Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுற்றுச்சூழலை ஏன் பராமரிக்க வேண்டும்?

சுற்றுச்சூழலை ஏன் பராமரிக்க வேண்டும்?

பைபிளின் கருத்து

சுற்றுச்சூழலை ஏன் பராமரிக்க வேண்டும்?

சரித்திரம் காணாத வகையில் பூமி இப்போது சீரழிந்து வருகிறது. அதற்கு மனிதனே காரணம். புவிச்சூடு போன்ற பிரச்சினைகள் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்திருப்பதால், இவற்றைச் சமாளிக்க விஞ்ஞானிகளும் அரசாங்கங்களும் தொழில் நிறுவனங்களும் மும்முரமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறதா? இருக்கிறதென்றால், எந்தளவுக்கு? பூமியைப் பராமரிப்பதில் நமக்கும் பங்குண்டு என்பதை உணர்த்தும் விதத்தில் பைபிள் பல காரணங்களை முன்வைக்கிறது. இவ்விஷயத்தில் சமநிலையோடு செயல்படவும் இது உதவுகிறது.

படைப்பாளரின் நோக்கத்திற்கு இசைவாக நடத்தல்

பூமி ஒரு பூங்காவனமாக, மனிதரின் வீடாக இருக்க வேண்டுமென யெகோவா தேவன் விரும்பினார். அவருடைய படைப்புகள் அனைத்தும் ‘மிகவும் நன்றாயிருந்ததாக’ அவர் சொன்னார். ‘அதைப் [பூமியை] பண்படுத்தி, காக்கும்படியான’ பொறுப்பை மனிதருக்கு அளித்தார். (ஆதியாகமம் 1:28, 31; 2:15) ஆனால், பூமி இன்றிருக்கும் நிலையைப் பார்க்கும்போது கடவுளுக்கு எப்படி இருக்கும்? பூமியை பொறுப்பற்ற விதத்தில் மனிதன் பயன்படுத்துவதைப் பார்த்து அவர் மனம் நிச்சயம் வேதனைப்படும். அதனால்தான், ‘பூமியைக் கெடுத்தவர்களை [அவர்] கெடுப்பார்’ என்று வெளிப்படுத்துதல் 11:18 முன்னுரைக்கிறது. ஆகவே, பூமியின் நிலையை நாம் கண்டுங்காணாமல் இருந்துவிடக்கூடாது.

கடவுள் ‘சகலத்தையும் புதிதாக்கும்போது’ மனிதனால் பூமிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் சுவடு தெரியாமல் நீக்கப்படும் என்று பைபிள் உறுதியளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:5) என்றாலும், ஏற்ற சமயத்தில் கடவுள்தான் எல்லாவற்றையும் சரிசெய்ய போகிறாரே, அதனால் இப்போது நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை என்று அசட்டையாக இருந்துவிடக்கூடாது. ஏனெனில், நம்முடைய நடவடிக்கைகளும் முக்கியமானவை. கடவுள் பூமியை எப்படிக் கருதுகிறாரோ, அப்படியே நாமும் கருதுகிறோம் என்பதை எவ்வாறு காட்டலாம்? பூமி பூங்காவனமாய் இருக்க வேண்டுமென்ற அவருடைய விருப்பத்திற்கு இசைவாக நாம் எப்படிச் செயல்படலாம்?

பூமியை சுத்தப்படுத்துவோம்

நம்முடைய அன்றாட வேலைகளினால் ஓரளவு குப்பைகளும் கழிவுகளும் சேர்ந்துவிடுகின்றன. இவற்றை நீக்கி, காற்றையும் நீரையும் நிலத்தையும் சுத்தப்படுத்தும் விதத்தில் யெகோவா பூமியின் இயற்கை சுழற்சிகளை ஞானமாய் வடிவமைத்தார். (நீதிமொழிகள் 3:19) இவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தாவண்ணம் நம்முடைய செயல்கள் இருக்க வேண்டும். எனவே, தேவையில்லாமல் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்கள் எதிலும் ஈடுபடாதிருக்க நாம் கவனமாய் இருக்க வேண்டும். இது, நம்மைப் போலவே பிறரையும் நேசிக்கிறோம் என்பதைக் காட்டும். (மாற்கு 12:31) சுவாரஸ்யமான பைபிள் கால உதாரணம் ஒன்றைக் கவனியுங்கள்.

மனித கழிவுகளை “பாளயத்திற்குப் புறம்பே” புதைக்க வேண்டும் என்று இஸ்ரவேலருக்கு கடவுள் அறிவுறுத்தியிருந்தார். (உபாகமம் 23:12, 13) இதனால், பாளயம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. கழிவுகளும் வேகமாக சிதைவுற்றன. அதேபோல இன்றும், உண்மைக் கிறிஸ்தவர்கள் குப்பைகளையும் பிற கழிவுகளையும் சரியான முறையிலும் விரைவாகவும் அப்புறப்படுத்த முயலுகிறார்கள். நச்சுத்தன்மையுள்ள கழிவுப்பொருள்களை அதிக கவனத்தோடு அப்புறப்படுத்த வேண்டும்.

வேண்டாத பொருள்கள் பல மறுபடியும் பயன்படுத்தப்படலாம் அல்லது மறுசுழற்சி செய்யப்படலாம். மறுசுழற்சி செய்ய வேண்டுமென்பது அரசாங்க சட்டமாக இருந்தால், ‘இராயனுடையதை இராயனுக்குச் செலுத்துவதில்’ இதுபோன்ற சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதும் அடங்கும். (மத்தேயு 22:21) மறுசுழற்சி செய்வதற்கு கூடுதலாக சிரமப்பட வேண்டியிருக்கலாம். ஆனாலும் பூமி சுத்தமாய் இருக்க வேண்டும் என்ற நம் விருப்பம் அதில் வெளிப்படும்.

