உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பது எப்படி?
பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப்பற்றி நம்மில் பெரும்பாலோர் விலாவாரியாகப் பேச விரும்ப மாட்டோம். இந்தப் பாதகச் செயலை நினைக்கும்போதே பெற்றோர்களுக்குத் திகில் தொற்றிக்கொள்கிறது. என்றாலும், பாலியல் துஷ்பிரயோகம் என்ற கொடுமை அதிர்ச்சி அளிக்கிற, விரும்பத்தகாத நிஜமாக நம் மத்தியில் உலவி வருகிறது. பிள்ளைகள்மீது அது மறையாத வடுக்களை ஏற்படுத்துகிறது. இவ்விஷயத்தைப்பற்றி சிந்திப்பது அவசியம்தானா? சரி, இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்: உங்கள் பிள்ளையின் பாதுகாப்பை நீங்கள் எந்தளவு முக்கியமானதாய் கருதுகிறீர்கள்? இந்தக் கொடுமையைப் பற்றிய திடுக்கிட வைக்கும் உண்மைகளை அறிந்துகொள்வது உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க நீங்கள் எடுக்கிற சிறிய முயற்சியே. ஆனால், இது அவர்களைப் பாதுகாக்க பெரிதும் கைகொடுக்கும்.
இந்தப் பிரச்சினையைக் கண்டு கலங்கி, எப்படிச் சமாளிப்பது என்று இடிந்துபோய் உட்கார்ந்துவிடாதீர்கள். இதைச் சமாளிக்க உங்களுக்குச் சக்தியில்லை என்று நீங்கள் நினைத்தாலும், உங்கள் பிள்ளையிடம் இல்லாத சில திறன்கள் உண்மையில் உங்களிடம் இருக்கின்றன. அந்தத் திறன்களை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைக்கு பல ஆண்டுகள், ஏன் பல பத்தாண்டுகள்கூட ஆகலாம். உருண்டோடிய இத்தனை ஆண்டுகளில் நீங்கள் அறிவையும் அனுபவத்தையும் ஞானத்தையும் குருவி சேர்ப்பது போல் சிறுகச்சிறுகச் சேர்த்திருக்கிறீர்கள். இந்தத் திறன்களை மேம்படுத்தி, உங்கள் பிள்ளையைப் பாதுகாக்கும் கேடகமாக இவற்றைப் பயன்படுத்த வேண்டும். பிள்ளையைப் பாதுகாப்பதில் வெற்றி காண இவை உங்களுக்கு உதவும். ஒவ்வொரு பெற்றோரும் எடுக்க வேண்டிய மூன்று முக்கிய நடவடிக்கைகளைப்பற்றிச் சிந்திக்கலாம். அவை: (1) உங்கள் பிள்ளைக்கு முக்கிய பாதுகாப்பு அரணாக இருங்கள். (2) இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள உதவும் சில அடிப்படைத் தகவல்களை அவர்களுக்குத் தெரிவியுங்கள். (3) தற்காத்துக்கொள்ள துணைபுரியும் சில முக்கிய விஷயங்களைக் கற்றுக்கொடுங்கள்.
முக்கிய பாதுகாப்பு அரணாக இருக்கிறீர்களா?
பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பு பெற்றோருக்கே உள்ளது, பிள்ளைகளுக்கு அல்ல. ஆகவே, இவ்விஷயத்தைக் குறித்து பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் அதைப்பற்றி பெற்றோர் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியென்றால், பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது சம்பந்தமாக சில தகவல்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். எப்படிப்பட்ட ஆட்கள் இதில் ஈடுபடுகிறார்கள், அவர்கள் என்ன முறைகளைக் கையாளுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். முன்பின் தெரியாத கயவர்களே இத்தகைய காரியங்களைச் செய்வதாகப் பெற்றோர்
பெரும்பாலும் நினைக்கிறார்கள்; அந்தக் கயவர்கள் இருட்டில் மறைந்திருந்து, பிள்ளைகளைக் கடத்திச் சென்று கற்பழிக்கும் தருணத்திற்குக் காத்திருப்பார்கள் என்று கற்பனை செய்துகொள்கிறார்கள். அப்படிச் செய்கிற கயவர்கள் இருப்பது உண்மைதான். இத்தகையவர்களைப் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேட்கிறோம். என்றாலும், யாரோ முன்பின் தெரியாதவர்களால் பலாத்காரம் செய்யப்படுவதைவிட நன்கு பழக்கமான நபர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதே இன்று அதிகம். பாலியல் துஷ்பிரயோகத்திற்குப் பலியாகும் பிள்ளைகளில் 90 சதவீதத்தினர், தாங்கள் நன்கு அறிந்த, மலைபோல் நம்பின ஆட்களாலேயே ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.அன்பான அயலகத்தார், ஆசிரியர், உடல்நல பராமரிப்பாளர், பயிற்சியாளர், அல்லது சொந்தக்காரர் என யாரோவொருவர் காமவெறியோடு உங்கள் பிள்ளைமீது குறிவைப்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்க மாட்டீர்கள்; இப்படி நினைக்காதிருப்பது இயல்பே. உண்மையில், பெரும்பாலோர் அப்படிப்பட்ட மோசமானவர்கள் அல்ல. அதனால், உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தேவையில்லை. இருந்தாலும், பிள்ளைகளைத் துஷ்பிரயோகம் செய்யும் காமுகன் என்னென்ன வழிமுறைகளைக் கையாளுகிறான் என்பதைத் தெரிந்துகொள்வது, உங்கள் பிள்ளையைப் பாதுகாக்க உதவும்.— பக்கம் 6-ல் உள்ள பெட்டியைக் காண்க.
பெற்றோராகிய நீங்கள் அரண் போலிருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க இவ்விஷயங்கள் உங்களை நன்கு தயார்படுத்தும். உதாரணமாக, பெரியவர்களைவிட பிள்ளைகளை ஒருவர் அதிகம் நேசிப்பது போல் தெரியலாம்; அத்தகைய நபர் உங்களுடைய பிள்ளையிடம் அதிக அக்கறை காட்டுகிறாரா? பரிசுகளை வாங்கித் தருகிறாரா? அல்லது நீங்கள் வீட்டிலில்லாத சமயத்தில் பிள்ளையைப் பார்த்துக்கொள்ள அவர் அடிக்கடி முன்வருகிறாரா? அல்லது உங்கள் பிள்ளையைத் தனியாக வெளியே அழைத்துச் செல்ல விரும்புகிறாரா? இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்படிப்பட்டவர் பிள்ளைகளைத் துஷ்பிரயோகம் செய்பவர் என்று கண்ணை மூடிக்கொண்டு முத்திரை குத்திவிடலாமா? கூடாது. சட்டென்று இப்படி முடிவுகட்டிவிடாதீர்கள். ஒருவேளை அவர் உங்கள் பிள்ளையிடம் கள்ளங்கபடமின்றி பழகி வரலாம். ஆனாலும் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லது. “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 14:15.
நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு ஒருவர் வலிய வந்து உபகாரம் செய்தால் அதன் பின்னால் ஏதோ உள்நோக்கம் இருக்கலாம் என்பதை மனதில் வையுங்கள். உங்கள் பிள்ளையோடு தனிமையில் நேரத்தைச் செலவிட விரும்பும் எவர்மீதும் ஒரு கண் வையுங்கள். திடுதிப்பென எந்நேரத்திலும் உங்கள் பிள்ளையைப் பார்க்க நீங்கள் வருவீர்கள் என்பது அப்படிப்பட்ட நபர்களுக்குத் தெரிந்திருக்கட்டும். மூன்று பிள்ளைகளை உடைய மெலிஸா, பிராட் தம்பதியர், தங்களுடைய எந்தப் பிள்ளையையும் பெரியவர் ஒருவரோடு தனியாக இருக்க அனுமதிக்கும் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அவர்களுடைய மகன் ஒருவனுக்கு வீட்டிலேயே இசைப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதைக் கற்றுத்தர வந்த ஆசிரியரிடம், “நீங்கள் இங்கிருக்கையில் நான் அவ்வப்போது இங்கே வந்து போவேன்” என்று மெலிஸா கூறினார். இப்படிக் கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு கண்காணிக்க வேண்டுமா என்று நீங்கள் நினைக்கலாம். என்றாலும், வருமுன் காப்பதே சிறந்தது என்பதை இந்தத் தம்பதியர் அறிந்திருக்கிறார்கள்.
