Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காபோன் வனவிலங்கு சரணாலயம்

காபோன் வனவிலங்கு சரணாலயம்

காபோன் வனவிலங்கு சரணாலயம்

காபோனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கடற்கரையோரம் யானைக்கூட்டம் பசியாறிக் கொண்டிருக்க, நீர்யானைகள் ஆனந்த குளியல் போட, திமிங்கலங்களும் டால்ஃபின்களும் கூடிப்பேச வருகிற ஒரு வெப்பமண்டல கடற்கரையைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். ஆப்பிரிக்க கரையோரத்தில், 100 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டு கிடக்கும் கடற்கரைகளில் இத்தகைய காட்சிகள் இன்றும் சர்வசாதாரணம்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட காட்சிகளை மக்கள் கண்டுகளிப்பதற்கு, தனிச்சிறப்புமிக்க இந்தக் கரையோரப் பகுதியைக் கண்டிப்பாகப் பாதுகாக்க வேண்டும். அப்படி இதைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது நமக்கெல்லாம் சந்தோஷமான செய்தியே. காபோனின் 10 சதவீத நிலப்பரப்பு தேசியப் பூங்காவாக்கப்படும் என்று செப்டம்பர் 4, 2002-ல் காபோனின் அதிபர் அறிவித்தார். இப்படிப் பாதுகாக்கப்படும் பகுதியில் மாசுபடாத கரையோரங்களும் அடங்கும்.

காபோனில் சுமார் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை இந்த வனாந்தரப் பகுதிகள் ஆக்கிரமித்துள்ளன. இங்கு பல இயற்கை விநோதங்கள் குடிகொண்டுள்ளன. “பூமியில் கடைசியாக மீந்திருக்கும் இயற்கை அதிசயங்களைக் காண விரும்புவோரை சுண்டியிழுக்கும் சுற்றுலா சொர்க்கமாகத் திகழ்வதற்கான சர்வ லட்சணங்களும் காபோனுக்கு உள்ளது” என்று அதிபர் ஓமார் போங்கோ ஓன்டிம்பா கூறினார்.

இந்தச் சரணாலயங்களை எது தனிச்சிறப்புமிக்கதாய் ஆக்குகிறது? காபோனின் 85 சதவீத நிலப்பகுதியை இன்னமும் காடுகள்தான் சொந்தம் கொண்டாடுகின்றன. இங்குள்ள கிட்டத்தட்ட 20 சதவீத தாவர இனங்களை உலகில் வேறெங்குமே காணமுடியாது. அதோடு, இதன் வெப்பமண்டலக் காடுகள் தாழ்நிலப்பகுதியில் வாழும் கொரில்லாக்களுக்கும் சிம்பான்ஸிகளுக்கும் காட்டு யானைகளுக்கும் அழிந்துபோகும் ஆபத்திலிருக்கும் இன்னுமநேக உயிரினங்களுக்கும் புகலிடமாய்த் திகழ்கின்றன. சமீபத்தில் வடிவமைக்கப்பட்ட பூங்காக்கள் காபோனை ஆப்பிரிக்காவின் பல்வகை தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாக்கும் ஒப்பற்ற பாதுகாவலனாய் ஆக்கும்.

லோவாங்கோ—தன்னிகரற்ற கடற்கரை

ஆப்பிரிக்க வனவிலங்கு சரணாலயங்களிலேயே லோவாங்கோ தேசிய பூங்கா தனிச்சிறப்புமிக்கது. நன்னீர் கடற்கழிகளையும் அடர்ந்த வெப்பமண்டல காடுகளையும் ஒட்டினாற்போல், பல கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டுள்ள மாசுபடாத கடற்கரைகளை இந்தப் பூங்கா பாதுகாக்கிறது. ஆனால், மணலில் ஒய்யார நடை பயிலும் விலங்கினங்களே இந்தக் கடற்கரையின் அழகிற்கு அழகு சேர்க்கின்றன. நீர்யானைகள், காட்டுயானைகள், எருமை, சிறுத்தைகள், கொரில்லாக்கள் அனைத்தும் இங்கே சுற்றித் திரிவதைப் பார்க்கலாம்.

