Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆப்பிரிக்காவிலிருந்து கண்கவர் ரோஜாக்கள்

ஆப்பிரிக்காவிலிருந்து கண்கவர் ரோஜாக்கள்

ஆப்பிரிக்காவிலிருந்து கண்கவர் ரோஜாக்கள்

கென்யாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான பூக்கள்!” “ஒரு நெருங்கிய நண்பருக்குக் கொடுக்கத்தக்க சிறந்த அன்பளிப்பு.” “‘உங்களை நேசிக்கிறேன்’ என்று சொல்லாமல் சொல்வதற்கு ஒரு வழி.”

இவையெல்லாம் கென்யாவிலுள்ள நைரோபியைச் சேர்ந்த சிலரின் உணர்ச்சிபொதிந்த கூற்றுகள். ஒருவேளை இவை உங்கள் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கலாம். தாவர உலகிலே, காட்டுச் செடிகளானாலும் சரி, மனிதனால் வளர்க்கப்பட்ட செடிகளானாலும் சரி, ரோஜாவைப் போல சர்வதேச புகழ்பெற்ற பூக்கும் தாவரம் வேறில்லை எனலாம். நூற்றாண்டுகளாக, மனிதனின் கற்பனையை தன் வசப்படுத்தியிருக்கிறது இந்த ரோஜா. இந்த மலரைக் குறித்து கவிஞர்கள் எழுத்தில் வடித்திருக்கிறார்கள், கலைஞர்களோ கலை வடிவில் பலமுறை சித்தரித்திருக்கிறார்கள். ரோமியோ அண்ட் ஜூலியட் என்ற படைப்பில் ஷேக்ஸ்பியர் பிரபலமான இந்த வார்த்தைகளால் ரோஜாவுக்குப் புகழ் சேர்த்திருக்கிறார்: “ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதே நறுமணத்தைத்தான் வீசும்.” ரோஜாக்கள், புதிய நட்புகள் மலருவதற்கும் பலப்படுவதற்கும் காரணமாய் இருந்திருக்கின்றன; முறிந்த உறவுகளை மீண்டும் உயிர்பெற செய்திருக்கின்றன, உடல்நலம் குன்றிய பலருக்கும் உற்சாகம் அளித்திருக்கின்றன.

இவை போக, ரோஜாவுக்கு பொருளாதார மவுசும் அதிகம். பூக்களைச் சாகுபடி செய்வதற்கு சாதகமான வானிலை இருக்கும் அநேக நாடுகளில், ரோஜாவே அதிகப்படியான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது. உதாரணத்திற்கு, சமீப வருடத்தில் கென்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட லட்சக்கணக்கான பூக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக ரோஜாக்களே இருந்தன; இதனால் அந்த நாடு ரோஜா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகிறது.

கடந்த காலங்களில், ரோஜாவின் வசீகரிக்கும் பண்புகள் மனிதனின் கவனத்தை ஈர்ப்பதற்குமுன், ரோஜா செடி காட்டுச் செடியாகவே வளர்ந்து வந்தது. இன்றோ, கலப்பின முறைகளைக் கவனமாகப் பயன்படுத்துவதன்மூலம் 100-க்கும் அதிக வகை காட்டு ரோஜாக்களை வைத்து ஆயிரக்கணக்கான ரோஜா வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரோஜா மலர் உலகறிந்த மலராகி, இன்று கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது. இவற்றில் கலப்பின டீ ரோஜாக்களே மிகப் பிரபலமானவை, பரவலாக வளர்க்கப்படுபவை.

தோட்டத்திலிருந்து உங்கள் கைகளுக்கு

பெரும்பாலும், மலர் விற்பனையாளரிடமிருந்தோ சூப்பர் மார்க்கெட்டிலிருந்தோ மக்கள் ரோஜாக்களை வாங்குகிறார்கள். இந்தப் பூக்கள் வியாபார நோக்கத்துடன் பெரிய தோட்டங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் ரோஜாக்களைவிட இவற்றுக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. நைரோபிக்கு அருகேயுள்ள இப்படிப்பட்ட பெரிய தோட்டம் ஒன்றைப் பார்க்கச் சென்றபோது, இந்த மலர்கள் சந்தைக்கு வந்து சேருமுன் அவற்றுக்கு எப்பேர்ப்பட்ட கவனம் கொடுக்கப்படுகிறது என்பது தெரிய வந்தது.