உங்களுடைய பிள்ளைகள் என்னென்ன செய்கிறார்கள், அவர்களுடைய நண்பர்கள் யார், யார், பள்ளியில் என்னென்ன பாடங்களைப் படிக்கிறார்கள் என எல்லாவற்றிலும் மிகுந்த கவனம் செலுத்துங்கள். சுற்றுலா செல்ல ஏதேனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டால் அதுபற்றிய அனைத்துத் தகவல்களையும் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் 33 ஆண்டுகளைச் செலவிட்ட மனநல மருத்துவர் ஒருவர் சொல்கையில், பெற்றோர்கள் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தாலே இவற்றில் எண்ணற்ற சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டார். பூப்போன்ற பிள்ளைகளை கசக்கிய கயவன் ஒருவன், “என்னைக் கேட்டால், பிள்ளைகளை பெற்றோர்களே எங்களுக்குத் தாரை வார்க்கிறார்கள் என்பேன் . . . என் வேலையை அவர்கள் ரொம்பவே எளிதாக்கினார்கள்” என்று சொன்னதாக அவர் குறிப்பிடுகிறார். பெரும்பாலான காமக்கொடூரர்கள் எளிதாக தங்கள் வலையில் விழுகிற பிள்ளைகளையே குறிவைக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், ஏது செய்கிறார்களென சதா கவனிக்கிற பெற்றோர்கள் அத்தகைய வலையில் அவர்கள் விழாதபடி பார்த்துக்கொள்கிறார்கள்.
உங்கள் பிள்ளையை அரண் போலிருந்து பாதுகாக்க மற்றொரு வழி, அவர்கள் பேசும்போது கவனமாய் கேட்பதாகும். துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்கிறார்கள். அவமானத்தால் கூனிக்குறுகிப் போவதும், வெளியில் சொன்னால் என்னவாகுமோ எனப் பயப்படுவதுமே அதற்குக் காரணம். ஆகவே, துளி அறிகுறி தென்பட்டால்கூட அதை உன்னிப்பாகக் கவனியுங்கள். a உங்கள் பிள்ளை சொன்ன ஏதோவொரு விஷயம் உங்கள் மனதை நெருடினால், நிதானமாகக் கேள்விகளைக் கேட்டு, பிள்ளையை மனந்திறந்து பேச வையுங்கள். b பெற்றோர் இல்லாதபோது தன்னைக் கவனித்துக்கொள்ள வருகிற நபரை அதற்குப் பிடிக்காவிட்டால், அதற்கான காரணத்தைக் கேளுங்கள். பெரியவர் ஒருவர் விநோதமான விளையாட்டுகளைத் தன்னுடன் விளையாடுவதாக அவன் சொன்னால், “அது என்ன விளையாட்டு?” “அவர் என்ன செய்வார்?” என்று கேளுங்கள். யாரோ கிச்சுகிச்சு மூட்டியதாய் அவன் உங்களிடம் புகார் செய்தால், “எங்கே கிச்சுகிச்சு மூட்டினார்?” என்று கேளுங்கள். பிள்ளை சொல்லும் பதில்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ‘நீ சொல்லுவதை யாருமே நம்ப மாட்டார்கள்’ என்றுதான் துஷ்பிரயோகம் செய்கிற கயவர்கள் பிள்ளைகளிடம் சொல்கிறார்கள். பெரும்பாலும் அதுதான் உண்மை என்பது வருத்தகரமான விஷயம். துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிள்ளையைப் பெற்றோர்கள் நம்புவதும், ஆதரவாய் இருப்பதும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு சகஜநிலைக்குத் திரும்ப பிள்ளைக்கு உதவும்.
