Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளை நம்புவதற்கான காரணங்கள்

1.சரித்திரப்பூர்வ துல்லியம்

1.சரித்திரப்பூர்வ துல்லியம்

தப்பும் தவறுமான விவரங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை நம்புவது கடினம். நவீன சரித்திர புத்தகம் ஒன்றில் இரண்டாம் உலகப் போர் 1800-களில் நடந்தது என்றோ அமெரிக்க பிரெஸிடென்ட்டை அரசன் என்றோ குறிப்பிட்டிருப்பதை நீங்கள் வாசிக்கிறீர்களென வைத்துக் கொள்ளலாம். அத்தகைய பிழைகள் மொத்தத்தில் அப்புத்தகம் நம்பகமானதுதானா என்ற கேள்வியை உங்கள் மனதில் எழுப்பும் அல்லவா?

பைபிள் சரித்திரப்பூர்வமாய் துல்லியமான தகவலைத் தருகிறதா என்ற கேள்வியை எழுப்பிய எவரும் இதுவரை தெளிவான ஆதாரங்களை அளித்தது கிடையாது. உண்மையில் வாழ்ந்த மக்களையும் நிஜ சம்பவங்களையும் பைபிள் குறிப்பிடுகிறது.

மக்கள்.

இயேசுவைக் கழுமரத்தில் அறையும்படி கையளித்தவரான யூதேயாவின் ரோம ஆளுநர் பொந்தியு பிலாத்து உண்மையில் வாழ்ந்தவர்தானா என பைபிள் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினார்கள். (மத்தேயு 27:1-26) ஆனால், பிலாத்து ஒருகாலத்தில் யூதேயாவின் ஆட்சியாளராக இருந்தார் என்பதற்கு கல்வெட்டு சான்றளிக்கிறது. இக்கல்வெட்டு, 1961-⁠ல் மத்தியதரைக்கடலின் துறைமுகப் பட்டணமான செசரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

தைரியமிக்க இளம் மேய்ப்பராகவும் பிற்பாடு இஸ்ரவேலின் அரசராகவும் இருந்த தாவீது ஒரு சரித்திரப் புருஷனாக இருந்தார் என்பதற்கான பைபிள்சாராத அத்தாட்சி 1993-⁠க்கு முன்புவரை கிடைக்கவில்லை. என்றாலும், அந்த ஆண்டில் வடக்கு இஸ்ரவேலில் புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒருவகை கருங்கல்லைக் கண்டுபிடித்தார்கள். அது பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது; அந்தக் கல்லில் “தாவீதின் வீட்டார்,” “இஸ்ரவேலின் ராஜா” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்ததாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

சம்பவங்கள்.

தாவீதின் காலத்தில் இஸ்ரவேலரோடு போரிட்ட ஏதோம் தேசத்தாரைப்பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. இப்பதிவை சமீப காலம்வரையில் அறிஞர்கள் பலர் சந்தேகித்திருக்கிறார்கள். (2 சாமுவேல் 8:13, 14) ஏதோமியர் அந்தக் காலத்தில் ஆடுமாடுகளை மேய்த்து வந்த எளிய மக்களே என்றும் அந்தளவு ஒன்றிணைந்து செயல்படுகிறவர்களாகவோ வெகுகாலத்திற்கு பின்னரும்கூட இஸ்ரவேலை எதிர்க்கத் துணியுமளவுக்கு பலம்படைத்தவர்களாகவோ இருக்கவில்லை என்றும் அவர்கள் வாதிட்டார்கள். என்றாலும், “பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற விதமாக இந்த ஏதோமியர் [முன்பு கருதப்பட்டதைக் காட்டிலும்] பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒன்றுபட்ட சமுதாயத்தினராக இருந்தார்கள்” என சமீபத்திய புதைப்பொருள் ஆராய்ச்சிகள் காட்டுவதாக பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.

சரியான பதவிப்பெயர்கள்.

பைபிள் எழுதப்பட்ட 16 நூற்றாண்டு காலப்பகுதியில் உலக அரங்கில் அநேக ஆட்சியாளர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். ஓர் ஆட்சியாளரைப்பற்றி பைபிள் குறிப்பிடுகையில் எப்போதுமே அவருடைய சரியான பதவிப்பெயரை அது பயன்படுத்துகிறது. உதாரணமாக, எரோது அந்திப்பாவை ‘குறுநில மன்னர்’ என்றும் கல்லியோனை ‘ஆட்சியாளர்’ என்றும் அது குறிப்பாகத் தெரிவிக்கிறது. (லூக்கா 3:1 பொது மொழிபெயர்ப்பு; அப்போஸ்தலர் 18:12, பொ.மொ.) தத்னாய் என்பவரை, ‘பேராற்றின் [அதாவது, யூப்ரட்டீஸ் நதியின்] அக்கரைப் பகுதியிலுள்ள’ பெர்சிய மாகாணத்தின் ஆளுநர் என எஸ்றா 5:6 (பொ.மொ.) குறிப்பிடுகிறது. பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நாணயத்தில் அவரைப் போன்ற மற்றொருவரைப் பற்றிய விவரிப்பு காணப்படுகிறது; அது பெர்சிய ஆளுநரான மாஸாயுஸ் என்பவரை ‘பேராற்றின் அக்கரைப் பகுதியிலுள்ள’ மாகாணத்தின் ஆட்சியாளராக அடையாளம் காட்டுகிறது.

பைபிள் நுட்ப விவரங்களையும்கூட துல்லியமாகக் குறிப்பிட்டிருப்பதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. பைபிள் எழுத்தாளர்கள் எழுதிய சிறு சிறு விஷயங்களைக்கூட நம்ப முடியுமானால் அவர்கள் எழுதிய பிற விஷயங்களையும் நாம் உறுதியாக நம்ப முடியும் அல்லவா?