காட்டு விலங்குகளை இந்தக் கடற்கரை கவர்ந்திழுப்பது ஏன்? லோவாங்கோ கடற்கரையின் வெள்ளை மணற்பரப்பை ஒட்டி, பச்சைக் கம்பளம் விரித்தாற்போல பசுமையான புல்வெளிகள் காட்சியளிக்கின்றன. இங்கு நீர்யானைகளும் எருமைகளும் புல்மேய்ந்து பசியாறலாம். இந்தக் கடற்கரையோரம் வளருகிற ரோன்யே பனை மரங்களில் குலைகுலையாய் பழங்கள் காய்த்துத் தொங்குகின்றன. ஐஸ்கிரீமைக் கண்டு பிள்ளைகள் ஆசையாய் ஓடிவருவதுபோல, இந்தப் பழங்களைச் சாப்பிட காட்டுயானைகள் சப்புக்கொட்டிக்கொண்டு வருகின்றன. எல்லாவற்றையும்விட இதன் அமைதியான சூழல்தான் இவற்றைக் காந்தமாய் கவர்ந்திழுக்கிறது. ஆள் அரவமற்ற இந்த மணற்பரப்பில் மிருகங்களுடைய காலடி தடங்களை மட்டுமே காணமுடியும்.

மனித சஞ்சாரம் இல்லாமல் இருப்பதால், அழியும் ஆபத்திலிருக்கும் தோல்-ஓட்டு ஆமைகள் போன்ற உயிரினங்கள், அமைதியான இந்தக் கடற்கரைகளில் முட்டையிடுகின்றன. வண்டுகளைச் சாப்பிடும் ஒரு வகை பறவைகளும்கூட (Rosy bee-eaters) குழிகளை அமைத்து குடியிருப்பதற்கு இத்தகைய இடங்களையே தேர்ந்தெடுக்கின்றன. இவை, கடல் ஏற்றத்தின்போது தண்ணீர் எட்டுகிற தூரத்தைவிட ஒருசில மீட்டர்கள் தள்ளி தங்களுடைய குழிகளை அமைக்கின்றன. கோடைகாலங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமில்முதுகு திமிங்கலங்கள் லோவாங்கோவின் சலனமற்ற தண்ணீரில் இணைசேர வருகின்றன.

பரந்த கடற்கழிகள் இரண்டு, லோவாங்கோ கடற்கரைகளையும் வெப்பமண்டல காட்டையும் பிரிக்கின்றன. இந்தக் கடற்கழிகள் முதலைகளுக்கும் நீர்யானைகளுக்கும் ஏற்ற இடங்களாக இருக்கின்றன. இவற்றில் மீன்கள் எக்கச்சக்கமாக குடியிருக்கின்றன. இதன் கரைகளில் சதுப்புநில காடுகள் உள்ளன. ஆப்பிரிக்க மீன் கழுகுகளும் ஆஸ்பிரே வல்லூறுகளும் இரை தேடி கடற்கழிகளின் ஆழமான பகுதிகளின்மீது வட்டமிடுகின்றன. கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் காட்சியளிக்கும் மீன்கொத்தி இனங்களோ ஆழமற்ற நீர்பரப்பில் மீன்களைத் தேடுகின்றன. யானைகளுக்குத் தண்ணீரைக் கண்டால் ஒரே கொண்டாட்டம்தான்; கடற்கழிகளை உற்சாகமாக நீந்திக் கடந்து, கரைசேர்ந்து, தங்களுக்கு விருப்பமான பழங்களை வயிறுமுட்ட கபளீகரம் செய்கின்றன.

வெப்பமண்டல காடுகளில், உச்சங்கிளைகளில் குரங்குகள் தாவி குதித்து விளையாடுகின்றன. சூரிய ஒளியில் நனையும் வெட்டவெளிகளில் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. பழந்தின்னி வௌவால்கள், பகல் வேளைகளில் தங்களுக்கு இஷ்டமான மரத்தில் தூங்கிவிட்டு, இரவு நேரத்தில் காடெங்கும் விதைகளைத் தூவும் முக்கிய வேலையில் மும்முரமாய் இறங்குகின்றன. காடுகளின் ஓரங்களில், பூத்துக்குலுங்கும் மரங்களிலும் புதர்களிலும் அமர்ந்து சூரியப் பறவைகள் தேனை ருசிக்கின்றன. “வெப்பமண்டல ஆப்பிரிக்காவின் அழகு அனைத்தையும் ஒருங்கே சுவைப்பதற்கான சரியான இடம்” என்று லோவாங்கோவைப் புகழ்ந்தால் அது மிகையாகாது.