பூமியின் வளங்களை வீணாக்காதிருப்போம்!

உணவும் உறைவிடமும் எரிபொருளும் இருந்தால்தான் வாழ முடியும். இதற்கு நாம் இயற்கை வளங்களைச் சார்ந்திருக்கிறோம். இவற்றை கடவுளின் கொடைகளாக நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா என்பதை இவற்றை நாம் பயன்படுத்தும் விதமே காட்டிக்கொடுத்துவிடும். இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருந்தபோது, இறைச்சி சாப்பிட ஆசைப்பட்டார்கள். யெகோவாவும் எக்கச்சக்கமான காடைகளை அவர்களுக்குக் கொடுத்தார். ஆனால், அதை அவர்கள் பேராசையோடு குவித்து வைத்தபோது, அது யெகோவாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. (எண்ணாகமம் 11:31-33) கடவுள் மாறிவிடவில்லை. ஆகவே, பொறுப்பான கிறிஸ்தவர்கள் பொருள்களை அனாவசியமாக வீணாக்குவதில்லை. ஏனெனில், அப்படிச் செய்வது பேராசையின் அடையாளமாய் இருக்கலாம்.

சிலர் மின்சாரம், எரிபொருள் போன்றவற்றையும் ஏனைய வளங்களையும் இஷ்டம் போல செலவழிக்கலாம், அப்படிச் செய்ய தங்களுக்கு உரிமை இருக்கிறதென அவர்கள் நினைக்கலாம். இவற்றை வாங்குவதற்கு நம்மிடம் பணம் இருப்பதாலோ, இவை தாராளமாகக் கிடைப்பதாலோ இவற்றை விரயமாக்கக்கூடாது. ஏராளமானோர் கூடிவந்தபோது அற்புதமாக இயேசு அவர்களுக்கு உணவளித்தார்; பிறகு, மீதியிருந்த மீனையும், அப்பத்தையும் சேகரிக்கும்படி கட்டளையிட்டார். (யோவான் 6:12) தம்முடைய தகப்பன் கொடுத்தவை வீணாகாமல் பார்த்துக்கொண்டார்.

சமநிலையான முயற்சி

ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் தீர்மானங்கள் ஏதாவதொரு விதத்தில் சுற்றுச்சூழலுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமைகின்றன. பூமிக்கு எந்தக் கெடுதலையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்வது போன்ற தீவிரமான செயல்களில் நாம் இறங்கிவிடலாமா? அப்படிச் செய்யும்படி பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. இயேசுவின் முன்மாதிரியைக் கவனியுங்கள். பூமியில் இருந்தபோது, அவர் மக்களில் ஒருவராய் வாழ்ந்தார். இது கடவுள் கொடுத்திருந்த பிரசங்க வேலையை நிறைவேற்ற வாய்ப்பளித்தது. (லூக்கா 4:43) அதோடு, தம் காலத்தில் நிலவிய சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர் அரசியலில் இறங்கவில்லை. “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்று அவர் தெளிவாகக் கூறினார்.—யோவான் 18:36.

வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவது, போக்குவரத்து, பொழுதுபோக்கு போன்றவற்றை நாம் தீர்மானிக்கையில், அது நம் சுற்றுச்சூழலை எவ்விதத்தில் பாதிக்கும் என்பதைக் கவனத்தில் வைப்பது நல்லது. உதாரணமாக, சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் தயாரிக்கப்பட்ட அல்லது அவ்வாறு இயங்குகிற பொருள்களை சிலர் வாங்கத் தீர்மானிக்கிறார்கள். சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிற அல்லது இயற்கை வளங்களை அனாவசியமாக உறிஞ்சுகிற காரியங்களில் அவர்கள் ஈடுபடாதிருக்கிறார்கள்.

சுற்றுச்சூழலைக் குறித்து ஒருவர் எடுக்கும் தீர்மானத்தை மற்றவர்கள்மீது திணிக்கத் தேவையில்லை. தனி நபரின் சூழ்நிலைகளும், உள்ளூர் சூழ்நிலைகளும் மாறுபடுகின்றன. எனினும், நாம் எடுக்கும் தீர்மானங்களுக்கு நாமே பொறுப்பு. “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே” என்று பைபிள் சொல்கிறது.—கலாத்தியர் 6:5.

பூமியைப் பராமரிக்கும் பொறுப்பை மனிதர்களுக்கு கடவுள் அளித்திருக்கிறார். இதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். மனத்தாழ்மையோடு கடவுளையும் அவருடைய படைப்புகளையும் மதிக்க வேண்டும். சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டதில் யோசித்து, கவனமாகத் தீர்மானம் எடுக்க இவை உதவும்.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சரிசெய்ய கடவுள் நடவடிக்கை எடுப்பாரா?—வெளிப்படுத்துதல் 11:18.

◼ பூமி சம்பந்தமாக என்ன பொறுப்பை மனிதர்களுக்கு கடவுள் அளித்திருக்கிறார்?—ஆதியாகமம் 1:28; 2:15.

◼ பொருள்களை வீணாக்காதிருக்கும் விஷயத்தில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?—யோவான் 6:12.