Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆபாசத்தைத் தவிர்ப்பது எப்படி?

ஆபாசத்தைத் தவிர்ப்பது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ஆபாசத்தைத் தவிர்ப்பது எப்படி?

“ஸ்கூலில் என்னோடு படித்த பையன் தன்னுடைய அலமாரி கதவிற்குப் பின்னால், ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை ஒட்டி வைத்திருந்தான். அவனுடைய அலமாரிக்குப் பக்கத்தில்தான் என்னுடைய அலமாரி இருந்தது.”—ராபர்ட். a

“வீட்டுப்பாடத்திற்குத் தேவையான தகவலை இன்டர்நெட்டில் தேடிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஆபாச வெப்சைட் ஒன்று கண்ணில்பட்டது.”—அநெட்.

உங்கள் அப்பா அம்மா சின்னப் பிள்ளைகளாக இருந்த காலத்தில், ஆபாசப் படங்களைப் பார்க்க ஆசைப்பட்டவர்கள் அதற்காகத் தேடியலைய வேண்டியிருந்தது. இன்றைக்கோ, நிலைமை தலைகீழ்; திரும்பும் திசையெல்லாம் ஆபாச மயம்தான். மேலே குறிப்பிடப்பட்ட ராபர்ட்டைப் போல, உங்கள் வகுப்பிலுள்ள மாணவன் வைத்திருக்கும் ஆபாசப் படத்தை நீங்கள் எதேச்சையாகப் பார்க்க நேரிடலாம். அல்லது மேற்குறிப்பிடப்பட்ட அநெட்டைப் போல, இன்டர்நெட்டில் அதைத் தற்செயலாகப் பார்க்க நேரிடலாம். “சில சமயங்களில் இன்டர்நெட்டில், ஏதாவது வெப்சைட்டை பார்த்துக்கொண்டோ, ஷாப்பிங் செய்துகொண்டோ, வங்கியிலிருந்து வந்த தகவல்களைச் சரிபார்த்துக்கொண்டோ இருப்பேன். அப்போது, திடுதிப்பென்று ஆபாசப் படம் ஏதாவது தானாகவே திரையில் வந்து நிற்கும்!” என்று 19 வயது பெண் ஒருத்தி கூறுகிறாள். b

இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாய் நடக்கின்றன. 8 முதல் 16 வயதுள்ள பிள்ளைகளில் 90 சதவீதத்தினர், பெரும்பாலும் வீட்டுப்பாடம் செய்வதற்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்தும்போது, எதேச்சையாக ஆபாசப் படங்களைப் பார்த்ததாகச் சொல்லுகிறார்கள். கோடிக்கணக்கான ஆபாசப் படங்கள் குவிந்துகிடக்கும் லட்சக்கணக்கான வெப்சைட்கள் இருக்கின்றன. இதனால், எப்போதையும்விட இப்போது ஆபாசம் அனைவரின் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது எனலாம். செல்ஃபோனிலும் அதைப் பார்க்க முடியும். 16 வயது டனீஸ் இவ்வாறு சொல்கிறாள்: “இது எங்கள் பள்ளியில் ரொம்ப பிரபலமாகிவிட்டது. திங்கட்கிழமையானால் போதும், ‘சனி, ஞாயிறுகளில் என்னென்ன படங்களை செல்ஃபோனில் டௌன்லோட் செய்தாய்’ என்பதே பரபரப்பாய் பேசப்படுகிறது.”

இத்தனை பேர் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள் என்பதை அறிகையில், ‘அது என்ன அவ்வளவு மோசமானதா’ என நீங்கள் யோசிக்கலாம். நிச்சயமாகவே மோசமானதுதான். அதற்குப் பல காரணங்கள் உண்டு. மூன்றை மட்டும் இப்போது சிந்திப்போம்.

◼ ஆபாசம், அதைத் தயாரிப்பவர்களையும் பார்ப்பவர்களையும் தலைகுனிய வைக்கிறது.—1 தெசலோனிக்கேயர் 4:3-5.

