Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர் கேட்கின்றனர்

என்னுடைய வியாதியைச் சமாளித்து வாழ்வது எப்படி?

என்னுடைய வியாதியைச் சமாளித்து வாழ்வது எப்படி?

“இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை” என்று நீதிமொழிகள் 20:29 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. வியாதியாலோ உடல் ஊனத்தாலோ நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், ‘இந்த வசனம் எனக்குப் பொருந்தவே பொருந்தாது’ என ஒருவேளை நினைக்கலாம். ஆனால், அது உங்களுக்கும் பொருந்தும்! உண்மையைச் சொன்னால், உடல் ஊனத்தோடும் தீராத வியாதியோடும் அல்லல்படுகிற இளைஞர் பலர் திக்குமுக்காட வைக்கும் பிரச்சினைகளைச் சமாளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நான்கு இளைஞர்களை விழித்தெழு! பேட்டி கண்டது.

ஜப்பானில் வசிக்கும் ஹிரோக்கி, பிறவியிலேயே மூளைவாதத்தால் (cerebral palsy) பாதிக்கப்பட்டார். “என்னுடைய கழுத்து தசைகள் வலுவற்றிருப்பதால் என் தலை நேராகவே நிற்காது; என் கைகளையும்கூட நான் நினைக்கிறபடி அசைக்க முடியாது. அதனால், நான் முழுக்கமுழுக்க மற்றவர்களையே சார்ந்திருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார்.

நாட்டலி-யும் அவளுடைய தம்பி ஜேம்ஸும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்; இருவருமே உடல் வளர்ச்சி குன்றியவர்கள்; அவர்கள் இந்த அசாதாரண குறையுடன்தான் பிறந்தார்கள். அதுமட்டுமல்ல, நாட்டலி, ஸ்கோலியோசிஸ் எனப்படும் முதுகெலும்பு பக்கவாட்டு வளைவு நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். “என் முதுகெலும்பில் இதுவரை நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதோடு என் முதுகெலும்பு வளைந்திருப்பதால் என் நுரையீரல்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன” என்று அவர் சொல்கிறார்.

திமொத்தி பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர். இவருக்கு 17 வயதில் களைப்பை ஏற்படுத்தும் நோய் (chronic fatigue syndrome) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. “வாட்டசாட்டமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த நான் இரண்டே மாதங்களில் அந்தளவுக்கு பலவீனமாகி விட்டதால், எனக்கு நிற்கக்கூட தெம்பில்லாமல் போய்விட்டது” என்று அவர் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டான்யெல். இந்த இளைஞிக்கு 19 வயதில் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. “சர்க்கரை நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாததால், அந்த வியாதி எவ்வளவு கொடியது என்பதைச் சிலர் உணர்ந்துகொள்வதில்லை. உண்மையைச் சொன்னால், சர்க்கரை நோய் என் உயிரையே குடித்துவிடலாம்” என்று அவர் சொல்கிறார்.

ஏதேனும் நோயால் அல்லது உடல் ஊனத்தால் நீங்கள் அல்லல்படுகிறீர்களா? அப்படியானால், ஹிரோக்கி, நாட்டலி, திமொத்தி, டான்யெல் ஆகியோர் சொன்ன குறிப்புகள் உங்கள் மனதுக்கு நிச்சயம் தெம்பளிக்கும். நீங்கள் நல்ல உடல்நலத்தோடு இருந்தால், இவர்கள் சொன்ன குறிப்புகள் இப்படிப்பட்ட பிரச்சினையோடு போராடுபவர்களின் நிலையை நன்கு புரிந்துகொள்ள உதவும்.

விழித்தெழு!: எது உங்களுக்கு அதிக சவாலான விஷயமாக இருக்கிறது?

நாட்டலி, 20 தென் ஆப்பிரிக்கா

நாட்டலி: மற்றவர்கள் என்னைப் பார்க்கும் விதம்தான், என்னால் சகிக்க முடிவதில்லை. அது எப்பவுமே எனக்கு சங்கடமாய் இருக்கும். அவர்கள் என்னையே உற்றுப் பார்ப்பதுபோல் இருக்கும்.

