Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாசமான குடும்பம் பாதுகாப்பின் உறைவிடம்

பாசமான குடும்பம் பாதுகாப்பின் உறைவிடம்

‘சுபாவ அன்பில்லாதவர்களாய்’ இருப்பார்கள். ‘கடைசி நாட்கள்’ என்றழைக்கப்படும் இந்தக் காலக்கட்டத்தில் வாழுகிற அநேகரை பைபிள் இப்படித்தான் விவரிக்கிறது. இதைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1, 3, 4) குடும்பத்தாராலேயே பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவது புற்றீசல் போல் அதிகரித்து வருவதைக் காண்கையில், இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வளவு உண்மையாயிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சொல்லப்போனால், ‘சுபாவ அன்பு இல்லாதிருப்பது’ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற மூல கிரேக்க வார்த்தையான ஆஸ்டார்கோஸ், குடும்பத்தாரிடையே இருக்க வேண்டிய அன்பு குறைவுபடுவதை, அதுவும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான அன்பு குறைவுபடுவதைக் குறிப்பிடுகிறது. a பெரும்பாலும் குடும்ப வட்டாரத்தில், அதுவும் வீட்டில்தான் பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள்.

பெரும்பாலும், அப்பா ஸ்தானத்தில் இருக்கிற ஒருவரே பிள்ளைகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உறவுக்கார ஆண்கள்கூட இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். சிறுமிகளே அதிகமாக இதற்குப் பலியாகிறார்கள் என்றாலும், அநேக சிறுவர்களும் இதில் சிக்கியிருக்கிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல, பல பெண்களும் இப்படிப் பிள்ளைகளைக் குறிவைக்கிறார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டீர்கள். உடன்பிறந்தாரின் பாலியல் துஷ்பிரயோக செயல்கள் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. பலமுள்ள, மூத்த பிள்ளை மிரட்டியோ, மயக்கியோ தன்னைவிட பலத்தில் குறைவுபடும் தம்பியையோ தங்கையையோ பாலுறவில் ஈடுபடுத்துகிறான். இத்தகைய செயல்களை பெற்றோரான நீங்கள் நிச்சயம் அருவருப்பீர்கள்.

இப்படிப்பட்ட பிரச்சினைகள் உங்கள் குடும்பத்தில் தலைதூக்காதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்? மோசமான நடத்தையைத் தவிர்க்க உதவுகிற சில நெறிமுறைகளைக் குடும்பத்தார் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வதும், அவற்றை மதித்து நடப்பதும் மிக அவசியம். இத்தகைய வழிநடத்துதலை அளிப்பதில் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு ஈடிணை ஏதுமில்லை.

கடவுளுடைய வார்த்தையும் பாலுறவும்

குடும்பம் ஓரு புகலிடமாய் இருப்பதற்கு, பைபிளில் காணப்படும் ஒழுக்கநெறிகளைக் குடும்பத்தார் பின்பற்ற வேண்டும். பாலுறவைப்பற்றி பைபிள் தகவல் அளிக்காமலில்லை. கண்ணியமாகவும், அதேசமயத்தில் ஒளிவுமறைவில்லாமலும் நேரடியாகவும் அதைப்பற்றிக் குறிப்பிடுகிறது. பாலுறவு, கணவன் மனைவிக்கு உண்மையான சந்தோஷத்தைத் தர வேண்டுமென்பதே கடவுளுடைய எண்ணமாக இருந்தது என்று அது விளக்குகிறது. (நீதிமொழிகள் 5:15-20) என்றாலும், மணத்துணையை விட்டுவிட்டு, வேறொருவரோடு பாலுறவு கொள்வதை அது கண்டிக்கிறது. உதாரணமாக, நெருங்கிய குடும்பத்தாரோடு பாலுறவு கொள்வதை பைபிள் நேரடியாகக் கண்டிக்கிறது. தடை செய்யப்பட்ட, பல்வேறு முறைதகா உறவுகளைப்பற்றி லேவியராகமம் 18-ஆம் அதிகாரம் விளக்குகிறது. குறிப்பாக, பின்வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “உங்களில் ஒருவனும் தன் நெருங்கிய குடும்பத்தார் எவரையும் நிர்வாணமாக்கும்படி [பாலுறவு கொள்ளும்படி] நெருங்கக்கூடாது. நான் யெகோவா.”—லேவியராகமம் 18:6, NW.

மேற்குறிப்பிடப்பட்டதைப் போன்ற முறைதகா உறவுகளை மரண தண்டனைக்குரிய ‘அருவருப்புகளின்’ பட்டியலில் யெகோவா சேர்த்தார். (லேவியராகமம் 18:26, 29) இவ்விஷயத்தில் படைப்பாளர் மிக உயர்ந்த நெறிமுறைகளை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றுள்ள அநேக அரசாங்கங்களும் இதே கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன; அதனால், குடும்பத்தில் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதைச் சட்டவிரோதமான செயலாக அறிவித்திருக்கின்றன. பெரும்பாலும், பெரியவர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளை சட்டத்தின் பார்வையில் கற்பழிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. பிள்ளைகளை வலுக்கட்டாயமாக பாலுறவில் ஈடுபடுத்தாவிட்டாலும்கூட, “கற்பழிப்பு” என்ற கடுமையான வார்த்தையைப் பயன்படுத்துவது ஏன்?

