Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பலிவாங்கும் ‘இயந்திரப் பறவைகள்’ பிறக்கும்முன்னே அறியப்பட்டன

பலிவாங்கும் ‘இயந்திரப் பறவைகள்’ பிறக்கும்முன்னே அறியப்பட்டன

பலிவாங்கும் ‘இயந்திரப் பறவைகள்’ பிறக்கும்முன்னே அறியப்பட்டன

“வக்கிர புத்தியுள்ள மனிதன், தன்னுடைய திறமைகளைப் பயன்படுத்தி சக மனிதர்களை அடிமையாக்குவதற்கு, அழிப்பதற்கு அல்லது ஏமாற்றுவதற்கு எப்போதும் வழி தேடுகிறான்.”—ஹாரஸ் வால்போல், 18-ஆம் நூற்றாண்டின் ஆங்கில எழுத்தாளர்.

விமான போக்குவரத்து மனிதகுலத்திற்கு எண்ணிலடங்கா நன்மைகளை வாரிவழங்கினாலும், ஹாரஸின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கிறதல்லவா! மனிதன் விண்ணில் பறக்கும் கனவு நனவாவதற்கு முன்பே, பறக்கும் இயந்திரங்களைப் போர் கருவிகளாகப் பயன்படுத்துவதற்குப் பல வழிகளை அவன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.

1670-ல், மனிதன் இயக்கிச் செல்லும் முதல் பறக்கும் பலூன் கண்டுபிடிக்கப்படுவதற்கு நூற்றுக்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னரே இத்தாலிய ஜெஸ்யூட்டான ஃப்ரான்சேஸ்கோ லானா இவ்வாறு ஊகித்தார்: “பொதுமக்கள் மீதும் அரசாங்கத்தின் மீதும் படுபயங்கரமான பாதிப்பு ஏற்படும் என்பதால் இதுபோன்ற ஓர் இயந்திரம் [ஆகாயக் கப்பல்] உருவாக்கப்படுவதை கடவுள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.” பின்பு வரப்போகும் பிரச்சினையை முன்கூட்டியே அறிந்து அவர் மேலுமாகக் கூறியதாவது: “எந்தப் பட்டணமும் திடீர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாய் இருக்கமுடியாது என்பது யாருக்குத்தான் [தெரியாது?] ஏனென்றால், ஆகாயக் கப்பல் எந்த நேரத்திலும் நேரடியாக கடை வீதிகளின் மேல் தோன்றி அதன் படைகளை இறக்கிவிடலாம். அதேபோல், தனி வீடுகளின் முற்றங்கள் மீதோ கடலில் சென்றுகொண்டிருக்கும் கப்பல்கள் மீதோ இப்படியே நடக்கலாம் . . . அவை கீழே இறங்காமலேயே இரும்பு துண்டுகளை வீசி கப்பல்களைத் தலைகீழாகக் கவிழ்த்து, மனிதர்களைச் சாகடிக்கலாம். அவை செயற்கை தீப்பந்துகளையும் குண்டுகளையும் எறிந்து கப்பல்களைப் பஸ்பமாக்கிவிடலாம்.”

வெப்ப காற்று பலூனும் ஹைட்ரஜன் பலூனும் கடைசியாக 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டபோது வால்போல், இவை சீக்கிரத்தில் ‘மனித இனத்தை பலிவாங்கும் இயந்திர பறவைகளாக’ மாறிவிடுமென பயந்தார். அவர் பயந்தது போலவே, 1794-ன் இறுதியில் பிரான்சு நாட்டு படைத் தளபதிகள், எதிரி நாட்டு எல்லை பகுதியை உளவு பார்த்து தங்கள் படைக்குத் தகவல் தெரிவிக்க ஹைட்ரஜன் பலூன்களைப் பயன்படுத்தினார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போரிலும் 1870-களில் நடந்த பிரான்சு-பிரஷ்யப் போர்களிலும்கூட பலூன்கள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்ல, கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டு உலகப் போர்களிலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு மற்றும் ஜெர்மனியின் படைகள் உளவு பார்ப்பதற்காக பலூன்களை அதிகளவில் பயன்படுத்தின.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் படைகள் அமெரிக்காவைத் தாக்குவதற்காக வெடி குண்டுகளைத் தாங்கிய 9,000 ஆளில்லா பலூன்களை அனுப்பியபோது உண்மையிலேயே இந்தப் பலூன்கள் உயிரை உறிஞ்சும் போர் கருவிகளாக உருவெடுத்தன. இவற்றில் 280-க்கும் அதிகமான பலூன்கள் வட அமெரிக்காவைச் சென்றடைந்தன.