டான்யெல்: சர்க்கரை நோய் இருப்பதால், எதைச் சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது, எந்தெந்த உணவை அளவாகச் சாப்பிடுவது போன்ற விஷயங்களை அறிந்துகொள்வதுதான் பெரிய பிரச்சினையே. சாப்பாட்டு விஷயத்தில் நான் கட்டுப்பாட்டுடன் இருக்கவில்லையென்றால், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அது என்னை கோமா நிலைக்குக்கூட தள்ளிவிடலாம்.

ஹிரோக்கி: என்னுடைய உடலமைப்பிற்கு ஏற்றபடி தயாரிக்கப்பட்ட ஒரு பிரத்தியேக வீல்சேரை நான் பயன்படுத்துகிறேன். அதில் தினமும் கிட்டத்தட்ட 15 மணிநேரத்திற்கு ஒரே நிலையில் உட்கார்ந்துக் கொண்டிருப்பேன். அதோடு, எனக்கு சரியாகத் தூக்கமும் வருவதில்லை. சின்ன சத்தம் கேட்டாலும் விழித்துக் கொள்வேன்.

திமொத்தி: ஆரம்பத்தில், என்னுடைய உடலில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுதான் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய நிலைமையைப் பார்த்து எனக்கே வெட்கமாக இருந்தது.

விழித்தெழு: இன்னும் வேறென்ன சவால்களை நீங்கள் சந்திக்கிறீர்கள்?

டான்யெல், 24 ஆஸ்திரேலியா

டான்யெல்: சர்க்கரை நோயின் காரணமாக, நான் எப்போதுமே களைப்பாக உணருகிறேன். என் வயதிலிருக்கும் மற்றவர்களைவிட எனக்குத் தூக்கம் அதிகம் தேவைப்படுகிறது. அதோடு, இது தீராத வியாதி; இதை முழுசாக குணப்படுத்தவும் முடியாது.

நாட்டலி: குள்ளமாக இருப்பதுதான் என்னுடைய பெரிய பிரச்சினையே. கடை அலமாரியில் இருக்கும் பொருட்களை எட்டி எடுப்பது போன்ற சாதாரண காரியங்களைச் செய்வதுகூட எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. தனியாகக் கடைக்குச் செல்லும்போது ரொம்பவே சிரமப்படுகிறேன்.

திமொத்தி: சதா வலியால் அவஸ்தைப்படுகிறேன், அடிக்கடி மனச்சோர்வடைந்தும் விடுகிறேன். இந்த நோய் வருவதற்கு முன்பு, நான் படு சுறுசுறுப்பாக இருந்தேன். வேலை பார்த்துக்கொண்டிருந்தேன், என்னிடம் ‘டிரைவிங் லைசென்சும்’ இருந்தது. ‘ஃபுட்பால், ஸ்குவாஷ்’ போன்ற விளையாட்டுகளை விளையாடினேன். ஆனால் இப்போதோ வீல்சேரில் முடங்கிக் கிடக்கிறேன்.

ஹிரோக்கி: என்னால் தெளிவாகப் பேச முடியாது. அதனால், சோர்ந்துபோகிறேன்; நானே வலியச் சென்று மற்றவர்களிடம் பேசுவதற்கும் தயங்குகிறேன். சிலசமயங்களில், என்னை அறியாமலேயே என் கைகள் யார்மீதாவது இடித்துவிடும். பேச்சும் குழறுவதால், அப்படிப்பட்ட சமயத்தில் என்னால் மன்னிப்புகூட கேட்க முடிவதில்லை.

விழித்தெழு!: இவற்றையெல்லாம் சமாளிக்க உங்களுக்கு உதவியது எது?

டான்யெல்: என்னுடைய வாழ்க்கையில் நடக்கிற நல்ல காரியங்களில் மட்டுமே மனதை ஊன்றவைக்க முயற்சிக்கிறேன். என்னுடைய வீட்டிலுள்ள எல்லாரும் என்னை நன்கு கவனித்துக்கொள்கிறார்கள். சபையிலோ என்மீது பாசத்தைக் கொட்டும் நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, என்னைத் தாங்கி ஆதரிக்க யெகோவா தேவன் இருக்கிறார். சர்க்கரை நோயைச் சமாளிப்பது சம்பந்தமாக வெளிவரும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் முயலுகிறேன். என்னுடைய ஆரோக்கியத்தை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவோடு, முடிந்தவரை என்னை நன்கு கவனித்துக்கொள்கிறேன்.