கென்யாவில் மற்ற இடங்களில் இருப்பதைப் போலவே, இங்கும் பெரிய பாலியெத்திலின் க்ரீன்ஹவுஸ்கள் இருக்கின்றன. பாலியெத்திலினாலான இந்தப் பெரிய அறைகளைப் பார்த்ததும் அங்கு வியாபாரத்திற்காக ரோஜாக்களை வளர்க்கும் தோட்டம் இருப்பதைச் சட்டென அடையாளம் காண முடிகிறது. (பக்கம் 26-ல் போட்டோவைப் பார்க்கவும்.) புதிதாக ஒட்டுப்போடப்பட்ட ரோஜாக்கள் எளிதில் சேதமடையலாம் என்பதால், கடுமையான வானிலையிலிருந்து அவற்றுக்குப் பாதுகாப்பு தேவை. பலத்த மழை, காற்று, அல்லது நேரடியாகப் படும் சூரிய ஒளி அவற்றுக்கு ஊறு விளைவிக்கலாம். நிலையான தட்பவெப்ப நிலையைக் காத்துக்கொள்வதற்கு, க்ரீன்ஹவுஸின் உள்ளே குளிர் காற்று சுலபமாக வருவதும் வெப்பக் காற்று வெளியேற்றப்படுவதும் அவசியம். இப்படி அநேக காரணங்களுக்காக இதுபோன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சியில் வித்தியாசமான நிலைகளை எட்டியிருக்கும் இளம் மலர்கள் வரிசை வரிசையாக இந்த அறைகளுக்குள் காணப்படுகின்றன. இந்தத் தோட்டத்தில் பல்வேறு வகை ரோஜாக்கள் வளர்க்கப்படுகின்றன. 70 சென்டிமீட்டருக்கும் சற்று அதிக நீளமாக வெட்டப்படும் பிரபல கலப்பின டீ ரோஜாவிலிருந்து 35 சென்டிமீட்டர் நீளமான ஒருவகை கலப்பின டீ ரோஜாவாகிய ஸ்வீட் ஹார்ட் ரோஜா வரைக்கும் பல ரோஜாக்கள் இங்குள்ளன. இந்தத் தோட்டத்தின் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் சுமார் 70,000 செடிகள் வரை நடப்படலாம்.

இந்தச் செடிகள் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவது எப்படி? இவற்றுக்கு சாதாரண மண் பயன்படுத்தப்படுவதில்லை. பாலியெத்திலின் ஷீட்டுகள்மீது படிகக் கற்களை (எரிமலை பாறை கற்கள்) வைத்து மலர் படுக்கை அமைக்கப்படுகிறது. மண்ணின் வாயிலாக பரவும் பல நோய்கள் இந்தக் கற்களைத் தாக்குவதில்லை. எனவேதான், இந்த முறை அதிகம் விரும்பப்படுகிறது. இந்தச் செடிகளுக்குச் சொட்டு முறையில் நீர்பாசனம் செய்யப்படுகிறது. இந்த முறையில், சிறிய பிளாஸ்டிக் குழாய்கள்மூலம் மலர் படுக்கைக்கு நீர்விடப்படுகிறது. தண்ணீரும் மற்ற ஊட்டச் சத்துப் பொருட்களும் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் இந்தக் குழாய்கள்மூலம் செலுத்தப்படுகின்றன. அந்த எரிமலை பாறை கற்கள் நுண்துளைகளை உடையவை என்பதால் அவை பிளாஸ்டிக் படுக்கையிலிருந்து தண்ணீரை வடிய விடுகின்றன. பின்னர் அந்த நீர் சேகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

ரோஜாக்களுக்கு விசேஷ கவனம் செலுத்தப்படுகிறபோதிலும், அவை பல வகையான நோய்களால் தாக்கப்படலாம். முக்கியமாக பூஞ்சணங்கள் இவற்றுக்குக் காரணமாகின்றன. போட்டிரைடிஸ் என்ற பூஞ்சணங்களும் மில்டியூ என்ற மாவுப் பூஞ்சணங்களும் இதில் அடங்கும். இவை செடிகளின் இலைகளையும் தண்டுகளையும் பாதிக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்த நோய்கள் மலர்களின் தரத்தை பெரிதும் பாதித்துவிடலாம். பூஞ்சணக்கொல்லிகள்மூலம் இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்தலாம்.

நாளடைவில், தோட்டத்தில் வண்ண வண்ண மலர்கள் பளிச்சிடுகின்றன; ரோஜாக்கள் அறுவடைக்குத் தயார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. மொட்டு விரியாத பூக்கள் கவனமாக வெட்டப்படுகின்றன. இந்நிலையில் இதழ்கள் இன்னும் விரியாதிருக்கின்றன. இந்தச் சமயத்தில் அறுவடை செய்கையில், மலர்களின் ஆயுசைக் கூட்டுவதோடு நிறத்தையும் அதிக நாட்களுக்கு தக்கவைக்க முடிகிறது. என்றாலும், ரோஜாவின் வகையைப் பொறுத்து அவை அறுவடை செய்யப்படும் சமயமும் வேறுபடலாம். காலையிலோ வெயில் தாழ்ந்த பிறகோ பூக்களை வெட்டி எடுப்பது முக்கியம். ஏனெனில், அப்போது ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அவை சீக்கிரமாக வாடிவிடாது. வெட்டப்பட்ட பூக்கள் பிறகு குளிர் அறைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. ரோஜாக்கள் அதிக நேரம் வாடாமல் இருப்பதற்கு இதுவும் பங்களிக்கிறது.

