Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மரணம் என்றாலே ஏன் அஞ்சுகிறோம்?

மரணம் என்றாலே ஏன் அஞ்சுகிறோம்?

மரணம் என்றாலே ஏன் அஞ்சுகிறோம்?

“மரணமே வாழ்க்கையின் முடிவு என்பதால் அது பயங்கரத்திலும் பயங்கரம்.” —அரிஸ்டாட்டில்.

அவள் ஒரு தீவிர கடவுள் பக்தை, மத போதனைகள்மீது அவளுக்கு அபார நம்பிக்கை என்றெல்லாம் கூறி அவளுடைய நண்பர்கள் அவளைப் புகழ்ந்தார்கள். “சர்ச்சின் தூண்” என்றும் சிலர் அவளை அழைத்தார்கள். மரணம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல, மாறாக இன்னொரு வாழ்க்கைக்குச் செல்வதற்கான வழி என்றே அவளுக்குக் கற்பிக்கப்பட்டது. ஆனால், மரணம் அவளை நெருங்கியபோது பயம் அவளை கவ்வியது. பல சந்தேகங்கள் அவள் மனதைக் குடைந்தெடுத்தன. அதனால், தன்னுடைய ஆன்மீக ஆலோசகரிடம் இவ்வாறு கேட்டாள்: “[மரணத்தின்போது என்ன நடக்கிறது என்பதைப்பற்றி] ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நம்புகிறார்களே, அவற்றில் எதுதான் உண்மை?”

மரணத்திற்குப் பின் மனிதன் தொடர்ந்து உயிர்வாழ்கிறான் அல்லது மீண்டும் உயிர்வாழ்வான் என்ற கருத்து கிட்டத்தட்ட எல்லா மதங்களிலும் எல்லா சமுதாயங்களிலும் நிலவுகிறது. இப்படிப் பல கருத்துகள் இருக்க எதை உண்மையென்று எடுத்துக்கொள்வது? மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்ற கருத்தையே அநேகர் சந்தேகிக்கிறார்கள். உங்களைப் பற்றி என்ன? மரணத்திற்குப் பின்னும் மனிதன் வாழ்கிறான் என்று உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறதா? அது உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்களா? மரணத்தைக் குறித்து கதிகலங்குகிறீர்களா?

இல்லாமல் போய்விடுவோம் என்ற பயம்

சாவைக் கண்டு அஞ்சுவதை, “மரண பயம்” என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்த விஷயத்தின் பேரில் சமீப காலங்களில் பல புத்தகங்களும் விஞ்ஞான அறிக்கைகளும் எழுதப்பட்டுள்ளன. இருப்பினும், மரணத்தைக் குறித்து அநேகர் யோசிக்கவே விரும்புவதில்லை. ஆனால், நாம் யாருமே மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதால் என்றைக்காவது ஒருநாள் அதைப்பற்றி நாம் யோசித்தே ஆக வேண்டும். மனித உயிர் மிகவும் நிச்சயமற்றது. தினம் தினம் சராசரியாக 1,60,000-க்கும் அதிகமான மக்கள் சாகிறார்கள்! ஆக, எந்த மனிதனுக்கும் மரணம் நேரிடலாம். இந்த உண்மை அநேகரை உலுக்கியெடுக்கிறது.

மரண பயத்தைப் பல வகைகளாக வல்லுநர்கள் பிரித்திருக்கிறார்கள். வலியைக் குறித்த பயம், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை அறியாதிருப்பதைக் குறித்த பயம், அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுப்பதைக் குறித்த பயம், ஒருவர் இறந்த பிறகு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஏற்படும் வேதனையைக் குறித்த பயம் ஆகியவை அவற்றில் அடங்குகின்றன.