பறக்கும் போர்க் கப்பல்கள் எதிர்பார்க்கப்பட்டன

பறக்கும் விமானம் தோன்றியதிலிருந்தே அது ஒரு போர் கருவியாக உருவெடுக்குமென கருதப்பட்டது. “உலகமுழுவதும் போர் நடவடிக்கையில் புரட்சியை ஏற்படுத்தப்போகும் பறக்கும் போர்க் கப்பலை கூடிய சீக்கிரத்தில் அமெரிக்கா கண்டுபிடிக்கப்போகிறது என்பதை அநேகர் அறியாதிருக்கிறார்கள்” என்று 1907-ல் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் கூறினார். “இப்போது எல்லா பெரிய நாடுகளிடமும் டார்பீடோ என்னும் நீர்மூழ்கிக் கப்பல்களும் அதை அழிக்கும் கருவிகளும் இருப்பதுபோல் இன்னும் இரண்டிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் போர் விமானங்களும் அவற்றை அழிக்கும் கருவிகளும் இருக்கும்” என்று அதே வருடத்தில் பலூன் இயக்குபவரான கேப்டன் தாமஸ் டி. லவ்லெஸ் கூறியதாக த நியு யார்க் டைம்ஸ் மேற்கோள் காட்டியது.

மூன்றே மாதங்களுக்குப் பிறகு முதல் போர் விமானத்தை உருவாக்குவதற்காக ரைட் சகோதரர்களிடம் ஐ.மா. ராணுவத் துறை ஒப்பந்தம் செய்தது. “ஒரு வெடி குண்டை போர்க் கப்பலின் புகைப்போக்கி வழியாக போடுவதன்மூலம் அதிலுள்ள இயந்திரங்களைப் பயங்கரமாகச் சேதப்படுத்த முடியும். அதோடு, கொதி கலங்களை வெடிக்கச் செய்து கப்பலை முழுவதுமாக அழிக்க முடியுமென்பதால்” ராணுவப் படை, விமானத் தயாரிப்பில் ஆர்வம் காட்டியதாக செப்டம்பர் 13, 1908 தேதியிட்ட நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரை விளக்கியது.

கிரஹாம் பெல் சொன்ன விதமாகவே காலப்போக்கில் ‘விமானம், உலகமுழுவதும் போர் நடவடிக்கையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.’ 1915-ல் விமான உற்பத்தியாளர்கள், முன்நோக்கி தாக்கும் இயந்திர துப்பாக்கியை உருவாக்கினார்கள். சுழலும் ‘புரொப்பெல்லர் பிளேடுகளுக்கு’ இடையே குண்டுகளை வீசுவதற்கு ஏற்றபடி இதை வடிவமைத்தார்கள். ஏற்கெனவே இருக்கும் போர் விமானங்களோடு சீக்கிரத்தில் குண்டு வீச்சு விமானங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குள் இதைவிட இன்னும் பெரியளவிலான, சக்திவாய்ந்த குண்டு வீச்சு விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகஸ்ட் 6, 1945-ல் B-29 சூப்பர்ஃப்பாட்ரஸ் என்ற சக்திவாய்ந்த ஒரு குண்டு வீச்சு விமானம், போருக்காகப் பயன்படுத்தப்படும் முதல் அணு குண்டை வீசி ஹிரோஷிமா என்னும் ஜப்பானிய நகரைத் தரைமட்டமாக்கி, மொத்தத்தில் 1,00,000 உயிர்களைக் குடித்தது.

விமானம் ஏன்தான் கண்டுபிடிக்கப்பட்டதோ என்று இரண்டு வருடங்களுக்கு முன்புதான், அதாவது 1943-ல், ஆர்வெல் ரைட் தனிமையில் இருந்தபோது வருத்தப்பட்டார். இரண்டு உலகப் போர்களிலும் அது உண்மையிலேயே படுபயங்கரமான ஒரு போர் ஆயுதமாக மாறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதோடு நின்றுவிடாமல் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் லேசர் ஏவுகணைகளும் துல்லியமாகத் தாக்கும் “ஸ்மார்ட் பாம்ஸ்” என்ற வெடி குண்டுகளும் கைகொடுக்க, ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனம் . . . எழுகிற’ சமயத்தில் விமானம் இன்னும் அநேக உயிர்களைக் காவுகொள்கிறது.—மத்தேயு 24:7.

[பக்கம் 22, 23-ன் படங்கள்]

1. குண்டுகளைத் தாங்கிய ஆளில்லா பலூன்

2. பாராஜ் பலூன்

[படத்திற்கான நன்றி]

Library of Congress, Prints & Photographs Division, FSA/OWI Collection, LC-USE6-D-004722

3. B-29 சூப்பர்ஃப்பாட்ரஸ்

[படத்திற்கான நன்றி]

USAF photo

4. ஸ்ட்ரைக் ஃபைட்டர் F/A-18C ஹார்நட்

5. F-117A நைட்ஹாக் ஸ்டெல்த் ஃபைட்டர்

[படத்திற்கான நன்றி]

U.S. Department of Defense