Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தண்ணீரில் கண்ணீர்விடும் சுறாமீன்

தண்ணீரில் கண்ணீர்விடும் சுறாமீன்

தண்ணீரில் கண்ணீர்விடும் சுறாமீன்

மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

மனிதனை நடுநடுங்க வைக்கும் ஒருசில விலங்குகளில் சுறாமீனும் ஒன்று. சுறாக்கள் மனிதர்மீது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 75 முறை அதிரடித் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கணக்கிடப்படுகிறது; கிட்டத்தட்ட 10 தாக்குதல்களில் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. எட்டுத் திக்கும் பரபரப்பாக பேசப்படுகிற இத்தகைய தாக்குதல்களும் சுறாக்கள் மனிதர்களைக் கடித்துக் குதறுவதாக காட்டுகிற சினிமாக்களும் இவற்றை நரமாம்சபட்சினிகளாக சித்தரிக்கின்றன. சுறாக்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பது உண்மைதான். இருந்தாலும், காரியங்களைச் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால், சுறாக்களின் தாக்குதல்களைக் காட்டிலும் தேனீக்கள் கொட்டியதால் அல்லது முதலைகள் தாக்கியதால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

மறுபட்சத்தில், சுறாக்களே மனிதர்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றன. “ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி சுறாக்கள் பிடிக்கப்படுகின்றன; இந்த மீன்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வைத்துக்கொண்டே வந்தால் நம் கோளத்தை ஐந்துமுறை வலம்வருகிற அளவுக்கு அவை எக்கச்சக்கமாக இருக்கும்” என்பதாக ஆர்கஸ் மரைனர் கன்சல்டிங் சைன்டிஸ்ட்ஸ் அமைப்பில் பணிபுரியும் ஓர் ஆய்வாளர் ப்ரிம்யர் பத்திரிகையில் தெரிவித்தார். ஒருபுறம் அளவுக்குமீறி சுறாக்களைப் பிடிப்பது அவற்றின் அழிவுக்குக் காரணமாக இருந்து வருகிறது; மறுபுறம், அவை மிகக் குறைவாகவே குட்டிகளை ஈனுவதாலும், வெகு தாமதமாய் பாலின முதிர்ச்சி அடைவதாலும், அவற்றின் சினைக்காலம் நீண்டதாக இருப்பதாலும், அவை குட்டிகளை ஈனும் இடங்கள் மாசடைந்து வருவதாலும் சுறாக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சுறாக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டால், மறுபடியும் அதேயளவு சுறாமீன்கள் வளருவதற்கு பல வருடங்கள் எடுக்கும்.

பெரும்பாலான சுறாமீன்கள் துடுப்புகளுக்காகவே பிடிக்கப்படுகின்றன. இத்துடுப்புகளுக்கு மருத்துவ குணமும் பாலுணர்வைத் தூண்டும் தன்மையும் இருப்பதாக நம்பப்படுவதால் ஆசிய நாட்டவர் சிலர் இவற்றை மதிப்புமிக்கவையாக கருதுகிறார்கள். a சுறாக்களின் துடுப்பைக்கொண்டு தயாரிக்கப்படுகிற ருசிமிக்க சூப்பிற்கு விலை அதிகம்; ஒரு கிண்ணம் சூப் 150 டாலர் வரைக்கும் விற்கப்படுமென்றால் பாருங்களேன்! கொழுத்த லாபம் ஈட்டும் ஆசிய சந்தைகளுக்கு சப்ளை செய்வதற்காக, “துடுப்பு நீக்கம்” என்ற கொடூரமான பழக்கம் ஆரம்பமானது; அதாவது சுறாக்களை உயிரோடே பிடித்து அவற்றின் துடுப்புகளை வெட்டியெடுத்து பிறகு அவற்றை மீண்டும் கடலுக்குள் எறிந்துவிடும் பழக்கம் ஆரம்பமானது. இவ்வாறு எறியப்படுகிற சுறா மீன்கள் பசியால் வாடியோ தண்ணீரில் மூழ்கியோ செத்து விடுகின்றன; இதனால் மீனின் பெருமளவு பகுதி வீணாகியும் விடுகிறது.

சுறாக்களைக் காப்பாற்ற நடவடிக்கை அவசியம்

சுறாக்களின் அவலத்தைப் பார்த்து நமக்கென்ன என்று நாம் இருந்துவிடலாமா? யானைகளுக்கோ திமிங்கலங்களுக்கோ இந்நிலை ஏற்பட்டால் நாம் ஒருவேளை பரிதாபப்படலாம்; ஆனால் சுறாக்களின் விஷயத்தில் நாம் அப்படி நினைக்காமல் இருக்கலாம். இருந்தாலும், கடலின் சூழியல் சமநிலையைப் பாதுகாப்பதில் அவை வகிக்கும் முக்கியப் பங்கை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இவற்றின் உணவுப் பழக்கம் தற்போது மற்ற மீன்கள் அதிகளவு பெருகிவிடாதிருக்க உதவுகிறது.