இந்த மலர்கள் இன்னொரு முக்கியமான கட்டத்தைக் கடக்க வேண்டியுள்ளது. அதுதான் தரம் பிரித்தல். இந்தக் கட்டத்தில் அவை நிறத்திற்கும் நீளத்திற்கும் தகுந்தவாறு பிரிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அவை ‘பேக்’ செய்யப்படுகின்றன. இப்போது இந்த மலர்கள் சந்தைக்குச் செல்ல தயாராகிவிட்டன. இந்தத் தோட்டத்திலிருந்து அவை நைரோபியிலுள்ள முக்கிய விமானநிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அங்கிருந்து அவை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். அவை எளிதில் சேதமடையும் சாத்தியம் இருப்பதால், உள்ளூர் சந்தைக்கானாலும் சரி சர்வதேச சந்தைக்கானாலும் சரி, அறுவடை செய்து 24 மணிநேரத்திற்குள் போய்ச்சேர வேண்டும்.

அடுத்த முறை நீங்கள் ஒரு ரோஜா மலர்ச் செண்டை அன்பளிப்பாகப் பெறுகையில் அல்லது சூப்பர் மார்கெட்டிலிருந்தோ மலர் விற்பனையாளரிடமிருந்தோ வாங்குகையில் சற்று நிதானித்து, யோசித்துப்பாருங்கள். அந்த மலர்ச் செண்டு நீண்ட பயணத்தைச் செய்திருக்கலாம், ஒருவேளை ஆப்பிரிக்காவிலிருந்துகூட வந்திருக்கலாம் என்பதை ஒரு கணம் யோசியுங்கள். படைப்பாளராகிய யெகோவா தேவன் மீதுள்ள உங்கள் போற்றுதலை அது மேன்மேலும் அதிகரிக்கக்கூடும்.—சங்கீதம் 115:15.

[பக்கம் 26-ன் பெட்டி/படங்கள்]

நீல நிற ரோஜா என்றாவது நிஜமாகுமா?

ரோஜா உலகில் கலப்பின முறைகள்மூலம் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ரோஜாவின் நெடுந்தூரப் பயணம் இன்னும் தொடர்கிறது. ரோஜாவை இனவிருத்தி செய்வதற்கும் பயிர் செய்வதற்கும் புதுப்புது முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. விதவிதமான நிறங்களுடன் புது ரகங்களாக உண்டாகி வருவதில் ரோஜாக்களுக்கு இருக்கும் திறத்தை அரிதாகவே வேறு மலர்களில் காண முடிகிறது. எந்த நிறம் உங்களை மிகவும் கவர்கிறது? வெள்ளையா, மஞ்சளா, இளஞ்சிவப்பா, கடுஞ்சிவப்பா, அல்லது பழுப்பு கலந்த கடுஞ்சிவப்பா? இவற்றில் பெரும்பாலானவை, பல வகையான கலப்பின முறைகளால் பிறந்தவை.

உதாரணமாக, மக்கள் “சிவப்பு” ரோஜாக்களைப்பற்றி பேசினாலும், உண்மையான சிவப்பு ரோஜாக்கள், ரோஜா குடும்பத்தில் இருக்கவே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், சிவப்பு நிறமியை உருவாக்கும் மரபணு அந்தக் குடும்பத்தில் இல்லை. மரபணுக்களில் இயற்கையாக ஏற்படும் திடீர்மாற்றங்களின் விளைவாக சுமார் 1930-ஆம் ஆண்டு அடர்த்தியான சிவப்பு நிறத்தில் ரோஜாக்கள் தோன்றின. காலப்போக்கில் இவை மருவி இன்று நாம் காண்கிற பளிச்சிடும் சிவப்பு நிற ரோஜாக்களாக உருவெடுத்திருக்கின்றன. இந்த மலரின் எல்லா வகைகளிலும் நீல நிற ரோஜா மட்டும் நெடுநாளாகத் தோன்றவில்லை. நீல நிறத்தை தரும் டெல்ஃபினிடின்னை உருவாக்கும் மரபணு, இயற்கையாக ரோஜா குடும்பத்தில் இல்லை. என்றாலும், மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஆஸ்திரேலிய நிறுவனமும் ஒரு ஜப்பானிய நிறுவனமும் சேர்ந்து பல வருடங்களாக நடத்திய ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு “நீல” ரோஜா 2004-ல் உருவாக்கப்பட்டது. இருந்தாலும், அடர்த்தியான நீல நிறத்தில் ரோஜாவை உருவாக்க இன்னும் அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

[படம்]

பாலியெத்திலின் க்ரீன்ஹவுஸ்

[பக்கம் 25-ன் படம்]

அறுவடைக்குத் தயார்