இதுபோன்ற பல வகையான மரண பயங்களிலேயே பெரிய பயம், மரணத்திற்குப் பின் இல்லாமல் போய்விடுவோமோ என்ற பயம்தான். மத நம்பிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, மரணத்துடன் வாழ்க்கை முழுமையாக முற்றுப்பெறுகிறது என்ற கருத்து அநேகரின் மனதில் கலக்கத்தை உருவாக்குகிறது. எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் விஞ்ஞானமும் இந்தப் பயத்தை அதிகரித்திருக்கிறது. ஏனெனில், மனித உடலின் கிட்டத்தட்ட எல்லா செயல்பாடுகளையும் இப்போது விஞ்ஞான ரீதியில் விளக்க முடிகிறது. ஆனால், நாம் மரித்த பிறகு கண்ணுக்குத் தெரியாத ஒரு பாகம் நம் உடலைவிட்டு பிரிந்து சென்று தொடர்ந்து உயிர் வாழ்கிறது என்பதை இதுவரை எந்த ஓர் உயிரியல் அறிஞரும், இயற்பியல் அறிஞரும், வேதியியல் அறிஞரும் நிரூபிக்கவில்லை. ஆகவே, உயிரியல் ரீதியில் சம்பவிக்கும் இயற்கையான நிகழ்வே மரணம் என்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

ஆம், மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்ற மத நம்பிக்கையை அநேகர் தீவிரமாய் ஆதரிப்பதாக வாயளவில் சொன்னாலும் மனதளவில் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஏனெனில், மரித்த பிறகு தாங்கள் எங்குமே இல்லாமல் போய்விடுவோமோ என்ற பயம் அவர்களை அரித்துத் தின்கிறது. மரணத்துடன் மனிதனின் கதை முடிந்துவிடுகிறது என்று பூர்வகாலத்தில் வாழ்ந்த சாலொமோன் ராஜா எழுதிவைத்திருப்பதும் கவனத்திற்குரிய விஷயம், இந்தக் கருத்து சிலரை அச்சுறுத்துவதாக இருக்கிறது.

“மண்”—இறுதியில் போய்ச் சேர வேண்டிய இடமா?

3,000 வருடங்களுக்கு முன் பிரசங்கி என்ற புத்தகத்தில் சாலொமோன் இவ்வாறு எழுதினார்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று.” மேலும் அவர் இவ்வாறு எழுதினார்: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—பிரசங்கி 9:5, 6, 10.

கடவுளுடைய பரிசுத்த ஆவியினால் தூண்டப்பட்டு சாலொமோன் இவ்வாறு கூறினார்: “மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; . . . இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; . . . மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; . . . எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.”—பிரசங்கி 3:19, 20.

மேலே உள்ள வார்த்தைகளை சாலொமோன் ராஜா எழுதியிருந்தாலும், கடவுளுடைய பரிசுத்த ஆவியே அவ்வாறு எழுதும்படி அவரை வழிநடத்தியது. சாலொமோன் எழுதிய விஷயங்கள் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் பதிவாகியுள்ளன. நாம் மரித்தாலும் நமக்குள் இருக்கும் ஏதோவொன்று வேறு ரூபம் எடுத்து தொடர்ந்து உயிர்வாழ்கிறது என்ற பிரபலமான கருத்தை இந்த வசனங்களும், பைபிளிலுள்ள இன்னும் பல வசனங்களும் ஆதரிப்பதில்லை. (ஆதியாகமம் 2:7; 3:19; எசேக்கியேல் 18:4) அப்படியானால், ‘மண்ணுக்குத் திரும்புவது,’ அல்லது இல்லாமல் போய்விடுவதே மனித வாழ்க்கையின் முடிவு என்று கடவுள் சொல்கிறாரா? இல்லவே இல்லை!

மரணத்திற்குப் பின் மனித உடலின் ஏதோ ஒரு பாகம் தொடர்ந்து உயிர்வாழ்கிறது என்று பைபிள் கற்பிப்பதில்லை. மாறாக, இறந்தவர்களுக்கு உறுதியான ஓர் எதிர்பார்ப்பை அளிக்கிறது. மரணத்துடன் எல்லாம் முடிந்துவிடுகிறது என்று நீங்கள் ஏன் பயப்படவேண்டியதில்லை என்பதற்கு அடுத்த கட்டுரை விலாவாரியாக விளக்கமளிக்கிறது.