பல நாடுகளில் சுறாமீன்களைப் பிடிக்கும் விஷயத்தில் எவ்வித சட்டமும் நடப்பில் இல்லை. சுறாக்களைப் பிடிப்பதில் முன்னணி வகிக்கும் மெக்சிகோ நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 30,000 டன்களுக்கும் அதிகமான சுறாக்கள் பிடிக்கப்படுகின்றன. அங்கே, பத்து ஆண்டுகளாக நடந்த சர்ச்சைக்குப் பிறகு, தற்போது துடுப்பு நீக்கத்திற்கு எதிரான சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுறாக்களின் துடுப்புகளுக்கு கிராக்கி அதிகமிருப்பதால் உலகின் பல்வேறு பாகங்களில் மீன்பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலும்கூட சட்டவிரோதமாக மீன்பிடிப்பது அதிகரித்து வருகிறது; இது சுறாக்களைப் பாதுகாப்பதில் உட்பட்டுள்ள சிக்கல்களை இன்னுமதிகமாக வலியுறுத்திக் காட்டுகிறது. உதாரணமாக, கேலாபேகோஸ் நேஷனல் பார்க் சர்வீஸின் இயக்குநர் இவ்வாறு அங்கலாய்க்கிறார்: “துடுப்புகளுக்காக சுறாக்களைச் சட்டவிரோதமாக பிடிப்பது கேலாபேகோஸில் கடந்த சில ஆண்டுகளாக பெருமளவு அதிகரித்திருக்கிறது. அது லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் இங்கு ஒரு மாஃபியா கும்பலே உருவாகியிருக்கிறது.”

சுறாக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சில நாடுகள் துடுப்புநீக்கும் பழக்கத்திற்குத் தடைவிதித்திருக்கின்றன. என்றாலும், அதுமட்டுமே போதுமானதாக இருக்காது என்று உலக வனவிலங்கு நிதியின் திட்ட அதிகாரி ஷார்லாட் மோயன்சன் எச்சரிக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “உலகெங்கும் சுறாமீன்கள் ஆபத்தில் தத்தளிக்கின்றன. மீன் பிடிப்பதை மேற்பார்வையிடும் அமைப்புகள் அனைத்திற்கும் நாங்கள் அறிவுறுத்துவது என்னவென்றால், துடுப்புநீக்கும் பழக்கத்திற்கு தடைவிதிப்பதோடு சுறாக்களின் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதும், வலையில் மற்ற மீன்களோடு சிக்கிவிடும் சுறாமீன்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும், சுறாக்கள் பூண்டோடு அழிந்துவிடாதபடி அவற்றைப் பிடிப்பதில் கட்டுப்பாடு வைப்பதும் அவசியம்.

மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவெனில், விலங்கினங்களைப் படைத்தவர் தம்முடைய மகத்தான படைப்புகளை மக்கள் பேராசையோடு அழித்துப்போட அதிக காலத்திற்கு அனுமதிக்க மாட்டார். இவ்வுண்மை நடுநடுங்க வைக்கிற அதே சமயத்தில் மிகவும் இன்றியமையாததாய் இருக்கிற சுறாமீனுக்கும் பொருந்தும்.—வெளிப்படுத்துதல் 11:18.

[அடிக்குறிப்பு]

a வேடிக்கை என்னவென்றால், சுறாக்களின் துடுப்பில் பாதரசம் அதிகளவில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இது ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்.

[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]

சுறாக்களைப் பற்றிய உண்மைகள்

அளவு: மிகப் பெரிய வகையான திமிங்கலச் சுறா (மேலே) 18 மீட்டர் நீளத்திற்கு வளரும்; அதன் எடையோ டன் கணக்கில் இருக்கும். ஆனால் இது மனிதருக்குத் தீங்கிழைக்காது, மிதவை நுண்ணுயிரிகளையும் சிறிய மீன்களையும் மட்டுமே உண்ணும்.

சினைக்காலம்: 22 மாதங்களுக்குப் பிறகே குட்டி ஈனும்.

இனப்பெருக்க விகிதம்: சுறாக்கள் சராசரியாக ஒரு சமயத்தில் இரண்டு முதல் பத்து குட்டிகளைப் போடுகின்றன. சில இனங்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன, பெரும்பாலான இனங்கள் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன.

வளர்ச்சி விகிதம்: பெரும்பாலான சுறா இனங்கள் பாலின முதிர்ச்சி அடைவதற்கு 12 முதல் 15 ஆண்டுகளாகின்றன.

ஆயுட்காலம்: பெரும்பாலான சுறா இனங்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பது மிகக் கடினம்; ஆனால், தாக்கும் இயல்புடைய வெள்ளைச் சுறா (கீழே) 60 ஆண்டுகள் வரை வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.

[படங்களுக்கான நன்றி]

Seawatch.org

© Kelvin Aitken/age fotostock

[பக்கம் 16, 17-ன் படம்]

300-க்கும் அதிகமான சுறா இனங்களில், இப்போது 62 இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன

[படத்திற்கான நன்றி]

© Mark Strickland/SeaPics.com

[பக்கம் 17-ன் படம்]

வெறும் அரை கிலோ சுறா துடுப்புகள் 200 டாலருக்கு அல்லது அதற்கும் அதிகமான விலைக்கு விற்கப்படலாம். பெரிய வெள்ளைச் சுறாவின் தாடைகள் 10,000 டாலர் வரை விற்கப்படலாம்

[படத்திற்கான நன்றி]

© Ron & Valerie Taylor/SeaPics.com