Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ இப்பூமியின் சீதோஷ்ண நிலை சூடாகிக்கொண்டே போகிறது என்பது “மறுக்க முடியாத உண்மை.” “பெரும்பாலும்” மனிதர்கள்தான் அதற்குக் காரணமாக இருக்கிறார்கள்.—இன்டர் கவர்மென்டல் பேனல் ஆன் கிளைமட் சேஞ் (IPCC), சுவிட்சர்லாந்து.

ஜெர்மனியில், 14 லட்சத்திலிருந்து 19 லட்சம்பேர் “மருந்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.” மதுபானத்திற்கு அடிமையாகும் பிரச்சினைக்குச் சமமாக இந்தப் பிரச்சினையும் பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது.—டாகெஸ்ஷெள, ஜெர்மனி.

◼ பிரிட்டனில், ஒரு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள் கொலை செய்யப்படும் ஆபத்து மிக அதிகமாக உள்ளது.—த டைம்ஸ், பிரிட்டன்.

◼ கனடா-ஐக்கிய மாகாணங்களின் எல்லையிலுள்ள சில பகுதிகளில், செடிகொடிகள் புதர்களைப்போல் வளர்ந்திருப்பதால் எல்லையைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் “தத்தளிக்கிறார்கள்.” “எல்லையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதைப் பாதுகாக்கவும் முடியாது” என்கிறார் சர்வதேச எல்லை கமிஷனில் பணிபுரியும் டென்னஸ் ஷார்னா.—அசோசியேட்டட் பிரஸ், ஐக்கிய மாகாணங்கள்.

தன்னைத் தானே குணப்படுத்தும் ஆற்றலுடையது உடல்

“மனித உடல் 60-லிருந்து 70 சதவீதம்வரை நோய்களைத் தானாகவே குணப்படுத்தும் ஆற்றலை உடையது” என்று பேராசிரியர் குஸ்டாஃப் டாபோஸ் சொல்கிறார். இவர், ஜெர்மனியில் எஸ்ஸென் என்ற நகரிலுள்ள சுரங்கத்தொழிலாளிகளுக்கான மருத்துவமனையில் மூத்த ஆலோசகராக இருக்கிறார். நோய்களைக் குணப்படுத்த நம் உடல் கிட்டத்தட்ட 30-லிருந்து 40 மருந்துகள்வரை உற்பத்தி செய்வதாகச் சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு, சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கு கார்டிசோன் என்ற ஹார்மோனையும் வேறு பொருள்களையும் அது உற்பத்தி செய்கிறது. உடல் இப்படித் தன்னை இயற்கையாகவே குணப்படுத்திக்கொள்கிற சில முறைகளை ஆராய்ச்சியாளர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை புரியா புதிராகவே இருக்கின்றன. குணப்படுத்துவதில், “ஹார்மோன்கள், எதிர்ப்பு சக்திக்கு உதவும் பொருள்கள், கொலைகாரச் செல்கள் ஆகியவற்றின் சிக்கலான செயல்பாடும் . . . உணர்ச்சியும் மனநிலையும் பங்கு வகிக்கின்றன” என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக விட்டால் என்ற பத்திரிக்கை குறிப்பிடுகிறது. மேலும், மன அழுத்தமும் சொந்த பிரச்சினைகளும் “நோய் எதிர்ப்பு சக்தியைத் தொடர்ந்து பல மாதங்களுக்குக் குறைத்துவிடலாம்” என்று இந்தப் பத்திரிக்கை குறிப்பிடுகிறது.

உலகச் சொத்து பங்கீடு

“உலகிலேயே செல்வச் சீமான்களாக இருக்கும் ஒரு சதவீதத்தினரிடம் பூமியின் 40 சதவீத சொத்துக்கள் குவிந்திருக்கின்றன” என்று லண்டனின் கார்டியன் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. “இவர்களில் பெரும்பாலோர் நிதி நிறுவனத்திலோ இன்டர்நெட் துறையிலோ பணிபுரிகிறவர்கள்” என்று அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. பெரிய பணக்காரர்களில் 37 சதவீதத்தினர் அமெரிக்காவிலும், 27 சதவீதத்தினர் ஜப்பானிலும், 6 சதவீதத்தினர் ஐக்கிய அரசிலும் இருப்பதாக ஐ. நா. நடத்திய ஓர் ஆய்விலிருந்து தெரிய வருகிறது. உலகில் பரம ஏழைகளாக இருக்கும் 50 சதவீதத்தினரிடம் பூமியின் ஒரு சதவீத சொத்து மட்டுமே இருக்கிறது. “மலைக்கும் மடுவுக்கும் இருப்பதுபோன்ற இந்த ஏற்றத்தாழ்வைப் பார்ப்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. . . . கொஞ்சம் பேரிடம் மட்டுமே ஏகப்பட்ட சொத்துக்கள் குவிந்து கிடக்க, ஒவ்வொரு நாள் இரவும் 80,00,00,000 பேர் உணவின்றி படுக்கைக்குச் செல்வதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது” என்று பிரிட்டனின் தர்ம ஸ்தாபனமான ஆக்ஸ்ஃபாமின் தலைமை ஆராய்ச்சியாளரான டங்கன் கிரீன் சொல்கிறார்.

சீனாவில் ஆண்கள் அதிகம்

சீனாவில், 2005-ல் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆண்-பெண் விகிதத்தின்படி, 100 பெண் குழந்தைகளுக்கு 118 ஆண் குழந்தைகள் இருந்தார்கள். அந்நாட்டின் சில பகுதிகளில் “இந்த விகிதம், 100 பெண் குழந்தைகளுக்கு 130 ஆண் குழந்தைகள் என்று உயர்ந்திருக்கிறது” என்று சைனா டெய்லி குறிப்பிடுகிறது. கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்ததும் அதைக் கருவிலேயே அழித்துவிடுவதுதான் இந்த உயர்வுக்குக் காரணம். அதோடு, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின்படி பெரும்பாலும் நகரங்களில் வாழும் தம்பதிகள் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வதும் இதற்கு காரணம் என்று அதிகாரிகள் ஒத்துக்கொள்கிறார்கள். “நிலைமை இப்படியே நீடித்தால் 2020-ல் திருமண வயதிலிருக்கும் பெண்களைவிட சுமார் 3 கோடி ஆண்கள் அதிகம் இருப்பார்கள். . . . இது சமுதாயத்தின் சமநிலையைப் பாதிக்கும்” என்று அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.