Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரேசிலின் செவ்விந்தியக் குடிகள் அழிவின் விளிம்பிலா?

பிரேசிலின் செவ்விந்தியக் குடிகள் அழிவின் விளிம்பிலா?

பிரேசிலின் செவ்விந்தியக் குடிகள் அழிவின் விளிம்பிலா?

பிரேசிலிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பிரேசிலின் மாடோ க்ரோசா மாகாணத்தில் வீற்றிருக்கிறது ஜிங்கு தேசியப் பூங்கா. இது சுமார் 27,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை அலங்கரிக்கிறது; இது கிட்டத்தட்ட பெல்ஜியம் நாட்டின் பரப்பளவைக் கொண்டது. 14 இனப்பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 3,600 செவ்விந்தியருக்கு இது வீடாகத் திகழ்கிறது. செயற்கை கோளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் “இராட்சத பில்லியட் மேஜை” போல் தெரிகிற பகுதிக்கு நடுவே பசுமைக் கொஞ்சும் தீவு போல இது காட்சியளிக்கிறது. பெரும் லாபம் ஈட்டித்தரும் மரங்களை வியாபாரிகள் வெட்டியெடுப்பதற்கு வசதியாக இதனைச் சுற்றியிருக்கும் காடுகள் எரிக்கப்பட்டுள்ளன; அல்லது கூட்டங்கூட்டமாக வருகிற கால்நடைகள் மேய்வதற்கு ஏற்ப புல்வெளியாக மாற்றப்பட்டுள்ளன.

1960-களில் பிரேசில் நாட்டு அரசாங்கம் செவ்விந்தியருக்கென தனி ஒதுக்கீட்டுப் பகுதிகளை அமைத்துக் கொடுக்கத் துவங்கியது. முக்கியமாக அமேசான் பிராந்தியத்தில் உள்ள இந்த ஒதுக்கீட்டுப் பகுதிகள் பிரேசில் நாட்டின் சுமார் 12 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளன. ஒதுக்கீட்டுப் பகுதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வியக்கவைக்கும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த 500 ஆண்டுகளில் முதன்முறையாக செவ்விந்தியரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது! ஆம், சுமார் மூன்று லட்சத்தைத் தொட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. என்றாலும், 1500-ஆம் ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிட இது அற்பசொற்பமே. ஏனென்றால் அப்போது செவ்விந்தியரின் மக்கள்தொகை 20 லட்சத்திலிருந்து 60 லட்சம்வரை இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.

கடந்த 500 ஆண்டுகளில், செவ்விந்தியக் “குடிகளின் எண்ணிக்கையில் அதிர்ச்சியூட்டும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது” என ஓர் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? சமீப ஆண்டுகளில் அவர்களுடைய எண்ணிக்கையில் காணப்படுகிற முன்னேற்றம், இப்போது அவர்கள் அழிவின் பிடியிலிருந்து தப்பிவிட்டதைக் காட்டுகிறதா?

காலனி ஆதிக்கத்தின் ஆரம்பம்

போர்ச்சுகீசியர் 1500-ஆம் ஆண்டில் பிரேசிலில் கால்பதித்து அதைச் சொந்தம் கொண்டாடினர்; அதற்குப் பிறகு வந்த 30 ஆண்டுகளில் இந்தக் காலனியாட்களின் நாட்டம் முழுவதும் பிரேசில்வுட் என்ற மரத்தைப் பெறுவதிலேயே இருந்தது. உறுதிவாய்ந்த அந்த மரத்திலிருந்து சிவப்புச் சாயம் கிடைத்தது. அந்த மரத்தின் பெயரிலிருந்தே அந்நாட்டுக்கு பிரேசில் என்ற பெயர் வந்தது. ஐரோப்பாவில் அந்த மரத்திற்கு அதிக மவுசு இருந்தது; அதனால் ஐரோப்பியர் பண்டமாற்று முறையில் விலைகுறைந்த பொருட்களைக் கொடுத்து அந்த மரத்தைப் பெற்றனர்.