◼ ஆபாசத்தைப் பார்க்கும் ஆர்வம், நோவா காலத்தில் இருந்த பொல்லாத ஆவிகளின் அசாதாரணமான பாலுறவு வேட்கைக்கு சமமானது.—ஆதியாகமம் 6:2; யூதா 6, 7.

◼ ஆபாசத்தைப் பார்ப்பது பெரும்பாலும் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட வைக்கிறது.—யாக்கோபு 1:14, 15.

ஆபாச சங்கிலியில் மாட்டிக்கொள்வோர் பயங்கரமான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இரண்டு பேரின் அனுபவத்தைக் கவனியுங்கள்.

“சின்ன வயதிலேயே ஆபாசப் படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டதால் அதிலிருந்து விடுபடுவது பெரிய போராட்டமாக இருந்தது. பார்ப்பதை நிறுத்தி இப்போது பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அந்தக் காட்சிகள் பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிட்டன. அந்த எண்ணங்கள் மனதை விட்டு மறையாமல் அடம்பிடிக்கின்றன. இதனால் மனசாட்சி எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும். அது சுயமரியாதையை சுக்குநூறாக்கிவிடும். அருவருப்பானவர்களாய், எதற்கும் அருகதையற்றவர்களாய் நம்மை உணர வைக்கும். மனதை அழுத்தும் இந்தப் பாரத்தை இறக்கிவைக்க முடியாமல் மௌனமாய் சுமக்க வேண்டியிருக்கும்.”—எரிக்கா.

“பத்து வருடங்களாக ஆபாசத்திற்கு அடிமையாக இருந்தேன். அந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்து இப்போது 14 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும், இப்போதுவரை தினந்தினம் மனதுக்குள் போராட்டம்தான். அதைப் பார்ப்பதற்கான ஆசை பெருமளவு தணிந்துவிட்டாலும், மனதிற்குள் அது அவ்வப்போது எட்டிப்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆம், அதைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதல் இன்னமும் இருக்கிறது. அந்தப் படங்களும் மனதை விட்டு மறையவில்லை. இந்தக் கேவலமான பாதையில் காலெடுத்து வைக்காதிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு. ‘பார்ப்பதில் என்ன தப்பு’ என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். நான் போட்டது தப்புக்கணக்கு என்பது இப்போது புரிந்துவிட்டது. ஆபாசம் ஆபத்தானது, மோசமானது, இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. அதை ஆதரிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும், ஆபாசத்தைப் பொறுத்தவரை நன்மை என்பது துளிகூட இல்லை.”—ஜெஃப்.

சூழ்நிலையை ஆராயுங்கள்

தற்செயலாக ஆபாசத்தைப் பார்ப்பதைக்கூட எப்படித் தவிர்க்கலாம்? முதலாவது, சூழ்நிலையை ஆராயுங்கள்.

எவ்வளவு அடிக்கடி ஆபாசத்தை எதேச்சையாகப் பார்க்க நேரிடுகிறது?

பார்ப்பதே இல்லைஎப்போதாவது

ஒவ்வொரு வாரமும்தினமும்

இதை எங்கே அதிகமாகப் பார்க்க நேரிடுகிறது?

இன்டர்நெட்ஸ்கூல்

தொலைக்காட்சிவேறு இடங்கள்

ஒரே மாதிரியான சந்தர்ப்பங்களில் இது உங்கள் கண்ணில்படுகிறதா?

பின்வரும் உதாரணங்களை கவனியுங்கள்:

உங்களுடைய பள்ளித் தோழர்கள் சிலர் ஈ-மெயிலிலோ செல்ஃபோனிலோ ஆபாசப் படங்களை அனுப்ப வாய்ப்பிருக்கிறதா? ஆம் என்றால், திறந்து பார்க்காமலேயே அவற்றை அழித்துவிடுங்கள்.