உங்கள் பிள்ளைக்கு முக்கிய பாதுகாப்பு அரணாக இருங்கள்
அடிப்படைத் தகவல்களை அளித்திடுங்கள்
“பாலுறவைப்பற்றி ஒன்றுமே தெரியாத பிள்ளையை என் வலையில் விழச்செய்வது எளிது.” இந்த வார்த்தைகள், பாலியல் துஷ்பிரயோகத்தை ஆய்வுசெய்து வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் காணப்பட்டன; இவை, பிள்ளைகளைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காகப் பிடிபட்ட குற்றவாளி ஒருவன் சொன்ன வார்த்தைகளே. பதற வைக்கும் இந்த வார்த்தைகள் பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி என்றே சொல்ல வேண்டும். பாலுறவைப்பற்றி ஏதுமறியா பிள்ளைகள் இப்படிப்பட்ட காமுகர்களுக்கு மிக எளிதில் இரையாகிறார்கள். அறிவும் ஞானமும், ‘மாறுபாடு பேசுகிற மனுஷனிடமிருந்து’ நம்மைக் காப்பாற்ற முடியும் என்று பைபிள் கூறுகிறது. (நீதிமொழிகள் 2:10-12) உங்கள் பிள்ளை இப்படிக் காப்பாற்றப்பட வேண்டுமென்றுதானே நீங்கள் விரும்புவீர்கள்? ஆக, இந்த முக்கியமான விஷயத்தைக் குறித்து அவனிடம் பேசத் தயங்காதீர்கள்; இதுவே அவனைப் பாதுகாப்பதற்கான இரண்டாவது முக்கிய வழியாகும்.
ஆனால், எப்படிப் பேசுவீர்கள்? பாலுறவைப்பற்றி பிள்ளைகளிடம் பேச அநேக பெற்றோர் சங்கோஜப்படுகிறார்கள். இதைப்பற்றி உங்களிடம் பேச உங்கள் பிள்ளை இன்னுமதிகமாகச் சங்கோஜப்படலாம்; ஆகவே, பெரும்பாலும் அவன் முதலில் இதுபற்றிய பேச்சை வெளியே எடுக்க மாட்டான். எனவே, நீங்கள் முதலாவது பேச ஆரம்பியுங்கள். “எங்கள் பிள்ளைக்கு சின்னஞ்சிறு வயதிலேயே இதுபற்றி நாங்கள் சொல்லித்தர ஆரம்பித்தோம். முதலில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றின் பெயரையும் சொல்லிக் கொடுத்தோம். அவற்றின் பெயர்களை பிள்ளைகளுக்கு ஏற்றவாறு மாற்றிச் சொல்லாமல், அவற்றின் உண்மையான பெயர்களைச் சொல்லித் தந்தோம். உடல் உறுப்பு எதுவுமே விசித்திரமானதோ, வெட்கத்திற்குரியதோ அல்ல என்பதை இதன்மூலம் புரிய வைத்தோம்” என்கிறார் மெலிஸா. இப்படிப் பேச ஆரம்பித்த பிறகு, அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதைப்பற்றிப் பேசுவது எளிதாகும். நீச்சல் உடை எந்தெந்த உறுப்புகளை மறைக்கிறதோ அவையெல்லாம் அந்தரங்கமானவை, விசேஷித்தவை என்று அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஹிதர் பின்வருமாறு கூறுகிறார்: “ஸ்காட்டும் நானும் என் பிள்ளையிடம் அவனுடைய ஆண்குறி தனிப்பட்டது, அந்தரங்கமானது, விளையாடுவதற்குரியதல்ல என்று கூறினோம். அம்மாவோ அப்பாவோ டாக்டரோ யாராக இருந்தாலும் அதைத் தொட்டு விளையாடக்கூடாது என்றும் சொன்னோம். டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போகையில், அவனுடைய உடம்பு நன்றாயிருக்கிறதா என்றுதான் அவர் பரிசோதிக்கப் போகிறார். அதனால், அவர் அங்கு ஒருவேளை கைவைக்கலாம் என்று விளக்குவேன்.” பெற்றோர் இருவருமே அவ்வப்போது இத்தகைய விஷயங்களைப் பேசுகிறார்கள். யாராவது அவனைத் தவறான விதத்திலோ, சங்கடப்படுத்தும் விதத்திலோ தொட்டால் தங்களிடம் தாராளமாய் சொல்லலாம் என்று அவனுக்குத் தைரியம் அளிக்கிறார்கள். பெற்றோர்கள் அனைவருமே