என்றாலும், பிரேசில் நாட்டின் சீதோஷ்ணம் கரும்பு விளைச்சலுக்கு மிகவும் ஏற்றது என சீக்கிரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு சிக்கல். கரும்பைச் சாகுபடி செய்ய கடும் உழைப்பும் ஆள் பலமும் தேவைப்பட்டது. அதனால், அடிமை வேலையாட்கள் அதிகமாகத் தேவைப்பட்டனர். ஆனால், வேலையாட்களைத் தேடி அலைவது கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதுபோல இருந்திருக்கும்! ஏனென்றால் உள்ளூரிலேயே செவ்விந்தியக் குடிகள் அவர்களுக்கு எக்கச்சக்கமாகக் கிடைத்தனர்.

அடிமைகளானது எப்படி?

பிழைப்புக்கு அத்தியாவசியமானவற்றை மட்டும் பயிரிடுவதுதான் செவ்விந்தியரின் வழக்கம். ஆண்கள் பெரும்பாலும் வேட்டையாடுபவர்களாயும் மீன்பிடிப்பவர்களாயும் இருந்தனர். காடுகளிலிருந்த மரங்களையும் தேவையற்ற செடிகொடிகளையும் அகற்றுகிற கடின வேலையிலும் அவர்கள் ஈடுபட்டனர். பயிரிடுவது, அறுவடை செய்வது, சமைப்பது ஆகிய வேலைகளில் பெண்கள் ஈடுபட்டனர். செல்வத்தின் மீது மோகமோ பேராசையோ இல்லாத செவ்விந்தியரை ஐரோப்பாவில் இருந்த அறிவாளிகள் ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்தனர். மறுபட்சத்தில், அங்கு குடியேறிய ஐரோப்பியர்களோ இவர்களை சுத்த சோம்பேறிகளாகக் கருதினர்.

போர்ச்சுகீசியக் குடியேறிகள் தங்களிடம் நட்பு பாராட்டிய செவ்விந்தியரை வைத்து வேலை வாங்கவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் விரும்பினர்; எனவே தங்களுடைய குடியிருப்புப் பகுதிக்கு அருகே குடிமாறும்படி அவர்களிடம் நயமாகக் கேட்டனர். இவ்வாறு குடிமாற்றுவதில், ஜெஸ்யூட்டுகளும் பிற மதத்தவரும் பெரும் பங்கு வகித்தனர். வெள்ளையர்களோடு சகவாசம் வைப்பது செவ்விந்தியருக்கு எந்தளவுக்குத் தீங்கிழைக்கப் போகிறது என்பதை அப்போது அவர்கள் சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. செவ்விந்தியருக்கு அந்த நிலத்தின்மீது சட்டப்படி உரிமை இருந்தது; சுதந்திரமாக வாழ்வதற்கும் உரிமை இருந்தது. என்றாலும், நடந்தது என்னவென்றால் இந்தக் குடியேறிகளுக்கு கொத்தடிமைகளாக இருந்து மாடாய் உழைக்க வேண்டிய அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு சரிவர ஊதியம் கொடுக்கப்படவில்லை; தங்களுடைய நிலத்தில் பயிரிடவும் அனுமதி அளிக்கப்படவில்லை.

அடிமைத்தனத்தைத் தடுக்க போர்ச்சுகீசிய மன்னர் எடுத்த பல முயற்சிகள் ஓரளவுக்கே பயனளித்தன. பிரேஸிலில் குடியேறியவர்கள், அடிமைத்தனத்திற்கு எதிரான சட்டங்களில் ஓட்டைகளைக் கண்டுபிடித்து அவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர். பொதுவாகச் சொன்னால், செவ்விந்தியரை அடிமைகளாக வைத்துக்கொள்வதிலோ விற்பதிலோ தவறில்லை எனக் கருதினர்; அவர்களை “ஏதோ தர்ம யுத்தத்தில்” பிடிபட்ட பகைவர்களைப்போல கருதினர். பிற இனத்தவரிடம் மாட்டிக் கொண்ட செவ்விந்தியரையும் பிணைத்தொகை கொடுத்து மீட்டு அடிமைகளாக வைத்துக்கொண்டனர்.

கடைசியில், அங்கு சர்க்கரைத் தொழில் சக்கைப்போடு போட்டதுதான் போர்ச்சுகீசிய காலனிக்குக் கிடைத்த வெற்றியாக இருந்தது. அந்தச் சமயத்தில் இத்தொழில் அடிமைத் தொழிலாளிகளை வைத்தே நடத்தப்பட்டது. ஆகவே, போர்ச்சுகீசிய அரசு அதன் லாபத்தைப் பெருக்குவதற்காக அடிமைகளின் விஷயத்தில் பாராமுகம் காட்டியது.