பொதுவாக, பெரியவர்களைப் போல யோசித்து செயல்பட பிள்ளைகளால் முடியாது என்று பைபிள் வெகு காலத்திற்கு முன்பாகவே சொல்லியிருக்கிறது; இது உண்மை என்பதை அநேக அதிகாரிகள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணமாக, நீதிமொழிகள் 22:15 இவ்வாறு சொல்கிறது: “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்.” கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “நான் குழந்தையாயிருந்தபோது . . . குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.”—1 கொரிந்தியர் 13:11.

பாலுறவு என்றால் என்னவென்பதை ஒரு பிள்ளையால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் காலப்போக்கில் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று யோசிக்கவும் தெரியாது. ஆகவே, பாலுறவில் ஈடுபட பிள்ளைகள் இணங்கினாலும் அது தெளிவாக யோசித்து எடுத்த முடிவல்ல என்பதைப் பெரும்பாலோர் ஒத்துக்கொள்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், பெரியவரோ (அல்லது, ஓரளவு வளர்ந்த இளைஞரோ) ஒரு பிள்ளையுடன் பாலுறவில் ஈடுபட்டுவிட்டு, அதற்கு அந்தப் பிள்ளை மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றோ அந்தப் பிள்ளையே அதற்கு அழைப்புவிடுத்தது என்றோ சாக்குப்போக்கு சொல்ல முடியாது. இச்செயலைச் செய்தவர்மீது கற்பழிப்பு குற்றம் சுமரும். இந்தக் குற்றத்திற்குப் பெரும்பாலும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தக் குற்றத்திற்கு முக்கிய பொறுப்பாளி கற்பழித்தவரே, பலாத்காரத்திற்கு உள்ளான அந்தப் பிள்ளையல்ல.

இத்தகைய குற்றவாளிகளைப் பெரும்பாலும் அதிகாரிகள் தண்டிக்காமல் விட்டுவிடுவதைப் பார்க்கையில் வேதனை நெஞ்சைப் பிழிகிறது. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் இத்தகைய குற்றத்தைச் செய்தவர்களில் 10 சதவீதத்தினர்மீது மட்டுமே வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது, சிலரே குற்றவாளிகளாய் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற இடங்களிலும் இதே நிலைதான். யெகோவாவின் சாட்சிகளாய் இருப்பவர்களின் குடும்பங்களைப் பாதுகாக்க அரசாங்கத்தால் பெரிதாக எதையும் செய்ய முடியாது; ஆனால், பைபிளின் நெறிமுறைகளோ அரண்போல் பெரியளவில் பாதுகாப்பை அளிக்க முடியும்.

இந்த நெறிமுறைகளை பைபிளில் எழுதச் செய்திருக்கிற கடவுள் இன்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை உண்மைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் செய்கிற அனைத்து காரியங்களையும் அவர் பார்க்கிறார். பிறருக்குத் தெரியாமல் நாம் செய்பவற்றையும் அவர் கவனிக்கிறார். “சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 4:13.

கடவுளுடைய கட்டளைகளை மீறி, மற்றவர்களுக்குத் தீங்கு செய்தால் அதற்காக நாம் அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். மாறாக, குடும்ப வாழ்க்கைக்குப் பயனுள்ள விதத்தில் அவர் அளித்திருக்கும் கட்டளைகளை நாம் பின்பற்றுகையில் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். இந்தக் கட்டளைகளில் சில யாவை?

அன்பால் இணைந்த குடும்பம்

‘அன்பு பூரண சற்குணத்தின் கட்டு’ என்பதாக பைபிள் கூறுகிறது. (கொலோசெயர் 3:14) அன்பு வெறும் ஓர் உணர்ச்சி என்பதாக பைபிள் சொல்வதில்லை. மாறாக, அது செயலில் வெளிக்காட்டப்படுகிறது. அது, நல்ல செயல்களைச் செய்யத் தூண்டுகிறது, கெட்ட காரியங்களைச் செய்யவிடாமல் தடுக்கிறது என்று பைபிள் விளக்குகிறது. (1 கொரிந்தியர் 13:4-8) குடும்பத்தாரிடம் அன்பு காட்டுவது என்பது அவர்கள் ஒவ்வொருவரையும் கண்ணியமாகவும் மரியாதையாகவும் தயவாகவும் நடத்துவதை அர்த்தப்படுத்துகிறது. குடும்பத்தார் ஒவ்வொருவரையும் கடவுள் எப்படிக் கருதுகிறாரோ அப்படியே நாமும் கருதுகிறோம் என்பதை நாம் வாழும் விதம் காட்ட வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் மரியாதைக்குரிய, முக்கிய பொறுப்பை அவர் அளித்திருக்கிறார்.