இதுபோன்று தங்கள் பிள்ளைகளிடம் பேசுவது அவசியம் என்று பிள்ளை பராமரிப்பையும் துஷ்பிரயோகத்தைத் தவிர்ப்பதையும் ஆராயும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இவ்விஷயத்தைக் குறித்துப் பேச, பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகம் பெரிதும் கைகொடுத்திருப்பதாக அநேகர் கூறுகிறார்கள். c “இயேசு எப்படி பாதுகாக்கப்பட்டார்” என்று தலைப்பிடப்பட்ட அதிகாரம் 32-ல் இப்படிப்பட்ட துஷ்பிரயோகத்தின் ஆபத்துகளையும், தங்களைப் பாதுகாத்துக்கொள்வதன் அவசியத்தையும் குறித்து வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது; அது ஆறுதலாயும் இருக்கிறது. “பிள்ளைகளிடம் நாங்கள் தனிப்பட்ட விதமாக என்ன சொல்லியிருந்தோமோ அதை இன்னும் வலியுறுத்துவதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருக்கிறது” என்கிறார் மெலிஸா.
தவறான விதத்தில் பிள்ளைகளைத் தொட விரும்புகிற அல்லது தங்களைத் தொடும்படி பிள்ளைகளிடம் சொல்கிற ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைப் பிள்ளைகள் தெரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய எச்சரிக்கைகள் பிள்ளைகளை மிரள வைக்கவோ, பெரியவர்கள் யாரையுமே நம்பாதிருக்கச் செய்யவோ கூடாது. “ஆபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தகவல் மட்டுமே இது” என்று ஹிதர் கூறுகிறார். “நான் அவனுக்குப் பல விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தேன்; அதில் ஒன்றுதான் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விஷயம். இதையெல்லாம் கேட்டு அவன் பயந்து விடவே இல்லை” என்று ஹிதர் கூறுகிறார்.
எந்தச் சமயத்தில் கீழ்ப்படிவது அவசியம் என்பதையும் நீங்கள் உங்கள் பிள்ளைக்குச் சொல்லித்தர வேண்டும். கீழ்ப்படிதல் என்பது முக்கியமான, கஷ்டமான பாடமாகும். (கொலோசெயர் 3:20) என்றாலும், கண்மூடித்தனமாகக் கீழ்ப்படிய வேண்டுமென்ற எண்ணத்தைப் பிள்ளைகளின் மனதில் பெற்றோர் ஏற்படுத்தி விடலாம். பெரியவர்கள் எது சொன்னாலும் கீழ்ப்படிய வேண்டும் என்று பிள்ளைக்குச் சொல்லிக்கொடுத்தால், அவன் பலாத்காரத்திற்குப் பலியாக வாய்ப்புண்டு. மறுப்புத் தெரிவிக்காமல் எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிற பிள்ளைகளைக் காமுகர்கள் சட்டென்று மோப்பம் பிடித்துவிடுகிறார்கள். எந்தச் சமயத்தில் கீழ்ப்படிவது சரியானது என்பதை ஞானமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள். இப்படிச் சொல்லிக்கொடுப்பது கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு ஒன்றும் கஷ்டமானதல்ல. “யெகோவா தேவன் தப்பென்று சொல்கிற ஒன்றை, யாராவது செய்யச் சொன்னால், நீ அதற்குக் கீழ்ப்படியத் தேவையில்லை. அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யச் சொல்ல அப்பா அம்மாவுக்குக்கூட உரிமையில்லை. யாராவது உன்னைத் தப்பான காரியத்தைச் செய்யச் சொன்னால் அதைப்பற்றி நீ தாராளமாக அம்மாவிடமோ அப்பாவிடமோ சொல்லலாம்” என்று பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தாலே போதும்.