காலனி ஆதிக்க நாடுகளுக்கிடையே போட்டி—போர்ச்சுகல் Vs பிரான்சு, ஹாலந்து

காலனி ஆதிக்க நாடுகளுக்கு இடையிலான போட்டியில் முக்கியமாக மாட்டிக்கொண்டவர்கள் செவ்விந்தியரே. பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் போர்ச்சுகீசியப் பிடியிலிருந்து பிரேசிலை விடுவித்து அதைத் தங்கள் வசமாக்க முயன்றனர். காலனி ஆதிக்க நாடுகள் ஒவ்வொன்றும் செவ்விந்தியரை தங்களுக்குப் பக்கவாத்தியமாக வைத்துக்கொண்டு ஒன்றுக்கொன்று போட்டியிட்டன. தங்களது நாட்டை அபகரிக்கவே இவர்கள் எல்லாரும் போட்டி போடுகிறார்கள் என்பதை இந்தச் செவ்விந்தியர் பாவம் புரிந்துகொள்ளவே இல்லை. மாறாக, தங்களுடைய பகைவர்களை, அதாவது பிற செவ்விந்திய இனத்தவரைப் பழிவாங்குவதற்கு இதுதான் சமயமென கருதி ஆதிக்க நாடுகளுக்கிடையே நடந்த சண்டையில் அவர்களாகவே சேர்ந்துகொண்டனர்.

உதாரணமாக, நவம்பர் 10, 1555-ல் பிரெஞ்சு உயர்குடியைச் சேர்ந்த நிக்கோலா டெ வில்ஜென்யான் என்பவர் குவானபாரா வளைகுடாவுக்கு (இன்றைய ரியோ டி ஜெனிரோவுக்கு) வந்து அங்கே ஒரு கோட்டையைக் கட்டினார். அவர், டமாயா இன செவ்விந்தியருடன் கூட்டுச் சேர்ந்தார். போர்ச்சுகீசியரோ டூபினான்பா இன செவ்விந்தியரை பாஹியாவிலிருந்து அழைத்து வந்து, தகர்க்க முடியாததுபோல் தோன்றிய அந்தப் பலத்த கோட்டையை ஒருவழியாக மார்ச் 1560-ல் தாக்கினர். பிரெஞ்சுக்காரர்கள் அங்கிருந்து தப்பியோடினாலும் டமாயா இனத்தவருடன் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்; அதோடு, போர்ச்சுகீசியரை தாக்கும்படி அவர்களிடம் தூபமிட்டும் வந்தனர். போர்ச்சுகீசியர், டமாயா இனத்தவருடன் பலமுறை போரிட்ட பிறகு இறுதியில் அவர்களை முறியடித்தனர். ஒரேவொரு போரில் மட்டுமே 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 20,000 பேர் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

ஐரோப்பாவிலிருந்து பரவிய கொடிய வியாதிகள்

போர்ச்சுகீசியர் முதன்முதலில் சந்தித்த செவ்விந்தியர் திடகாத்திரராய் இருப்பதுபோல் தெரிந்தனர். வயதில் மூத்த செவ்விந்தியர் நூறு வயதை எட்டியிருந்ததாக ஆரம்பகால ஆய்வுப்பயணிகள் கருதுகின்றனர். ஆனாலும், ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க வியாதிகளை இவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. செவ்விந்தியர் அழிவின் விளிம்பிற்குச் செல்ல இதுவே மற்ற எல்லாவற்றையும்விட முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

