Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அப்பா அம்மா சண்டைபோடும்போது நான் என்ன செய்வது?

அப்பா அம்மா சண்டைபோடும்போது நான் என்ன செய்வது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

அப்பா அம்மா சண்டைபோடும்போது நான் என்ன செய்வது?

உங்களால் அதைத் தவிர்க்க முடியாது, அதை நீங்கள் எதிர்ப்பட்டுத்தான் ஆக வேண்டும். என்ன இருந்தாலும் உங்கள் அப்பா அம்மாவை நீங்கள் நேசிக்கிறீர்கள், அவர்களைச் சார்ந்தும் இருக்கிறீர்கள். அதனால், அவர்கள் இரண்டு பேரும் ஒத்துப்போகாதபோது உங்கள் மனதில் ஆயிரம் கவலைகள் எழலாம். ‘சில சமயங்களில் என் அப்பா அம்மா ஏன் ஒரே வீட்டில் சுழலும் இரு துருவங்கள் போல் இருக்கிறார்கள்?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.

கருத்து வேறுபாடுகள்

ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்கையில் அவர்கள் ‘ஒரே மாம்சமாகிறார்கள்’ என இயேசு கூறினார். (மத்தேயு 19:5) அப்படியானால், உங்கள் அப்பா அம்மா எப்போதுமே ஒரே மாதிரி யோசிப்பார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை. பார்க்கப்போனால் எந்த இரண்டு நபர்களுக்கும் இடையே, ஏன், ஒன்றாக இணைந்திருக்கும் கணவன், மனைவிக்கு இடையேகூட கருத்து வேறுபாடுகள் கண்டிப்பாக இருக்கும்.

உங்கள் பெற்றோருக்குச் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தால் அவர்களுடைய திருமணப் பந்தம் முறியும் தறுவாயில் இருக்கிறது என்று அர்த்தமல்ல. உங்கள் பெற்றோர் சில சமயங்களில் ஒருவரையொருவர் எரிச்சலூட்டினாலும் அவர்கள் இன்னும் ஒருவரையொருவர் நேசிக்கத்தான் செய்கிறார்கள். அப்படியென்றால், அவர்கள் ஏன் வாக்குவாதம் செய்கிறார்கள்? ஒருவேளை சில விஷயங்களை அவர்கள் இருவரும் வித்தியாசமான கோணங்களிலிருந்து பார்க்கலாம். அது எப்போதும் தவறாக இருப்பதுமில்லை, அது அவர்களுடைய உறவுக்கு உலைவைப்பதுமில்லை.

உதாரணத்திற்கு: நீங்கள் எப்போதாவது உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பார்த்திருக்கிறீர்களா? அவர்களுடைய கண்ணோட்டமும் உங்களுடைய கண்ணோட்டமும் வித்தியாசமாய் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ஆம், அது சகஜம்தான். மிக நெருக்கமாகப் பழகும் நபர்களுக்கு இடையேகூட கருத்து வேற்றுமை இருக்கும்.

உங்கள் பெற்றோரிடத்திலும் இதுவே உண்மையாக இருக்கலாம். இருவருமே குடும்ப செலவுகளைப்பற்றி அக்கறையாய் இருக்கலாம், ஆனால் பட்ஜட் போடுவதில் வித்தியாசமான கருத்துகளைக் கொண்டிருக்கலாம்; இருவருமே குடும்பமாக விடுமுறையைக் கழிக்க விரும்பலாம், ஆனால் எது உண்மையில் ஓய்வளிக்கும் என்ற விஷயத்தில் அவர்கள் வித்தியாசமாக யோசிக்கலாம்; அல்லது இருவருமே நீங்கள் படிப்பில் சிறக்க வேண்டும் என்று ஆசைப்படலாம், ஆனால் உங்களை ஊக்குவிப்பதில் அவர்கள் வித்தியாசமான யோசனைகளைக் கொண்டிருக்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒற்றுமையாக இருப்பதற்கு ஒரே மாதிரி யோசிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாம்சமாய் இருக்கும் பந்தத்தில் இணைந்த இரு நபர்களுக்கு இடையேகூட கருத்து வேற்றுமை இருக்கலாம்.

