாகி வருகிறது. திருமுழுக்கு பழக்கத்தின் மீதான நாட்டம் திரும்புகிறது என ப்யூலே குறிப்பிட்டார்; அதற்கிணங்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை முழுவதுமாக அமிழ்த்தி திருமுழுக்கு கொடுப்பதை இப்போது வெகுவாக சிபாரிசு செய்துவருகிறது. முழுமையாக அமிழ்த்தி திருமுழுக்கு கொடுப்பதுதான் சரியான முறை என பைபிள் ஆரம்பத்திலிருந்தே சுட்டிக்காட்டியிருப்பது ஆர்வத்துக்குரிய விஷயம்.

[அடிக்குறிப்புகள்]

a “திருமுழுக்குத் தலம்” என்ற வார்த்தை, பொதுவாக சர்ச் கட்டிடத்தையோ சர்ச்சின் ஒரு பகுதியையோ குறிக்கலாம்; அங்குதான் திருமுழுக்குச் சடங்குகள் நடத்தப்படுகின்றன.

b இன்றுள்ள யெகோவாவின் சாட்சிகள் பலரும் நீச்சல் குளங்களிலோ குளியல் தொட்டிகளிலோ முழுமையாக அமிழ்த்தப்படுவதன்மூலம் திருமுழுக்கு பெற்றவர்களே.

[பக்கம் 13-ன் படம்]

பிரான்சு, ப்வாட்டியேவில் செ. ஜான் திருமுழுக்குத் தலம்

[பக்கம் 13-ன் படம்]

கோர்ஸிகா, மாரியானாவிலுள்ள மறுசீரமைக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டு திருமுழுக்குத் தலம்

[படத்திற்கான நன்றி]

© J.-B. Héron pour “Le Monde de la Bible”/Restitution: J. Guyon and J.-F. Reynaud, after G. Moracchini-Mazel

[பக்கம் 14-ன் படங்கள்]

கிறிஸ்துவின் திருமுழுக்கைச் சித்தரிக்கும் படங்கள்

யோர்தான் நதியில் மார்பளவு தண்ணீரில் நிற்கும் இயேசுவும் அவரது மேனியைத் துடைக்க துவாலைகளுடன் தேவதூதர்களும், ஒன்பதாம் நூற்றாண்டு

[படத்திற்கான நன்றி]

Cristal de roche carolingien - Le baptême du Christ © Musée des Antiquités, Rouen, France/Yohann Deslandes

யோர்தான் நதியில் கழுத்தளவு தண்ணீரில் இயேசு; வலப்பக்கம், அவரது மேனியைத் துடைக்க துணியுடன் தயாராக நிற்கும் இரண்டு தேவதூதர்கள், 12-ஆம் நூற்றாண்டு

[படத்திற்கான நன்றி]

© Musée d’Unterlinden - F 68000 COLMAR/Photo O. Zimmermann