அப்பா அம்மாவிடம் எந்தவொரு விஷயத்தையும் மறைக்கும்படி சொல்ல யாருக்குமே உரிமையில்லை என்பதை உங்கள் பிள்ளைக்குத் தெளிவுபடுத்துங்கள். அப்படி யாராவது சொன்னால், அதைக் கண்டிப்பாக உங்களிடம் வந்து சொல்ல வேண்டும் என்றும் தெரிவியுங்கள். அந்தக் காமுகன் உங்கள் பிள்ளையைப் பயமுறுத்தி, மிரட்டியிருக்கலாம் அல்லது உங்கள் பிள்ளையே ஏதாவது தவறு செய்திருக்கலாம், எதுவாக இருந்தாலும் எப்போதுமே அப்பாவிடமோ அம்மாவிடமோ எல்லாவற்றையும் சொல்வது அவசியம் என்பதைப் புரிய வையுங்கள். பிள்ளை மிரண்டு போகாத விதத்தில் இதைச் சொல்லுங்கள். தவறான இடத்தில் தொடுவது, கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்யச் சொல்வது, யாரிடமும் சொல்லாமல் எந்த விஷயத்தையாவது இரகசியமாய் வைக்கச் சொல்வது போன்றவற்றைப் பெரும்பாலோர் செய்ய மாட்டார்கள் என அவனுக்கு உறுதி அளியுங்கள். தீப்பிடித்தால் எப்படித் தப்புவது என்பதை முன்னதாகத் திட்டமிடுவது போன்று, இந்தத் தகவல்களும் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கே கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலும், இவற்றைப் பயன்படுத்துவதற்கு அவசியமே ஏற்படாது.
அடிப்படைத் தகவல்களை அளித்திடுங்கள்
தற்காப்பைக் கற்றுக்கொடுங்கள்
பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான மூன்றாவது வழி: நீங்கள் வீட்டில் இல்லாதபோது, யாராவது அவர்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்தால் என்ன செய்ய வேண்டுமென்பதைப்பற்றி சில எளிய வழிகளை அவர்களுக்குச் சொல்லித்தருவதாகும். இதற்குப் பெரும்பாலும் சிபாரிசு செய்யப்படுகிற முறை, விளையாட்டு போன்றது. பெற்றோர்கள் “. . . இப்படி நடந்தால் என்ன செய்வாய்?” என்று கேட்க, பிள்ளைகள் அதற்குப் பதிலளிப்பார்கள். “மார்க்கெட்டுக்கு போயிருக்கும்போது நாம் இருவரும் ஆளுக்கொரு பக்கம் பிரிந்துவிட்டால் என்ன செய்வாய்? என்னை எப்படிக் கண்டுபிடிப்பாய்?” என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் எதிர்பார்க்கிற அதே பதிலை அவன் சொல்லாதிருக்கலாம். ஆனால், கூடுதல் கேள்விகளைக் கேட்டு அவனுக்கு நீங்கள் புரியவைக்கலாம். உதாரணமாக, “வேறு எப்படிச் செய்தால் பாதுகாப்பாக இருக்குமென்று நினைக்கிறாய்?” என்று கேட்கலாம்.
தவறான விதத்தில் யாராவது தொட முயன்றால் எப்படி நடந்துகொள்வது நல்லது என்று ஒரு பிள்ளையிடம் கேட்பதற்கு மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்ற கேள்விகளைப் பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட நேரடியான கேள்விகள் பிள்ளையைத் திகிலடையச் செய்தால், வேறொரு பிள்ளையைப்பற்றிய கதையைச் சொல்லி அந்தக் கேள்விகளைக் கேட்கலாம். உதாரணமாக, “ஒரு குட்டிப் பெண் தனக்குப் பிடித்த சொந்தக்காரரோடு இருக்கிறாள். ஆனால், அவளைத் தவறான இடத்தில் தொட அவர் முயற்சி செய்கிறார். இவரிடமிருந்து தப்பிக்க அவள் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறாய்?”