செவ்விந்தியரின் எண்ணிக்கையில் மாபெரும் சரிவை ஏற்படுத்திய உயிர்க்கொல்லி நோய்களைப் பற்றிய பீதியூட்டும் அறிக்கைகள் போர்ச்சுகீசியரின் பதிவுகளில் உள்ளன. 1561-ல் போர்ச்சுகலைத் தாக்கிய பெரியம்மை அட்லாண்டிக்கைக் கடந்து போர்ச்சுகீசியர் குடியேறிய பகுதிகளிலும் பரவியது. அதன் பாதிப்பு அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது. மே 12, 1563-ல் ஜெஸ்யூட் லியோனார்டோ டோ வேல் எழுதிய கடிதம், உயிர்க்கொல்லி நோயின் பிடியில் அகப்பட்ட பிரேசில் குடிகளின் படுபயங்கரமான நிலைமையை இவ்வாறு விவரித்தது: “பெரியம்மையின் ஒரு வகையான இந்நோய் மிகக் கொடியதாயும் துர்நாற்றம் வீசுவதாயும் இருந்தது; அந்த வீச்சத்தால் யாருமே [நோயாளிகளின்] பக்கத்தில் அண்ட முடியவில்லை. இவ்வாறு, கவனிப்பாரின்றி கிடந்ததால் பலர் உயிரிழந்தனர்; கொப்புளங்களில் இருந்த புழுக்கள் அவர்களுடைய உடலை அரித்துத் தின்றதோடு அவை பெரிது பெரிதாகவும் எக்கச்சக்கமாகவும் இருந்ததால் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.”

கலப்பினத் திருமணம் —ஜெஸ்யூட்டுகளுக்கு அதிர்ச்சி

கலப்பினத் திருமணம் செய்துகொண்டதும்கூட அநேக இனத்தவரின் மறைவுக்குக் காரணமாக இருந்தது. “கலப்பினத் திருமணத்தை போர்ச்சுகீசியரோ பிரேசில் நாட்டவரோ எதிர்க்கவில்லை” என சிவப்பு பொன்—பிரேசிலின் செவ்விந்தியரைக் கைப்பற்றுதல் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. முன்பின் தெரியாதவர்களுக்கு பெண்களை, முக்கியமாக தங்களுடைய மகள்களைக் கொடுப்பது அவர்களுக்குக் காட்டும் உபசரிப்பாக செவ்விந்தியர் கருதினர். ஜெஸ்யூட்டுகள் 1549-ல் முதன்முறையாக பிரேசிலில் கால்பதித்தபோது கண்ட காட்சி அவர்களை அதிர வைத்தது. “ஆண்கள் மணமுடிக்காமலேயே செவ்விந்தியப் பெண்களுடன் கூடி வாழ்வது சட்டப்பூர்வமானது என்று அவர்கள் [குருமார்] யாவரறிய சொல்கிறார்கள்” எனக்கூறி ஜெஸ்யூட் மான்வெல் டா நுப்ரெக்கா முறையிட்டார். அதுமட்டுமல்ல, “குடியேறியவர்கள் தங்களுடைய செவ்விந்திய பெண்கள் [அடிமைகள்] எல்லாரையுமே ஆசைநாயகிகளாக வைத்துக்கொண்டார்கள்” என்றும் வருத்தம் தெரிவித்தார். போர்ச்சுகல் மன்னருக்கு பிரேசிலில் குடியேறிய ஒருவரைப்பற்றி இவ்வாறு அறிவிக்கப்பட்டது: ‘[அவருக்கு] ஏகப்பட்ட பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், கொள்ளுப் பேரப்பிள்ளைகளும், ஏன் ஒரு சந்ததியே இருந்தது; அந்த எண்ணிக்கையைச் சொல்லவுங்கூட எனக்கு [அறிவித்தவர்] தைரியமில்லை, கனம்பொருந்திய ராஜாவே.’

ஒருகாலத்தில் பிரேசில் நாட்டின் கடற்கரை சமவெளிகளில் புற்றீசல்போலப் பரவிக்கிடந்த செவ்விந்தியர், சுமார் 1650-ஆம் ஆண்டிற்குள்ளாக வியாதியாலும், அடிமைத்தனத்தினாலும், கலப்புத் திருமணத்தாலும் படிப்படியாகக் காணாமல் போயினர். அமேசான் பிராந்தியத்தில் வாழ்ந்தவர்களுக்கும் சீக்கிரத்திலேயே இதே கதி ஏற்பட்டது.