சில சமயங்களில் உங்கள் பெற்றோரின் கருத்து வேறுபாடு ஏன் வாக்குவாதத்தில் முடிவடைகிறது? தன் கருத்தைத் தெரிவிப்பது போன்ற ஒரு சாதாரண விஷயம் ஏன் சூடான சொற்போராக வெடிக்கிறது?

அபூரணத்தின் விளைவினால் . . .

பெற்றோர் மத்தியில் எழுகிற அநேகச் சண்டைகளுக்கு அபூரணத்தைக் காரணமாகச் சுட்டிக்காட்டலாம். ‘நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷன்’ என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:2) உங்கள் பெற்றோரும் சரி நீங்களும் சரி பரிபூரணர் அல்ல. அவ்வப்போது, நாம் எல்லாருமே யோசிக்காமல் பேசிவிடுகிறோம். சில சமயங்களில் நம்முடைய சொற்கள் “பட்டயக்குத்துகள்போல்” மற்றவர்களைக் காயப்படுத்திவிடலாம்.—நீதிமொழிகள் 12:18.

நீங்களும் இதுபோல செய்திருக்கலாம். உதாரணத்திற்கு, உங்களுக்கு பிடித்த ஒரு நபரிடம் நீங்கள் என்றைக்காவது கோபத்தில் வெடித்துச் சிதறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒருவேளை நினைவிருக்கலாம். “எல்லாருக்குமே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன” என்று மாரி என்ற இளம் பெண் ஒத்துக்கொள்கிறாள். a “சொல்லப்போனால், நான் அதிகமாக நேசிக்கிறவர்கள்கூட என்னை அதிகமாக வெறுப்பேற்ற முடியும், ஒருவேளை நான் அவர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேனோ என்னவோ தெரியவில்லை!” என்று அவள் மேலுமாகச் சொல்கிறாள். கிறிஸ்தவ கணவன்மார்களும் மனைவிமார்களும் தங்களுக்கு இடையே நிறையவே எதிர்பார்க்கிறார்கள். அதில் ஆச்சரியமேதுமில்லை. ஏனெனில், பைபிள் அவர்களுக்கு உயர்ந்த தராதரங்களை வைத்திருக்கிறது. (எபேசியர் 5:24, 25) அபூரணர்களாக இருப்பதால் அவர்கள் இருவருமே தவறு செய்வது உறுதி. “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” இருக்கிறார்கள் என்கிறது பைபிள்.—ரோமர் 3:23; 5:12.

எனவே, உங்கள் பெற்றோர் அவ்வப்போது சண்டை போட்டுக்கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனெனில், திருமணமானவர்கள் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” அல்லது, “வேதனை அடைவார்கள்” என கத்தோலிக்க பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:28) சக்கையாய்ப் பிழிந்தெடுக்கும் முதலாளி, வாகன நெரிசல், எதிர்பாராத செலவு என்று எத்தனையோ காரணங்கள் வீட்டில் பிரச்சினைகளைக் கிளப்பிவிடலாம்.

உங்களுடைய பெற்றோர் அபூரணர்களாக இருப்பதையும் சில சமயங்களில் அவர்களுக்குத் தலைக்குமேல் பிரச்சினைகள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கையில் அவர்கள் போடும் சண்டையை உங்களால் நியாயமான விதத்தில் புரிந்துகொள்ள முடியும். மாரி அதைப் புரிந்துகொண்டாள். “என் அப்பா அம்மா முன்பைவிட இப்போதுதான் அதிகமாகச் சண்டை போடுகிறார்கள்” என்று அவள் சொல்கிறாள். “அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்க ஆரம்பித்துவிட்டார்களா என சில சமயங்களில் யோசிப்பேன். என்றாலும், ‘கல்யாணமாகி 25 வருஷம் ஆகிவிட்டது, ஐந்து பிள்ளைகள் வேறு, அவர்களை வளர்ப்பதென்றால் சும்மாவா!’ அதை புரிந்துகொள்ளாமல் இருக்கிறேனே என்று பிறகு யோசித்துப்பார்ப்பேன்.” எனவே, உங்கள் பெற்றோருக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதை மனதில் வைத்து அவர்களிடம் ‘இரக்கமுள்ளவர்களாய்’ இருங்கள், அதாவது, அவர்களுடைய நிலைமையைப் புரிந்துகொள்ளுங்கள்.—1 பேதுரு 3:8.

