Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோரை பயமுறுத்தும் பயங்கரம்!

பெற்றோரை பயமுறுத்தும் பயங்கரம்!

ஹிதர், ஸ்காட் தம்பதியர் கலகலப்பானவர்கள், குதூகலமானவர்கள். இவர்களுக்கு மூன்று வயதில் துடிப்பான, படுபுத்திசாலி மகன் ஒருவன் இருக்கிறான். a அவனைக் கண்ணுக்குள் வைத்து அவர்கள் வளர்க்கிறார்கள். இந்தக் காலத்தில் இது சுலபமான விஷயமல்ல. ஏனெனில், பிள்ளையை வளர்ப்பதில் கவலைகளும் கடமைகளும் எக்கச்சக்கமாக உள்ளன. அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் எத்தனை எத்தனை! இருந்தாலும், ஹிதரும் ஸ்காட்டும் ஒரு பொறுப்பை மிக மிக முக்கியமானதாய்க் கருதுகிறார்கள். தங்கள் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் என்ற ஆபத்திலிருந்து பாதுகாப்பதே அந்தப் பொறுப்பு. ஏன் இதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

“என் அப்பா ஈவிரக்கமற்றவர், குடிகாரர், கோபக்காரர். என்னை கண்மூடித்தனமாக அடிப்பார். என்னையும் என் தங்கைகளையும் அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்” என்று ஹிதர் சொல்கிறார். b இதுபோன்ற செயல்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிடுவதை அநேகர் ஆமோதிக்கிறார்கள். தன் மகனைப் பாதுகாக்க ஹிதர் தீர்மானித்ததில் ஆச்சரியமேதுமில்லை! இவ்விஷயத்தில் ஸ்காட்டுக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.

பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு அநேக பெற்றோர் கதிகலங்கி நிற்கிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஸ்காட்டையும் ஹிதரையும் போல் நீங்கள் ஒருவேளை இக்கொடுமைக்குப் பலியாகாமல், அதன் வலியை அனுபவிக்காதிருக்கலாம். எனினும், இந்த அருவருப்பூட்டும் பழக்கம் பரவலாகக் காணப்படுவதைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்திகளை நீங்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். உலகெங்கும், பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பிள்ளைகளே இந்தக் கொடுமைகளுக்கு ஆளாவதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறார்கள்.

எனவேதான், பிள்ளைகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்திருப்பதுபற்றி, இவ்விஷயத்தின் பேரில் ஆய்வு செய்கிற ஒருவர் சொல்கையில், இது “நம்முடைய சகாப்தத்தின் வேதனையான கண்டுபிடிப்புகளில் ஒன்று” என்றார். இது கவலைக்குரிய விஷயம்தான். ஆனால், இக்கொடுமை அதிகரித்து வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டுமா? பைபிளை ஆழ்ந்து படிப்பவர்கள் ஆச்சரியப்படுவதில்லை. ஏனெனில், நாம் ‘கடைசி நாட்கள்’ என்றழைக்கப்படும் வேதனைமிக்க காலத்தில் வாழ்ந்து வருவதாய் கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. இந்தக் காலப் பகுதியில் ஜனங்கள், “தற்பிரியராயும்,” “சுபாவ அன்பில்லாதவர்களாயும்” இருப்பதால் ‘கொடுமையான’ செயல்கள் அதிகளவில் அரங்கேறும் என்றும் அது கூறுகிறது.—2 தீமோத்தேயு 3:1-5.

பாலியல் துஷ்பிரயோகம் என்பது அதிர்ச்சியூட்டும் பிரச்சினை. அதற்காகவே பிள்ளைகளைத் தேடி அலைகிற கல்நெஞ்சக் கயவர்களை நினைக்கும்போது சில பெற்றோர்கள் நிலைகுலைந்து போய்விடுகிறார்கள். இருப்பினும், இப்பிரச்சினை பெற்றோர்களால் சமாளிக்க முடியாத ஒன்றா? பிள்ளைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் நடைமுறையான என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? இக்கேள்விகளுக்கு பின்வரும் கட்டுரைகள் பதிலளிக்கும்.

a இந்தத் தொடர் கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b வயதுவந்த நபர், தன் காமப்பசிக்கு பிள்ளைகளை இரையாக்கிக் கொள்வதையே பாலியல் துஷ்பிரயோகம் என்கிறோம். பைபிள் குறிப்பிடுகிற வேசித்தனத்தில் [ஃபோர்னியாவில்] ஈடுபடுவதை இது பெரும்பாலும் அர்த்தப்படுத்துகிறது. பிறப்புறுப்புகளைத் தொட்டு விளையாடுவது, பாலுறவு கொள்வது, வாய்வழிப்புணர்ச்சி, ஆசனவழிப் புணர்ச்சி ஆகியவை இதில் அடங்கும். மார்பகங்களைத் தடவுவது, ஒழுக்கக்கேட்டில் ஈடுபட நேரடியாகவே அழைப்பது, ஆபாசப் படங்களைப் பிள்ளைகளிடம் காட்டுவது, ஆபாச காரியங்களில் பிள்ளைகளை ஈடுபடுத்தி தங்கள் காமப் பசியைத் தீர்த்துக்கொள்வது, அரை நிர்வாணமாக்கிப் பார்ப்பது போன்றவை “காமவிகாரம்,” அல்லது ‘அசுத்தங்களை ஆவலோடே நடப்பிப்பது’ என்று பைபிள் கண்டிக்கிற காரியங்களில் அடங்கும்.—கலாத்தியர் 5:19-21; எபேசியர் 4:19.