நாட்டலி: ஜெபம்தான் என் பலம். எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே சமயத்தில் சமாளிப்பதற்கு பதிலாக, ஒவ்வொன்றாகத் தீர்க்க முயற்சிக்கிறேன். என்னை எப்போதுமே சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது சோர்வூட்டும் எண்ணங்களில் மூழ்கிவிடாமல் இருக்க உதவுகிறது. என் மனதிலுள்ள எல்லாவற்றையும் கொட்ட அருமையான பெற்றோர் எனக்கு இருக்கிறார்கள்.

திமொத்தி, 20 பிரிட்டன்

திமொத்தி: தினந்தோறும் கொஞ்ச நேரமாவது ஆன்மீக காரியங்களில் ஈடுபடுகிறேன். உதாரணமாக, ஒவ்வொரு நாள் காலையிலும் முதல் காரியமாக தினவாக்கியத்தை வாசித்துச் சிந்தித்துப் பார்க்கிறேன். தனிப்பட்ட பைபிள் படிப்பையும், ஜெபத்தையும் நான் ரொம்பவே முக்கியமானதாகக் கருதுகிறேன்; அதுவும் மனமொடிந்து இருக்கையில் இவைதான் எனக்கு அருமருந்து.

ஹிரோக்கி: என்னால் ஒன்றுமே செய்யமுடியாத காரியங்களை நினைத்து கவலைப்படாதிருக்க நான் முயற்சி செய்கிறேன். அப்படிக் கவலைப்படுவதால் நேரம்தான் வீணாகிறது. அதற்குப் பதிலாக, கடவுளோடு நெருக்கமாயிருக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்கிறேன். என்னுடைய உடல்நிலையை சாக்காக வைத்து பைபிளைப் படிக்காமல் இருந்துவிடுவதில்லை. தூக்கம் வராமல் தவிக்கும்போது, ஜெபம் செய்வதற்கான நல்ல வாய்ப்பாக அதை எடுத்துக் கொள்கிறேன்.—ரோமர் 12:12-ஐப் பாருங்கள்.

விழித்தெழு!: மற்றவர்கள் உங்களை எப்படி ஊக்குவித்திருக்கிறார்கள்?

ஹிரோக்கி, 23 ஜப்பான்

ஹிரோக்கி: நான் செய்கிற சின்னச்சின்ன காரியங்களுக்குக்கூட மூப்பர்கள் என்னை பாராட்டு மழையில் நனைத்துவிடுகிறார்கள். சபையிலுள்ள சகோதர சகோதரிகளும்கூட தங்களுடைய மறுசந்திப்புகளுக்கும் பைபிள் படிப்புகளுக்கும் என்னை அழைத்துச் செல்கிறார்கள்.—ரோமர் 12:10-ஐப் பாருங்கள்.

டான்யெல்: சபையிலுள்ள சகோதர சகோதரிகள் என்னை மனமாரப் பாராட்டுவதுதான் என் மனதை ரொம்பவே தொடுகிறது. அவர்கள் என்னை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன். இது என்னை விடாமுயற்சியுடன் செயல்பட ஊக்குவிக்கிறது.

திமொத்தி: சபைக் கூட்டங்களில், வயதான சகோதரி ஒருவர் பெரும் முயற்சி எடுத்து எப்போதும் என்னிடம் வந்து பேசுவார்கள். மூப்பர்களும் அவர்களுடைய மனைவிகளும்கூட எனக்குத் தேவையான ஊக்குவிப்பையும் நடைமுறையான ஆலோசனைகளையும் தருகிறார்கள். 84 வயதான ஒரு மூப்பர், என்னால் முடிந்த இலக்குகளை வைத்து அவற்றை எட்டுவதற்கு உதவியிருக்கிறார். ஓர் உதவி ஊழியர் தன்னுடன் ஊழியம் செய்யும்படி என்னை அழைத்தார்; மேடுபள்ளங்கள் இல்லாத பகுதியில் ஊழியம் செய்வதற்கு ஏற்பாடும் செய்தார்; இதனால் என்னுடைய வீல்சேரில் சிரமமின்றி செல்ல முடிந்தது.—சங்கீதம் 55:22-ஐப் பாருங்கள்.