எப்படிச் சமாளிப்பது

உங்களுடைய பெற்றோர் அபூரணர் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், தினந்தோறும் அவர்கள் ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால், ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் கிடைக்கவில்லை, அதாவது அவர்கள் சண்டைபோடுகையில் நீங்கள் என்ன செய்யலாம்? பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றி பாருங்கள்:

◼ தலையிடாதீர்கள். (நீதிமொழிகள் 26:17) உங்கள் பெற்றோருக்கு நீங்கள் திருமண ஆலோசகராக இருப்பதோ அவர்களுடைய சண்டைகளைத் தீர்த்து வைப்பதோ உங்களுடைய வேலையல்ல. நீங்கள் ஒருவேளை அவர்களுடைய சண்டையில் தலையிட முயற்சி செய்தால், உங்களுக்குத் திட்டுதான் விழும். 18 வயது ஷார்லின் இவ்வாறு சொல்கிறாள்: “முன்பெல்லாம் நான் தலையிட்டிருக்கிறேன், ஆனால், ‘இது உனக்கு தேவையில்லாத விஷயம்’ என்று சொல்லி விரட்டிவிடுவார்கள்.” உங்கள் பெற்றோரே சமாதானமாவதற்கு விட்டுவிடுங்கள்.

◼ நியாயமாகச் சீர்தூக்கிப் பாருங்கள். (கொலோசெயர் 3:13) நாம் ஏற்கெனவே பார்த்தபடி, உங்கள் பெற்றோர் அவ்வப்போது சண்டை போட்டுக்கொண்டால் அவர்களுடைய திருமண பந்தம் முறிந்துவிடும் தறுவாயில் இருக்கிறது என்று அர்த்தமல்ல. ஆகவே, அவர்கள் மத்தியில் எப்போதாவது வாக்குவாதம் ஏற்பட்டால் பயந்துவிடாதீர்கள். 20 வயதுள்ள மெலானி சொல்வதாவது: “அவர்கள் சண்டைபோட்டாலும் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள், குடும்பத்தையும் நேசிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் சமாதானமாகிவிடுவார்கள்.” உங்களுடைய பெற்றோர் சண்டை போடுகையிலும் இதுவே உண்மையாக இருக்கலாம்.

உங்கள் கவலைகளைக் குறித்து ஜெபியுங்கள். உங்கள் கவலைகளையெல்லாம் மனதிற்குள் பூட்டிவைக்கவேண்டிய அவசியமில்லை. “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 55:22) ஜெபம் செய்வது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். “உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” என்று அப்போஸ்தலன் பவுல் பிலிப்பியருக்கு எழுதினார்.—பிலிப்பியர் 4:6, 7.

◼ உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். உங்களால் சரிசெய்ய முடியாத ஒன்றைக் குறித்து கவலைப்படுவது ஞானமல்ல. அப்படிச் செய்வது உங்கள் உடல் நலத்தைக்கூட பாதித்துவிடலாம். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 12:25) உற்சாகமளிக்கும் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதன் மூலமும் ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுவதன் மூலமும் உங்கள் கவலையைப் போக்க முயற்சி செய்யுங்கள்.

◼ உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். உங்கள் பெற்றோரின் சண்டைகளில் நீங்கள் தலையிடாவிட்டாலும், அவர்கள் சண்டையிடுவது உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. அப்பாவிடமோ அம்மாவிடமோ பேசுவதற்கு ஒரு நல்ல சமயத்தைத் தேர்ந்தெடுங்கள். (நீதிமொழிகள் 25:11) “பணிவோடும் மரியாதையோடும்” அவர்களிடம் பேசுங்கள். (1 பேதுரு 3:16, பொது மொழிபெயர்ப்பு) அவர்களைக் குறைகூறாதீர்கள். நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் விளக்குங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை நீங்கள் ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? உங்களுடைய பெற்றோர் நல்ல விதமாகப் பிரதிபலிக்கலாம். ஒருவேளை அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றாலும் கவலைப்படாதீர்கள். உங்களுடைய பெற்றோரை உங்களால் மாற்ற முடியாவிட்டாலும் அவர்கள் சண்டை போடுகையில் நீங்கள் பிரதிபலிக்கிற விதத்தை மாற்றிக்கொள்ளலாம் என்பதை புரிந்துகொண்ட திருப்தி உங்களுக்கு கிடைக்கும்.

