Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாகும்போது என்ன நேரிடுகிறது?

சாகும்போது என்ன நேரிடுகிறது?

பைபிளின் கருத்து

சாகும்போது என்ன நேரிடுகிறது?

கடவுளின் பிள்ளைகளான மனிதர்கள் சாவதற்காகப் படைக்கப்படவில்லை. (ரோமர் 8:20, 21) சொல்லப்போனால், ஆதாமிடம் சாவைப்பற்றி யெகோவா முதன்முதலாகச் சொன்னபோது, மனிதன் பொதுவாய் எதிர்பார்க்க வேண்டிய விளைவாக அல்ல, கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகும்போது கிடைக்கிற தண்டனையாகவே அதைக் குறிப்பிட்டார். (ஆதியாகமம் 2:17) மிருகங்கள் சாவதை ஆதாம் பார்த்திருந்ததால், சாவு எதை அர்த்தப்படுத்துகிறதென அவன் அறிந்திருந்தான்.

ஆதாம் பாவம் செய்தான்; அதன் பலனாய் 930 வயதில் சாவைச் சந்தித்தான். (ஆதியாகமம் 5:5; ரோமர் 6:23) கீழ்ப்படியாமல் போய் கடவுளுடைய குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால், இனியும் அவருடைய மகனாக அவன் இருக்கவில்லை. மனிதகுலம் சந்தித்த வேதனைமிக்க விளைவுகளில் ஒன்றாக இதை பைபிள் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது . . . மரணம் எல்லாருக்கும் வந்தது.”—ரோமர் 5:12.

நம் சிந்திக்கும் திறன்களுக்கு என்ன ஏற்படுகிறது?

பைபிள் இதையும் சொல்கிறது: “மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.” (பிரசங்கி 3:19, 20) மண்ணுக்குத் திரும்புவது என்றால் என்ன?

‘மண்ணுக்குத் திரும்புதல்’ என்ற சொற்றொடர், “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என முதல் மனிதனிடம் கடவுள் சொன்னதை நமக்கு நினைப்பூட்டுகிறது. (ஆதியாகமம் 3:19) இது, மிருகங்களைப் போலவே மனிதர்களும் மாம்ச உடல் பெற்றவர்கள் என அர்த்தப்படுத்துகிறது. நாம், ஏதோ மாம்ச உடலில் குடியிருக்கிற ஆவி சிருஷ்டிகள் இல்லை. உடல் அழியும்போது நம் சிந்திக்கும் திறன்களும் இல்லாமல் போகின்றன. சாகிற ஒரு நபரைப்பற்றி, “அவன் கடைசியாக சுவாசிக்கிறான், மண்ணுக்குத் திரும்புகிறான்; அதே நேரத்தில் அவனுடைய எண்ணங்கள் எல்லாம் முடிவுக்கு வருகின்றன” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 146:4, த நியு இங்லீஷ் பைபிள்.

உண்மையில் அதுதான் நடக்கிறது என்றால், சாகிறவர்களின் நிலை என்ன? “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்று பைபிள் தெள்ளத் தெளிவாய் பதில் அளிக்கிறது. (பிரசங்கி 9:5) நல்வாழ்வு வாழ இருகரம் நீட்டி வரவேற்கும் நண்பனைப் போல் இல்லாமல், மரணம் ‘கடைசிச் சத்துருவாய்’ இருப்பதாக பைபிள் சொல்கிறது; காரணம், இது நம் செயல்கள் அனைத்தையும் முடிவுக்கு வரச் செய்கிறது. (1 கொரிந்தியர் 15:26; பிரசங்கி 9:10) அப்படியென்றால், இறந்தவர்களுக்கு எதிர்காலமே இல்லையென இது அர்த்தப்படுத்துகிறதா?

சாவைப் பற்றிய நற்செய்தி

கோடிக்கணக்கானோருக்கு மரணம் உறக்கத்தைப்போல் இருக்கிறது; அதிலிருந்து அவர்கள் எழுந்திருப்பார்கள். இறந்துபோன தங்களுடைய நண்பனைப்பற்றி சீஷர்களிடம் ஒருசமயம் இயேசு இவ்வாறு சொன்னார்: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்.” கல்லறையிருந்த இடத்திற்குச் செல்லும் வழியில் இயேசு, துக்கத்தில் மூழ்கியிருந்த கூட்டத்தாரைப் பார்த்தார். அந்தக் கல்லறையிடம் வந்தபோது, அதைத் திறக்கும்படி கட்டளையிட்டார்; பிறகு, “லாசருவே, வெளியே வா” என்று சத்தமாய் கூப்பிட்டார். இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்த அந்த நபர் வெளியே வந்தார். (யோவான் 11:11-14, 39, 43, 44) லாசருவின் உடல் ஏற்கெனவே அழுகிப்போகத் தொடங்கியிருந்த போதிலும், அவரை உயிரோடு எழுப்புவதன்மூலம், இறந்தவர்களுடைய ஆளுமை, நினைவுகள், தோற்றம் என சகலமும் கடவுளுடைய நினைவில் இருப்பதை இயேசு மெய்ப்பித்துக் காட்டினார். அவர்களை மீண்டும் வாழ வைக்க கடவுளால் முடியும். மற்றொரு சந்தர்ப்பத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது [அதாவது, இயேசுவுடைய] குரலைக் கேட்டு வெளியே வருவர்.”—யோவான் 5:28, 29, பொது மொழிபெயர்ப்பு.

“பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்” என்ற இன்னொரு நற்செய்தியையும் பைபிள் அறிவிக்கிறது. (1 கொரிந்தியர் 15:26) இறந்துபோன அன்பானவரைக் கல்லறையில் அடக்கம்பண்ண தாளா துயரத்தோடு ஜனங்கள் எடுத்துச் செல்வதற்கான அவசியம் இனி இருக்கவே இருக்காது. “இனி மரணமுமில்லை” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) சாகும்போது என்ன நேரிடுகிறது என்ற பைபிளின் கருத்து ஆறுதல் அளிக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்தானே?

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ சாகிறவர்கள் உணர்வுள்ளவர்களாய் இருக்கிறார்களா?—பிரசங்கி 9:5.

◼ இறந்தவர்களுக்கு எதிர்காலமே இல்லையா?—யோவான் 5:28, 29.

[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]

“அவன் கடைசியாக சுவாசிக்கிறான், மண்ணுக்குத் திரும்புகிறான்; அதே நேரத்தில் அவனுடைய எண்ணங்கள் எல்லாம் முடிவுக்கு வருகின்றன.” —சங்கீதம் 146:4, “த நியு இங்லீஷ் பைபிள்”