நாட்டலி: ராஜ்ய மன்றத்திற்குள் நான் நுழையும்போதே, சகோதர சகோதரிகள் புன்னகை பூத்த முகங்களுடன் என்னை வரவேற்பார்கள். வயதானவர்கள், தங்களுடைய சொந்த பிரச்சினைகளின் மத்தியிலும்கூட என்னை ஊக்குவிப்பதற்கு எப்போதுமே ஏதாவது ஒரு விஷயத்தைப் பேசுவார்கள்.—2 கொரிந்தியர் 4:16, 17-ஐப் பாருங்கள்.

விழித்தெழு: நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள எது உங்களுக்கு உதவுகிறது?

ஹிரோக்கி: யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக, ஒளிமயமான எதிர்கால நம்பிக்கையுடைய மக்களுடன் நெருங்கிப் பழகுகிறேன். இப்படிப்பட்ட அருமையான மக்களைக் கொண்ட ஓர் அமைப்பின் பாகமாக இருக்கிறேன் என்பதைப் புரிந்திருப்பது நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள உதவுகிறது.—2 நாளாகமம் 15:7-ஐப் பாருங்கள்.

டான்யெல்: கடவுளுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கு கிடைத்த ஒப்பற்ற பாக்கியத்தை நினைத்துப் பார்க்கிறேன். இன்று நிறைய பேர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்தான்; ஆனால் என்னிடம் இருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் அவர்களிடம் இல்லையே.—நீதிமொழிகள் 15:15-ஐப் பாருங்கள்.

நாட்டலி: நம்பிக்கையான மனநிலையுடைய ஆட்களிடம் பழகுவது முக்கியமென நான் நினைக்கிறேன். பல துன்பங்கள் மத்தியிலும் யெகோவாவுக்குச் சேவை செய்து வருபவர்களின் அனுபவங்களை வாசிப்பதுகூட எனக்கு அதிக ஊக்கத்தைத் தருகிறது. ராஜ்ய மன்றத்திற்கு போகும்போது, நான் இன்னும் தெம்பாகத்தான் திரும்பி வருவேன் என்று எனக்குத் தெரியும். அதோடு யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாய் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவும் முடிகிறது.—எபிரெயர் 10:24, 25-ஐப் பாருங்கள்.

திமொத்தி: 1 கொரிந்தியர் 10:13-ல் சொல்லப்பட்டபடி, யெகோவா நம் திராணிக்கு மேலாக கஷ்டப்பட நம்மை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அதனால், இந்தப் பிரச்சினையை என்னால் சமாளிக்க முடியும் என்று என் படைப்பாளர் உறுதியாக நம்பினால், ‘என்னால் முடியாது என்று நான் ஏன் நினைக்க வேண்டும்?’ என எனக்குநானே சொல்லிக் கொள்வேன். (g 2/08)

 

சிந்திப்பதற்கு

  • ஹிரோக்கியும் திமொத்தியும் வீல்சேரே கதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நீங்களும்கூட அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தால், நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள அவர்கள் சொன்ன குறிப்புகள் உங்களுக்கு எப்படி உதவும்?

  • “சர்க்கரை நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாததால், அந்த வியாதி எவ்வளவு கொடியது என்பதைச் சிலர் உணர்ந்துகொள்வதில்லை என்று டான்யெல் சொல்கிறார். ‘வெளிப்படையாகத் தெரியாத’ ஏதாவது நோயால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால், டான்யெல் சொன்ன குறிப்புகளிலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொள்ளலாம்?

  • தன்னைப் பார்க்கும்போது மற்றவர்கள் நடந்துகொள்ளும் விதம்தான் தனக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருப்பதாய் நாட்டலி சொல்கிறார். நாட்டலியைப் போன்ற நிலையிலிருக்கும் ஒருவர் உங்களுடன் இருக்கையில் அவர் தர்மசங்கடமாய் உணராதபடி நீங்கள் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? உங்களுடைய வியாதியாலோ உடல் ஊனத்தாலோ நாட்டலியைப் போலவே நீங்களும் உணர்ந்தீர்களென்றால், அவளுடைய நம்பிக்கையான மனநிலையை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?

  • உடல் ஊனத்தாலோ தீராத நோயாலோ அவதிப்படுகிறவர்களின் பெயர் உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவற்றை வரிசையாக எழுதுங்கள்.

  • இவர்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் எப்படி மானசீக ஆதரவு அளிக்க முடியும்?