தற்காப்பைக் கற்றுக்கொடுங்கள்
இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் பிள்ளை என்ன செய்ய வேண்டுமென்று சொல்லித் தருவீர்கள்? “‘வேண்டாம்’ என்றோ ‘என்னைத் தொடாதே’ என்றோ ‘என்னை தொல்லை செய்யாதே’ என்றோ உறுதியாகச் சொல்வது மிகச் சிறந்த வழியாக இருந்திருக்கிறது. அப்படிச் செய்கையில், அந்தக் காமுகன் பயந்து பின்வாங்கி, வேறு ஆளைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவான்” என்று ஓர் எழுத்தாளர் சொல்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளைச் சுருக்கமாக நடித்துக்காட்ட பிள்ளைகளுக்கு உதவுங்கள். சத்தமாக மறுப்பைத் தெரிவிக்கவும், அங்கிருந்து உடனடியாக வெளியேறவும், நடந்ததை உங்களிடம் சொல்லவும் இது அவனுக்குத் தைரியத்தை அளிக்கும். உங்கள் பிள்ளை இந்தப் பயிற்சியை நன்றாகப் புரிந்துகொண்டதுபோல் தெரிந்தாலும், சில வாரங்களுக்குள்ளாகவோ, மாதங்களுக்குள்ளாகவோ அதை மறந்துவிட வாய்ப்பிருக்கிறது. ஆகவே, திரும்பத் திரும்ப இப்படித் தவறாமல் பயிற்சி அளியுங்கள்.
பிள்ளையைப் பராமரிப்பதில் யாருக்கெல்லாம் பங்கிருக்கிறதோ அவர்கள் அனைவருமே இத்தகைய விஷயங்களைப்பற்றி அவனிடம் பேச வேண்டும். அப்பா அல்லது மாற்றான் தகப்பன், பிற ஆண் உறவினர்கள் என எல்லாருமே இத்தகைய விஷயங்களைப்பற்றி பேச வேண்டும். ஏன்? ஏனென்றால், இப்படிப் பயிற்சியளிப்பவர்கள் அனைவருமே தாங்கள் இப்படிப்பட்ட காரியங்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதியை இதன் மூலம் அந்தப் பிள்ளைக்குத் தெரிவிக்கிறார்கள். வேலியே பயிரை மேய்வதுபோல் பெரும்பாலும் பாலியல் பலாத்காரம் குடும்பத்திற்குள்தான் நடக்கிறது. கொடுமை நிறைந்த இந்த உலகில் உங்கள் குடும்பத்தை எப்படிப் பாதுகாப்பின் உறைவிடமாக ஆக்கலாம் என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம்.
a துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அநேக பிள்ளைகள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும், அவர்கள் நடந்துகொள்ளும் விதமே ‘ஏதோ பிரச்சினை இருக்கிறது’ எனக் காட்டிக்கொடுத்துவிடுமென வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். உதாரணமாக, குழந்தையாயிருக்கையில் ஒரு பிள்ளை படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கலாம், எப்போதும் பெற்றோருடன் ஒட்டிக்கொண்டே இருந்திருக்கலாம், தனியாக இருப்பதற்குப் பயந்திருக்கலாம். கொஞ்சம் வளர்ந்தபிறகு, இதையெல்லாம் நிறுத்தியிருக்கலாம். ஆனால், திடீரென மீண்டும் அப்படி நடந்துகொள்ள ஆரம்பித்தால், ஏதோவொரு முக்கிய பிரச்சினை அவனுக்கு இருப்பதை அவன் சொல்லாமல் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இப்படிப்பட்ட அறிகுறிகளை, அந்தப் பிள்ளை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதற்கான சான்றாக எப்போதும் எடுத்துக்கொள்ள முடியாது. அவனுக்கு என்ன பிரச்சினை என்பதை நிதானமாக, அவனோடு பேசிப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இதன்மூலம், அவனுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளியுங்கள்.
b எளிதாக விளக்குவதற்காகவே, துஷ்பிரயோகம் செய்பவரையும், அதற்குப் பலியானவரையும் ஆண் பாலில் குறிப்பிட்டிருக்கிறோம். எனினும், இதே விஷயங்கள் பெண்களுக்கும் பொருந்தும்.
c யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.