[பக்கம் 3-ன் பெட்டி]

விரட்டிப் பிடிக்கும் எதிரி

மரணம், மனிதனின் எதிரியென அழைக்கப்படுகிறது. உண்மையிலேயே அது ஓர் எதிரிதான். அதை நிரூபிக்க நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா ஆதாரங்கள் உள்ளன. ஒரு கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 5.9 கோடி மக்கள் சாகிறார்கள். இன்னொரு விதமாகச் சொன்னால், ஒரு வினாடிக்கு சராசரியாக இரண்டு பேர் சாகிறார்கள். அப்படியென்றால், மரணம் எந்தளவுக்கு மக்களைக் காவுகொள்கிறது?

◼ 102 வினாடிக்கு ஒருவர், போரில் சாகிறார்.

◼ 61 வினாடிக்கு ஒருவர், கொலை செய்யப்படுகிறார்.

◼ 39 வினாடிக்கு ஒருவர், தற்கொலை செய்துகொள்கிறார்.

◼ 26 வினாடிக்கு ஒருவர், சாலை விபத்தில் சாகிறார்.

◼ மூன்று வினாடிக்கு ஒருவர், பசி கொடுமையால் இறக்கிறார்.

◼ மூன்று வினாடிக்கு, ஐந்து வயதுக்குட்பட்ட ஒரு பிள்ளை சாகிறது.

[பக்கம் 4-ன் பெட்டி]

தோல்வியைத் தழுவிய தேடல்

70 வயது நிரம்பிய ஜேம்ஸ் கிட் என்ற செம்பு சுரங்கத் தொழிலாளி, அமெரிக்காவிலுள்ள அரிஜோனாவின் மலைகளில் திடீரென்று காணாமல் போய்விட்டார். 1949 நவம்பர் 9-ஆம் தேதியன்று காணாமல்போன இவர், மரித்துவிட்டார் என்று பல வருடங்கள் கழித்து நீதிமன்றம் அறிவித்த பிறகு அவருடைய ஓர் உயில் கண்டுபிடிக்கப்பட்டது. பென்சிலால் எழுதிவைக்கப்பட்ட அந்த உயிலுடன் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பணமும் பங்கு பத்திரங்களும் இருந்தன. “மரணத்தின்போது மனித உடலைவிட்டு ஓர் ஆத்துமா பிரிந்து செல்கிறது என்பதற்கு விஞ்ஞானப்பூர்வ ஆதாரத்தைக் கண்டுபிடிக்க” மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிக்குத் தன்னுடைய பணத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று மிகத் தெளிவாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீக்கிரத்தில், ஆராய்ச்சியாளர்கள் என்றும் விஞ்ஞானிகள் என்றும் சொல்லிக்கொண்ட நூற்றுக்கும் அதிகமானோர் அந்தப் பணத்தை பெற விண்ணப்பம் செய்தார்கள். கண்ணுக்குத் தெரியாத ஓர் ஆத்துமா இருக்கிறது என்பதன் பேரில் கோர்ட்டில் பல மாதங்களுக்கு விசாரணைகளும் ஆயிரக்கணக்கான விவாதங்களும் நடந்தன. கடைசியில், அந்தப் பணத்தை, பெயர்பெற்ற இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களுக்குக் கொடுக்கும்படி நீதிபதி அனுமதி வழங்கினார். அவர்கள் கையில் பணம் கிடைத்து 50-க்கும் அதிகமான வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், “மரணத்தின்போது மனித உடலைவிட்டு ஓர் ஆத்துமா பிரிந்து செல்கிறது என்பதற்கு விஞ்ஞானப்பூர்வ ஆதாரத்தை” அந்த ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடித்த பாடில்லை.