எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
மணவாழ்வு—சூறாவளியைத் தாக்குப்பிடிக்குமா? (ஜூலை 2006) நான் ஒரு கத்தோலிக்கன். இருந்தாலும் விழித்தெழு! பத்திரிகையைத் தவறாமல் படிப்பேன். உங்களுடைய பத்திரிகை சுவாரஸ்யமாகவும் அறிவு புகட்டுவதாயும் இருக்கிறது. என்றாலும், “1983-ல் திருமண பந்தம் சம்பந்தமாக அது [சர்ச்] விதித்திருந்த சட்டங்களைத் தளர்த்தி கத்தோலிக்கர்கள் சுலபமாக விவாகரத்து செய்துகொள்ள [சர்ச்] வழிசெய்தது” என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததை ஏற்றுக்கொள்வது எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
ஜி.வி.எம்., ஜாம்பியா
“விழித்தெழு!” பதில்: 1983-ல் கிறிஸ்தவ சமயச் சட்டத்தொகுப்பில் செய்யப்பட்ட விதிமுறை மாற்றங்களையே நாங்கள் குறிப்பிட்டோம். இவை குறிப்பாக, அமெரிக்காவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ரோமன் கத்தோலிக்க பிஷப் மார்க் ஏ. பிவாரூனஸ் குறிப்பிடுகிறபடி, 1968-ல் அமெரிக்காவில் 338 விவாகரத்துக்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டது. என்றாலும், 1990-க்குள்ளாக அந்த எண்ணிக்கை 62,824-ஆக உயர்ந்திருந்தது. அதற்குக் காரணம் என்ன?
சமய சட்ட வழக்குரைஞர் எட்வர்ட் பீட்டர்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடந்த 30 ஆண்டுகளில் சமய சட்ட விதிமுறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; இவை, விவாகரத்திற்காக மனு செய்வதற்கும் அதற்கு ஒப்புதல் வழங்குவதற்குமான வாய்ப்புகளுக்கு வசதியாக அமைந்திருக்கின்றன.” இவ்வாறு செய்யப்பட்ட அநேக மாற்றங்களைக் குறிப்பிட்ட பிறகு பீட்டர்ஸ் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “சமய சட்ட விதிமுறைகளில் வாடிகன் செய்துள்ள ஒவ்வொரு மாற்றமும், விவாகரத்துகள் பெருமளவில் அதிகரிப்பதற்கு வித்திட்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.” அவர்களுடைய உள்நோக்கம் என்னவாக இருந்தாலும், சமய சட்டங்களில் செய்துள்ள இந்த மாற்றங்களால் அமெரிக்காவில் தென்பட்டிருக்கிற பாதிப்புகளை வைத்துதான் “விழித்தெழு!” இவ்வாறு குறிப்பிட்டது: “கத்தோலிக்கர்கள் சுலபமாக விவாகரத்து செய்துகொள்ள [சர்ச்] வழிசெய்தது.”
படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா? (செப்டம்பர் 2006) விழித்தெழு!-வின் இந்தச் சிறப்பிதழ் ஒரு தலைசிறந்த இலக்கியப் படைப்பு. அதில் தகவல்கள் எளிமையாகவும் ஆணித்தரமாகவும் தர்க்கரீதியாகவும் நியாயமாகவும் விவாதிக்கப்பட்டிருந்தன. இந்தப் பத்திரிகை முழுவதிலும் தகவல்கள் ஒழுங்குபடுத்தி எழுதப்பட்டிருப்பதோடு, ஒரே விஷயத்தை வித்தியாசமான கோணங்களில் தெரிவித்திருப்பது என்னை ரொம்பக் கவர்ந்தது.
ஏ.பி., ஸ்பெயின்
ஆர்வத்தைத் தூண்டும் இந்தப் பத்திரிகைக்கு மிக்க நன்றி. இது அருமையிலும் அருமை. இதிலுள்ள வெவ்வேறு விவாதங்களும் அநேக விளக்கப்படங்களும் யெகோவாவுக்கு நிச்சயம் மகிமைச் சேர்க்கும். இந்தப் புகழ் அனைத்திற்கும் அவர் பாத்திரரே.
ஆர்.பி., சுவிட்சர்லாந்து
படைப்புக்கு ஆதரவாகத் தரப்பட்டுள்ள எளிய அத்தாட்சிகள் என்னை இணங்க வைப்பதாய் இருந்தன. பரிணாமம் ஒரு பெரிய மோசடி என்பதை எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி அப்பட்டமாகவும், அதே சமயத்தில் அறிவியலை அடிப்படையாக வைத்து துல்லியமாகவும் அது விளக்கியிருந்தது.
எல்.ஜி., பிரான்சு
ரோமா—ஆயிரவருட இன்பமும் துன்பமும் (அக்டோபர் 2006) ரோமா மக்களை எனக்கு எப்போதுமே ரொம்பப் பிடிக்கும். ஆனால், அவர்களைப் பற்றிய தப்பெண்ணம் மக்கள் மத்தியில் இப்போதும் இருப்பதுதான் வருத்தகரமான விஷயம். உங்களுடைய கட்டுரை அநேகரைச் சிந்திக்க வைக்கும் என நான் நிச்சயம் நம்புகிறேன். யெகோவா பட்சபாதமுள்ளவர் அல்ல என்பதையும் அவருடைய வணக்கத்தாரில் ரோமா மக்களும் இருக்கிறார்கள் என்பதையும் அறிவது மனதுக்கு எவ்வளவாய் தெம்பளிக்கிறது!
பி.பி., பிரான்சு
நாங்கள் ரோமா மக்கள். என்னுடைய அப்பா இன்னும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகவில்லை. வாசிப்பதில் அவருக்கு அப்படியொன்றும் ஆர்வம் இல்லைதான். இருந்தாலும், அவர் இந்த பத்திரிகையைப் படிக்க விரும்பினார், இப்போது இது அவருடைய மேஜையில் இருக்கிறது!
ஏ.ஜி., பின்லாந்து