செர்ச் என்ஜின் எனப்படும் தேடு பொறியில் நாம் தேடும் தகவல் குறித்த வார்த்தைகளைக் கொடுக்கும்போது, ‘பாப்-அப்’ செய்திகள் (வேறொரு வெப்சைட்டை திறந்து பார்க்கும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கும் வாக்கியங்களோ படங்களோ) வருகின்றனவா? இதைத் தெரிந்துகொள்வது, தகவல்களைத் தேடுகையில் மிகச் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்த உங்களுக்கு உதவும்.

ஆபாசத்தைப் பார்க்க வழிநடத்திய சூழ்நிலைகளை கீழே குறிப்பிடுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

மேலே உள்ள குறிப்புகளின் அடிப்படையில், ஆபாசத்தை எதேச்சையாகப் பார்ப்பதைக் குறைப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? (உங்களுடைய கருத்துகளை கீழே எழுதுங்கள்.)

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

திடீரென, ஆபாசப் படம் கண்ணில்பட்டால் என்ன செய்வீர்கள்?

உடனடியாக வேறு பக்கம் திரும்பிக்கொள்வேன்

ஆர்வக்கோளாறு காரணமாகச் சற்றுநேரம் பார்ப்பேன்

தொடர்ந்து பார்ப்பேன், இது போன்ற வேறு படங்களையும் தேடிப் பார்ப்பேன்

இரண்டாவது அல்லது மூன்றாவது பதிலை நீங்கள் ‘டிக்’ செய்திருந்தால், இவ்விஷயத்தில் என்ன இலக்கு வைக்கலாம்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

விடுதலை பெறுதல்

தப்பித்தவறி ஆபாசப் படங்களைப் பார்த்த சிலர், அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு, பிற்பாடு அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இந்தப் பழக்கத்தை விட்டு விடுதலையாவது அவ்வளவு சுலபமல்ல. “பைபிளைப் படிப்பதற்கு முன்னால், பேர்போன போதை மருந்துகள் ஒவ்வொன்றையும் அதிகமாகப் பயன்படுத்தினேன். ஆனால், எனக்கிருந்த கெட்ட பழக்கங்களிலேயே ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தை நிறுத்துவதுதான் மிக மிகக் கடினமாய் இருந்தது” என்று முன்னர் குறிப்பிடப்பட்ட ஜெஃப் கூறினார்.

ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டீர்களா? கவலைப்படாதீர்கள். நீங்கள் உதவிபெறலாம். எப்படி?

ஆபாசத்தைப்பற்றிப் புரிந்துகொள்ளுங்கள். கடவுளுடைய படைப்பில் கண்ணியமாய் கருத வேண்டிய ஒன்றை கொச்சைப்படுத்துவதற்காக சாத்தான் எடுக்கும் முயற்சியே இது என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கோணத்தில் ஆபாசத்தைப் புரிந்துகொள்வது ‘தீமையை வெறுத்துவிட’ உங்களுக்கு உதவும்.—சங்கீதம் 97:10.

விளைவுகளைக் குறித்து யோசியுங்கள். ஆபாசப் படங்களைப் பார்ப்பது மணவாழ்க்கைக்கு உலை வைத்துவிடும். பெண்களையும் ஆண்களையும் கீழ்த்தரமாகக் கருத வைக்கும். அதைப் பார்க்கும் ஒருவரை அவமானத்திற்குள்ளாக்கும். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்” என்று பைபிள் சொல்வதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. (நீதிமொழிகள் 22:3) ஆபாசத்திற்கு அடிமையானால் உங்களுக்கு என்ன ஆபத்து வரலாம் என்பதைக் கீழே எழுதுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். “எந்தவொரு கன்னியையும் இச்சையோடு பார்க்கக்கூடாதென்று மனப்பூர்வமாக உறுதிபூண்டேன்” என்று உண்மையுள்ள யோபு கூறினார். (யோபு 31:1, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழிகளில் சில இதோ:

தனியாக அறையில் இருக்கும்போது இன்டர்நெட்டைப் பயன்படுத்த மாட்டேன்.

ஆபாசப் படங்களுள்ள ‘பாப்-அப்’ செய்திகளையோ வெப் சைட்டுகளையோ உடனடியாக மூடிவிடுவேன்.