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க

சிந்திப்பதற்கு

◼ பெற்றோர் சில சமயங்களில் ஏன் ஒத்துப்போக கஷ்டப்படுகிறார்கள்?

◼ உங்கள் பெற்றோரின் சண்டையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் தம்பியிடமோ தங்கையிடமோ என்ன சொல்வீர்கள்?

[அடிக்குறிப்பு]

a இக்கட்டுரையில் வரும் பெயர்கள் நிஜப் பெயர்கள் அல்ல.

[பக்கம் 20-ன் பெட்டி]

பெற்றோருக்கு ஒரு குறிப்பு

திருமண வாழ்க்கை என்றால் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கையாளுவார்கள். தாய் தந்தையின் கருத்து வேற்றுமைகளால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இது பெற்றோர் கவனிக்கவேண்டிய விஷயமாய் இருக்கிறது. ஏனெனில், உங்கள் பிள்ளைகள் ஒருவேளை திருமணம் செய்துகொண்டால் நீங்கள் செய்வதையே அவர்களும் செய்ய வாய்ப்பிருக்கிறது. (நீதிமொழிகள் 22:6) வாக்குவாதம் ஏற்படுகையில், நல்ல விதமாய் தீர்ப்பதற்கு அதை ஏன் ஒரு வாய்ப்பாகக் கருதக்கூடாது? பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றி பாருங்கள்:

செவிகொடுத்துக் கேளுங்கள். “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும்” இருக்கும்படி பைபிள் நமக்குச் சொல்கிறது. (யாக்கோபு 1:19) ‘தீமைக்குத் தீமை செய்வதன்மூலம்’ எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்காதீர்கள். (ரோமர் 12:17) உங்கள் மணத் துணை செவிகொடுத்துக் கேட்காவிட்டாலும் நீங்கள் கேளுங்கள்.

எடுத்துச் சொல்லுங்கள், குறை கூறாதீர்கள். உங்கள் கணவனோ மனைவியோ நடந்துகொண்ட விதம் உங்களை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதை சாந்தமாக எடுத்துச் சொல்லுங்கள். (“எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது, நீங்கள் அப்படி . . .”) உங்கள் துணைமீது பழிபோடவோ குறைகூறவோ தோன்றுகையில் அந்த உணர்வை அடக்கிக்கொள்ளுங்கள். (“உங்களுக்கு என்மீது அக்கறையே இல்லை.” “நான் சொல்வதை நீங்கள் காதுகொடுத்துக் கேட்பதே இல்லை.”)

பிரச்சினையை ஆறப்போடுங்கள். சில சமயங்களில் அந்த விஷயத்தைக் குறித்து எதுவும் பேசாமல் ஆறப்போட்டுவிட்டு அமைதி திரும்பிய பிறகு பேசுவது நல்லது. “சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்து விடுகிறது போலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு” என்று பைபிள் ஆலோசிக்கிறது.—நீதிமொழிகள் 17:14

ஒருவரிடமொருவர் மன்னிப்பு கேளுங்கள், தேவைப்பட்டால் உங்கள் பிள்ளைகளிடமும் கேளுங்கள். 14 வயதாயிருக்கும் ப்ரியன் இவ்வாறு சொல்கிறான்: “சில சமயங்களில், என் அப்பா அம்மா சண்டைபோட்டு முடித்த பிறகு என்னிடமும் என் அண்ணனிடமும் வந்து மன்னிப்பு கேட்பார்கள். ஏனென்றால், அவர்களுடைய சண்டை எங்களை எப்படிப் பாதிக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.” “என்னை மன்னித்துவிடுங்கள்” என்று தாழ்மையுடன் கேட்க சொல்லித்தருவதுதான் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்றுத்தர வேண்டிய முக்கியமான பாடங்களில் ஒன்று.

கூடுதல் தகவலுக்கு, பிப்ரவரி 8, 2001, பக்கங்கள் 8-14 மற்றும் ஜனவரி 22, 1994, பக்கங்கள் 3-12 (ஆங்கிலம்) விழித்தெழு! இதழ்களைப் பார்க்கவும்.

[பக்கம் 19-ன் படம்]

அவர்களைக் குறைகூறாதீர்கள். நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் விளக்குங்கள்