லோபே—கொரில்லாக்களின் புகலிடங்களில் ஒன்று

லோபே தேசிய பூங்காவில் ஆங்காங்கே, மனிதர் கைபடாத பரந்து விரிந்த மழைக்காடுகளும், புல்வெளிகளும் உள்ளன; நீர்பரப்பின் அருகில் மட்டுமே வளரும் ஒருவகை காடுகள் இந்தப் பூங்காவின் வடக்கே உள்ளன. கொரில்லாக்கள், சிம்பான்ஸிகள் அல்லது மான்ட்ரெல் குரங்குகளைக் காட்டில் கண்டு ரசிக்க விரும்புவோருக்கு இது மிகச் சிறந்த இடமாகும். 5,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் 3,000 முதல் 5,000 கொரில்லாக்கள்வரை சுற்றித் திரிகின்றன.

முன்பு இந்தப் பூங்காவில் பணியாற்றிய அகஸ்டின் என்பவர், 2002-ல் கொரில்லாக்களுடன் தனக்கு ஏற்பட்ட அபூர்வ சந்திப்பைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: “காட்டில் நடந்துகொண்டிருந்தபோது, நான்கு கொரில்லாக்கள் அடங்கிய ஒரு குடும்பம் வந்தது. சுமார் 35 வயதான ஒரு பெரிய ஆண் கொரில்லா என் முன்னால் கம்பீரமாய் நின்றது. என்னைவிட அதன் எடை குறைந்தபட்சம் மூன்று மடங்காவது அதிகமாக இருக்கும். அப்போது, எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஆலோசனைகளைப் பின்பற்றினேன். உடனடியாக கீழே உட்கார்ந்து, அதற்குப் பணிந்த போவதைக் காட்டும் விதத்தில் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டேன். அந்த கொரில்லா என் பக்கத்தில் வந்தமர்ந்து, என் தோள்மீது தன் கையைப் போட்டது. பிறகு, என் கையைப் பிடித்து, அதைத் திறந்து பார்த்து, என் உள்ளங்கையை ஆராய்ந்தது. தன் குடும்பத்திற்கு என்னால் எந்த ஆபத்தும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டதும் எழுந்து, ஆடி அசைந்து காட்டுக்குள் போய்விட்டது. மிருகங்களை அவற்றின் வாழிடத்தில் போய்ப் பார்ப்பது எப்படியிருக்கும் என்பதை அன்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. கொரில்லாக்களை உணவிற்காகவோ ஆபத்தானவை என்ற பயத்தினாலோ மக்கள் கொல்லுகிறார்கள். ஆனால், அவை சாதுவான பிராணிகள், நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.”

மான்ட்ரெல் குரங்குகளும் பெரிய பபூன் குரங்குகளும் கூட்டம் கூட்டமாக லோபேயில் கூடுகின்றன. சில சமயம் இந்தக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கும். உலகிலேயே குரங்குகளின் மிகப் பெரிய மாநாட்டில் இதுவும் ஒன்று. இவை போடும் கூச்சலுக்கு குறைச்சலே இருக்காது. கேமரூனைச் சேர்ந்த பயணி ஒருவர் இந்தப் பெருங்கூட்டத்தை சந்தித்த அனுபவத்தைக் கூறுகிறார்:

“பல மிருகங்களின் கழுத்தில் ரேடியோ காலர் என்ற கருவி பொருத்தப்பட்டிருப்பதால் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும். மான்ட்ரெல் குரங்குகள் அருகில் இருப்பதை எங்களுடைய வழிகாட்டி கண்டுபிடித்துவிட்டார். அவை வருவதற்கு முன்பாக நாங்கள் சென்று, அவற்றைப் பார்ப்பதற்கு ஏற்றவாறு நாலாபுறமும் மறைக்கிற ஒரு தடுப்பை ஏற்படுத்தி, அவற்றின் வருகைக்காகக் காத்திருந்தோம். பறவைக்கூட்டத்தின் இனிய பாடல்களையும் பூச்சிகளின் ரீங்கார சத்தத்தையும் 20 நிமிடங்களுக்குக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தோம். திடீரென, மான்ட்ரெல் படை அருகில் வந்தபோது, காட்டின் அமைதி சட்டெனக் காணாமல் போனது. கிளைகள் ஒடிந்துவிழும் சப்தத்தையும் அவற்றின் கூச்சலையும் கேட்டபோது, ஏதோ சூறாவளி தாக்கப்போவது போன்ற பிரமை ஏற்பட்டது. அவற்றின் [தலைவர்களைப்] பார்த்தபோது, தாக்குதலுக்குத் தயார் செய்யும் ராணுவ படையினரைப் போலத் தெரிந்தது. பெரிய ஆண் குரங்குகள் வழிநடத்திச் சென்றன. காட்டில் விறுவிறுவென நடந்துபோயின. பெண் குரங்குகளும் குட்டிகளும் கிளைக்குக் கிளை தாவிச் சென்றன. திடீரென, ஒரு பெரிய குரங்கு நின்று, சுற்றும் முற்றும் சந்தேகப் பார்வையை வீசியது. உச்சங்கிளையில் தாவிக்கொண்டிருந்த ஒரு குட்டிக் குரங்கு எங்களைப் பார்த்து, அபாய குரல் எழுப்பியது. உடனே அந்தக் கூட்டம் முழுவதும் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தது, கோபத்தில் அவை பயங்கரமாகக் கூச்சலிட ஆரம்பித்தன. சில நொடிகளில், அவை காட்டிற்குள் மறைந்துவிட்டன. அந்தப் பட்டாளத்தில் சுமார் 400 மான்ட்ரெல் குரங்குகள் இருந்திருக்கலாம் என்பது எங்கள் வழிகாட்டியின் கணிப்பு.”

