நம்புவதா, வேண்டாமா
“இற்றுப்போன மரப்பலகைகளை நம்பாதீர்” என எழுதினார் ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர். ஆம், ஒரு படகில் கால் வைப்பதற்கு முன் அதன் பலகைகள் இற்றுப்போகாமல் நல்ல நிலையில் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நீங்கள் விரும்புவீர்கள்.
ஷேக்ஸ்பியரின் இந்த வார்த்தைகள் பண்டைய இஸ்ரவேலின் அரசரான சாலொமோன் ஞானியின் கருத்துகளை எதிரொலிக்கின்றன. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இவ்வாறு எழுதினார்: “பேதையானவன் [“அறிவில்லாதவன்,” NW] எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) ஆம், அறிவில்லாதவன் தான் கேட்கிற எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்புவான். அவனுடைய தீர்மானங்களும் செயல்களும் அர்த்தமற்ற அறிவுரைகளையோ போதனைகளையோ சார்ந்தே இருக்கும். இற்றுப்போன மரப்பலகைகள்மீது கால் வைப்பதுபோல தவறான இடத்தில் நம்பிக்கை வைப்பது விபரீதத்திற்கே இட்டுச் செல்லும். அப்படியானால், ‘நம் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஏதாவது வழிகாட்டி இருக்கிறதா?’ என நீங்கள் யோசிக்கலாம்.
உலகிலுள்ள லட்சக்கணக்கானோர், பரிசுத்த பைபிள் என அழைக்கப்படுகிற பழமையான ஒரு புத்தகத்தை முழுமையாக நம்புகிறார்கள். அதன் வழிகாட்டுதலை நம்பி ஏற்றுக்கொள்கிறார்கள். அதன் ஆலோசனைப்படி தீர்மானங்களை எடுக்கிறார்கள்; அதன் போதனைகளின்படி செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு கருத்தில், இற்றுப்போன மரப்பலகைகள் மீது கால் வைக்கிறார்களா? இக்கேள்விக்கான பதில் மற்றொரு கேள்விக்கான பதிலைப் பெரிதும் சார்ந்திருக்கிறது: பைபிளை நம்புவதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றனவா? விழித்தெழு!-வின் இந்தச் சிறப்பிதழ் இதற்கான அத்தாட்சிகளை அலசுகிறது.
மத நம்பிக்கைகளையோ கருத்துகளையோ உங்கள்மீது திணிப்பது இந்த விழித்தெழு! இதழின் நோக்கம் அல்ல. மாறாக, பைபிள் நம்பகமான ஒரு புத்தகம் என்பதற்கு பலமான அத்தாட்சிகளை அளிப்பதே இதன் நோக்கம்; இவை லட்சக்கணக்கானோருக்கு பைபிளின்மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன. தொடர்ந்து வரும் கட்டுரைகளைப் படித்த பிறகு, பைபிளை நம்புவதா வேண்டாமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும்.
இக்கட்டுரைகளை நுனிப்புல் மேய்வதுபோல அல்ல, ஆனால் ஆழ்ந்து படிப்பது அவசியம். பைபிள் உண்மையிலேயே, நம் படைப்பாளர் தந்துள்ள நம்பத்தகுந்த வழிகாட்டியாக இருந்தால், இதிலுள்ள விஷயங்களைச் சிந்திப்பது உங்களுக்கும் உங்கள் பாசத்துக்குரியவர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.
என்றாலும், பைபிளைப் பற்றிய சில தலைசிறந்த அம்சங்களை முதலில் குறிப்பிடுகிறோம். இது உண்மையிலேயே ஓர் ஒப்பற்ற புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.