திரும்பவும் ஆபாசத்தைப் பார்க்க ஆரம்பித்தால், முதிர்ச்சி வாய்ந்த நண்பரிடம் பேசுவேன்.

ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தைவிட்டு விடுதலையாக உங்களுக்கு உதவும் வேறு ஓரிரண்டு தீர்மானங்களை யோசித்துப் பாருங்கள். ஏதேனும் இருந்தால், கீழே அவற்றை வரிசையாக எழுதுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◼ இதற்காக ஜெபியுங்கள். ‘மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கும்’ என்று சங்கீதக்காரன் யெகோவாவிடம் மன்றாடினார். (சங்கீதம் 119:37) பாவத்தில் வீழ்ந்துபோன இந்த மாம்சத்திற்குத் தீனிபோடும் ஒன்றை எதிர்ப்பது கஷ்டம்தான். ஆனால், இந்தப் போராட்டத்தில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமென யெகோவா தேவன் விரும்புகிறார். ஆகவே, சரியானதைச் செய்ய “இயல்புக்கு மிஞ்சிய சக்தியை” அவரால் உங்களுக்குத் தர முடியும்.—2 கொரிந்தியர் 4:7, NW.

◼ மனம்விட்டு பேசுங்கள். இதைப்பற்றி பேசுவதற்கு சங்கோஜமாக இருக்கிறதா? இருக்கலாம்! ஆனால், உங்கள் மனபாரத்தை இறக்கி வைத்தால் நிம்மதியாக இருக்குமல்லவா? ‘இடுக்கணில் உதவ பிறந்திருக்கும் சகோதரன்’ போன்ற ஒருவரிடம் உங்கள் மனதிலுள்ளதை எல்லாம் கொட்டுங்கள். (நீதிமொழிகள் 17:17) அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டுவிட விரும்பினால், இப்படி ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது மிக முக்கியம்.

ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இதைப்பற்றி யாரிடம் பேச நீங்கள் விரும்புகிறீர்களென கீழே எழுதுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

ஆபாசப் படங்களைப் பார்ப்பதை நிறுத்துவது ஒரு போராட்டமே. ஆனால், நீங்கள் அதில் வெற்றி பெற முடியும். நீங்கள் அதைப் புறக்கணிக்கிற ஒவ்வொரு முறையும் உங்களுக்குக் கிடைப்பது மிகப் பெரிய வெற்றியே. நீங்கள் பெற்ற வெற்றியைப்பற்றி யெகோவாவிடம் சொல்லுங்கள், அவர் தந்த பலத்திற்கு நன்றி சொல்லுங்கள். ஆபாசம் என்னும் ஆபத்தை தவிர்க்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறீர்கள் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.—நீதிமொழிகள் 27:11.

www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க

சிந்திப்பதற்கு

◼ கண்ணியமாய் கருத வேண்டிய ஒன்றை ஆபாசம் எவ்வாறு கொச்சைப்படுத்துகிறது?

◼ ஆபாசத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள என்ன நடைமுறையான காரியங்களைச் செய்யலாம்?

◼ ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் உங்கள் உடன்பிறந்தாருக்கு இருந்தால் நீங்கள் எவ்வாறு உதவலாம்?

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில் காணப்படும் பெயர்கள் நிஜப்பெயர்கள் அல்ல.

b ஆபாசம் என்ற வார்த்தை, அப்பட்டமாய் பாலுறவைச் சித்தரிப்பதைக் குறிப்பிடுகிறது; பார்ப்பவர், படிப்பவர் அல்லது கேட்பவரின் காம இச்சையைத் தூண்டுவிக்கிறது. படங்கள், அச்சிடப்பட்ட தகவல்கள், பதிவுசெய்யப்பட்ட அல்லது நேரடியான இசை, பாடல், ஆபாச பேச்சுகள் போன்றவை இதில் அடங்கும்.

[பக்கம் 12, 13-ன் படம்]

உங்கள் பள்ளித் தோழர்கள் செல்ஃபோனில் ஆபாசப் படங்களை அனுப்புவதற்கு வாய்ப்புள்ளதா?