போர்ச்சுகீசியர் அமேசான் பிராந்தியத்தில் கால் ஊன்றியதைத் தொடர்ந்து அதன் கீழ்ப்பகுதியில் வசித்துவந்த குடிகளை மனம்போல் வெட்டிச் சாய்த்தனர்; ஏதோ தங்களுக்கு அனுமதி கிடைத்ததுபோல வெட்டிச் சாய்த்தனர். மாரனியோங்கைச் சேர்ந்த மதத் தலைவர் மான்வெல் டேஷேரா குறிப்பிடுகிறபடி, ஒருசில பத்தாண்டுகளுக்குள்ளாக மாரனியோங் மற்றும் பரா மாகாணங்களைச் சேர்ந்த சுமார் இருபது லட்சம் செவ்விந்தியரை போர்ச்சுகீசியர் கொன்று குவித்தனர்! இது ஒருவேளை மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம்; ஆனால், மக்கள் அவ்வாறு கொல்லப்பட்டதும், துன்பப்பட்டதும் மறுக்கமுடியாத உண்மை. அமேசானின் மேல்பகுதியில் வசித்த செவ்விந்தியரும் பிற்பாடு இதே அவஸ்தைக்கு ஆளாயினர். 1750-ஆம் ஆண்டிற்குள்ளாக, தொலைதூர பகுதிகளைத் தவிர, அமேசான் பிராந்தியத்திலிருந்த கிட்டத்தட்ட அனைத்து செவ்விந்தியருமே துடைத்தழிக்கப்பட்டனர்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் அமேசான் பிராந்தியத்தின் கடைகோடியிலிருந்த அநேக பகுதிகள் வளர்ச்சியடையவே, ஆங்காங்கே இருந்த கொஞ்சநஞ்ச செவ்விந்தியருடன் வெள்ளையர்கள் மீண்டும் தொடர்பு வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். சார்ல்ஸ் குட்இயர் 1839-ல் ரப்பரை கந்தகத்துடன் கலந்து சூடாக்கி வலுப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார்; அதைத் தொடர்ந்து ரப்பர் டயர்களும் உருவாக்கப்பட்டதால் ரப்பர் பிரியர்களின் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அமேசான் பகுதியில் வியாபாரிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். அங்கு மட்டுமே சுத்திகரிக்கப்படாத ரப்பர் கிடைத்தது. அது செவ்விந்தியரை கொடூரமாக வேலைவாங்கிய சமயமாக இருந்தது. அதனால் அவர்களுடைய எண்ணிக்கை கிடுகிடுவென குறைந்தது.

செவ்விந்தியரும் 20-ஆம் நூற்றாண்டும்

1970-ல், ஒருமைப்பாட்டுத் திட்டம் ஒன்றை வகுக்க பிரேசில் அரசு தீர்மானித்தது; அதன் ஒரு பாகமாக, அமேசான் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. இச்சாலைகளில் பல செவ்விந்தியருடைய நிலப்பகுதி வழியாகச் சென்றன. இதனால், செவ்விந்தியர் ஆய்வுப்பயணிகளின் தாக்குதலுக்கும் கொடிய நோய்களின் தாக்குதலுக்கும் இரையாயினர்.

உதாரணமாக, பானராஸ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். 18, 19 நூற்றாண்டுகளின்போது இந்த இனத்தினர் போரினாலும் அடிமைத்தனத்தினாலும் சுவடுதெரியாமல் மறைந்துவிட்டனர். அவர்களில் கொஞ்சம் பேர் வடமேற்கு நோக்கி தப்பியோடி, வடக்கு மாடோ க்ரோசாவில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர். பிற்பாடு, கூயபா-சான்டாரெம் என்ற நெடுஞ்சாலை இவர்களுடைய நிலப்பகுதி வழியாக அமைக்கப்பட்டது.

மீண்டும் வெள்ளையர்களின் மத்தியில் வாழ்வது உயிருக்கு உலைவைப்பதாய் இருந்தது. ஒரு காலத்தில் பெரிய ஜனக்கூட்டமாய் இருந்த இந்த இனத்தாரில் 80 பேர் மட்டுமே 1975-ல் மிஞ்சினர். பானராஸ் இனத்தார் ஜிங்கு தேசியப் பூங்காவுக்கு அருகே குடிமாற்றப்பட்டனர். தாங்கள் வாழ்ந்துவந்த காட்டுப் பகுதியைப் போன்ற ஒரு பகுதியைக் கண்டுபிடிக்க முயற்சித்தனர். கண்டுபிடிக்க முடியாமல் போகவே, இந்தப் பானராஸ் இனத்தவர் தங்களுடைய தாயகத்திற்கே திரும்பிச்செல்ல தீர்மானித்தனர். நவம்பர் 1, 1996-ல் பிரேசில் அரசின் நீதித்துறை அமைச்சர், 4,95,000 ஹெக்டேர் நிலத்தை “பழங்குடி மக்களுக்கு நிரந்தரச் சொத்தாக அளிக்கப்படுவதாக” அறிவித்தார். பானராஸ் மக்கள் அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றப்பட்டதுபோல் தெரிந்தது.