குடும்பத் தலைவராயிருக்கிற தகப்பன் அன்பு காட்டுவதில் முன்னுதாரணமாய் திகழ வேண்டும். தன் மனைவியின் மீதோ பிள்ளைகள் மீதோ கொடுங்கோலனைப் போல அதிகாரம் செலுத்தும் உரிமை தனக்கு இல்லை என்பதை அவர் அறிந்திருக்கிறார். மாறாக, தன் தலைமைத்துவத்தை சரிவரச் செய்ய அவர் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார். (எபேசியர் 5:23, 25) ஆகவே, தன் மனைவியிடம் கனிவையும் அன்பையும் காட்டுகிறார். பிள்ளைகளிடம் சாந்தமாகவும் மென்மையாகவும் நடந்துகொள்கிறார். அவர்களைக் கண்மணி போல் காப்பதற்கு உண்மையோடு உழைக்கிறார். அவர்களுடைய சமாதானத்திற்கும் கற்புக்கும் நம்பிக்கையுணர்வுக்கும் பாதுகாப்புணர்வுக்கும் எதுவும் பங்கம் விளைவிக்காதிருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்.

அதேபோல, மனைவிக்கும் தாய்க்கும்கூட மிக முக்கியமான, கண்ணியமான பொறுப்பு இருக்கிறது. யெகோவாவும் இயேசுவும் நம்மை எப்படிப் பாதுகாப்பார்கள் என்பதை விளக்க, சில பறவைகள் தங்களுடைய குஞ்சுகளைப் பாதுகாக்கும் விதத்தை உதாரணமாக பைபிள் பயன்படுத்துகிறது. (மத்தேயு 23:37) ஒரு தாயும்கூட, தன் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் இமைப்பொழுதும் தளர்ந்துவிடக்கூடாது. தன்னுடையதைவிட அவர்களுடைய பாதுகாப்பையும் நலனையுமே அவள் முக்கியமானதாய் கருதுகிறாள்; இப்படி அன்பையும் பாசத்தையும் பொழிகிறாள். பெற்றோர்கள் தங்களுக்கிடையே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவோ, கொடுமைப்படுத்தவோ, பயமுறுத்தவோ மாட்டார்கள்; பிள்ளைகளிடமும் அவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்கள். பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் இப்படிப்பட்ட காரியங்களை செய்ய பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள்.

குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தும்போது, குடும்பத்தார் எல்லாரும் மனம்விட்டுப் பேசிக்கொள்ள முடியும். “பெற்றோர் அனைவரும் தங்கள் சின்னஞ்சிறு பிள்ளைகளோடும், வளரிளம் பருவத்திலிருக்கும் பிள்ளைகளோடும் தினசரி தவறாமல், ஒளிவுமறைவின்றி மனம்விட்டு பேச வேண்டும்” என்று எழுத்தாளரான வில்லியம் ப்ரென்டர்காஸ்ட் கூறுகிறார். “பாலியல் துஷ்பிரயோகம் என்ற பிரச்சினைக்கு இதுவே சிறந்த தீர்வாக இருக்குமென நினைக்கிறேன்” என்றும் அவர் கூறுகிறார். ஆம், அப்படித் தவறாமல், அன்போடு உரையாடுவதையே பைபிளும் சிபாரிசு செய்கிறது. (உபாகமம் 6:6, 7) இந்த நெறிமுறை பின்பற்றப்படுகையில், குடும்பத்தார் ஒவ்வொருவரும் மனந்திறந்து, பயமின்றி தங்கள் உள்ளத்திலிருப்பதை வெளிப்படுத்தும் இடமாக குடும்பம் அமையும்.

நாம் பொல்லாத உலகத்தில் வாழ்கிறோம் என்பதும், எல்லா வகையான துஷ்பிரயோகத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது என்பதும் உண்மையே. என்றாலும், பாதுகாப்பான குடும்பம் நமக்குப் பேருதவியாய் இருக்கும். குடும்பத்தார் யாராவது வெளி ஆட்களால் பாதிக்கப்பட்டால், ஆறுதலும், பரிவும் தங்கள் குடும்பத்தில் கிடைக்குமென அவர்களுக்கு நன்றாய் தெரியும். உண்மையில் அப்படிப்பட்ட பாசமான குடும்பம் அடைக்கலமாக, பிரச்சினை நிறைந்த உலகில் பாதுகாப்பின் உறைவிடமாகத் திகழும். உங்கள் குடும்பத்தைப் புகலிடமாய் ஆக்குவதற்கு நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பாராக!

a இந்தப் பூர்வ கிரேக்க வார்த்தைக்கு, “குடும்பத்தாரிடம் ஈவிரக்கம் காட்டாதிருப்பது” என்பதாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. பைபிள் மொழிபெயர்ப்பு ஒன்று இவ்வசனத்தை பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கிறது: “அவர்கள் . . . குடும்பத்தாரிடம் இயல்பாகவே அன்பில்லாதவர்களாய் நடந்துகொள்வார்கள்.”