Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ 2006-ல், “167 இதழாசிரியர்களும் அவர்களுடன் பணிபுரிந்த பணியாளர்களும் [டிரைவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்றோர்] செய்திகளைச் சேகரித்த சமயத்தில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.” அவர்களில் பெரும்பாலோர் குற்றச்செயல், ஊழல், உள்ளூரில் நடக்கிற சண்டை சச்சரவுகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை அறிக்கை செய்தவர்கள். கொஞ்சநஞ்சமல்ல, அவர்களில் 133 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.—இன்டர்நேஷனல் நியூஸ் சேஃப்டி இன்ஸ்டிட்யூட், பெல்ஜியம்.

◼ 1,000 கோடியிலிருந்து 1,400 கோடி முறை பயன்படுத்துமளவுக்கு வெடிமருந்துகளும் குண்டுகளும் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது, “உலகிலுள்ள ஒவ்வொரு நபரையும் இருமுறை கொல்வதற்குப் போதுமான துப்பாக்கிக் குண்டுகள்” தயாரிக்கப்படுகின்றன.—ராயல் மெல்பர்ன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ஆஸ்திரேலியா.

பூமியதிர்ச்சிக்கு மனிதனும் காரணம்

19-ஆம் நூற்றாண்டுமுதல் 200-க்கும் மேற்பட்ட பெரிய பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு மனிதனின் செயல்களே காரணம் என டி ட்சைட் என்ற ஜெர்மன் செய்தித்தாளில் வெளிவந்த ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. இவற்றில் பாதி பூமியதிர்ச்சிகள், சுரங்கங்கள் வெட்டப்படுவதால் ஏற்பட்டிருக்கின்றன. இயற்கை எரிவாயு, எண்ணெய் அல்லது தண்ணீர் ஆகியவற்றை பூமிக்கடியிலிருந்து பிரித்தெடுப்பது, திரவங்களை ஆழ் கிணறுகளுக்குள் செலுத்துவது, செயற்கை நீர்த்தேக்கங்களை உருவாக்குவது ஆகியவை மற்ற சில காரணங்களாக இருக்கின்றன. நிலக்கரிச் சுரங்கம் வெட்டப்பட்டதே 1989-ல் ஆஸ்திரேலியாவிலுள்ள நியூகேஸ்ட்ல் நகரில் ஏற்பட்ட பூமியதிர்ச்சிக்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்; அதில் 13 பேர் உயிரிழந்தனர், 165 பேர் காயமடைந்தனர், சேதமோ 350 கோடி அமெரிக்க டாலர். அங்கு சுமார் 200 வருடங்களுக்கு முன்பு சுரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முதற்கொண்டு அதிலிருந்து கிடைத்த வருவாயைவிட இந்த பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட நஷ்டமே அதிகமாய் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

பிரான்சில் கத்தோலிக்கர்களின் நிலை

1994-ல், பிரான்சு மக்களில் 67 சதவீதத்தினர் தங்களை கத்தோலிக்கராக உரிமைப்பாராட்டிக் கொண்டார்கள். ஆனால் இன்றோ அவ்வாறு சொல்பவர்கள் 51 சதவீதத்தினரே என லெ மான்டெ டெஸ் ரிலிஜன்ஸ் பத்திரிகை கூறுகிறது. அங்குள்ள கத்தோலிக்கரில் பாதிபேர், திருமணம் போன்ற விசேஷ வைபவங்களுக்காக மட்டுமே சர்ச்சுக்குச் செல்கிறார்கள் என ஒரு சுற்றாய்வு காட்டுகிறது. பரமண்டல ஜெபம் தங்களுக்கு மனப்பாடமாகத் தெரியுமென 88 சதவீதத்தினர் சொல்லிக்கொண்டாலும், 30 சதவீதத்தினருக்கு ஜெபம் செய்யும் வழக்கமே கிடையாதாம். கிட்டத்தட்ட அரைவாசி கத்தோலிக்க வீடுகளில் ஒரு பைபிள் காணப்பட்டாலும் அவர்கள் அதை வாசிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

பேசத் திணறும் சிறுசுகள்

“அதிகமதிகமான மழலைகள் மிகத் தாமதமாகத்தான் பேசத் துவங்குகின்றன; அதோடு ஏதோ சில வார்த்தைகளையே தெரிந்து வைத்திருக்கின்றன. பெரியவர்கள் அவர்களிடம் பேச்சுக் கொடுக்காததே அதற்குக் காரணம்” என கூறுகிறது விப்ராஸ்ட் என்ற போலந்து நாட்டு பத்திரிகை. சராசரியாக ஒருநாளில் பிள்ளைகளுடன் அம்மாக்கள் 30 நிமிடங்களே கழிக்கிறார்கள்; அப்பாக்களோ “ஏழு நிமிடங்கள் மட்டுமே” செலவிடுகிறார்கள். இதனால், ஏறக்குறைய ஐந்தில் ஒரு பிள்ளை, “சரளமாகப் பேசத் திணறுகிறது; பிள்ளைகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் பெற்றோரே இதற்கு முக்கியக் காரணம்.” சைலீசியா யுனிவர்சிட்டியில் பேச்சு வல்லுநரும் மொழியியல் வல்லுநருமாகப் பணிபுரியும் மீக்காவ் பிட்னியாக் இவ்வாறு எச்சரிக்கிறார்: “இத்தகைய பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காமலும் கவனியாமலும் விட்டுவிட்டால், அவர்களுடைய பேச்சுக் கோளாறு பள்ளியிலும், வளர்ந்து பெரியவர்களான பிறகும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.”

ஜப்பானில் மூடநம்பிக்கையை உபயோகித்து . . .

ஜப்பானியர்கள் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகளைக் கொட்டுவது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக ஆகியிருக்கிறது. பகல் வேளையில் ரோந்து வரும் காவலர்களால் இதைத் தடுக்க முடிவதில்லை. அதற்கு காரணம், மக்கள் இரவிலேயே குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டிவிடுவதுதான். இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண உள்ளூர் அதிகாரிகள் மக்களிடமுள்ள மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி பயமுறுத்த முடிவு செய்திருக்கிறார்கள். எப்படியெனில், ஷின்டோ கோயிலின் வாயிலைப் போன்று காட்சியளிக்கிற டாரீ எனப்படும் சிவப்புநிற மரக்கதவுகளை அமைத்திருக்கிறார்கள். “இது ஒரு சாதாரண விஷயம்தான். பொதுவாக மக்கள் டாரீயைப் புனிதமாகக் கருதுகிறார்கள்; அதனால், குப்பைகளை அதனருகே கொட்டினால் தங்களுக்குத் துரதிர்ஷ்டம் ஏற்படும் என நினைக்கிறார்கள்” என ஐஎச்டி ஆசாஹி ஷிம்புன் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. எதிர்பார்த்தபடியே, அதன் பிறகு மக்கள் அதனருகே குப்பைகளைக் கொட்டவில்லை. ஆனால், “அது அந்த இடத்தில் மட்டுமே; சற்று தள்ளிச் சென்று பார்த்தால் கதையே வேறுதான்” என்று அந்தச் செய்தித்தாள் கூறுகிறது.