ஒளிமயமான எதிர்காலம் கிட்டுமா?

ஒதுக்கீட்டுப் பகுதிகள், செவ்விந்தியரில் மீந்திருக்கிற சொற்ப இனத்தவரை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுமா? இப்போதைய சூழ்நிலையில், செவ்விந்தியர் கொல்லப்படுவதற்கு அதிக வாய்ப்பில்லை. என்றாலும், அவர்கள் குடியிருக்கும் பகுதியில் விலைமதிப்புள்ள இயற்கை வளங்கள் புதைந்து கிடக்கின்றன. பொன், பிளாட்டினம், வைரம், இரும்பு, காரீயம் உட்பட சுமார் நூறாயிரங்கோடி டாலர் மதிப்புள்ள தாதுப்பொருட்கள் லீகல் அமேசோனியா என அறியப்படுகிற இடத்தில் புதைந்து கிடப்பதாகக் கணிக்கப்படுகின்றன. இது பிரேசிலின் வடக்கு மற்றும் மத்திய மேற்கு பிராந்தியங்களிலுள்ள ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய இடமாகும். இங்குள்ள சுமார் 98 சதவீதப் பகுதியும் செவ்விந்தியர் குடியிருக்கும் பகுதிகளாகும். செவ்விந்தியரின் சில குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வுப்பயணிகளின் சட்டவிரோதமான ஊடுருவல் ஏற்கெனவே துவங்கிவிட்டிருக்கிறது.

வெள்ளையர்களால் செவ்விந்தியருக்கு அடுத்தடுத்து பெருத்த ஏமாற்றமும் பேரிழப்புமே ஏற்பட்டிருக்கிறதென சரித்திரம் காட்டுகிறது. அவர்கள் செவ்விந்தியருக்கு கண்ணாடியைக் கொடுத்து பொன்னையும், சிறு சிறு பொருட்களைக் கொடுத்து பிரேசில்வுட் மரங்களையும் பண்டமாற்று முறையில் பெற்றுக்கொண்டனர். வெள்ளையர்களுக்கு அடிமையாகாதிருக்க அவர்கள் தொலைதூரப் பகுதியிலுள்ள காடுகளுக்குத் தப்பியோடினர். அவர்களுக்கு மீண்டும் இந்நிலை ஏற்படுமா?

செவ்விந்தியர் பலரும் இன்றைய தொழில்நுட்ப யுகத்தின் படைப்புகளைப் பயன்படுத்த கற்றிருக்கின்றனர்; விமானம், இயந்திரப் படகு, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்தக் கற்றிருக்கின்றனர். ஆனால், 21-ஆம் நூற்றாண்டின் பிரச்சினைகளைச் சந்திக்க அவர்கள் தயாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில்சொல்லும்.

[பக்கம் 15-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

■ ஜிங்கு தேசியப் பூங்கா

□ செவ்விந்திய ஒதுக்கீட்டுப் பகுதிகள்

பிரேசில்

பிரேஸிலியா

ரியோ டி ஜெனிரோ

பிரெஞ்சு கயானா

சூரினாம்

கயானா

வெனிசுவேலா

கொலம்பியா

ஈக்வடார்

பெரு

பொலிவியா

பராகுவே

உருகுவே

[பக்கம் 15-ன் படம்]

வியாபாரிகள் ரப்பர் தோட்டங்களில் செவ்விந்தியரை அடிமைகளாக வேலை வாங்கினர்

[படத்திற்கான நன்றி]

© Jacques Jangoux/Peter Arnold, Inc.

[பக்கம் 12-ன் படத்திற்கான நன்றி]

Line drawing and design: From the book Brazil and the Brazilians, 1857