கூச்சல் போடுவதில் மான்ட்ரெல் குரங்குகளுக்கு சிம்பான்ஸிகள் சளைத்தவை அல்ல. உணவு தேடி அவை சதா காட்டில் விறுவிறுப்பாகச் சுற்றிக்கொண்டிருப்பதால், அவற்றைப் பார்ப்பது ரொம்பவே அபூர்வம். மறுபட்சத்தில், புட்டி நோஸ்டு குரங்குகள் காட்டையொட்டி இருக்கும் புல்வெளிகளில் திரிவதைக் காணலாம். லோபேயில் யாரோடும் ஒட்டுறவின்றி இருப்பது சூரிய-வால் குரங்குகள்தான். இங்கு மட்டுமே வாழ்கிற இந்த வகை குரங்குகளை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடித்தார்களாம்.

டுராகோஸ், ஹார்ன்பில் போன்ற வண்ணமிகு, பெரிய பறவைகள், கூச்சலிட்டு தங்கள் இருப்பிடத்தைப் பறைசாற்றுகின்றன. இந்தப் பூங்காவில் சுமார் 400 பறவையினங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ கணக்கீடு காட்டுகிறது. பறவை பிரியர்களுக்கு இது சொர்க்க பூமி.

பல்வகை தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் புகலிடம்

காபோனில் உள்ள 13 தேசிய பூங்காக்களில் லோவாங்கோ, லோபே ஆகிய இரண்டு மட்டுமே. மற்ற பூங்காக்கள் சதுப்புநிலக் காடுகளையும், தனிச்சிறப்பான தாவரங்களையும், இடம்பெயர்ந்துவரும் பறவைகளின் குடியிருப்புகளையும் பாதுகாக்கின்றன. “நாட்டில் உள்ள மிகச் சிறந்த சூழியல் அமைப்புகளை காபோனில் காணலாம்” என்று வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த லீ ஒயிட் என்பவர் கூறுகிறார். “பாதுகாக்கப்படும் பகுதிகளின் பரப்பளவு மட்டுமல்ல, அதன் தரமும்கூட முக்கியம். 2002-ல், சிறந்ததொரு தேசிய பூங்கா அமைப்பு மிக விரைவாக நிறுவப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து வகை தாவரங்களும் விலங்குகளும் அங்கு இருக்கின்றன” என்றும் அவர் கூறுகிறார்.

எனினும், பல பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை என்று அதிபர் போங்கோ ஓன்டிம்பா வெளிப்படையாய் ஒத்துக்கொள்கிறார். “நாங்கள் ஓர் உலகளாவிய திட்டத்தைக் குறித்து சொல்கிறோம். அதில் சிறியதும் பெரியதுமான பல தியாகங்கள் உட்பட்டிருக்கின்றன. இத்தகைய தியாகங்கள், வருங்கால சந்ததியினருக்காக இந்த இயற்கை அற்புதங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற நம் குறிக்கோளை எட்ட உதவும்” என்று சொல்கிறார். (g 1/08)

[பக்கம் 17-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஆப்பிரிக்கா

காபோன்

காபோனிலுள்ள 13 தேசிய பூங்காக்கள்

லோபே தேசிய பூங்கா

லோவாங்கோ தேசிய பூங்கா

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

திமில்முதுகு திமிங்கலமும், வான்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட லோவாங்கோவின் படமும்

[படத்திற்கான நன்றி]

திமிங்கலம்: Wildlife Conservation Society

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

மான்ட்ரெலும் (இடது) கொரில்லாவும் (வலது)

[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]

Robert J. Ross